இணையத்தள விளம்பரங்கள் மற்றும் சமூகவலைத்தளங்கள் ஊடாக நிதி மோசடியில் ஈடுபட்டு வரும் திட்டமிட்ட குழு தொடர்பில் குற்றப் புலனாய்வு பிரிவுக்கு முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
மக்களின் பேராசையும், நடைமுறை விடயங்களில் அறிவின்மையும் இப்படியான குழுவிடம் பணத்தினை இழப்பதற்கு காரணமாக அமைகின்றது.
தாய்லாந்தில் தொழில் வெற்றிடங்கள் காணப்படுவதாக தெரிவித்து விளம்பரங்களை செய்து நிதி மோசடியில் ஈடுபட்டு வரும் குழு தொடர்பில் ஹொங்கொங்கில் உள்ள இலங்கை தூதரங்கம் குற்றப் புலனாய்வு பிரிவுக்கு அறிவித்துள்ளது.
நாட்டுக்குள்ளும் இவ்வாறான மோசடிகள் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டு வருகின்றமையும் கண்டறியப்பட்டுள்ளது. இது போன்ற திட்டமிட்ட குழுவினர் இணையத்தின் ஊடாக ஒருவரை தொடர்பு கொண்டு , அவருக்கு கார் ஒன்றை வெற்றிக் கொள்ளும் வாய்ப்பு கிடைத்துள்ளதாக தெரிவித்து , அந்த காரை பெற்றுக் கொள்வதற்காக தாங்கள் வழங்கும் வங்கி கணக்குக்கு குறித்தவொரு தொகை பணத்தை வைப்பிலிடுமாறு தெரிவித்து மோசடிகளில் ஈடுபட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
அதிர்ஷ்ட சீட்டிலிப்பின் ஊடாக பணத்தை வெற்றிக் கொள்ளும் வாய்ப்பு கிடைத்துள்ளதாக தபாற்சோவையின் மூலம் கடிதமொன்றை அனுப்பி அந்த பணத்தை பெற்றுக் கொள்வதற்காக தங்களால் அனுப்பப்பட்டுள்ள வங்கி கணக்குக்கு பணம் வைப்பிலிடுமாறு குறிப்பிடுதல் போன்ற திட்டமிட்ட மோசடிகள் இடம் பெற்று வருவதுடன் , முகப்புத்தகங்களின் ஊடாகவும் இத்தகைய மோசடிகள் இடம்பெற்று வருவதாக தெரியவந்துள்ளது.
முகப்புத்தகத்தின் ஊடாக அறிமுகமாகும் இனந்தெரியாத நண்பர்களுடன் தொடர்பு கொண்டு அவர்களிடமிருந்து பரிசில்களை பெற்றுக் கொள்ளுதல் , அதனை அவர்கள் அனுப்புவதற்கு அனுமதித்தல் , அந்த பொருட்களை பெற்றுக் கொள்வதற்காக சுங்க வரி செலுத்த வேண்டும் என்று குறிப்பிட்டு வங்கி கணக்கில் பணவைப்பிலிடுமாறு தெரிவித்தல் போன்ற மோசடிகள் இடம்பெறுவதுடன் , திருமண வரன்கள் தொடர்பில் கூறப்படும் போலி தகவல்களை தெரிவுக்கும் நபர்களை நம்பி அவர்களுக்கு பணத்தை வைப்பிலிடுதல் போன்ற செயற்பாடுகள் தொடர்பிலும் தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளன.
கனடாவுக்கு செல்வதற்கு வீசா பெற்றுக் கொடுப்பதாக குறிப்பிட்டு 60 மில்லியன் ரூபாய் பண மோசடி செய்த தம்பதியினரை குற்றப் புலனாய்வு பிரிவினர் கைது செய்துள்ளனர். மேற்படி விவகாரங்கள் தொடர்பிலும் குற்றப் புலனாய்வு பிரிவு விசாரணைகளை முன்னெடுத்து வருவதுடன் , இவ்வாறான நபர்கள் தொடர்பில் அனைவரும் எச்சரிக்கையுடன் செயற்படுவதுடன், இனந்தெரியாத நபர்களை நம்பி பணம் வைப்பிலிடுவதையும் தவிர்க்குமாறும் பொலிஸ் தலைமையகம் வலியுறுத்தியுள்ளது.