இலங்கை உள்ளடங்கலாக குறிப்பிட்ட சில நாடுகளில் இராணுவ வசதிகளை ஏற்படுத்துவதற்கு சீனா திட்டமிட்டு வருவதாகவும், அதனூடாக அந்த நாடுகளுக்கு தனது மக்கள் விடுதலை இராணுவத்தை அந்த நாடுகளுக்கு அனுப்பிவைத்து மிகவும் விரிவான – நிலைபேறான இராணுவ ஆதிக்கத்தை அடைந்துகொள்வதற்கு சீனா முயற்சிக்கின்றது என்று பென்டகன் வெளியிட்டிருக்கும் அறிக்கையொன்றில் சுட்டிக்காட்டப்பட்டிருக்கிறது.
சீனா வெளிநாடுகளில் தமக்குரிய கட்டமைப்பு ரீதியான வசதிகளை நிறுவுவதற்கு முற்பட்டுவரும் அதேவேளை, மக்கள் விடுதலை இராணுவத்தை அனுமதிப்பதற்கான அடிப்படைக் கட்டமைப்புக்களையும் உருவாக்குவதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
கிழக்கு ஆபிரிக்காவில் அமைந்துள்ள ஜிபூரியில் தற்போது இராணுவத்தளமொன்றைக் கொண்டிருக்கும் சீனா கடல்மார்க்க, ஆகாயமார்க்க மற்றும் காலாட்படை ஆகியவற்றுக்கு உதவியளிக்கக்கூடிய வகையில் மேலும் பல்வேறு கடல்கடந்த நாடுகளில் இராணுவத்திற்கு வசதியளிக்கும் கட்டமைப்புக்களை நிறுவுவதற்குத் திட்டமிட்டு வருகின்றது.
‘2020 இல் மக்கள் சீனக்குடியரசு தொடர்புபடும் இராணுவ மற்றும் பாதுகாப்பு முன்னேற்றங்கள்’ என்ற தலைப்பிலான தமது வருடாந்த அறிக்கையை பென்டகன் அமெரிக்க காங்கிரஸில் சமர்ப்பித்திருக்கிறது. சீனா தனது இராணுவத்திற்கு வசதியளிக்கும் கட்டமைப்புக்களை உருவாக்குவதற்கு மியன்மார், தாய்லாந்து, சிங்கப்பூர், இந்தோனேசியா, பாகிஸ்தான், இலங்கை, ஐக்கிய அரபு இராச்சியம், கென்யா, சீஷெல்ஸ், தன்சானியா, அங்கோலா மற்றும் தஜிகிஸ்தான் ஆகிய நாடுகள் மீது கவனம் செலுத்திவருகின்றது என்றும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டியிருக்கிறது.
இவ்வாறு சர்வதேச நாடுகளில் அமைக்கப்படும் மக்கள் விடுதலை இராணுவத்திற்கு வசதியளிக்கும் வகையிலான கட்டமைப்புக்கள், அமெரிக்க இராணுவ நடவடிக்கைகளில் தலையீடு செய்யலாம் என்பதுடன் அமெரிக்காவிற்கு எதிரான நடவடிக்கைகளுக்கு அதனால் உதவிகள் வழங்கப்படலாம் என்றும் பென்டகன் அதன் அறிக்கையில் தெரிவித்திருக்கிறது.