நீண்ட காலமாக திறக்கப்படாமலுள்ள கண்டி – யாழ் ஏ9 வீதியின் அக்குறணை பிரதேசம் வெள்ளத்தால் மூழ்கும் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக கிராமிய வீதிகள் மற்றும் ஏனைய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சர் நிமல் லன்சா தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
அக்குறணை நகரம் வெள்ளத்தில் மூழ்கும் பிரச்சினைக்கான தீர்வு வழங்கப்பட்டுள்ளது. இதற்காக வீதி அபிவிருத்தி அதிகாரசபை, பிரதேச செயலாளர் அலுவலகம், நகர அபிவிருத்தி அதிகாரசபை, ஈரநில அபிவிருத்திசபை, வளிமண்டலவியல் திணைக்களம் உள்ளிட்டவை இணைந்து இந்த பிரச்சினைக்கான தீர்வினை வழங்கியுள்ளன.
இந்த பிரச்சினை வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் ஊடாக மாத்திரம் தீர்க்கப்படக் கூடியதல்ல. அதன் காரணமாக இது நீண்ட கால பிரச்சினையாகக் காணப்பட்டது. எனவே தான் அனைத்து அரச நிறுவனங்களும் இணைந்து இந்த பிரச்சினைக்கான தீர்வினை காண வேண்டும் என்று அரசாங்கம் தீர்மானித்தது.
இந்த பிரச்சினைக்கான தீர்வினைப் பெற்றுக் கொள்வதற்காக அரசாங்கம் பல்வேறு தரப்பினரிடமும் பல்வேறு பரிந்துரைகளைக் கோரியிருந்தது.
சாலைகளை விரிவுபடுத்துதல், கால்வாய்களை அகலப்படுத்துதல், வண்டல் மண் அகற்றுதல், நிலம் கையகப்படுத்துதல், அனுமதியற்ற கட்டுமானங்களை அகற்றுதல், கழிவுநீரை அகற்ற முறையான வேலைத்திட்டம் தயாரித்தல் என பல முன்மொழிவுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து அப்பகுதியில் கட்டுமானப்பணிகள் நடந்து வருவதால், இப்பிரச்னை மேலும் அதிகரிக்கும் அபாயம் உள்ளது.
இப்பிரச்சினைக்கு தீர்வு காண பல்வேறு யோசனைகள் முன்வைக்கப்பட்ட போதிலும் நடைமுறைச் சிக்கல்கள் காரணமாக இறுதித் தீர்வை எட்ட முடியவில்லை.
இந்தப் பிரச்சினையின் முக்கியத்துவத்தை உணர்ந்து, அதைத் தீர்ப்பதற்கு சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினருடனும் கலந்துரையாடக்கூடிய முன்மொழிவுகளையும் செயல்களையும் நாம் உருவாக்குவோம்.
கண்டியிலிருந்து யாழ்ப்பாணம் செல்லும் வழியில் மாத்தளை மற்றும் ஹரிஸ்பத்துவ பிரதேசங்களில் பயணிக்கும் போது மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள், வர்த்தக சமூகம் எதிர்நோக்கும் பிரச்சனைகளுக்கான வினைத்திறனான தீர்வை வழங்குவதற்கு அரசாங்கம் செயற்பட்டு வருகிறது என்றார்.
எம்.மனோசித்ரா – -வீரகேசரி-