அகால மரணமும் பின்னர் அதன் வேதனைகளும்

ஒருவர் வீட்டைவிட்டுக் கிளம்பி, வீடு திரும்பும் வரையிலும் அச்சத்துடன் இருந்த காலம் மலையேறிவிட, கொரோனா தொற்றின் பின்னர், எவ்விதமான அச்சமும் இன்றி, வீடுகளுக்குள்ளே முடங்கிக் கிடக்க வேண்டிய நிலைமையொன்று ஏற்பட்டிருந்தது.

வீடுகளில் இளம் பிள்ளைகளைக் கொண்டிருந்த குடும்பத்தினர், வெளியே செல்லவில்லை என நினைத்து தங்களுடைய பிள்ளைகள், வீட்டைவிட்டு பெரும் சந்தோஷமடைந்தனர். எவ்விதமான தீய செயல்களிலும் ஈடுபட்டிருக்க மாட்டார்கள் என்ற அதிதீத நம்பிக்கை பெற்றோர்களிடத்தில் இருந்தது.

எனினும், நிகழ்நிலையின் ஊடாக கற்றல் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டமையால், விலை மதிப்புடைய திறன்பேசிகளை பிள்ளைகளுக்குப் பெற்றுக்கொடுக்கவேண்டிய நிலைமை பெற்றோருக்கு ஏற்பட்டது. அத்துடன், இணைய வசதிகளையும் ஏற்படுத்தி கொடுக்கவேண்டும்.

பல பெற்றோர்கள், ஒருவாறு வாங்கிகொடுத்தனர், வசதியில்லாதவர்கள் அப்பக்கமே தலையை வைத்துப்படுக்கவில்லை. கிராமங்கள், தோட்டப்புறங்களில் ஒரே வகுப்பில் படிப்பவர்கள் ஒரு குழுவாக கற்றுக்கொண்டனர். பெருந்தோட்டப் பாடசாலைகள் பெரும்பாலனவற்றில் நிகழ்நிலையின் ஊடாக கற்றல் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படவில்லை.

அவ்வாறு, வீடுகளுக்குள் முடக்கப்பட்ட மாணவர்களில் பலரும், திறன்பேசியின் ஊடாக சில தேவையற்ற விடயங்களை செய்திருக்கின்றமையை பெற்றோர்களின் கவனத்துக்கு வகுப்பாசிரியர்கள் கொண்டுவந்தும் இருக்கின்றனர். பாடசாலைகள் மீளத் திறக்கப்பட்டமையால், அந்தத் தொகையிலிருந்து பலரும் விலகிநிற்கின்றனர்.

இவ்வாறான நிலையில்தான், ஆறுகள், குளங்கள், கடல்களில் இளம் பிள்ளைகள் மரணிக்கும் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளது. இரண்டரை வருடங்களுக்கு மேல் வீடுகளுக்குள்ளே இருந்தவர்கள் தங்களுடைய நண்பர்களுடன் ஊர் சுற்றுவதற்காக சென்றே, இவ்வாறான அனர்த்தங்களுக்குள் சிக்கிக்கொள்கின்றனர்.

எங்கு செல்கிறீர்கள், ஏன் செல்கிறீர்கள், யார், யார் வருகின்றனர் என்பது தொடர்பில் பெற்றோர்கள் கேட்கவேண்டும். சீரற்ற வானிலை தொடர்பிலும் அவதானம் செலுத்தவேண்டும். அவ்வாறு செயற்படுவதன் ஊடாகவே அகால மரணங்களைத் தவிர்க்கமுடியும்.

அகால மரணங்களால் ஏற்படும் வலியும், வேதனையும் சொல்லில் அடங்காதவை, ஒரு குழுவில் சென்றவர்கள் இரண்டொருவர் உயிர்தப்பி, இன்னும் சிலர் அகால மரணமாகிவிட்டால், அந்த வேதனையும், சோதனையும் சதா காலமும் நெருடிக்கொண்டே இருக்கும். அந்த வேதனையில் இருந்து மீண்டெழுவதற்கு நீண்ட நாட்கள் எடுக்கும்.

அவற்றையெல்லாம் தவர்த்துக்கொள்ள வேண்டுமாயின் ” ஆழமறிந்து அதில் இறங்கவேண்டும்”. இதனை நீரில் இறங்குபோது மட்டுமே கருத்தில் கொள்ளாது, ஒவ்வொரு விடயங்களிலும் கடைப்பிடித்தால் பல்வேறான பிரச்சினைகளைத் தவிர்க்கலாம்.

அதேபோல, சீரற்ற வானிலையால், ஆற்றுகளின் அடியில் நீரோட்டம் அதிகரித்து இருக்கும், இறங்கியவுடனே இழுத்துச் சென்றுவிடும். ஆக, நீரின் ஆழத்தை அறியாமல் அதில் காலை விட்டால், நீரினுள் மூழ்க நேரிடும் என்பதனால், கொரோனா முடக்கத்தின் பின்னரான காலங்களில் மிகவும் கவனமாக இருக்கவேண்டியது அவசியம்.

-தமிழ் மிற்ரோர் 7-12-2021-

Check Also

ஹம்தியின் மரணம் குறித்து விரிவான விசாரணை நடத்துக

சிறுநீரக சத்திர சிகிச்சைகளை அடுத்து உயிரிழந்த கொழும்பு கொட்டாஞ்சேனையைச் சேர்ந்த 3 வயதான ஹம்தி பஸ்லிமின் மரணம் தொடர்பில் விரிவான …

Free Visitor Counters Flag Counter