நாட்டின் ஹஜ் உம்ரா முகவர் சங்கங்கள் இரண்டும் அரசாங்கத்துக்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில் அந்நிய செலாவணி பிரச்சினைக்கு தீர்வாக உம்ரா யாத்திரை ஏற்பாடுகளை நிறுத்தி வைத்துள்ளமைக்கு அரச ஹஜ்குழு நன்றிகளைத் தெரிவித்துள்ளதுடன் பொதுமக்களும் இவ்விடயத்தில் ஒத்துழைக்க வேண்டுமென கோரியுள்ளது.
இது தொடர்பில் அரச ஹஜ் குழுவின் தலைவர் அஹ்கம் உவைஸ் விளக்கமளிக்கையில்
உம்ரா யாத்திரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில் பொதுமக்கள் யாத்திரை மேற்கொள்வதற்கான ஏற்பாடுகளை நிறுத்திக் கொள்ள வேண்டும். உப முகவர்களுக்கு கட்டணம் செலுத்தி ஏமாற்றப்படுவதிலிருந்தும் தவிர்ந்து கொள்ள வேண்டும்.
உப முகவர்கள் இரகசியமான முறையில் உம்ராவுக்கான ஏற்பாடுகளைச் செய்து அதன் மூலம் எவரும் பிரச்சினைகளுக்குள்ளானால் அரச ஹஜ் குழுவோ, முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களமோ பொறுப்பாக மாட்டாது.
எனவே பொது மக்கள் இவ்விடயத்தில் அவதானமாக இருக்கவேண்டும் எனவும் அஹ்கம் உவைஸ் தெரிவித்தார்.
(ஏ.ஆர்.ஏ.பரீல்) விடிவெள்ளி 09-12-2021