அரச உத்தியோகத்தர்கள் விரும்பினாலும் 65 வயதுக்கு முன்னர் ஓய்வு பெற முடியாதா ? அல்லது 65 வயதுக்கு முன்னரே ஓய்வு பெற்றாலும் ஓய்வூதியப் பணத்தைப் பெறுவதற்கு 65 வயது வரை காத்திருக்க வேண்டுமா ? என்பதை நிதியமைச்சர் தெளிவுபடுத்த வேண்டும் என்று சுகாதார தொழில் வல்லுனர்கள் கல்வியகத்தின் தலைவர் வைத்தியர் ரவி குமுதேஷ் தெரிவித்தார்.
எவ்வாறிருப்பினும் இது குறித்து தாம் கலவரமடையப் போவதில்லை என்றும் , இதனை மிகவும் உன்னிப்பாக அவதானித்து வருவதாகவும் வைத்தியர் ரவி குமுதேஷ் சுட்டிக்காட்டினார்.
கொழும்பில் ஞாயிற்றுக்கிழமை (14) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,
அரச ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதெல்லை 65 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் விசேட அவதானத்துடனிருக்கின்றோம்.
இதில் ஒழிக்கப்பட்டுள்ள ஒரு காரணி காணப்படலாம் என்று சந்தேகிக்கின்றோம். அரச உத்தியோகத்தர்களின் ஓய்வு பெறும் வயதெல்லை 65 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது என்றால் , அதற்கு முன்னர் விருப்பத்துடன் ஓய்வு பெற முடியாதா என்று நிதியமைச்சரிடம் கேட்கின்றோம்.
விருப்பினாலும் முன்னதாகவே ஓய்வு பெற முடியாது என்று கூறுவதாயின் , 65 வயது வரை ஓய்வூதியப்பணத்தைப் பெற முடியாத நெருக்கடி ஏற்படும்.
தற்போது 55 அல்லது 56 வயதில் ஓய்வூதியத்தைப் பெறும் அரச உத்தியோகத்தர்களுக்கு எதிர்காலத்தில் அதற்காக 65 வயது வரை காத்திருக்க வேண்டிய நிலைமை ஏற்படும்.
ஓய்வூதிய பணத்தைப் பெறுவதை 10 வருடங்களுக்கு காலம் தாழ்த்துவதற்கான வேலைத்திட்டம் இதன் ஊடாக முன்னெடுக்கப்பட்டுள்ளதா என்ற ஐயம் எழுந்துள்ளது.
எனவே ‘வேலை செய்ய வேண்டிய தேவையுடைய , ஆர்வமுடையவர்களுக்காக ஓய்வு பெறும் வயதெல்லையை அதிகரித்தல்’ என்பதற்கும் ‘ஓய்வு பெறும் வயதெல்லை 65 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது’ என்பதற்கும் இடையில் சிறு பரஸ்பர தன்மை காணப்படுகிறது.
எவ்வாறிருப்பினும் இது குறித்து நாம் கலவரமடையப் போவதில்லை. மிக உன்னிப்பான அவதானத்துடனேயே இருக்கின்றோம்.
இந்த தீர்மானத்தின் மூலம் இனிவரும் வருடங்களில் 58 அல்லது 65 வயதுக்கு முன்னர் ஓய்வூதியம் பெற முடியாது என்று கூறினால் அது பாரதூரமான பிரச்சினையாகும்.
எவ்வாறிருப்பினும் இந்த தீர்மானத்தை நாம் ஆதரிக்கின்றோம். தொழில் புரிய வேண்டிய தேவை காணப்படுபவர்களுக்கு இது சிறந்த தீர்மானமாகும்.
எனினும் 65 வயதுக்கு முன்னரே ஓய்வு பெற்றால் ஓய்வூதிய பணத்தை பெற்றுக் கொள்ள முடியுமா? அல்லது 65 வயது வரை காத்திருக்க வேண்டுமா என்பதை அரசாங்கம் தெளிவுபடுத்த வேண்டும்.
ஓய்வு பெறும் வயதெல்லை அதிகரிக்கப்பட்டாலும் , இளைஞர்களை தொழிலுக்கு உள்வாங்குவதும் நிறுத்தப்பட மாட்டது என்று நிதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அவ்வாறெனில் அரச சேவையில் மனித வளங்கள் முறையாக முகாமைத்துவம் செய்யப்படாவிட்டால் அவர்களுக்கான ஊதியத்தை வழங்குவதும் பிரயோசனமற்றதாகும். இவ்வாறு சென்றால் எம்மால் அபிவிருத்தியடைய முடியாது என்றார்.
-வீரகேசரி- எம்.மனோசித்ரா