இது போன்றதொரு காலம் இருந்ததுண்டா?

நாடு, சகல துறைகளிலும் பல்வேறு நெருக்கடிகளை எதிர்நோக்கி இருக்கிறது. எந்தவொரு நெருக்கடியும் அண்மைக் காலத்தில் தீர்வது ஒரு புறமிருக்க, இனி எப்போதாவது தீருமா என்று சிந்திக்கும் நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டு உள்ளனர்.

கோட்டாபய ராஜபக்ஷ திறமையானவர்; அறிவுள்ளவர், புலிகளுக்கு எதிரான போரில் வெற்றி பெறுவதற்குக் காரணமாக இருந்தவர்; நாட்டில் ஒழுங்கை நிலைநாட்டக் கூடியவர் என்றெல்லாம் கூறியே, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன அவரை 2019ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் நிறுத்தியது.

ஆயினும், இப்போது எல்லாம் தலை கீழாகவே நடைபெறுகிறது. திறமையையும் காணவில்லை; ஒழுங்கையையும் காணவில்லை; அறிவையும் காணவில்லை. அத்தியாவசிய பொருட்களின் விலை வானளாவ உயர்கிறது.

அது குறைவது ஒரு புறமிருக்க, இன்றோ அல்லது நாளையோ உயர்வதை நிறுத்திக் கொள்ளும் என்பதற்கு, எந்தவோர் உத்தரவாதமும் இல்லை. கண் முன்னே ஊழல்கள் இடம் பெறுகின்றன. அனர்த்தமும் சிலருக்கு ஆசீர்வாதமாகிறது.

அரிசி, மரக்கறி வகைகள் போன்ற ஒரு சில பொருட்கள் மட்டுமே, நாட்டில் உற்பத்தி செய்யப்பட்டு வந்தன. ஏனைய சகல பொருட்களும் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன. இப்போது, உள்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்டு வந்த பொருட்கள் உள்ளிட்ட சகல பொருட்களினது விலைகளும் உயரும் நிலை உருவாகியுள்ளது.

பிரதான காரணம், நாட்டில் வெளிநாட்டு செலாவணிக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளமையாகும். அத்தோடு, பொதுத் தேர்தலில் வெற்றி பெறும் நோக்கத்துடன், கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக பதவியேற்றவுடன் பெருமளவில் வரிச் சலுகைகளை வழங்கினார். அதன் மூலம் வருடமொன்றுக்கு திறைசேரி சுமார் 65,000 கோடி ரூபாயை இழப்பதாகக் கூறப்படுகிறது.

நாட்டுக்கு டொலர் சம்பாதித்துத் தந்த சகல துறைகளும், கொவிட்- 19 தொற்றின் காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ளன. சுற்றுலாத்துறை அதில் முக்கியமானதொரு துறையாகும். இரண்டு வருடங்களுக்கு முன்னர், வருடமொன்றுக்கு 20 இலட்சம் உல்லாசப் பிரயாணிகள் இலங்கைக்கு வந்த போதிலும், இந்த வருடம் ஒரு இலட்சம் பிரயாணிகளே வந்துள்ளனர்.

வெளிநாடுகளில் தொழில் செய்தவர்களில் பெரும்பாலானோர் நாடு திரும்பியுள்ளனர். அவர்களிலும் மிகச் சிலரே மீண்டும் அத்தொழில்களுக்குச் செல்லத் தயாராக இருக்கிறார்கள்.

வெளிநாட்டு செலாவணியைத் தேடித் தந்த துறைகளில், ஆடை உற்பத்தித்துறை ஓரளவுக்குத் தப்பிப் பிழத்துள்ளது. ஆனால், அவற்றின் உற்பத்திக்குத் தேவையான மூலப் பொருட்களுக்கு பெருமளவு வெளிநாட்டு செலாவணி செலவிட வேண்டியுள்ளது. அரசாங்கத்தின் அடக்குமுறை கொள்கை காரணமாக, ஐரோப்பிய ஒன்றியம் இலங்கையின் ஏற்றுமதிப் பொருட்களுக்கான ஜீ.எஸ்.பி பிளஸ் தீர்வை சலுகையை நிறுத்தும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அதையும் இழந்தால் வெளிநாட்டு செலாவணிப் பிரச்சினை மேலும் மோசமாகும்.

இந்த வெளிநாட்டு செலாவணி தட்டுப்பாட்டின் காரணமாகவே அரசாங்கம் இரசாயன உரத்தை இறக்குமதி செய்வதைத் தடை செய்தது. அதனால் உணவுப் பொருட்கள் இறக்குமதி செய்ய வேண்டிய நிலை உருவாகியிருக்கிறது. இப்போது, அரசாங்கம் மீண்டும் இரசாயன உரம் இறக்குமதிக்கு அனுமதி வழங்கியிருப்பதால், அடுத்த வருடம் இரசாயன உரத்துக்கும் உணவுப் பொருட்களுக்குமாக வெளிநாட்டு செலாவணியை செலவிட வேண்டியுள்ளது. இவ்வாறு ஒரு பயங்கர சிக்கலில் நாடு சிக்கித் தவிப்பதால், விலைவாசிப் பிரச்சினை அண்மைக் காலத்தில் தீரும் என்பதை எதிர்ப்பார்க்க முடியாது.

வெளிநாட்டு செலாவணி மற்றும் கொவிட்-19 தொற்று மட்டும் தான் விலைவாசி உயர்வுக்கு காரணம் என்பதைப் போல் தான், அமைச்சர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர். ஆனால், அவை மட்டும் அல்ல, நிர்வாக சீர்கேடும் ஊழலும் அதற்குக் காரணங்களாகும்.

அரிசி விலை அதற்குச் சிறந்த உதாரணமாகும். நாட்டில் போதியளவு அரிசி இருக்கிறது. ஆனால், அரசியல் பின்புலம் உள்ள ஓரிரு வர்த்தகர்களே அதனை சேமித்து வைத்திருக்கின்றனர். அவர்கள் தம் விருப்பப்படி விலையை தீர்மானிக்கிறார்கள். அதனைத் தடுக்கச் சட்டம் இருந்தும் அரசாங்கம் அதனை தடுப்பதில்லை.

பாரியளவிலான ஊழல் என்பது, இப்போது பகிரங்கமாகவே நடைபெறுகிறது. உதாரணமாக, சுமார் 100 ரூபாய், 110 ரூபாயுக்கு ஒரு கிலோ கிராம் சீனி விற்கப்பட்டு வந்த போது, அதன் விலையை 85 ரூபாயாகக் குறைப்போம் எனக் கூறிய அரசாங்கம், கடந்த வருடம் நவம்பர் மாதம் சீனிக்கான இறக்குமதி தீர்வையை கிலோகிராமுக்கு 50 ரூபாயிலிருந்து 25 சதமாகக் குறைத்தது. ஆனால், அந்த வரிச் சலுகைளை பெற்றுக் கொண்ட வர்த்தகர்கள், அரசாங்கம் வர்த்தமானி மூலம் விதித்த 85 ரூபாயுக்கு சீனியை விற்கவில்லை. மாறாக, சீனியின் விலையை அதன் பின்னர் 220 ரூபாயாக அதிகரித்தது.

அரசாங்கம், அதற்கு எதிராக நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தை பாவிக்கவில்லை. பின்னர், நாட்டில் பெரும் எதிர்ப்பு எழவே, சீனியின் விலையை வர்த்தகர்கள் 135 ரூபாயாகக் குறைத்தனர். அது இப்போது, மேலும் அதிகரித்துக் கொண்டு போகிறது. அநாவசியமாகத் தீர்வைக் குறைத்ததன் மூலம் மட்டும், அரசாங்கம் 9,000 கோடி ரூபாய் பணத்தை இழந்ததாகக் கூறப்பட்டது. இது, மத்திய வங்கி பிணைமுறி மோசடியைப் பார்கிலும் பாரிதொரு மோசடியாகும்.

அண்மையில், சதோச நிறுவனத்தின் சில அதிகாரிகள், அந்நிறுவனத்தில் இருந்த இரண்டு கொள்கலன் வெள்ளைப்பூடுகளை, புறக்கோட்டையைச் சேர்ந்து இரண்டு வர்த்தகர்களுக்கு கிலோ கிராம் 135 ரூபாய் வீதம் விற்றனர். பின்னர், அதே வெள்ளைப்பூடுகளை கிலோ கிராம் 445 ரூபாய்க்குத் தமது நிறுவனத்துக்காகவே கொள்வனவு செய்தனர். இதனை இரண்டு பத்திரிகைகள் அம்பலப்படுத்தவே, அந்தச் செய்திகளைப் பற்றி (ஊழலைப் பற்றி அல்ல) விசாரிக்க இரகசிய பொலிஸுக்கு வருமாறு, இரண்டு பத்திரிகைகளின் ஆசிரியர்கள் மற்றும் நிருபர்கள் கடந்த ஒக்டோபர் மாதம் பணிக்கப்பட்டடனர். பின்னர் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலையிட்டு அது தடுக்கப்பட்டது. அரசியல்வாதிகளின் தொடர்பு இல்லாமல், இவ்வாறு பகற்கொள்ளைகள் இடம்பெற முடியுமா என்ற கேள்வி எழுகிறது. இப்போது அதைப் பற்றி எவரும் பேசுவதில்லை.

இரசாயன உரம் இறக்குமதி செய்வதைத் தடைசெய்த அரசாங்கம், சீனாவிலிருந்து சேதனப் பசளை இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுத்தது. அந்தப் பசளையில் விஷக்கிருமிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அது தொடர்பான சர்ச்சைக்கு மத்தியில், அரசாங்கம் இந்தியாவிலிருந்து நெனோ நைட்ரஜன் என்ற திரவப் பசளையை இறக்குமதி செய்தது. அதன் விலை ஒரு போத்தல் 2,000 ரூபாய்க்கு அதிகம் என்றும் கூறப்பட்டது.

அதன் மூலம் பாரியதொரு மோசடி இடம்பெற்றுள்ளதாக எதிர்க்கட்சிகள் கூறிய போது, விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே, அதனை எதிர்த்து சவால் விடுத்தார். ஆனால், பின்னர் அந்தத் திரவப் பசளை உற்பத்தி செய்யும் நிறுவனததின் அதிகாரிகள், இலங்கைக்கு வந்த போது தமது பசளையின் விலையையும் ஊடகவியலாளர்களுக்கு தெரிவித்தனர். அதன்படி அதன் ஒரு போத்தல் 500 ரூபாயாகவே இருந்தது. அதாவது அமைச்சர்களும் அதிகாரிகளும் விலையை நான்கு மடங்காக அதிகரித்தே காட்டியுள்ளனர். இப்போது தாம் இதில் சம்பந்தப்படவில்லை என அளுத்கமகே கூறுகிறார்.

சீனாவிலிருந்து சேதனப் பசளை இறக்குமதி செய்த முறையின் காரணமாகவும் அரசாங்க அதிகாரிகள் மற்றொரு பிரச்சினையை உருவாக்கியுள்ளனர். அவர்கள் அந்தப் பசளையை, இரசாயனப் பகுப்பாய்வுக்கு உட்படுத்தாமலேயே அதற்கான ஒப்பந்தத்தை குறிப்பிட்ட பசளைக் கம்பனியுடன் செய்து கொண்டனர். அதற்கான பணத்தை செலுத்துவதற்காக மக்கள் வங்கியில் கடன் பத்திரத்தையும் திறந்தனர். பின்னர், பசளையின் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்ட போது அதில் விஷக்கிருமிகள் இருப்பது தெரிய வந்தது.

இப்போது, சீன நிறுவனம் அதற்கான பணத்தை கேட்கிறது. ஒப்பந்தம் செய்து கொண்டால் அதன் படி கொடுப்பனவுகள் வழங்கப்பட வேண்டும். பேச்சுவார்த்தை மூலம் ஏதாவது மாற்றங்களைச் செய்து கொள்ள முயல்வதேயல்லாது, நாம் முன்னரே இரசாயன பரிசோதனைகளை மேற்கொள்ளவில்லை என்று இப்போது கூற முடியாது. வழக்கொன்றை காரணம் காட்டி, பணத்தை வழங்க மறுத்த மக்கள் வங்கியை சீனக் கம்பனி கறுப்புப் பட்டியலில் சேர்த்தது. பசளையை ஏற்றி வந்த கப்பலும் நாட்டை சுற்றி வலம் வருகிறது.

இந்த நிலையில், ஜனாதிபதி அண்மையில் சிறந்ததோர் அரசியல் பாடத்தை மக்களுக்கு கற்றுக் கொடுத்தார். “எம்மை வெளியேற்ற வேண்டும் என்று நினைத்தால், நீங்கள் எமக்கு முன்னர் வெளியேற்றியவர்களை மீண்டும் அழைக்காதீர்கள்” என அவர் கூறினார்.

உண்மைத் தான். ஆனால் ராஜபக்ஷர்களும் முன்னைய ஆட்சியில் பதவியில் இருந் வெளியேற்றப்பட்டவர்களேயாவர். ஜனாதிபதியின் ஆலோசனையை மக்கள் 2019ஆம் ஆண்டும் கடந்த வருடமும் பின்பற்றி இருந்தால், கோட்டாபய ஜனாதிபரியவதோ ஸ்ரீ லங்கா பொதுஜன முபெரமுன நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையைப் பெறுவதோ சாத்தியமாகி இருக்கமுடியாது.

சுதந்திரம் பெற்றது முதல், மக்கள் முன்னர் விரட்டியவர்களையே ஒவ்வொரு தேர்தலிலும் மீண்டும் பதவியில் அமர்த்தி இருக்கிறார்கள். எனவே, ஜனாதிபதியின் ஆலோசனை சரியானதே. அந்த ஆலோசனையோடு மற்றொரு விடயத்தையும் மக்கள் கருத்திற் கொள்ள வேண்டும். வெறுமனே வாக்குறுதிகளை நம்பியோ இனத்தை மதத்தைப் பார்த்தோ அரசியல்வாதிகளுக்கு வாக்களிக்காமல், அவர்களிடம் நாட்டைக் கட்டி எழுப்ப ஏதாவது திட்டம் இருக்கிறதா என்று ஆராய்ந்து பார்ப்பதும் மக்களின் கடமையாகும்.

திறந்த மனதுடன் அரசியல்வாதிகளையும் அரசியல் கட்சிகளையும் பார்க்க மக்கள், குறிப்பாக படித்த இளைஞர்கள் தம்மை அரசியல் ரீதியாக வளர்த்துக் கொள்ளாத வரை நாடு முன்னேறாது.

எம்.எஸ்.எம். ஐயூப் (தமிழ் மிற்றோர் 01-12-21)

Check Also

ஹம்தியின் மரணம் குறித்து விரிவான விசாரணை நடத்துக

சிறுநீரக சத்திர சிகிச்சைகளை அடுத்து உயிரிழந்த கொழும்பு கொட்டாஞ்சேனையைச் சேர்ந்த 3 வயதான ஹம்தி பஸ்லிமின் மரணம் தொடர்பில் விரிவான …

Free Visitor Counters Flag Counter