ஜனாதிபதி ஆணைக்குழு முன் தோன்றிய தன்னை மௌலவி என்று தன்னை அழைத்துக் கொண்ட ஒருவர் அகில இலங்கை ஜம்மியதுல் உலமா,தேசிய சூரா சபை ஜாமியா நளீமியா ஆகிய இந்த நாட்டின் மிக முக்கியமான மூன்றும் அமைப்புகளையும் பற்றிய மிக அபத்தமான, பிழையான தகவல்களை கொடுத்திருக்கிறார். இது மிகப் பெரிய கவலையை தருகிறது.
ஜனாதிபதி ஆணைக்குழு என்பது இந்த நாட்டு மக்களால் கௌரவமாக நோக்கப்படுகின்ற ஆணையமாகும். அதில் சட்ட துறையைச் சேர்ந்த நீதிபதிகள் கௌரவமான கல்விமான்கள் அடங்குகிறார்கள். ஆனால் அங்கு வழங்கப்படுகின்ற சாட்சியங்கள் முன்வைக்கப்படுகின்ற கருத்துக்கள் அனைத்தும் தீர பரிசீலிக்கப்பட்ட பின்னரே சமுதாயத்துக்கு மீடியாக்களின் வாயிலாக வழங்கப்பட வேண்டும். ஆனால் அனாமதேயமாக, தன்னுடைய பெயரை கூட கூற விரும்பாத ஒருவர் முன்வைத்த சில கருத்துக்கள் மீடியாவில் இவ்வளவு தீவிரமாக பரப்பப்பட்டிருப்பது மிகப் பெரிய கவலையைத் தருகிறது. ஜனாதிபதி ஆணைக்குழு இது விடயமாக மிகப் பொறுப்பாக நடந்திருக்க வேண்டும். காரணம் இந்த குறித்த நபரது வாக்குமூலம் முஸ்லீம் சமூகத்துக்கு மத்தியில் பிளவுகளையும் மோதல்களையும் ஏற்படுத்துவது ஒருபுறமிருக்க முஸ்லிமல்லாத சமூகங்கள் முஸ்லிம் சமூகத்தைப் பற்றி மிக மோசமாக நினைப்பதற்கு இது காரணமாக அமைந்துவிடும்.
பொறுப்பான அரசாங்கம் என்ற வகையில் இப்படியான மோதல் நிலைகளை தவிர்ப்பதற்கு முயற்சிகளை எடுக்க வேண்டும் என்பது எமது பணிவான அபிப்பிராயமாகும்.
இந்த நபரது ஒருதலைப்பட்சமான நடவடிக்கை நடவடிக்கை எரியும் நெருப்பில் எண்ணையை ஊற்றுவதாக அமைந்திருக்கிறது.
அநாமேதையமான, பெயர் சொல்ல விரும்பாத நபரது அறிக்கைக்கு இலங்கையின் இனவாத ஊடகங்கள் அளவுக்கு அதிகமான முக்கியத்துவத்தை கொடுத்திருக்கின்றன.
ஒரு முக்கிய விடயத்தை இங்கு சுட்டிக் காட்டி ஆக வேண்டும். அதாவது, இதற்கு
முன்னர் ஆணைக்குழுவின் முன்னால் ஜம்மியதுல் உலமா, ஜாமியா நளீமியா, தேசிய சூரா சபை ஆகிய அமைப்புகளின் பிரதிநிதிகள் சென்று காத்திரமான கருத்துக்களை முன் வைத்திருக்கிறார்கள். அவர்களது கருத்துக்கள் ஏன் மீடியாக்களால் சமூக மயப்படுத்தப்படவில்லை என்பது ஒரு பெரிய கேள்வியாக இருக்கிறது. எனவே ஊடகங்களது பக்கசார்பு இங்கு மிகத் தெளிவாக புலப்படுகிறது.
குறித்த இந்த மூன்று அமைப்புகளும் பயங்கரவாத சிந்தனைகளை கொண்டிருப்பதாக இருந்தால் அது பற்றி விசாரிப்பதற்கும் நடவடிக்கைகள் எடுப்பதற்கும் அரசு முழு உரிமையிருக்கிறது. ஆனால் இப்படிப்பட்ட பொறுப்பற்ற சாட்சியங்களும் பொறுப்பற்ற மீடியா அறிக்கைகளும் விளம்பரங்களும் சமூகத்தில் நல்ல விளைவுகளை ஒருபொழுதும் ஏற்படுத்தப் போவதில்லை மீடியாக்களது பக்கசார்புக்கும் ஓரவஞ்சனைக்கும் இது தவிர வேறு எந்த ஆதாரத்தையும் காட்ட வேண்டிய அவசியம் கிடையாது.
குறித்த நபர் மௌலவி என்று சொல்லப்பட்டாலும் அவர் தனது பெயரை வெளிப்படுத்த விரும்பவில்லை என்றால் அவர் உண்மையை பாதுகாக்க வேண்டும் என்ற அக்கறை உள்ளவராக இருந்தால் ஏன் இந்தக் கோழைத்தனம் அவருக்கு ஏற்பட்டது என்பது ஒரு பெரிய கேள்வியாக இருக்கிறது? எனவே மெளலவி என்ற நாமத்தை சாதாரண ஒரு பொது மகனுக்கு சூட்டி இஸ்லாத்தின் பகிரங்கமான எதிரிகள் அவரை இதற்காக வேண்டி அந்த நாமத்தின் அடிப்படையில் பயன்படுத்தியிருக்கலாமோ என்ற கேள்வியும் சந்தேகமும் எழுப்பப்படுகிறது. அதேநேரம் இந்த நபரது பின்னணி பற்றிய தெளிவில்லாமல் இவ்வளவு பெரிய மீடியா கவரேஜ் அவருக்கு வழங்கப்பட்டிருப்பது ஆச்சரியத்தை மேலும் அதிகரிக்கிறது.
எனவே அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா தேசிய சூரா சபை, ஜாமியா நளீமியா ஆகிய மூன்று அமைப்புகளும் இந்த பொறுப்பற்ற அபத்தமான அறிக்கை தொடர்பில் காத்திரமான முயற்சிகளை எடுக்க வேண்டும் என்பது தான் எமது அபிப்பிராயமாகும்.