கிளிநொச்சியில் உள்ள பாடசாலை ஒன்றில், 71 மாணவர்களுக்கு கண் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளதாக வெளியான அறிவிப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கிளிநொச்சி, தர்மபுரம் இல. ஆரம்ப பாடசாலையில் கல்வி கற்கின்ற 920 மாணவர்களுக்கு, அண்மையில், கண் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் 77 மாணவர்களுக்கு கண் பாதிப்பு இருப்பதாக ஊடகங்களில் செய்தி வெளியாகியது.
இந்நிலையில், இந்த விடயம் தொடர்பில் தமக்கு எதுவும் தெரியாது என்றும் தங்களிடம் எவ்வித அனுமதியோ அல்லது அறிவித்தலோ வழங்காது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை இது என்றும், கிளிநொச்சி பிராந்திய சுகாதார திணைக்களமும் கண்டாவளை சுகாதார மருத்துவ அதிகாரி அலுவலகமும் தெரிவித் துள்ளன.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது: வியாழக்கிழமை (16), குறித்த பாடசாலையில் தனியார் கண்மருத்துவ நிலையத்தினரால், கண் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, பார்வை குறைபாடு உள்ளதாக 77 மாணவர்கள் அடையாளப்படுத்தப்பட்டனர்.
பின்னர், இவர்கள் அனைவரும், சனிக்கிழமை (187, மாணவர் ஒருவருக்கு 300 ரூபாய் போக்குவரத்து செலவுக்கென அறவிடப்பட்டு, ஏற்பாடு செய்யப்பட்ட பஸ்ஸில், யாழ்ப்பாணத்தில் உள்ள குறித்த தனியார் நிறுவனத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
அங்கு மீண்டும் பநிசோதனை மேற்கொள்ளப்பட்டதில், அவர்களில் 617 மாணவர்களுக்கு மூக்குக்கண்ணாடி பயன்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அத்துடன், கண்ணாடிகளின் விலைகளும் குறிப்பிட்டு பணத்தை தயார் செய்யுமாறும் பாடசாலைக்கு கண்ணாடிகளுடன் வருகை தருவதாவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயம் தொடர்பில் அதிர்ச்சி வெளியிட்டுள்ள பெற்றோர், பார்வையில் எவ்வித பிரச்சினையும் இன்றி கற்றல் செயற்பாடுகள் உள்ளிட்ட தங்களின் நாளாந்த செயற்பாடுகளை தடையின்றி மேற்கொள்ளும் தங்களது பிள்ளைகளின் பார்வையில் குறைப்பாடு இருப்பதாக கூறுகின்றனர் எனச் சாடினர்.
“எதற்காக கண்ணாடி பாவிக்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது. 4,000 ரூபாய்க்கும் மேற்பட்ட பெறுமதியில், கண்ணாடிகள் சிபார்சு செய்து வழங்கப்பட்டுள்ளது. எனவே, இதனை எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது” என்று குறித்த மாணவர்களது பெற்றோர் தெரிவித்தனர்.
அத்தோடு, குறிப்பிட்ட தனியார் நிறுவனம் தங்களது வியாபார நோக்கத்துக்காக இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதா எனவும், பெற்றோர் கேள்வி எழுப்பி உள்ளனர்.
இது தொடர்பில், கிளிநொச்சி பிராந்திய சுகாதார திணைக்களத் தரப்பினருடன் தொடர்பு கொண்டு வினவிய போது, “ஊடகங்களில் வெளிவந்த செய்தியைத் தொடர்ந்தே நாமும் இவ்விடயத்தை அறிந்துகொண்டோம். அதன் பின்னர் பாடசாலை நிர்வாகத்துடன் தொடர்பு கொண்டு வினவிய போது, அவர்கள் கல்வித் திணைக்களத்தின் அனுமதியைப் பெற்றிருந்ததாகவும் சுகாதார திணைக்களத்தின் அனுமதி பெறத் தேவையில்லை” என பதிலளித்தாகவும் தெரிவித்தனர்.
இவ்விடயம் தொடர்பில், தாங்கள் உரியவர்களின் கவனத்துக்கு கொண்டுள்ள செல்லவுள்ளதாகவும், அவர்கள் கூறினர்.
இந்நிலையில், தங்கள் பிள்ளைகளை அரச வைத்தியசாலையில் உள்ள கண் வைத்திய நிபுணரை கொண்டு பரிசோதிக்க ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும், பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர்.
தமிழ்மிற்றோர் 22/12/2021