அனைத்து வெளிநாட்டுப் பயணிகளுக்கும் எதிர்வரும் நவம்பர் 30ஆம் திகதி முதல் தமது நாட்டுக்குள் எந்தவொரு வெளிநாட்டவரும் நுழைய ஜப்பான் தடை விதித்துள்ளது.
தென்னாபிரிக்கா உள்ளிட்ட ஒரு சில நாடுகளில் அடையாளம் காணப்பட்டு தற்போது மேலும் சில நாடுகளில் அடையாளம் காணப்பட்டுள்ள, திரிபடைந்துள்ள புதிய கொரோனா வைரஸான Omicron பரவலைத் கருத்திற்கொண்டு தனது அனைத்து எல்லைகளையும் மூடுவதாக ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா அறிவித்துள்ளார்.
வெளிநாட்டு வர்த்தகர்கள், மாணவர்கள், தொழிலாளர்களுக்காக இத்தடை விதிக்கப்படுவதாக அவர் அறிவித்துள்ளார்.
ஆயினும் ஜப்பானில் வசிக்கும் வெளிநாட்டவர் மற்றும் ஜப்பானியர்கள் மீண்டும் ஜப்பானுக்கு திரும்புவதில் எவ்வித தடையும் இல்லையென அறிவிக்கப்பட்டுள்ளது. ஆயினும் Omicron தொற்று அடையாளம் காணப்பட்டுள்ள 14 நாடுகளிலிருந்து வரும் நிலையில், அவர்கள் அரசாங்கத்தின் தனிமைப்படுத்தல் நிலையங்களில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
Omicron கொவிட் வைரஸ் திரிபானது, தென்னாபிரிக்கா மற்றும் அதன் அண்டை நாடுகளான பொட்சுவானா, லெசதோ, நமீபியா, சிம்பாப்வே, சுவாசிலாந்து உள்ளிட்ட நாடுகளில் அடையாளம் காணப்பட்டதைத் தொடர்ந்து பல்வேறு நாடுகளும் கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன.
தற்போது குறித்த வைரஸ் நெதர்லாந்து, கனடா உள்ளிட்ட சில நாடுகளில் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து ஜப்பான் தற்போது வெளிநாட்டவர்களுக்கு தடை விதிப்பதாக அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
– தினகரன் –