முஸ்லீம் M.Pகளின் கடமைகள் என்ன?

ஒவ்வொரு தொழிலுக்கும்‌ ஒரு பிரதான கடமையும்‌ தார்மிகமும்‌ இருக்கின்றது. ஆசிரியர்‌ என்றால்‌, அவர்‌ மிகுந்த அர்ப்பணிப்புடன்‌, சேவை மனப்பாங்குடன்‌ கடமையாற்றுகின்றாரா என்பது இரண்டாவது விடயமாகும்‌. முதலில்‌ அவர்‌, மாணவர்களுக்கு கற்றுக்‌ கொடுக்க வேண்டும்‌. இதுதான்‌, அவரது தார்மிக கடமை. இது எல்லாத்‌ தொழிற்றுறை சார்ந்தோருக்கும்‌ பொருந்தும்‌.

அந்தவகையில்‌, முஸ்லிம்‌ அரசியல்வாதிகளுக்கும்‌ ஒரு தார்மிக கடமை உள்ளது. அதுவும்‌ மக்கள்‌ பிரதிநிதிகளாக இருப்பவர்களுக்கு, சமூகம்‌ தொடர்பில்‌ பாரியதொரு கடமையும்‌ தார்மிகமும்‌ உள்ளது.

ஆனால்‌, அநேகமான முன்னாள்‌, இந்நாள்‌ முஸ்லிம்‌ எம்‌.பிக்களோ மாகாண சபை உறுப்பினர்களோ, அந்தக்‌ கடமையை உணர்ந்து செயற்பட்டதாகத்‌ தெரியவில்லை.

நாட்டில்‌ இனப்பிரச்சினைக்கான தீர்வு, அதற்கான பொறிமுறைகள்‌, புதிய அரசியலமைப்பு, சமஷ்டி அல்லது அதற்குச்‌ சமமான அதிகார அலகு உள்ளிட்ட பல விடயங்கள்‌ பேசப்படுகின்றன.

இந்தப்‌ பின்னணியில்‌, தமிழ்க்‌ கட்சிகள்‌ பல ஒன்றிணைந்து, தீர்வுத்‌ திட்டம்‌ தொடர்பில்‌ தீர்மானங்களை எடுக்கின்றன. இதில்‌, இரண்டு முஸ்லிம்‌ கட்சிகளும்‌ பங்குபற்றுகின்றன. இக்கூட்டங்களின்‌ இறுதியில்‌ தயாரிக்கப்பட்டுள்ள ஆவணத்தில்‌, தமிழ்ப்‌ பேசும்‌ மக்களுக்கான அரசியல்‌ தீர்வுக்கான கோரிக்கைகள்‌ உள்ளடக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

ஆனால்‌, உண்மையிலேயே, இக்கலந்துரையாடல்களில்‌ அல்லது தயாரிக்கப்படும்‌ ஆவணங்களில்‌ முஸ்லிம்களின்‌ அபிலாஷைகள்‌ உள்ளடக்கப்பட்டுள்ளனவா? அவற்றை உள்வாங்கச்‌ செய்யும்‌ பணியை முஸ்லிம்‌ தரப்பு சரிவர நிறைவேற்றி இருக்கின்றதா என்ற சந்தேகம்‌ எழுகின்றது.

ஏனெனில்‌ கடந்த காலத்தில்‌, போர்‌ நிறுத்த உடன்படிக்கை, சமாதானப்‌ பேச்சுவார்த்தை தொட்டு பல கூட்டங்கள்‌, பேச்சுகளில்‌ முஸ்லிம்‌ சமூகத்தின்‌ நிலைப்பாட்டை அரசியல்வாதிகள்‌ பிரதிவிம்பப்படுத்தியதில்லை என்பதே நிதர்சனமாகும்‌.

முஸ்லிம்‌ சமூகத்தின்‌ பிரச்சினைகள்‌, அபிலாஷைகளைச்‌ சந்தைப்படுத்தி, பசப்பு வார்த்தைகளாலும்‌ கட்சிப்‌ பாடல்களாலும்‌ உணர்வுகளைத்‌ தூண்டி விட்டு, நாடாளுமன்ற உறுப்பினர்களாகத்‌ தெரிவு செய்யப்பட்டவர்கள்‌, தலைமைத்துவ பதவியை சுகித்துக்‌ கொண்டிருக்கின்றவர்கள்‌, இவ்வளவு காலமும்‌ தமது பிரதான தொழில்சார்‌ கடமையை நிறைவேற்றியுள்ளார்களா என்பது, விடை தெரிந்த கேள்விதான்‌.

எனவே, முஸ்லிம்‌ அரசியல்வாதிகள்‌, சமூகத்தின்‌ பிரச்சினைகளை ஆழமாக அறிந்திருப்பதும்‌, மக்கள்‌ பிரதிநிதிகள்‌ என்ற வகையில்‌, அவர்களுக்கு இருக்கின்ற அடிப்படைக்‌ கடமையை நிறைவேற்றுவதன்‌ அவசியத்தை உணர்ந்திருப்பதும்‌, இன்றியமையாத தேவைப்பாடாக உள்ளது.

பொதுவாகத்‌ தொழில்புரிவோரில்‌ சிலர்‌, கடமையுணர்ந்து வேலை செய்வார்கள்‌. இன்னும்‌ ஒரு பகுதியினர்‌, சம்பளத்துக்காக ஏனோதானோவென்று பணிபுரிவார்கள்‌. வேறு சிலர்‌, வேலையைச்‌ செய்யாமல்‌ வெறுமனே பொழுதைப்‌ போக்கிக்‌ கொண்டும்‌ ஏனையோரை குழப்பிக்‌ கொண்டும்‌ இருப்பார்கள்‌.

முஸ்லிம்‌ அரசியல்வாதிகள்‌, இதில்‌ எந்த வகுதிக்குள்‌ உள்ளடங்குகின்றார்கள்‌ என்பதை, மக்கள்‌ நன்கு அறிவார்கள்‌. ஆனால்‌, சமூகம்‌’ இதுபற்றி அவர்களிடம்‌ கேள்வி கேட்பதும்‌ இல்லை. நமது கடமையைச்‌ செய்யவில்லையே என்று, மக்கள்‌ பிரதிநிதிகளும்‌ இதற்காக வெட்கப்படுவதும்‌ கிடையாது.

முஸ்லிம்‌ சமூகத்தின்‌ அரசியல்‌ விடுதலை, அபிலாஷகள்‌ போன்றவற்றை முன்னிறுத்தி, அரசியல்‌ செய்வது என்று ஒரு தார்மிகக்‌ கடமை இருக்கின்றது. அதனைச்‌ செய்யாவிட்டாலும்‌ பரவாயில்லை, தாம்‌ பெறுகின்ற சம்பளத்துக்காக வரப்பிரசாதங்களுக்காக தமது அடிப்படைக்‌ கடமையை, முஸ்லிம்‌ எம்‌. பிக்கள்‌ ஆற்றவில்லை என்பதுதான்‌ இங்கு முக்கியமானது.

நாடாளுமன்ற உறுப்பினர்‌ ஒருவரின்‌ மாதாந்தச்‌ சம்பளம்‌ ரூபாய்‌ 50 ஆயிரத்தை விடச்‌ சற்று அதிகமாகும்‌. இதற்கு மேலதிகமாக, ஒவ்வொரு நாடாளுமன்ற கூட்டத்துக்குச்‌ செல்வதற்காக 2,500 ரூபாய்‌, அமர்வு இல்லாத நாள்களில்‌ குழுக்‌ கூட்டத்தில்‌ கலந்துகொள்வதற்காக 2,500 ரூபாய்‌, அலுவலகம்‌ ஒன்றை நடத்துவதற்காக ரூபாய்‌ ஒரு இலட்சம்‌, நிலையான மற்றும்‌ அலைபேசிக்காக மாதத்துக்கு 50,000 ரூபாய்‌ போன்ற கொடுப்பனவுகள்‌ வழங்கப்படுகின்றன.

அவர்‌ பிரதிநிதித்துவப்படுத்தும்‌ மாவட்டத்தின்‌ தூரத்தைப்‌ பொறுத்து, எரிபொருள்‌ கொடுப்பனவு வழங்கப்படும்‌. தனிப்பட்ட பணியாள்களின்‌ போக்குவரத்துக்காக மாதமொன்றுக்கு 10 ஆயிரம்‌ ரூபாய்‌ கிடைக்கும்‌. ஆயிரம்‌ ரூபாய்‌ கேளிக்கை கொடுப்பனவும்‌ உண்டு. தூர இடங்களைச்‌ சேர்ந்த எம்‌. பிக்களுக்கு வீடொன்று வழங்கப்படும்‌ அல்லது வாடகை வீட்டில்‌ இருந்தால்‌ அதற்கு குறிப்பிட்டளவான வாடகை கொடுப்பனவு வசதி கிடைக்கும்‌. மக்கள்‌ பிரநிதிநிதிகள்‌ என்ற வகையில்‌ அவர்களுக்கு வருடமொன்றுக்கு 250,000 ரூபாய்‌ முத்திரை கொடுப்பனவு வழங்கப்படுகின்றது.

அதிசொகுசு வாகனங்களைக்‌ கொள்வனவு செய்வதற்காக, தீர்வை விலக்குப்‌ பத்திரங்கள்‌, ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினருக்கும்‌ வழங்கப்படும்‌. அமைச்சர்கள்‌, இராஜாங்க அமைச்சர்கள்‌ ஆகியோருக்கு சம்பளம்‌ மேலும்‌ அதிகம்‌ என்பதுடன்‌, அவர்களது அமைச்சுகளின்‌ ஊடாக, மேலும்‌ பல சலுகைகளும்‌ கொடுப்பனவுகளும்‌ கிடைக்கின்றன.

இதற்கு மேலதிகமாக சமூக கெளரவம்‌, வி.ஐ.பி கடவுச்சீட்டு, விசா வசதிகள்‌, பொலிஸ்‌ பாதுகாப்பு எனப்‌ பலதரப்பட்ட சிறப்பு வரப்பிரசாதங்கள்‌ உள்ளன. ஒரு நாடாளுமன்ற உறுப்பினர்‌, தம்மைத்‌ தெரிவு செய்த மக்களுக்காகக்‌ குரல்‌ கொடுக்கின்றாரா? அதாவது, கடமையைச்‌ செய்கின்றாரா என்ற எந்த மதிப்பீடும்‌ மேற்கொள்ளப்படாமலேயே, இந்த வெகுமதிகள்‌ வழங்கப்படுகின்றன.

உண்மையில்‌, மக்கள்‌ பிரதிநிதி என்ற வகையில்‌, அவர்களுக்கு இவ்வாறான வரப்பிரசாதங்களும்‌ கெளரவங்களும்‌ கொடுக்கப்பட வேண்டியது அவசியம்‌ என்பதில்‌, யாருக்கும்‌ மாற்றுக்‌ கருத்து இருக்க முடியாது. அந்தப்‌ பதவியின்‌ உயரிய அந்தஸ்தைப்‌ பேணுவதற்கு இவைவெல்லாம்‌ இன்றியமையாதவை. சம்பளமோ, சிறப்புச்‌ ஐுகைகளோ இல்லாமல்‌ எம்‌. பிக்கள்‌ பணியாற்ற வேண்டும்‌ என்று எதிர்பார்க்கவும்‌ முடியாது.

ஆனால்‌, இவற்றையெல்லாம்‌ சுகிக்கின்ற எம்‌. பிக்கள்‌, தமது அடிப்படைக்‌ கடமையை நிறைவேற்ற வேண்டும்‌ என்று மக்கள்‌ எதிர்பார்க்காமல்‌ இருக்கவும்‌ முடியாது. அந்தக்‌ கண்ணோட்டத்தில்‌ நோக்கினால்‌, முஸ்லிம்‌ நாடாளுமன்ற உறுப்பினர்கள்‌, நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும்‌ வெளியேயும்‌ சமூகத்தின்‌ பிரதிநிதிகளாகத்‌ தம்மைப்‌ பிரதிவிம்பப்‌.படுத்‌ துகின்றார்களா? என்னதான்‌ செய்து கொண்டிருக்கின்றார்கள்‌ என்ற கேள்விக்கு, இன்னும்‌ விடையில்லை.

தேர்தல்‌ காலத்தில்‌ வீராப்புப்‌ பேசி, மக்களது உணர்வுகளை உரசி விடுகின்ற உத்தியைக்‌ கற்றுவைத்துள்ள மூஸ்லிம்‌ மக்கள்‌ பிரதிநிதிகள்‌, தேர்தல்‌ முடிந்த மறுநாளே காணாமல்‌ போய்விடுகின்றார்கள்‌. அவர்களால்‌, முச்சந்திக்கு அழைத்து வரப்பட்ட சமூகம்‌, “திருவிழாவில்‌ தொலைந்த குழந்தையைப்‌ போல திக்குத்‌ தெரியாது நிற்கின்றது. முஸ்லிம்களின்‌ நீண்டகாலப்‌ பிரச்சினைகள்‌, அபிலாஷைகள்‌, குறுங்கால நெருக்கடிகள்‌ என எல்லா விடயங்களும்‌ அப்படியே கிடக்கின்றன. ‘கும்பகர்ணன்‌ கண்விழித்தாற்போல; எப்போதாவது தூக்கத்தில்‌ இருந்து எழுந்து, ஒர்‌ அறிக்கை விடுவதோடு அவர்களது சமூகப்‌ பணி முடிந்து விட்டதாக நினைக்கின்றார்கள்‌.

ஆனால்‌, சமூகம்தான்‌ 25 வருடங்களாக ஒரே இடத்திலேயே நிற்கின்றதே தவிர, முஸ்லிம்‌ எம்‌. பிக்கள்‌ தமது சொந்த அரசியல்‌ வாழ்க்கையில்‌ நிறையவே முன்னேறி, தொலைதூரம்‌ சென்று விட்டார்கள்‌. 99 சதவீதமானோர்‌, அரசியலை வைத்து நிறையவே உழைத்திருக்கின்றார்கள்‌ என்பதை யாரும்‌ மறுக்க முடியாது.

எம்‌. பியாகப்‌ போட்டியிடுமாறு, எந்த அரசியல்வாதியினுடைய காலைப்‌ பிடித்து, மக்கள்‌ கேட்டது கிடையாது; தலைமைத்துவ பதவிகளும்‌ அப்படித்தான்‌. இது அவர்களாகத்‌ தேர்ந்தெடுத்த பணிதான்‌. எனவே, அந்தத்‌ தொழிலுக்குரிய அடிப்படைப்‌ பணிகளை நிறைவேற்றுவது என்பது சேவையல்ல; வாங்குகின்ற சம்பளம்‌, வரப்பிரசாதங்கள்‌ எனபவற்றுக்காகச்‌ செய்ய வேண்டிய கடமைகள்‌ என்பதை, நினைவில்‌ கொள்ள வேண்டும்‌.

ஒரு சமூகத்தின்‌ மக்கள்‌ பிரதிநிதிகள்‌ என்றால்‌, தமது பதவியின்‌ வகிபாகம்‌ என்ன என்பதை விளங்கிக்‌ கொள்ள வேண்டும்‌. குறிப்பாக, முஸ்லிம்‌ சமூகத்தின்‌ பிரச்சினைகள்‌, அபிலாஷைகள்‌ பற்றிய அறிவும்‌ தேடலும்‌ இருக்க வேண்டும்‌. அதுபற்றிய ஆவணங்களையும்‌ அனுபவசாலிகளின்‌ தகவல்களையும்‌ சேகரித்து அறிவது இன்றியமையாதது.

ஒரு வைத்தியர்‌ என்றால்‌, அவர்‌ தனது வாகனத்தில்‌ ‘சிறுவை’ அடையாளத்தைப்‌ போடுகின்றாரோ இல்லையோ, அவரிடம்‌ ஒரு ‘ஸ்டெதஸ்கோப்‌” இருக்க வேண்டும்‌. அதுபோல, முஸ்லிம்‌ சமூகத்தின்‌ குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்கான அர்ப்பணிப்பும்‌ அதற்குத்‌ தேவையான தரவுகளும்‌ விரல்‌ நுனியில்‌ இருக்க வேண்டும்‌.

இந்தப்‌ பின்னணியில்‌ ஏனைய தரப்புகளுடன்‌ பேசுவதற்கு முன்னதாக, முஸ்லிம்‌ கட்சிகள்‌, சிவில்‌ சமூகப்‌ பிரதிநிதிகள்‌ ஆகியோர்‌ ஒன்றிணைந்து பேச வேண்டும்‌. இனப்பிரச்சினை, அரசியலமைப்பு மறுசீரமைப்பு போன்ற தேசிய முக்கியத்துவமிக்க விடயங்களில்‌, முஸ்லிம்‌ சமூகத்தின்‌ கோரிக்கை, நிலைப்பாடு என்பவற்றில்‌, பொது இணக்கப்பாட்டுக்கு வரவேண்டும்‌.

அதுபோல, அரசாங்கத்திடமோ தமிழ்க்‌ கட்சிகளிடமோ வெளிநாட்டு தரப்பிடமோ பேசுகின்ற போது, முன்‌ தீர்மானிக்கப்பட்ட விடயங்களையே முன்வைக்க வேண்டும்‌. ஒவ்வோர்‌ அரசியல்‌ தலைவரும்‌ எம்‌. பி.யும்‌, தமக்கு எல்லாம்‌ தெரியும்‌ என்ற தோரணையில்‌, சமூகத்தை வழிநடத்த முற்படக்‌ கூடாது.

மொஹமட்‌ பாதுஷா – தமிழ் மிற்றோர் 28/12/2021 P6

Check Also

ஹம்தியின் மரணம் குறித்து விரிவான விசாரணை நடத்துக

சிறுநீரக சத்திர சிகிச்சைகளை அடுத்து உயிரிழந்த கொழும்பு கொட்டாஞ்சேனையைச் சேர்ந்த 3 வயதான ஹம்தி பஸ்லிமின் மரணம் தொடர்பில் விரிவான …

Free Visitor Counters Flag Counter