“பொருளாதார நெருக்கடிக்கு எங்களால் ஈடுகொடுக்க முடியாமல் உள்ளது. ஒவ்வொரு நாளும் பெரும் மன உளைச்சலோடுதான் வாழ்க்கை நகர்கிறது. இந்த நிலையில் வீடும் பற்றி எரிந்துள்ளமையானது மேலும் மன அழுத்தத்தையே தந்திருக்கிறது” என்கிறார் பாத்திமா பீவி.
புத்தளம் மாவட்டத்தில் கற்பிட்டி பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட குறிஞ்சிப்பிட்டி வடக்கு கிராம சேவகர் பிரிவிலுள்ள குரக்கான்சேனை கிராமத்தில் கடந்த சனிக்கிழமை அதிகாலை 2.30 மணியளவில் ஏற்பட்ட எரிவாயு அடுப்பு வெடிப்புச் சம்பவத்தில் முழு வீடும் தீயில் எரிந்து சாம்பலாகிய சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பில் கிராம சேவகர் மற்றும் கற்பிட்டி பொலிஸாருக்கும் தகவல் வழங்கப்பட்டதுடன், சம்பவ இடத்திற்கு வருகை தந்த கற்பிட்டி பொலிஸாரும், தடயவியல் பொலிஸாரும், இரசாயன பகுப்பாய்வு பிரிவினரும் விசாரணைகளை முன்னெடுத்தனர்.
இந்த தீ விபத்துச் சம்பவத்தில் சிறிய சில்லறைக் கடையுடனான வீடு முழுமையாக எரிந்து சாம்பலாகியதுடன், வீட்டில் இருந்து எடுப்பதற்கு கூட எதுவும் எஞ்சியிருக்கவில்லை.
பாத்திமா பீவி நான்கு ஆண் பிள்ளைகளின் தாய். ஒருவர் மட்டுமே திருமணம் முடித்துள்ளதுடன் அவரும் தாயுடன் சேர்ந்துதான் கூட்டுக் குடும்பமாக வாழ்ந்து வருகின்றார்.
இந்த வெடிப்புச் சம்பவம் இடம்பெற்ற போது வீட்டில் சிறு குழந்தை உட்பட ஏழு பேர் உறங்கியுள்ளனர்.
தகரம், பலகைகளாலேயே வீடு நிர்மாணிக்கப்பட்டுள்ளது. அதனுடன் சேர்ந்து முன்பக்கமாக ஒரு சிறிய சில்லறைக் கடையும் அமைக்கப்பட்டிருக்கிறது. பாத்திமா பீவிதான் அந்த சில்லறைக் கடையை நடத்தி வந்திருக்கிறார்.
எரிவாயு அடுப்பு வெடித்துச் சிதறியதில் ஏற்பட்ட தீ கட்டுப்பாட்டை இழந்து வீடு முழுதும் பரவிக்கொண்டிருந்த போது குறித்த தாயின் சமயோசிதத்தால் அதிகாலை வேளையிலும் உறங்கிக் கொண்டிருந்த பிள்ளைகளையும், மூத்த மகனின் மனைவி மற்றும் பேரப்பிள்ளையையும் அழைத்துக்கொண்டு வெளியே செல்லுமாறு சத்தம் போட்டதுடன், கூக்குரலிட்டு அயலவர்களையும் வரவழைத்துள்ளார்.
சில்லறைக் கடைக்கு தேவையான பொருட்களை கொள்வனவு செய்ய வேண்டும் எனக் கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து வைத்த பணத்தையும், அத்தனை ஆடைகளையும், ஆவணங்களையும் நெருப்பு விழுங்கிக் கொண்டுள்ளமை இந்தக் குடும்பத்தை மேலும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.
இவ்வாறு பாதிக்கப்பட்ட குறித்த குடும்பத்தை செவ்வாய்க்கிழமை ‘விடிவெள்ளி’க்காக சந்தித்து கலந்துரையாடினோம்.
மரத்தடியில் ஓர் ஓரமாக இருந்துகொண்டு சாம்பல் மயானமாக காட்சியளிக்கும் அந்த வீடு இருந்த இடத்தைப் பார்த்துக்கொண்டிருந்தார் பாத்திமா பீவி. அந்தக் குடும்பத்திற்கு என்னதான் ஆறுதலைச் சொல்ல முடியும். “இறைவன் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் கைவிட மாட்டான்” என்று அருகில் சென்று பேச்சைக் கொடுத்தேன். முதலில் கண்ணீரை மட்டுமே அவர் பதிலாகத் தந்தார்.
“என் பேத்திக்கு ஒரு மிடர் பால்தேநீர் கலக்கிக் கொடுக்கத்தான் கேஸ் அடுப்பை பற்றவைத்தன்…” என கண்ணீர் கலந்த தனது பேச்சை ஆரம்பித்தார்.
“நானும் எனது பிள்ளைகளும் வீட்டின் முன் பக்கத்தில் படுத்துறங்கிக் கொண்டிருந்தோம். அப்போது அதிகாலை 2.30 மணியிருக்கும்.
பேரப்பிள்ளை அழும் சத்தம் கேட்டது. அப்போது எனது மருமகள் எழும்பி பேரப்பிள்ளைக்கு பால்தேநீர் தயாரிப்பதற்கு வந்தார். அப்போது நீங்கள் பிள்ளையை பார்த்துக் கொள்ளுங்கள். நான் சுடுதண்ணீர் வைத்து தருகிறேன் எனக் கூறிவிட்டு அடுப்படிக்குச் சென்றேன்.
ஒரு கேத்தலில் தண்ணீரை ஊற்றி கேஸ் அடுப்பை பற்றவைத்தேன். பின்னர், தேநீர் தயாரிப்பதற்காக கோப்பைகளை கழுவ வெளியே சென்றுவிட்டு மீண்டும் அடுப்படிக்குள் நுழைந்த போது கேஸ் அடுப்பிலிருந்து நெருப்பு பரவிக் கொண்டிருந்தது.
உடனே சத்தம் போட்டு பிள்ளைகளை எழுப்பி நெருப்பு பிடித்துவிட்டது. வீட்டைவிட்டு வெளியே ஓடுமாறு கூறினேன். அடுப்பிலிருந்து வந்த தீ கொஞ்சம் கொஞ்சமாக முழு வீட்டிலும் பரவ ஆரம்பித்தது.
அல்லாஹ்வின் உதவியால் பேரப்பிள்ளையையும், பிள்ளைகளையும், வீட்டுக்குள் ஓர் ஓரமாக படுத்துறங்கிக் கொண்டிருந்த ஆட்டுக்குட்டியையும் பத்திரமாக பாதுகாத்துவிட்டேன்.
எந்த உயிர்ச் சேதங்களும் ஏற்படவில்லை. எனக்கும், எனது சகோதரியின் மகனுக்கும் சிறிய காயம் ஏற்பட்டிருக்கிறது. மற்றுபடி, வேறு யாருக்கும் எந்த பாதிப்புக்களும் இல்லை.
கேஸ் அடுப்பில் இருந்துதான் நெருப்பு பரவ ஆரம்பித்தது. அதனால், கேஸ் சிலிண்டரை இழுத்து வெளியே வீசுமாறு சகோதரியின் மகனிடம் சொன்னேன்.
அவரும் அந்த கேஸ் சிலிண்டரை வெளியே எடுத்து வருவதற்காக சமையல் அறைக்கு சென்றார். ஆனாலும், அவரால் கேஸ் சிலிண்டர் இருக்கும் இடத்திற்கு நெருங்க முடியவில்லை. அந்தளவுக்கு நெருப்பு எரிந்துகொண்டிருந்தது. உள்ளே போனவர் சிறிய எரிகாயங்களுடன் உடனடியாகவே திரும்பி வந்துவிட்டார்.
“படுத்துறங்கிக் கொண்டிருந்த பிள்ளைகளை மட்டும் பாதுகாப்பாக வெளியே கொண்டு வரவேண்டும் என்பதுதான் எனது நோக்கமாக இருந்தது. ஆனால் கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து வைத்த பொருட்களையும், கடை சாமான்களையும் என்னால் பாதுகாக்க முடியவில்லை என்பது கவலைதான்” என்கிறார் அவர்.
பாத்திமா பீவி வசிக்கும் பகுதியில் சில முஸ்லிம் குடும்பங்கள் வாழ்ந்து வருகின்ற அதேவேளை, அதிகமாக சிங்கள குடும்பங்களே அயலவர்களாக இருக்கின்றனர்.
குறித்த வீடு தீப்பற்றி எரிய ஆரம்பித்ததுமே அக்கம்பக்கத்திலுள்ள அனைவரும் உதவிக்கு வந்த போதிலும் அவர்களால் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியாமல் போயுள்ளது.
“காலையில் விடிந்ததும் வீடு இருந்த இடத்தில் சாம்பல் மட்டுமே காணப்பட்டது. அதனை என்னால் பார்க்க முடியவில்லை. கடந்த 23 வருடங்களாக இந்த இடத்தில் வாழ்ந்து வருகிறேன். 15 வருடங்களுக்கு முன் எனது கணவர் என்னையும், எனது பிள்ளைகளையும் விட்டு பிரிந்து சென்றுவிட்டார். எனினும், அவர் இப்போது உயிருடனும் இல்லை. எனது தனி முயற்சியில் தான் நான்கு பிள்ளைகளையும் வளர்த்தெடுத்தேன்.
தோட்ட வேலைக்குச் சென்றேன். வீடு வீடாகச் சென்று வேலை செய்தேன். இப்படி கஷ்டப்பட்டுத்தான் பிள்ளைகளை வளர்த்தேன். மொத்தமாக வாங்குவதற்கு பணம் இல்லை என்பதால், சீட்டுப் போட்டும், தவணை அடிப்படையிலும் வீட்டுக்கு தேவையான பொருட்களையும் வாங்கி சேகரித்து வைத்தேன்.
நான்கு பிள்ளைகளும் கடல் தொழில் செய்து வருகிறார்கள். முன்னரைப் போல தொழில் சரியில்லை. என்றாலும் கிடைக்கும் பணத்தில் அவர்களது செலவுக்கு சிறிய தொகையை எடுத்துவிட்டு மிகுதியை என்னிடம் தந்துவிடுவார்கள்.
நான் கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து வைத்த பணத்தை முதலாக கொண்டுதான் வீட்டோடு கடை ஒன்றையும் ஆரம்பித்தேன். நல்ல வியாபாரம் இருந்தது. கற்பிட்டி, குறிஞ்சிப்பிட்டி நகருக்குச் சென்று கடைக்குத் தேவையான பொருட்களை வாங்கி வருவேன்.
ஒரு நாளைக்கு இரண்டாயிரம் ரூபா முதல் மூவாயிரம் ரூபா வரை வியாபாரம் நடக்கும். கடன் இல்லாமல் குடும்பத்தைக் கொண்டு செல்லும் அளவுக்கு சில்லறைக் கடையை நடத்தி வந்தேன். இன்று மீண்டும் எனது வாழ்க்கையை பூச்சியத்தில் இருந்து ஆரம்பிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது” என்று கதையை விபரித்தார் பாத்திமா பீவி.
சமையல் எரிவாயு அடுப்பு வெடித்துச் சிதறியதில் ஏற்பட்ட பாதிப்புகளின் பெறுமதியை இதுவரை கணிப்பிடவில்லை எனவும் பாத்திமா பீவி தெரிவிக்கின்றார்.
இதேவேளை, இந்த சம்பவத்தை கேள்விப்பட்ட கற்பிட்டி பிரதேச சபை எதிர்க் கட்சித் தலைவர் முகம்மட் தாரிக் உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு வருகை தந்து பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு தேவையான முதற்கட்ட உதவிகளை செய்து கொடுத்திருக்கிறார்கள். அத்துடன், கற்பிட்டி சக்காத் ஒன்றியத்தினர் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு தற்காலிகமாக தங்குவதற்கு தேவையான ஏற்பாடுகளை செய்து கொடுத்ததுடன், தீயில் முழுமையாக எரிந்த வீட்டுக்குப் பக்கத்தில் பாதியில் கட்டப்பட்டிருக்கும் பாத்திமா பீவியின் மகனுடைய வீட்டை நிர்மாணிக்கத் தேவையான நிதியினைத் திரட்டும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.
இன்னும் ஓரிரு நாட்களில் தற்காலிக வீட்டின் நிர்மாணப்பணிகள் நிறைவடைந்து விடும் எனவும் சக்காத் ஒன்றியம் தெரிவித்தது. அத்துடன், பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு உதவி செய்ய யார் முன்வந்தாலும் கற்பிட்டி சக்காத் ஒன்றியத்தின் ஊடாகவே உதவிகளை செய்யுமாறும் கேட்கப்பட்டுள்ளனர்.
இதன் அடிப்படையில், பாதிக்கப்பட்ட குடும்பத்திற்காக கிடைக்கும் நிதியானது அந்தக் குடும்பத்தினது தேவைகளுக்காக மட்டுமே பயன்படுத்தப்படும் என கற்பிட்டி சக்காத் ஒன்றியத்தினர் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை பாதிக்கப்பட்ட இடத்தை பார்வையிட்ட புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலிசப்ரி ரஹீம், குறித்த குடும்பத்திற்கு முதற்கட்டமாக தேவையான பொருட்களை கொள்வனவு செய்து கொள்ள கற்பிட்டி சக்காத் ஒன்றியத்திற்கு ஒரு இலட்சம் ரூபாவை வழங்குவதாக கூறினார்.
அத்துடன், பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு அரசாங்கத்தின் விஷேட வீடமைப்புத் திட்டத்திலிருந்து வீடு ஒன்றை வழங்கும் நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர், வீடமைப்பு அதிகார சபை, கற்பிட்டி பிரதேச செயலாளர், மாவட்ட செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளுடனும் கலந்துரையாடினார். எரிவாயு வெடிப்பு சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கொரோனா ஏற்படுத்திய அச்சத்தை விட சமையல் எரிவாயு வெடிப்புச் சம்பவங்கள் குறிப்பாக பெண்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த வருடத்தை நாட்டு மக்கள் எளிதில் மறத்துவிடமாட்டார்கள். கொரோனா ஒருபுறம், பொருளாதார நெருக்கடி மறுபுறம். அதோடு எரிவாயு சிலிண்டர்கள் வெடிப்பும் மக்களின் நிம்மதியைக் கெடுத்துள்ளது.
2021 ஆம் ஆண்டு நாளையுடன் நிறைவடைந்து 2022 என்ற புதிய ஆண்டில் காலடி எடுத்து வைக்க இருக்கிறோம். புது வருடத்திலாவது பொருளாதார நெருக்கடியிலிருந்தும், எரிவாயு அடுப்பு வெடிப்புச் சம்பவத்தில் இருந்தும் நாட்டு மக்கள் மீள வேண்டும் என பிரார்த்திப்போம்.
ரஸீன் ரஸ்மின் விடிவெள்ளி பத்திரிகை 2021-12-30