பெருநாள் சம்பந்தமாக அக்குறணை ஜம்மியத்துல் உலமா மற்றும் சங்கங்களின் கூட்டறிக்கை

2020.05.10

அக்குறணை ஜம்மியத்துல் உலமா,அக்குரணை பள்ளிவாசல்கள் சம்மேளனம், அக்குரணை சுகாதாரக்குழு, அக்குறணை வர்த்தகர்கள் சங்கம் ஆகியவற்றின் ஈதுல் பித்ர் பெருநாள் சம்பந்தமான கூட்டறிக்கை.

அன்பார்ந்த அக்குறணை வாழ் பொது மக்களே!

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு!

அல்லாஹ்வின் இரக்கமும் சமாதனமும் அருளும் உங்கள் மீது உண்டாவதாக.

தற்போதைய நிலையில் முழு நாடும் கொரோனா (கோவிட்-19) வைரஸுக்கெதிராக போராடிக் கொண்டிருப்பது நீங்கள் அறிந்ததே.

பொதுமக்கள் ஒன்றுகூடலைத் தவிர்த்து சமூக இடைவெளியைப் பேணி வீட்டில் இருக்கும் படி அரசும் சுகாதாரப் பிரிவும் கண்டிப்பாக அறிவுறுத்தியுள்ளது. இதற்கு மேலதிகமாக அரசு ஊரடங்கு சட்டத்தையும் அமுல்படுத்தியுள்ளது.

கடந்த ஒரு மாதகாலமாக மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதும் நீங்கள் அறிந்ததே. பொதுமக்கள் இந்த வைரஸின் பரவலைத் தடுப்பதற்காக அவர்களது அன்றாட வாழ்க்கை முறையையே மாற்றி உதவி வருகின்றனர்.

ரமழான் என்பது ஆன்மீக மற்றும் சமுக ஒன்றுகூடலுடன் சேர்ந்து ஈதுல் பித்ர் பெருநாளுடன் நிறைவுபெறும் மாதமாகும்.

அதிகாரிகளின் அறிவுறுத்தல்களுக்கு அமைவாக நாம் ஒன்றுகூடலை தவிர்த்துள்ளோம். ஊரடங்கு தளர்த்தப்பட்ட நேரத்திலும் பெருநாளை நாம் ஒன்றுகூடி கொண்டாட முடியாதென்பதை விளங்கிக்கொள்ள வேண்டும். நாம் ஏற்கனவே கூறியது போல் ஒன்றுகூடலைத் தவிர்த்து சமுக இடைவெளியைப் பேணி வீட்டில் இருந்து இந்த வைரஸின் பரவலைத் தடுக்க முன்வர வேண்டும். கொரோனா வைரஸ் இன்னும் பரவி வருகிறது என்பதை விளங்கி எமது செயற்பாடுகளை அமைத்துக் கொள்ள வேண்டும்.

எனவே அனைவரையும் பாதுகாக்க பொறுப்புடன் நடந்து கொள்வது எமது கடமையாகும். சமூக நலனைக் கருத்திற் கொண்டு எமது வழமையான பெருநாள் கொண்டாட்டங்களிலிருந்து தவிர்ந்துக் கொள்ளுதல் சாலச்சிறந்ததாகும்.

கீழே சில பணிவான வேண்டுகோள்களை முன் வைக்கிறோம்.

  1. மக்கள் ஒன்று கூடி பொது இடங்களில் ஈதுல் பித்ர் எனும் நோன்புப் பெருநாளை கொண்டாடுவதை முழுமையாக தவிர்க்கவும்.
  2. தற்போதைய சூழ்நிலையைக் கருத்திற் கொண்டு ஈத் பெருநாளுக்காக பொருட்கள்( உடைகள்) வாங்குவதற்காக கடைகளுக்கோ அல்லது வீடுகளுக்கோ செல்வதை முற்றுமுழுதாக தவிர்த்துக்கொள்ளவும்
  3. பெருநாள் பொருட்கள்(உடைகள்)வாங்குவதற்காக உள்ளூர் கடைகளுக்கோ வெளியூர் கடைகளுக்கோ செல்ல வேண்டாம்.
  4. குறிப்பாக இந்தப் புனித ரமழான் மாதத்தில் பெருநாள் செலவுக்கான பணத்தை ஏழை எளிய மக்களுக்கு கொடுத்துதவுவது மிகவும் விரும்பத்தக்கதாகும்.
  5. உங்கள் வீட்டிலிருந்தபடி உங்கள் குடும்ப உறுப்பினர்களுடனும் விருப்பத்துக்குரியவர்களுடனும் பாதுகாப்பாக ஈத் பெருநாளைக் கொண்டாடவும்

பொறுப்புள்ள பிரஜையாக வீட்டிலிருந்து பாதுகாப்பாக ரமழானின் படிப்பினைகளைப் பெற்று இப்பெருநாளைக் கொண்டாடுங்கள்.

மேலும் இந்த தொற்று நோயிலிருந்து உலக மக்களையும் எமது நாட்டு மக்களையும் பாதுகாத்து நாம் என்றும் ஒற்றுமையுடன் வாழ எல்லாம் வல்ல இறைவனிடம் பிராத்திப்போம்.

Check Also

அக்குறணை வெள்ளப் பிரச்சினை பற்றிய எனது பார்வை

அண்மையில் (2023/12/07 மற்றும் 08 ஆம் திகதி) அக்குறணையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு பலரது பேசுபொருளாக மாறியிருப்பதை நேரடியாகவும் சமூக வலைதளங்கள் …

Free Visitor Counters Flag Counter