இலங்கையின் பணவீக்கம் (பொருட்களின் விலையேற்றத்தால் நாணய மதிப்பு குறைதல் மற்றும் நாட்டின் நாணயத்தின் வாங்கும் திறன் குறைதல்) ஒக்டோபர் மாதத்தில் 8.3 வீதமாக அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.
மத்திய வங்கி நேற்று (22) வெளியிட்ட அறிக்கையின் அடிப்படையில், செப்டெம்பர் மாதத்தில் 6.2 சதவீதமாகக் காணப்பட்ட பணவீக்கம், 2.1 ஆல் உயர்ந்து ஒக்டோபர் மாதத்தில் 8.3 வீதமாக அதிகரித்துள்ளது.
இது உணவு மற்றும் உணவு அல்லாத பொருட்களின் விலைகளின் அதிகரிப்பினால் தூண்டப்பட்டுள்ளது என்றும் மத்திய வங்கி தமது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.
உணவுப் பொருட்களின் விலை 0.83 சதவீதமும், உணவு அல்லாத பொருட்களின் விலை 1.23 சதவீதமும் அதிகரித்துள்ளதாகவும் கடந்த மாதத்தை விட பணவீக்கம் அதிகரிப்பதற்கு வீடமைப்பு, நீர், மின்சாரம், எரிவாயு, சுற்றுலா விடுதிகள், உணவகங்கள் மற்றும் பல்வகைப் பொருட்களின் விலை அதிகரிப்புகள் முக்கிய காரணம் என மத்திய வங்கி தெரிவித்துள்ளது. -தமிழ் மிற்றோர்–