அரசாங்கத்தினால் 2022 ஜனவரியில் 1500 மில்லியன் டொலர் கடனை மீள செலுத்த வேண்டியுள்ளது.
ஆனால் இதனை எவ்வாறு செலுத்தப் போகின்றனர் என்பதற்கான எவ்வித வேலைத்திட்டங்களும் இல்லை.
எனவே அடுத்த ஆண்டின் முதல் காலாண்டு நிறைவடையும் போது இலங்கையானது உலகின் மற்றொரு சோமாலியாவாகவும் அல்லது எதியோப்பியாவாகவும் மாற்றமடையும் என்று எதிர்பார்ப்பதிலும் தவறில்லை என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே தெரிவித்தார்.
நாட்டில் எந்தளவிற்கு பாரதூரமான நிதி நெருக்கடி காணப்படுகிறது என்பதை எழுத்து மூல அறிக்கையாக நாட்டு மக்களுக்கு தெரியப்படுத்துவதாகவே இம்முறை வரவு – செலவு திட்டம் அமைந்துள்ளது என்றும் பாராளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே சுட்டிக்காட்டினார்.
கொழும்பில் ஞாயிற்றுக்கிழமை (14) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,
ஆளுந்தரப்பின் ஒரு சில உறுப்பினர் நாட்டின் நிலை தொடர்பில் பல்வேறு கருத்துக்களை வெளியிட்டாலும் , உண்மையில் நாட்டில் காணப்படும் பாரிய நிதி நெருக்கடி நிலைமையை நிதி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ எழுத்து மூலம் மக்களுக்கு அறிக்கைப்படுத்தியுள்ளார்.
இது மக்களுக்கு நிவாரணம் வழங்கும் வரவு – செலவு திட்டம் அல்ல. மாறாக அவர்களிடமிருந்து பணத்தை பறிக்கும் வரவு – செலவு திட்டமாகும்.
வரவு – செலவு திட்டம் என்பது எதிர்காலத்தில் நாட்டில் எவ்வாறு முன்னோக்கிக் கொண்டு செல்வது என்பதற்கான நிதி மதிப்பீடாகும்.
ஆனால் இம்முறை சமர்ப்பிக்கப்பட்டுள்ள வரவு – செலவு திட்டம் அவ்வாறானதல்ல. மாறாக அரசாங்கத்தின் சகாக்களின் சட்டை பைகளை நிரப்பும் அதே வேளை, நாட்டை மேலும் நெருக்கடிக்கு உள்ளாக்கும் வகையிலேயே இந்த வரவு – செலவு திட்டம் அமைந்துள்ளது.
நாட்டை முன்னோக்கிச் கொண்டு செல்வதற்கான எந்தவொரு வேலைத்திட்டடும் இதில் உள்ளடக்கப்படவில்லை. 2021 ஆம் ஆண்டுக்காக முன்வைக்கப்பட்ட ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் முதலாவது வரவு – செலவு திட்டத்தில் கூறப்பட்ட விடயங்களில் 10 சதவீதமேனும் இதுவரையில் நடைமுறைப்படுத்தப்படாமலுள்ள நிலையில் , அவற்றில் எதனையுமே கவனத்தில் கொள்ளாமல் தற்போதைய வரவு – செலவு திட்டம் வேறொரு திசையில் அமைந்துள்ளது.
நிதி அமைச்சர் அமெரிக்க பிரஜையாக இருக்கலாம். ஆனால் முன்பிருந்த அனைத்து அரச தலைவர்களும் , நிதியமைச்சர்களும் இலங்கையில் பிறந்து இலங்கையிலேயே இறக்கும் மக்களின் உரிமைகளைப் பாதுகாத்தனர்.
ஆனால் தற்போதைய நிதியமைச்சர் வர்த்தகர்களைப் பாதுகாத்துக் கொண்டு , குறுகிய அரசியல் நோக்கத்திற்காக செயற்படுகிறார் என்பது தெளிவாகிறது. இந்த கீழ் தரமான அரசியலிலிருந்து விலகி வரவு – செலவு திட்டத்திற்கு அப்பால் நாட்டு மக்கள் நெருக்கடியின்றி வாழக்கூடிய வேலைத்திட்டங்களை பாராளுமன்ற விவாதத்தின் போதாவது முன்வைக்குமாறு வலியுறுத்துகின்றோம் என்றார்.
எம்.மனோசித்ரா -வீரகேசரி-