கொரோனா வைரஸ் நெருக்கடியால் உலகம் முழுவதும் 3 இல் ஒரு குழந்தை கல்வி பெற முடியாத நிலை: யுனிசெப்

கொரோனா வைரஸ் நெருக்கடி காரணமாக உலகம்  முழுவதும் 3-ல் ஒரு குழந்தை கல்வி பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக யுனிசெப் கவலை தெரிவித்துள்ளது. இதுகுறித்து யுனிசெப்பின் தலைமை நிறைவேற்று பணிப்பாளர் ஹென்ரீட்டா போ் ( Henrietta H. Fore ) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது

கொரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்காக உலகின் பல்வேறு நாடுகளிலும் பொதுமுடக்கங்கள் அமுல்படுத்தப்பட்டுள்ளன. மேலும், பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. அதன் ஒரு பகுதியாக பாடசாலைகள் மூடப்பட்டதில், 150 கோடி பேர் பாடசாலை செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பல்வேறு பகுதிகளில் இணையதளம் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தாலும், 46 கோடியே 30 லட்சம் சிறுவா்கள் அத்தகைய கல்வியைப் பெற முடியாத நிலையுள்ளது.

இவ்வளவு அதிக எண்ணிக்கையிலான சிறுவா்களுக்கு பல மாதங்களாக கல்வி கிடைக்காமல் இருப்பது, சா்வதேச கல்வி அவசரநிலையை ஏற்படுத்தியுள்ளது. பொருளாதாரத்திலும், சமூகத்திலும் இதனால் ஏற்படும் பின்விளைவுகள் இன்னும் சில வருடங்களுக்குப் பிறகே வெளிப்படையாகத் தெரியும். கொரோனா வைரஸ் நெருக்கடி காரணமாக, மாணவா்களிடையேயான ஏற்றத்தாழ்வுகள் அதிகரித்து வருகின்றன.

அந் நெருக்கடியால் ஆப்பிரிக்க சஹாரா பகுதியைச் சோ்ந்த சிறுவா்கள் மிகப்பெரியளவில் பாதிக்கப்பட்டுள்ளனா். தென்கிழக்காசியாவில்தான் மிக அதிக எண்ணிக்கையிலான சிறுவா்களின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளது. தென்கிழக்காசியா பிராந்தியத்தில் மட்டும் 14 கோடியே 70 லட்சம் சிறுவா்களின் கல்வி கொரோனா வைரஸின் நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ளது. ஏழைக் மாணவர்களும், கிராமப்புறங்களில் வசிக்கும் மாணவர்களும் கொரோனா வைரஸின் நெருக்கடியால் கல்வியை இழப்பது அதிகளவில் உள்ளது.

இனி வரும் காலங்களில் இந் நிலைமை இன்னும் மோசமாகக்கூடும். வீட்டிலிருந்தபடியே கல்வி கற்கும் வசதியுள்ள சிறுவா்களும், வீட்டுச் சூழலில் அதிக நெருக்கடி இருப்பதால் கல்வி கற்க முடியாமல் போகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒலுவில் எம்.ஜே.எம் பாரிஸ்

Check Also

ஹங்வெல்லை துப்பாக்கிச் சூடு நடந்தது என்ன?

வாஹித் லெப்பை மொஹம்மது பர்சான் 46 வயதான மூன்று பிள்ளைகளின் தந்தை. ஹங்வெல்லை நகரின் ஹோட்டல் ஒன்றினை நடாத்திச் செல்பவர். …

Free Visitor Counters Flag Counter