வருமுன் காப்போன்; வரும் போது காப்போன்; வந்த பின்னே காப்போன். இப்படி என்று ஒரு காலத்தில் பாடப் புத்தகங்களில் நாங்கள் வலையில் மாட்டிக் கொண்ட மீன் பற்றிய பாடம் கற்றிருக்கின்றோம். ஆனால் நமது அரசியல்வாதிகள் நமக்கு நாளை என்று தந்த நம்பிக்கைகள் எல்லாமே வெறும் ஏமாற்றுமாயை என்பது அப்படிக் கதை படித்த எமக்கு இப்போது நன்றாகப் புரிந்திருக்க வேண்டும். நாம் முன்பு பல முறை சொல்லி இருப் பது போல சந்திரனில் இருந்து அரிசி எடுத்து வந்து நமக்கு சோறூட்டிய ஸ்ரீமாக்களும் தானியங்கள் எட்டுக் கிலோவை கொண்டு வந்து தருகின் றோம் நன்றாக சாப்பிடுங்கள் என்று கதை சொன்ன ஜே. ஆர். களும் நாட்டை சிங்கப்பூராக்கி தருகின்றோம் உல்லாச மாக வாழ்ந்து விட்டுப்போங்கள் ராசõக்கள் என்றும் எங்களை சில காலம் கனவுலகில் வாழ வைத்தார்கள் அந்த தலைவர்கள்.
அவை எல்லாம் பழங்கதை. நல்லாட்சி தருகின்றோம் என்று வந்தவர்கள் மத்திய வங்கியையே கொள்ளையடித்தார்கள், பணத்தை அச்சடித்து குவிப்பதால் பொருளாதாரப் பாதிப்புகள் ஏதும் கிடையாது என்று உலகிற்கு புதுப் பாடம் கற்றுக் கொடுக்கும் மத்திய வங்கி ஆளுநரை பதவியில் இருத்தி அழகு பார்க்கின்ற நாடும் இதுதான்! உலகிலே நூறுவீதம் சேதன பசளையை உற்பத்தி செய்து சௌக்கியமாக சாப்பிட்டு நோயற்றவர்களாக வாழலாம், ஒரு வருடத்துக்குள் அப்படி விவசாயம் செய்து உலக சாதனை என்று சொல்லி ஆட்சி செய்யும் ஒரே நாடும் இதுதான். ஏழு தலைகளைக் கொண்ட நிதி மந்திரி பதவியில் இருக்கும் அதிசய நாடும் இதுதான். நமக்கு என்னதான் குறை! இப்படி எல்லாம் திறமைசாலி களை வைத்து ஆளப்படுகின்ற நாம் கொடுத்து வைத்தவர்கள்தானே? இப்படி நம்மை ஏமாற்றிய கதைகளை நாம் இங்கு நையாண்டியாக பட்டியலிடப் போனால் கட்டுரையில் கருவுக்குள்ளேயே எம்மால் நுழைய முடியாமல் போய் விடும். இப்படி எல்லாம் பேசி கடைசியில், வந்த பின்னர் காப்போன் என்ற நிலையில் நம்மையும் நமது சந்ததியினரையும் வலையில் மாட்டி விட்டார்கள் இந்த ஆட்சியாளர்கள். இவர்களை எல்லாம் பதவிக்கு அமர்த்தி அழகு பார்த்த நாம் கூண்டோடு இன்று பட்டினிச் சாவின் விளிம்பில் நிற்கின்றோம்.
இப்போ விடயத்துக்கு வருவோம். அதற்கு முன்னர் மில்லியன், பில்லியன், ரில்லியன், பணவீக்கம், வாழ்க்கைச் சுட்டெண், அன்னியச் செலாவணி, வெளி நாட்டுக் கடன்கள் என்று சாதாரண குடி மக்களுக்குப் புரியாத வார்த்தைகளில் விளக்கங்களைக் கொடுக்காது மிகவும் எளிமையான ஒரு உதாரணத்துடன் துவக்கத்தை கொடுக்க எண்ணுகின்றோம். நமது நாட்டில் ஏதோ ஒரு இடத்தில் வாழ்கின்ற ஒரு குடும்பம், குடும்பத் தலைவனை ராஜா என்று வைத்துக் கொள்வோம். அவனுக்கு மனைவி மற்றும் மூன்று பிள்ளைகள். மொத்தம் ஐந்து பேர். ராஜாவின் மாத வருமானம் முப்பது ஆயிரம் (30,000) என்றும் எடுத்துக் கொள்வோம். அவனது குடும்ப சாப்பாட்டுச் செலவு இருபதாயிரம் (20,000). பிள்ளைகளின் கல்வி செலவுகள் மின்சாரம், தண்ணீர் கட்டணம் எல்லாம் ஐயாயிரம் (5,000) இதர செலவுகள் ஒரு ஐயாயிரம் (5,000) என்றும் எடுத்துக் கொள்வோம். அவன் வங்கியில் வீடு கட்டுவதற்காக ஒரு ஐம்பது இலட்சத்தை கடனாகப் பெற்றிருக்கின்றான். அதற்கு அவன் மாதாந்தம் ஐம்பது ஆயிரம் ரூபா (50,000) வங்கிக்கு செலுத்த வேண்டி இருக்கின்றது என்றும் வைத்துக் கொள்வோம். போதாக்குறைக்கு தனது கஸ்டங்களுக்கு அவன் அயலவர்களிடம் கைமாத்தாக பெற்றுக் கொண்ட கடன்கள் இரண்டு இலட்சம் (2,00,000) என்றும் வைத்துக் கொள்வோம். இப்போது அவனுக்கு அந்த மாதத்தை மட்டும் ஓட்டுவதற்கு இரண்டு இலட்சத்து என்பது ஆயிரம் ரூபாய் (2,80,000) வரை தேவை. இவற்றை அவனது மாத வருமானம் முப்பதாயிரத்தில் (30,000) எப்படிதான் தீர்க்க முடியும்? இதுதான் இன்றைய நாட்டு நிலை.
இந்த நிலையில்தான் நாடு ஓடிக்கொண்டிருக்கின்றது. எனவேதான் ஆட்சியாளர்கள் நாட்டை விட்டு ஓடுவதைத் தவிர வேறு வழிகள் இல்லை என்று நம்மைப் போன்ற அரசியல் விமர்சர்கள் மக்களுக்கு சொல்லி வருகின்றோம். நாட்டில் வாழ்கின்ற ஒவ்வொரு பிரசையும் பத்து இலட்சம் வரை கடனாளி என்று அரசியல் விற்பன்னர்கள் செõன்னால் இதனை சராசரி மனிதர்கள் புரியமாட்டார்கள். ஆனால் பொருட்களின் விலையேற்ற சுமையால் இதனை அவர்கள் உணர்ந்து கொள்ள முடியும். 2500 ரூபாவில் குடும்பம் நடத்த முடியும் என்று சொன்ன நமது பொருளாதார விற்பன்னர் பந்துல குணவர்தன இந்த நாட்டு மக்கள் எவரையும் பட்டினியால் சாக விடமாட்டேன் என்று உத்தரவாதம் கொடுத்திருக்கின்றார். நாம் மேற்செõன்ன ராஜாக்கள் குடும்பம் இந்த மாதத்தை எப்படிச் சமாளிப்பார்கள் எனக் கற்பனை பண்ணும் போது ஒரு குடிமகன் தனக்கு ஏற்படப் போகும் ஆபத்தைநெருக்கடியைப் புரிந்து கொள்ள முடியும். அதற்காகத்தான் அந்த குட்டி உதாரணத்தை இங்கு நாம் எடுத்திருந்தோம். இப்போது பொருளாதார நிலையில் நாடு எங்கு இருக்கின்றது என்று பார்ப்போம்.
பியகம் அச்சு இயந்திரம் என்னதான் பணத்தை மூட்டை மூட்டையாய் அடித்துக் குவித்தாலும் அது சர்வதேச அரங்கிற்கு செல்லாக் காசு. சர்வதேச உறவுகள்கொடுக்கல் வாங்கல்கள் டொலர்களில், யூரோக்களில் அல்லது யுவான்களில்தான் தீர்மானிக்கப்படுகின்றது. ஒரு காலத்தில் சிம்பாபேயில் பசிக்கு ஒரு பாணை வாங்க வேண்டுமானால் பாணை விட பல மடங்கு பெரிய பணப் பார்சல்களைத் தூக்கிக் கொண்டு கடைக்குப் போனால் மட்டுமே ஒரு இராத்தல் பாணை வாங்க முடியும். ஏறக்குறைய நமது நாடும் அந்த இடத்தை நோக்கித்தான் தற்போது துரிதமாக பயணித்துக் கொண்டிருக்கின்றது. அந்தக் காட்சிகள் தான் இப்போது நமக்கு கண்ணுக்குப் புலப்பட ஆரம்பித்திருக்கின்றது.
2022ல் உத்தேச வரவை விட செலவு மூன்று மடங்கு அதிகமாகக் காணப்படுகின்றது. அரசங்கம் இதனைச் சரி செய்ய மக்களின் அன்றாடத் தேவைகளான உணவு, பால் மா, ஏரி பொருள், மருந்து, உரம் என்பவற்றை இறக்குமதி செய்வதற்கு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்திருக்கின்றது. என்னதான் கட்டுப்பாடுகளை விதித்தாலும் இந்த இடைவெளியை சமாளிக்க முடியாது. இதனால் அரசுக்கு எதிராக மக்களின் பெருமை எல்லையைக் கடந்து நிற்கின்றது தனது பிள்ளைகள் பசியால் துடிக்கின்ற போது ஒரு தந்தை என்ன வேண்டுமானாலும் செய்யக் கூடும்.
எனவேதான் தற்போதிருந்தே அரசு படைகளை உசார் படுத்தி வருகின்றது. கிளர்ச்சி துவங்கினால் அடக்குமுறை. நிலைமையை சமாளிக்க தலைவர்கள் என்னதான் முயற்சிகளை மேற்கொண்டாலும் அவை எவையும் எதிர்பார்த்த வெற்றிகளைக் கொடுக்கவில்லை. நிதி அமைச்சர் பசில் இந்தியாவுக்கு போய் எதிர்பார்த்த பணம் அவருக்கு கிடைக்கவில்லை. அது 500 மில்லியன் வரைதான் தேறி இருக்கின்றது என்று சொல்லப்படுகின்றது. ஆனால் அதிகார பூர்வமாக கிடைத்த தொகையை அவர் இன்னும் நாட்டுக்குச் சொல்லவில்லை. சீனா இலங்கை எதிர்பார்க்கும் கடன் தொகைக்கான அங்கீகாரம் கிடைக்க வில்லை என்று கை விரிக்கின்றது.
பசில் நிதி அமைச்சரானதும் எல்லாப் பிரச்சினைக்கும் தீர்வு என்று சொன்ன அதே அவரது ஆதரவாளர்கள் இந்தியா 1500 மில்லியன் வரை தரும் என்று கணக்குச் சொல்லிக் கொண்டிருக்கின்றார்கள். போன இடத்தில் அவருக்கு பிரதமர் மோடியை சந்திக்க வாய்ப்பு வழங்கப்பட வில்லை. காரணம் அவர் பிசி எனக் காரணம் சொல்லப்பட்டிருக்கின்றது. மோடி நமது நிதி அமைச்சரை சந்திக்க விரும்பவில்லை என்பதுதான் இந்த நிராகரிப்பின் அர்த்தம். இதற்குக் காரணம் இந்தியாவுக்கு கொடுத்த பல வாக்குறுதிகளை ராஜபக்ஸ அரசு நிறைவேற்றாமல் ஏமாற்றி வந்திருக்கின்றது. இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோரை பசில் தனித்தனியாக சந்திக்க எண்ணி இருந்தாலும் இருவரும் ஒரே இடத்தில் நமது நிதி அமைச்சரை அழைத்து தம்மை ஏமாற்றி வருவது தொடர்பாக ஒரே குரலில் கூறி இருப்பதாகத்தான் தகவல். அவர்களது கேள்விகளுக்கு பசிலால் எந்தப் பதிலும் கொடுக்கக்கூடிய நிலை இருக்கவில்லை. குறைந்தபட்சம் பதின் மூன்றில் சொல்லப்பட்ட மாகாண சபைகள் தேர்தலை நடத்துவதாக சொன்னதையே அரசால் நிறைவேற்ற முடியாத நிலையில் அவர் அங்கு வாயடைத்து நிற்க வேண்டி இருந்தது. எனவே போனவர் அள்ளிக் கொண்டு வருவதற்குப் பதிலாக நாயைப்பிடி பிச்சை வேண்டாம் சாமி என்ற நிலையில் தான் வந்திருக்கின்றார். சுவரில் சாத்தி கொடுத்த கதையாகத்தான் இத னைப் பார்க்க வேண்டும்.
2021 ஏப்ரல் வரை வெளிநாட்டு கடன் நிலுவைத் தொகை 35 பில்லியன்களுக்கும் சற்று அதிகம். இலங்கை ஐஎஸ்பி 47, ஆசிய அபிவிருத்தி வங்கி 13, சீனா 10, ஜப்பான் 10 உலக வங்கி 9 என்ற விகித அடிப்படையில் கடன்களைப் பெற்றுள்ளது. எனவே சீனா தான் இலங்கைக்கு கடன் கொடுக்கின்ற மிகப் பெரிய நாடு அல்லது நிறுவனம் என்பதும் உண்மையானதல்ல. இலங்கையின் பொருளாதாரத்தை தெரிந்து வைத்திருக்கின்ற எந்த ஒரு நாடும் அதற்குக் கடன் கொடுப்பதை பல முறை யோசிக்கும். எனவே தவணைக் கடன்களை இலங்கை குறிப்பிட்ட நிறுவனங்களுக்கு வழங்க முடியாது போனால் இலங்கையை உலக நாடுகள் வங்குரோத்து நாடுகள் பட்டியலில் சேர்த்து விடும். இதிலிருந்து நாட்டை மீட்டெடுப்பது என்பது மிகப் பெரிய காரியமாகிவிடும்.
இந்த நிலையில், இலங்கை இன்னும் சீனா, ஜப்பான், இந்திய நாடுகளையே கடனுக்காக எதிர்பார்க்கின்றது. அது எந்தளவுக்கு சாத்தியம் என்று எமக்குப் புரியவில்லை. சர்வதேச நிதியத்திடம் (ஐஎம்எப்) இலங்கை கை நீட்டத் தயங்குகின்றது. அதற்குப் பிரதான காரணம் அதன் கட்டுப்பாடுகளுக்கு இலங்கை அடிபணிய வேண்டி வரும். எல்லாவற்றுக்கும் மேலாக மத்திய வங்கியை அது கட்டுப்படுத்துகின்ற நிலையும் வரும். அப்போது இந்த அரசாங்கத்தின் ஊழல்களை அது உலகிற்கு தெரியப்படுத்தும்.
அது அரசுக்கு உள்ளேயும் வெளியேயும் நெருக்கடியாக அமையும். மேலும் அதில் அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் ஏனைய நிறுவனங்களில் கொள்ளையடிப்பதைப் போன்று இதில் கொள்ளையடிக்க முடியாத ஒரு நிலையும் இருக்கின்றது. இதனால் ராஜபக்ஸாக்கள் அங்கு போவதை முடியுமான வரை தவிர்த்து வருகின்றார்கள். என்றாலும் அவர்களுக்கு இதனை விட்டால் வேறு மார்க்கங்களும் கிடையாது என்பதுதான் எமது அவதானம். முன்னாள் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன 2022ல் பட்டினியால் எத்தனை ஆயிரம் பேர் மரணிப்பார்களோ தெரியாது. உலகில் ஆர்ஜென்டினாவுக்கு அடுத்தபடியாக இலங்கையே மிக மோசமான பொருளாதாரத்தை கொண்டிருக்கும் நாடாக இருக்கின்றது எனவும் அவர் குறிப்பிடுகின்றார்.
எனவேதான் நாம் நாட்டு மக்களுக்கு இந்த வாரம் சிவப்பு எச்சரிகை ஒன்றை விடுத்திருக்கின்றோம். இப்படி ஒரு நிலை வர இருப்பது தொடர்பாக நாம் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்னர் எழுதி இருந்த பல கட்டுரைகளிலும் தொடராக சொல்லி வந்தோம். அந்தத் துயரங்களை இன்னும் சில நாட்களில் இந்த நாட்டு மக்கள் அனுபவிக்க இருக்கின்றார்கள் என்பது எமது கணிப்பு.
வருகின்ற 2022 ஜனவாரி 18ம் திகதி 500 மில்லியன் டொலர்களை பெற்ற கடனுக்காகத் திருப்பி வழங்க வேண்டிய தவணையும் வருகின்றது. ஆனால் கையிருப்பு 1000 மில்லியன் டொலர்கள் வரை மட்மே இருக்கின்றது. நாட்டு மக்களின் உணவுத் தேவைகள், எரிபொருள், மருத்து வகை, இதர தேவைகள் எல்லாம் இதில்தான் செய்ய வேண்டும். இது எப்படி சாத்தியம். எனவேதான் துவக்கத்தில் ராஜாவின் குடும்ப நிதி நிலையுடன் நாம் இதனைப் பொருத்தி உங்களுக்குச் சொன்னோம்.
இராஜாங்க அமைச்சர் விதுர விக்கரமநாயக்க இந்த அரசு இன்னும் சில நாட்களில் வெடித்து சிதறும் என ஆரூடம் கூறி இருக்கின்றார். நமது நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஆறுபதுக்கும் மேற்பட்டவர்கள் வெளிநாட்டு உல்லாசப் பயணங்களுக்கு தயாராகி வருகின்றனர். நாட்டில் டொலர் பற்றாக்குறை பற்றி கூறிக் கொண்டு இவர்கள் எப்படி இந்தப் பயணங்களை மேற்கொள்ள முடியும். அதற்கு எங்கிருந்துதான் டொலர் கிடைக்கின்றது என்று கேட்கத் தோன்றுகின்றது. இதற்கிடையில் அமெரிக்க பிரசையுமான நமது நிதி அமைச்சர் பசில் சில தினங்களுக்கு முன்னர் ஊருக்குப் போய் இருக்கின்றார். நத்தார் பண்டிகைக்கு அவர் அங்கு சென்றாரோ அல்லது டொலர் வேட்டைக்கு அங்கு போனாரோ தெரியாது.
-நஜீப் பின் கபூர்- தினக்குரல் 19/12/2021