ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, அவ்வப்போது பேசுகிற விடயங்கள் சிலவேளைகளில் அர்த்தமற்றதாகவும் முன்னுக்குப் பின் முரணானதாகவும் தோன்றலாம். அரசியல், சிவில் நிர்வாக அனுபவம் இன்மையின் விளைவுகளாக இவற்றைக் கொள்ளலாம்.
அதனால்தான், விடயங்கள் சாதகமாக நடக்கும் போது, அதற்கான பெருமையை சுவீகரித்துக்கொள்வதில் அவர் காட்டும் அவசர ஆர்வம், விடயங்கள் பிழைக்கும் போது அதற்கான பொறுப்பை ஏற்றுக்கொள்வதில் இருக்கவில்லை.
மாறாக, விடயங்கள் பிழைக்கும் போது, அதற்கான பொறுப்பை மற்றவர்கள் மீதும், மக்கள் மீதும் சாட்டுகின்ற சிறுபிள்ளைத்தனமான அரசியல் அணுகுமுறை, அவரை அறியாமலேயே வெளிவந்திருந்தமையை அவரது பேச்சுகளிலும் நடவடிக்கைகளிலும் காணக்கூடியதாக இருக்கிறது.
ஆனால், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அண்மையில் தன்னுடைய உரையொன்றில் குறிப்பிட்டிருந்த ஒரு விடயம், மிக யதார்த்தமானதாகவும் உண்மையானதாகவும் இருந்தது. கிட்டத்தட்ட தனக்கு வாக்களித்த 69 இலட்சம் மக்களுக்கு, ‘கன்னத்தைப்பொத்தி அறைந்தாற் போல; அவர் கேட்ட கேள்வியொன்று அமைந்திருந்தது.
அண்மையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய ஐனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, “ஒரு காலத்தில் விரட்டியடித்த அரசியல்வாதிகளை ஏன் தெரிவு செய்கின்றீர்கள்” என பொதுமக்களிடம் கேள்வி எழுப்பியதோடு, “அதே நபர்களை தெரிவு செய்யாமல் புதிய நபர்களைத் தேடுமாறு” வலியுறுத்தினார்.
ஐந்து ஆண்டுகள் ஆட்சி செய்த பின்னர், எதிர்க்கட்சிகள் தங்கள் செயற்பாட்டில் தோல்வியடைந்ததால்த்தான், தான் தேர்ந்தெடுக்கப்பட்டதாகவும் ஆனால், இப்போது இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, எதிர்க்கட்சிகள் தாம் நாட்டை ஒருபோதும் ஆளாதது போல் நடந்து கொண்டதாகவும் அவர் கூறினார். “நானோ அல்லது எனது அரசாங்கத்தில் உள்ள அமைச்சர்களோ, உங்களது எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யாவிட்டாலும், ஒரே நபர்களை மீண்டும் தெரிவு செய்யாதீர்கள்; புதிய நபர்களை தேடுங்கள். இந்தக் கட்டமைப்பு முறை மாற வேண்டும்” என்று கூறிய ஐனாதிபதி கோட்டாபய, “மக்களின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யத் தவறிய ஒரே குழுவை, மீண்டும் ஆட்சியில் அமர்த்துவதில் எந்தப் பயனும் இல்லை. அதை எப்படிச் செய்ய முடியும் என்று எனக்குத் தெரியவில்லை; ஆனால், அதுதான் யதார்த்தத்தில் நடக்கிறது” என்று அங்கலாய்த்திருந்தார்.
முத்தாய்ப்பாக, “ஒருமுறை எங்களை விரட்டியடித்தபின், மீண்டும் எங்களை ஏன் தேர்ந்தெடுக்கிறீர்கள்? இதன் பொருள் என்ன?” என்று கேட்டது, 2019 மற்றும் 2020இல் ராஜபக்ஷர்களுக்கு வாக்களித்த 69 இலட்சம் பேரில் பலருக்கும், 2015இல் தாம் விரட்டியடித்த ராஜபக்ஷர்களை ஏன் 2019-2020இல் மீண்டும் தேர்ந்தெடுத்தீர்கள் என்ற செருப்படிக் கேள்வியாகவே கேட்டிருக்கலாம்.
உண்மையில், ஜனாதிபதி கோட்டாபய கேட்ட கேள்வியின் தாற்பரியம், அர்த்தம் மிக்கதே. மக்கள் ஏன் ஒரே நபர்களுக்கு மீண்டும், மீண்டும் வாக்களிக்கிறார்கள். 2015இல் பெரும் அராஜகவாதியாக, ஊழல்வாதியாக பொதுமேடைகளில் எதிர்க்கட்சிகளினாலும் சிவில் அமைப்புகளாலும் தொழிற்சங்கங்களாலும் குற்றம்சாட்டப்பட்ட மஹிந்த ராஜபக்ஷ, 2015 ஜனவரியில் நடந்த ஜனாதிபதித் தேர்தலில் தோற்கடிக்கப்பட்டார்.
ஆனால், 2019இல், மஹிந்தவின் ஆதரவுடன் ஐனாதிபதி வேட்பாளராக நின்ற அவருடைய தம்பி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு அமோகமாக வாக்களித்து, அவரை ஜனாதிபதியாக்கியதுடன், மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான கட்சிக்கு 2020 பொதுத் தேர்தலில் அமோகமாக வாக்களித்து, பெரும் வெற்றியை மக்கள் வழங்கியிருந்தார்கள். ஒருமுறை விரட்டிவிட்ட ராஜபக்ஷர்களை மீண்டும் தேர்ந்தெடுக்கக் காரணம் என்ன?
முதலாவதாக, இதிலுள்ள சொல்லாடற் சிக்கலை நாம் புரிந்துகொள்ள வேண்டும். “மக்கள் விரட்டியடித்தார்கள்” என்று சொல்லும் போது, அது அனைத்து மக்களும் என்ற பொருளில் அணுகப்படக்கூடாது. அதன் அர்த்தம், ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெறுவதற்குத் தேவையான பெரும்பான்மை வாக்குகளைப் பெறவில்லை; அல்லது, பாராளுமன்றத் தேர்தலில் ஆட்சி அமைப்பதற்குத் தேவையான ஆசனங்களைப் பெறவில்லை என்பதாகும்.
மஹிந்த ராஜபக்ஷ தோல்விகண்ட 2015ஆம் ஜனாதிபதி தேர்தலில் கூட, அவருக்கு 5,768,090 வாக்குகள் கிடைத்திருந்தன. இது 2005இல் மஹிந்த ராஜபக்ஷ, ஐனாதிபதி தேர்தலில் பெற்ற 4,887,152 வாக்குளை விட, கிட்டத்தட்ட ஒன்பது இலட்சம் வாக்குகள் அதிகமாகும். 2010இல் பெற்ற 6,015,934 வாக்குகளை விட, கிட்டத்தட்ட இரண்டரை இலட்சம் வாக்குகள் தான் குறைவாகும்.
2019இல் கோட்டாபய ராஜபக்ஷ, 6, 924,855 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றபோதிலும், சஜித் பிரேமதாஸ 5,564,239 வாக்குகளைப் பெற்றிருந்தார். 1994இல் சந்திரிகா பண்டாரநாயக்க குமாரணதுங்க 62.28% பெரும்பான்மை வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றமையே, இலங்கையின் ஏறத்தாழ 40 வருட நிறைவேற்று ஐனாபதி தேர்தல் வரலாற்றில் பெற்ற அதிகப் பெரும்பான்மை வாக்கு வித்தியாசத்திலான வெற்றி ஆகும். மற்ற அனைவரது பெரும்பான்மையும் 60 சதவீதத்தை எட்டிப்பிடி க்கவில்லை.
யுத்த வெற்றி நாயகனாக 2010இல் களமிறங்கிய மஹிந்த ராஜபக்ஷகூட, 57.88 சதவீதத்தைத் தான் பெற்றுக்கொண்டிருந்தார். மேலும், அனைத்து ஜனாதிபதி தேர்தல்களிலும் முதலிரண்டு இடங்களைப் பெற்றவர்கள், போட்டியிட்ட கட்சிகள், அல்லது கூட்டணிகளுள்ள, அன்றைய அரசியலில் இரண்டு பிரதான கட்சிகள் அல்லது கூட்டணிகளைச் சார்ந்தவர்களேயாவர்.
ஆகவே, இதிலிருந்து நாம் ஊகிக்ககூடிய ஒரு விடயம் யாதெனில், இங்கு பிரதான இரண்டு கட்சிகளுக்கென அல்லது அவற்றை மையமாகக் கொண்ட கூட்டணிகளுக்கென ஒரு நிரந்தர வாக்குவங்கி இருக்கிறது. அதோடு இந்தக் கட்சிகளிலுள்ள முக்கிய தலைவர்களுக்கென ஒரு வாக்குவங்கி இருக்கிறது. இதுதான், (வெட்டினாலும் பச்சை; கொன்றாலும் பச்சை’; அல்லது, “நாங்கள் மஹிந்தவுக்குத்தான்” என்ற வகையறா வாக்குவங்கிகள்.
ஒரு கட்சியைச் சார்ந்த முக்கியஸ்தர்கள் பலர், ஒரேயடியாக வேறொரு கட்சிக்கு மாறும் போது, அந்தப் புதிய கட்சி, பிரதான கட்சியின் இடத்தைப் பிடிப்பதோடு, அந்த வாக்கு வங்கியும் கிட்டத்தட்ட ஒட்டுமொத்தமாகவே அந்த முக்கியஸ்தர்களோடு மாறியிருக்கிறதே அன்றி, இந்த இரண்டு பிரதான கட்சிகளின் வாக்குவங்கிகளும் அந்தக் கட்சியைச் சார்ந்தும், அதன் முக்கியஸ்தர்களைச் சார்ந்துமே சுழல்கிறது.
இந்த நிரந்தர வாக்குவங்கிகள், தாம் ஆதரிக்கும் கட்சியின் மீது அதிருப்தி அடையும் போது, அதற்கு வாக்களிக்காமல் இருக்குமேயன்றி, மற்றைய கட்சிக்கு வாக்களிக்காது. இந்த நிரந்தர கட்சிசார் அல்லது தனிநபர் சார் வாக்குவங்கிகளைத் தவிர, ஊசலாடும் ஒரு தொகை வாக்குகள் இருக்கின்றன. இவைதான், 2015இல் ராஜபக்ஷர்கள் தோல்வியடையவும் அவர்களே மீண்டும் 2019-2020இல் ஆட்சிபீடமேறவும் காரணமானார்கள்.
கட்சிப்பற்றோ, தனிநபர் மீதான பற்றோ அற்ற இளைய சமுதாயத்தின் எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க, இந்த ஊசலாடும் வாக்குசுளின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. இந்த ஊசலாடும் வாக்குகளுக்குள் பெரும்பான்மை அளவுக்கு அரசியல் பிரக்ஞையும் புரிதலும் ஆழமானதாக இல்லை.
ஆகவே, உணர்வு, அன்றைய சந்தர்ப்ப சூழலை மட்டும் கருத்தில் கொண்டு வாக்களிக்கும் பாங்கும் தென்படுகிறது. கண்மூடித்தனமாகத் தான் ஆதரிக்கும் கட்சிக்கே வாக்களிப்பது எவ்வளவு அபத்தமோ, அதைப்போலத்தான் அரசியல் புரிதலேயின்றி, தொலைநோக்குப் பார்வையின்றி, உணர்ச்சி வசப்பட்டு வாக்களிப்பதும் ஆகும்.
இதனால்தான், ‘இவன் சரியில்லை என்று அவனுக்கும் பிறகு அவன் சரியில்லை என்று இவனுக்கும்’ வாக்களிக்கும் போக்கும் காணப்படுகின்றது. இந்த ஊசலாடும் வாக்குகளுள், அரசியல் புரிதலுள்ள, சிந்திக்கத் தெரிந்தவர்கள், ‘அவன்’ மற்றும் ‘இவனை’த் தாண்டி, மூன்றாவது நபர்களுக்கு வாக்களித்தாலும், அந்த மூன்றாவது நபர்களிடம் பலமான நிரந்தர வாக்கு வங்கி இல்லாமையால், அவர்களால் ஒருபோதும் வெற்றிபெற முடிவதில்லை.
வெற்றிபெற முடியாதவர்களுக்கு வாக்களித்து என்ன பயன் என்ற நோக்கில் கூட, அவன் மற்றும் இவனைத் தாண்டிய மூன்றாவது தெரிவை மேற்கொள்ளப் பல ஊசலாடும் வாக்காளர்களும் தயங்குகிறார்கள். அதனால் பயனில்லை என்ற எண்ணமும், பயனற்ற விடயத்துக்குத் தமது வாக்குகளை வீணடிப்பதா என்ற சிந்தனையும்தான் இதற்குக் காரணம்.
இதனால்தான், ‘அவனும் இவனும்” மாறி மாறி, ஆட்சியைப் பிடிக்கிறார்கள். ஒட்டுமொத்தமாக, மக்கள் மட்டும் ஒவ்வொரு தடவையும் சூடு கண்டு கொண்டே இருக்கிறார்கள்.
இந்தச் சக்கரம் உடைக்கப்பட வேண்டுமானால், வெறுமனே ௪சசலாடும் வாக்குகளின் ஆதரவை மட்டுமல்ல, பிரதான கட்சிகளின் நிரந்தர வாக்காளர்களின் வாக்குகளையும் கவர்ந்திமுக்கக் கூடியதோர் அரசியல் இயக்கம், வலுவான தலைமையைக் கொண்டு அமையவேண்டும். இது நடக்காதவரை, ‘அவனும் இவனும்” தான், மாறி மாறி ஆண்டு கொண்டிருப்பார்கள். அதுதான் கசப்பான யதார்த்தம்!
என் கே அசோக்பரண் Tamil Mirror 15-11-2021