ஒருவருக்கு அறிவுரை கூறும்போது, அந்தத் துறையில் எந்தளவுக்கு அனுபவம் பெற்றிருக்கின்றோம் என்பது தொடர்பில், தங்களைத் தாங்களே ஒருதடவை தட்டிப்பார்த்துக்கொள்ளவேண்டும். இல்லையே, எவ்வளவுதான் ஏற்றுக்கொள்ளக் கூடிய அறிவுரைகளைக் கூறினாலும் பிரயோசனமற்றதாய் போய்விடும்.
பாராளுமன்றத்துக்கு தெரிவாகியிருக்கும் மக்கள் பிரதிநிதிகளில் பலரும் மதிப்பிழந்தவர்களாய் இருக்கின்றனர். அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர், இராஜாங்க அமைச்சர், பிரதியமைச்சர் பதவிகளை வகித்த பலர், பொதுத் தேர்தலில் தோல்வியடைந்துவிட்டால், ஏதோவொரு நிறுவனத்தில் பதவிகளைப் பெற்றுக்கொள்கின்றனர். அதனால், பதவியிலிருந்த காலத்தில் அவர்களால் செய்யப்பட்ட, ஊழல், மோசடிகள் யாவும் கிடப்பில் போடப்பட்டுவிடுகின்றன. அதுமட்டுமன்றி, தங்களுக்கு கிடைத்திருக்கும் வரப்பிரசாதங்களை துஷ்பிரயோகம் செய் துவிடுகின்றனர்.
இந்த அரசாங்கத்தில் இருக்கும் அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள், பிரதியமைச்சர் எனப் பலரும், தங்களுடைய உத்தியோகபூர்வ வாசஸ்தலங்களுக்கான தண்ணீர்க் கட்டணத்தைச் செலுத்தவில்லை; எம்.பிக்களுக்கான மாதிவெல வீட்டுத் தொகுதியில் இருந்து, முன்னாள் எம். பிக்கள் இன்னும் வெளியேறவில்லை போன்ற குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன.
இவ்வாறானவர்கள் தான், சட்டவாக்க சபையில் இருந்து, நாட்டையும் மக்களையும் நல்வழிப்படுத்தும் சட்டங்களைத் தயாரித்துக் கொண்டிருக்கின்றனர். இங்கு, எல்லோரையும் சுட்டுவிரல் நீட்டவில்லை. ஏனெனில், மக்கள் பிரதிநிதிகள் பலர், தங்களை அர்ப்பணித்தும் தங்களுடைய சொத்துகளை இழந்தும், மக்களுக்காக சேவையாற்றிக் கொண்டிருக்கின்றனர்.
அதிகாரத்தில் தொடர்ந்தும் இருக்கவேண்டுமென நினைப்போர், மக்களைப் பற்றிச் சிந்திக்கவே மாட்டார்கள். அவ்வாறானவர்கள், தேர்தல் காலங்களில் ஏதாவது சலுகைகளைக் கொடுத்தோ மனங்கள் பூரிக்கும் அறிவிப்புகளை நாக்கூசாமல் விடுத்தோ, மக்களை ஏமாற்றி வென்றுவிடுவர். இன்னும் சிலர், மக்களுக்காகக் கடுமையாக உழைத்து, சேவை செய்திருந்தாலும், இறுதிநேர அரசியல் சித்து விளையாட்டுகள் காரணமாகத் தோல்வியைத் தழுவிக்கொள்வர். அவர்களின் தோல்வி, அப்பிரதேச மக்களுக்குப் பேரிழப்பாகும். கிடைக்கக்கூடிய அற்பசொற்ப சேவைகளும் அம்மக்களுக்கு நிரந்தரமாகக் கிடைக்காமல் போய்விடும்.
மக்கள் பிரதிநிதிகள், துரநோக்கத்துடன் சிந்திக்க வேண்டும். ஆட்சியதிகாரம் கிடைத்துவிட்டது என்பதற்காக, அனைத்தையும் மாற்றுவதற்கு முயற்சிக்கக்கூடாது. சிலவிடயங்களில், தேசிய கொள்கைகளைக் கடைப்பிடிக்க வேண்டும். அதனூடாகவே, நாட்டை முன்னோக்கி நகர்த்திச்செல்ல முடியும்.
பொதுவான விடயங்களில், தேசிய கொள்கைகளை வகுப்பதற்கு இன்றிலிருந்தாவது முயற்சிக்க வேண்டும். இல்லையேல், இன்னும் எத்தனை ஆண்டுகளாயினும், நாட்டை முன்னோக்கி நகரத்தமுடியாது.
மக்கள் பிரதிநிதிகளே, தண்ணீர்க் கட்டணத்தைச் செலுத்தாமல் இருக்கும் போது, சாதாரண பொதுமகனிடமிருந்து முறையாக அறவிடுவதற்கு எத்தனிப்பது; இன்றேல், தண்ணீர்க் கட்டணத்தை அதிகரிக்க முயற்சிப்பது எந்தவகையில் நியாயமானது?
ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்’ என்பதுபோல, கூட்டுப்பொறுப்பைக் கொண்டிருக்கும் அரசாங்கத்தில், ஒருவர் தவறு செய்தாலும் அது, முழு அரசாங்கத்தின் மீது, ஆட்காட்டி விரலை காட்டும் என்பதை நினைவில் கொள்ளவும்.
-தமிழ் மிரோர் 28/12/2021 P06-