மருத்துவம், பொறியியல் மாத்திரம்தான் உயர் கல்வியா?

கடந்த வருடம் நடைபெற்ற க.பொ.த. உயர் தர பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் ஒவ்வொரு துறைகளுக்கும் பல்கலைக்கழகங்களுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ள மாணவர்களது விபரங்களை வெளிப்படுத்தும் வகையிலான வெட்டுப் புள்ளிகள் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவால் அண்மையில் வெளியிடப்பட்டதை அறிவோம்.

அதன்படி அதற்கான தகைமை பெற்ற மாணவர்களால் அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள துறைகள் தொடர்பாக அறிந்து கொள்ள முடிந்திருக்கின்றது. கணிதம், உயிரியல் விஞ்ஞானம், வர்த்தகம், கலைத்துறை உட்பட அதனோடு சம் பந்தப்பட்டதாக 52 கற்கைப் பிரிவுகளுக்கு மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு பல்வேறு துறைகளுக்கும் தெரிவாகியுள்ள எல்லா மாணவர்களும் அந்தந்த துறைகளுக்கு கற்பதற்காக உரிய பல்கலைக்கழகங்களுக்குச் செல்வது அவசியமாகின்றது. பெறுபேறு வெளியாகி பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பங்களை சமர்ப்பித்துவிட்டு, தெரிவாகி அனுமதிவந்த பின்னர் சில துறைகளில் ஆர்வமற்றவர்களாக வாய்ப்பைத் தவறவிடுகின்றனர். சில மாணவர்கள் அவர்கள் எதிர்பார்த்திருந்த துறை வேறாக இருக்கின்ற போது இன்னுமொரு துறைக்கு தெரிவாகியிருந்தால் அந்த துறையில் கற்பதில் ஆர்வம் இல்லாததால் அந்த வாய்ப்பை தவற விடுகின்றனர். அத்துடன் தெரிவு செய்யப்பட்டு அனுமதி தொடர்பான அறிவித்தல் கிடைத்த பின்னர் தாம் குறித்த துறையில் இணைந்து கற்க விரும்பவில்லை என்பதை முறையாக உரிய நேரத்திற்கு அறிவிக்காமல் இருந்து விடுகின்றனர்.

அத்தகைய சந்தர்ப்பங்களில் இன்னுமொரு மாணவருக்கு காத்திருப்பு பட்டியல் மூலம் (Waiting list) அனுமதி கிடைக்கும் வாய்ப்பு இல்லாமல் போய்விடுகின்றது.இது ஒருவிதமான கல்வி துஷ்பிரயோகம் ஆகும்.

சில பீடங்களுக்கான துறைகள் தொடர்பாக சமூகத்தில் சிலர் மத்தியில் தவறான அபிப்பிராயங்கள் நிலவுகின்றன. குறிப்பாக மருத்துவ பீடத்தை எதிர்பார்த்து கல்வி கற்ற பின்னர் அதற்கான தகைமை பெற முடியாத நிலையில் பல்லறுவை மருத்துவ துறைக்கு அனுமதி கிடைத்தாலும் சிலர் அதனை தெரிவு செய்வதில்லை. அல்லது உயிரியல் விஞ்ஞான துறைக்கு தெரிவாகிய பின்னர் அந்த துறையால் பிரயோசனம் இல்லை என்ற கருத்தும் சமூகத்தில் நிலவுகின்றுது.

அதேபோன்ற முகாமைத்துவ பீடத்திற்காக சில சந்தர்ப்பங்களில் மாணவிகள் தெரிவாகிய பின்னர் அந்த துறைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து விடுகின்றனர். அல்லது தனியார் துறைகளில் வேறு கற்கைகளை தொடர்கின்றனர்.

மேலும் தற்போது பல்கலைக்கழகங்களில் பல புதிய துறைகள் அறிமுகமாகியுள்ளன. அந்த துறைகள் பற்றி போதுமான அறிவும் தெளிவும் இன்மையாலும் அவற்றுக்குத் தெரிவு செய்யப்பட்டு அனுமதி வந்த பின்னர் அத்தகைய துறைகளுக்குச் செல்லாமல் தவற விடுகின்றனர். அவ்வாறே ஒரு சில பெற்றோர் மாணவிகளை உயர்தரம் கற்பது வரை ஆர்வம் செலுத்தி கல்வி புகட்டுகின்றனர். அதன் பின்னர் பல்கலைக்கழக வாய்ப்பு கிடைத்தவுடன் அந்த வாய்ப்பை நழுவ விட்டு வீடுகளில் முடக்கும் துர்ப்பாக்கிய நிலையும் காணப்படுகின்றது.

எவ்வாறாயினும் முஸ்லிம் சமூகத்தில் இன்றைய சூழ்நிலையில் அறிவாளர்கள், கல்விமான்கள் துறை சார் நிபுணத்துவம் பெற்றவர்களுக்கான பற்றாக்குறை நிலவுவது தெளிவாகத் தெரிகின்றது. விஞ்ஞானத்துறையில் மாணவர்கள் கற்பதற்கு ஆர்வம் காட்டுவது போன்று விஞ்ஞானத் துறையுடன் சம்பந்தப்பட்ட வேறு துறை களில் பல்கலைக்கழகம் சென்று பட்டம் பெற்று வெளியாகாததன் காரணமாக, பாடசாலைகளில் உரிய பாடங்களை கற்பிப்பதற்கு ஆசிரியர்கள் இல்லாத பற்றாக்குறை ஏற்படுகின்றது. அதேபோன்று சட்டத்துறைக்கும் அதிகம் ஆர்வம் காட்டாத அசமந்தப் போக்கு நிலவுகின்றது. இதனால் எமது சமூகத்தில் சட்டத்தரணிகளுக்கான தட்டுப்பாடு நிலவி வருகின்றது.

அதுமட்டுமல்லாது நாட்டின் சிவில் நிர்வாகத் துறைகளுக்கு முஸ்லிம் சமூகத்தின் பங்களிப்பும் மிகவும் குறைவாக இருப்பதற்கும் முக்கிய காரணமாக அமைவது நாம் ஒரு சில துறைகளில் மாத்திரம் கவனம் செலுத்தவதும் அதிக வருமானம் தரக்கூடிய துறைகளை மாத்திரம் நாடி கல்வி நடவடிக்கைகளை முன்னெடுப்பதுமாகும்.

விஞ்ஞானத்துறை என்றால் டாக்டர்களாகத்தான் வரவேண்டும் என்றே நாம் கருதுகின்றோம். கணித துறையில் கற்றால் பொறியியலாளர்களாக மத்திரமே வரவேண்டும் என நினைக்கிறோம். ஆண்களைப் பொறுத்தவரையில் CIMA போன்ற கணக்கியல் துறைகளை மாத்திரம் தெரிவு செய்வதன் மூலம் வெளிநாடுகளில் தொழில்வாய்ப்பை இலக்கு வைத்து கல்வி கற்கின்றனர். இவ்வாறான போக்கு காரணமாக முஸ்லிம் சமூகம் எதிர்காலத்தில் இந்நாட்டில் அறிவுத்துறைகளில் ஆதிக்கம் செலுத்த ஆளில்லாத அனாதை சமூகமாக மாறும் அபாயம் இருந்து வருகின்றது.

ஏனைய சமூகங்களைப் பொறுத்தவரை அவர்கள் அதிகமாக அறிவுத்துறையி லேயே முதலீடு செய்கின்றனர். ஆனால் எமது சமூகம் பொருளாதார இலக்குகளை மாத்திரம் அளவுகோலாக வைத்து அறிவுத் தேடலை மட்டிடுவதால் நாம் அறிவுத்துறையில் பின்னடைவு கண்ட சமூகமாக இருந்து வருகின்றோம்.

அதனால் பல்கலைக்கழகங்களுக்கு தெரிவாகி உள்ள மாணவர்களை ஆண், பெண் என்ற வேறுபாடு இல்லாமல் எந்தத் துறைக்காவது ஊக்கமளிக்க வேண்டியது பெற்றோரினதும் சமூகத்தினதும் பொறுப்பாகின்றது. அறிவுத் துறையில் நாம் இன்னும் 25 வருடங்களில் எமது சமூகம் எங்கு இருக்க வேண்டும் என்ற அடிப்படையில் தூர நோக்கில் சிந்திக்க வேண்டும். எதிர்வரும் தசாப்தம் அறிவியல் ரீதியான செயற்பாட்டை பிரதானமாகக் கொண்டதாக அமைவதால் எமது சமூகம் பாரிய சவால்களை சந்திக்க வேண்டி இருக்கின்றது.

2010 ஆம் ஆண்டு முதல் பல்வேறு குற்றச்சாட்டுக்கள், காரணங்களை அடிப்படையாக வைத்து முஸ்லிம் சமூகம் அடக்குமுறைகள், இன, மத ரீதியான ஓரங்கட்டல்கள், ஒதுக்கல்களுக்கு முகம் கொடுத்து வரும் ஒரு சமூகமாக மாறி இருக்கின்றது. இத்தகைய சவால்களை அறிவு ரீதியாக மாத்திரமே எதிர்கொள்ள வேண்டும். உணர்ச்சி ரீதியாக எதிர்கொள்ள முனைந்த ஒரு குழுவினரின் செயலே உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம். அதன் விளைவுகளை ஒட்டுமொத்த சமூகமும் இன்று அனுபவிக்க வேண்டி ஏற்பட்டுள்ளது.

வளமான வாழ்க்கைக்கு பொருளாதார ரீதியாக பலமும் செல்வாக்கும் அவசியமாகின்றது என்பதை மறுக்க முடியாது. குறு கிய காலத்தில் அதிகமான செல்வம் தேடுவதை இலக்கு வைத்து மாத்திரம் எமது செயற்பாடுகள் அமைந்தால் இந்நாட்டில் எமது இருப்பு கேள்விக்குறியாக மாறலாம்

எமது திட்டமிடல்கள் நீண்ட கால அடிப்படையில் எதிர்காலத்தில் வரப்போகின்ற சவால்களை எவ்வாறு எதிர்கொள்வது என்து பற்றி சிந்தித்ததாகவும் அதற்கு ஏற்ற வகையில் அறிவுத்துறைகளில் முதலீடு செய்வது, தியாக உணர்வோடு அறிவுத்துறைகளில் பங்களிப்புச் செய்வதன் மூலம் முஸ்லிம் சமூகமும் ஏனைய சமூகங்களுக்கு நிகராக தலைநிமிர்ந்து வாழ வேண்டும் என்ற தூர சிந்தனையும் அவசியமாகின்றது.

அதே நேரம் பொருளாதார காரணிகளால் சில மாணவர்கள் தூர இடங்களில் உள்ள பல்கலைக் கழகங்களுக்கு தெரிவு செய்யப்பட்டால் அங்கு சென்று கல்வி கற்பதற்கு தயங்குகின்ற நிலைமைகள் உள்ளன. அரசாங்கம் மகாபொல புலமைப்பரிசில் வழங்கினாலும் அதுவும் உரிய காலத்திற்கு மாதாந்தம் சரியான நேரத்திற்கு வழங்கப்படுவதில்லை. வறுமை நிலையில் அல்லது பொருளாதார பின்னடைவு கண்ட குடும்பகளில் இருந்து பல்கலைக்கழகங்களுக்கு தெரிவாகும் மாணவர்களால் சில சந்தர்ப்பங்களில் உயர்கல்வி வாய்ப்பை எட்டிப்பிடிக்க முடியாத நிலை இருந்து வருகின்றது.

நாட்டில் சில அமைப்புக்கள் வறிய மாணவர்களுக்கு புலமைப்பரிசில் நிதி உதவிகளை வழங்கி வந்தாலும் அதிகமான நிறுவனங்கள் மருத்துவ துறைக்கு தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கு மாத்திரமே புலமைப்பரிசில் வழங்குவதோடு ஏனைய துறைகளை கவனத்தில் எடுப்பதில்லை. இவ்வாறான நிலைமைகள் எமது சமூகத்தில் இருந்து புத்திஜீவிகள் உருவாவதற்கு தடைக்கல்லாக அமைகின்றன. அதனால் ஒவ்வொரு ஊரிலும் வசதிபடைத்தவர்கள் ஒன்றிணைந்து இவ்வாறு உயர்கல்வியில் ஆர்வமும் ஈடுபாடும் காட்டும் மாணவர்களை கைகொடுத்து தூக்கி விடுவதற்கான செயற்றிட்டங்களை வகுக்க வேண்டியது காலத்தின் தேவையாகும்.

எம்.எஸ். அமீர் ஹுசைன் (விடிவெள்ளி 9/12/2021)

Check Also

ஹம்தியின் மரணம் குறித்து விரிவான விசாரணை நடத்துக

சிறுநீரக சத்திர சிகிச்சைகளை அடுத்து உயிரிழந்த கொழும்பு கொட்டாஞ்சேனையைச் சேர்ந்த 3 வயதான ஹம்தி பஸ்லிமின் மரணம் தொடர்பில் விரிவான …

Free Visitor Counters Flag Counter