“இந்த ஆட்சியில், முஸ்லிம்கள் நிம்மதியாக வாழ்கின்றார்கள்”

இன்றைய ஆட்சியில் முஸ்லிம்கள் மிகவும் நிம்மதியாக வாழ்கின்றனர்

கேள்வி: புதிய அரசாங்கம் தொடர்பில் நீங்கள் என்ன கூற விரும்புகின்றீர்கள்?

பதில்: ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ பாராளுமன்றத்தில் ஆற்றிய உரை மக்களை மிகவும் கவர்ந்துள்ளது. அவர் நாட்டில் நேர்மையான, நீதியான ஆட்சியை ஏற்படுத்தி தந்தது மட்டுமல்ல சிறுபான்மை மக்களாகிய எமது சமூகத்திற்காக அலி சப்ரி, மர்ஜான் பளீல் போன்றவர்களுக்கு பாராளுமன்ற நியமனங்களை வழங்கினார். ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரிக்கு மிகப் பெறுமதியான நீதி அமைச்சுப் பதவி வழங்கியுள்ளார். இது தொடர்பில் ஸ்ரீலங்கா பொதுஜன முஸ்லிம் சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் என்ற வகையில் ஜனாதிபதி, பிரதமர் ஆகியோருக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன். 

உண்மையிலேயே மக்கள் சந்தேகக் கண் கொண்டு பார்த்த பல விடயங்களுக்கு ஜனாதிபதியின் உரை முற்றுப்புள்ளி வைத்துள்ளது. இந்த நாட்டில் முஸ்லிம்கள் சந்தோசம் இல்லாமல் வாழக் கூடிய சூழல் உருவாகுமோ இல்லையோ என்ற சந்தேகத்தில் நாங்கள் இருந்தோம்.ஆனால் இந்த ஆட்சிக் காலத்தில் தற்போது வரையிலும் முஸ்லிம்கள் என்ற வகையில் நிம்மதியாக வாழ்கின்றோம். நாங்கள் இலங்கையர்கள் என்ற வகையில் இந்த நாட்டை விட்டு வேறு எங்கும் செல்ல முடியாது.

விசேடமாக இந்த நாடு ஒரு பௌத்த நாடு என்பதை நாங்கள் மனப்பூர்வமாக ஒத்துக் கொள்ளுகின்றோம். இன்று நாங்கள் நிம்மதியாகவும் இந்த நாட்டின் அபிவிருத்தி விடயத்திலும் விசேடமாக வியாபார விடயங்களிலும் நேர்மையாக முன்னோக்கிச் செல்வதற்கான பாதை திறக்கப்பட்டுள்ளது.பலம் பொருந்திய மூன்றில் இரண்டு பங்கு கொண்ட அரசாங்கத்தின் மூலம் எங்களுக்கு நிம்மதி கிடைக்கும் என்பதே எங்களுடைய நம்பிக்கையாகும். ஜனாதிபதி ஒரே நாடு ஒரே நீதி என்ற விடயத்தை முன்வைத்துள்ளார். இந்த விடயங்களை நாங்கள் பொதுவாகப் பார்க்கின்ற போது இந்த நாட்டில் எல்லோருக்கும் பொதுவான, யாவருக்கும் சமமான எல்லோருக்கும் ஒரு நீதிதான் இருக்க வேண்டும். நீதிக்கு முன் யாவரும் சமம் என்று சொல்வோம்.

கேள்வி: ஒரே நாடு ஒரே நீதி என்ற விடயத்தை ஜனாதிபதி குறிப்பிட்டிருந்தார். இதை எப்படி நோக்குகின்றீர்கள்?

பதில்: நாங்கள் இந்நாட்டில் வாழும் பொழுது சிறுபான்மை, பெரும்பான்மை என்ற மனோநிலையில் இருந்து ஒதுங்கி இந்நாட்டில் நாங்கள் இலங்கையர்கள் என்பதற்கே முன்னுரிமையளித்தல் வேண்டும். இந்நாட்டில் வாழக் கூடிய அனைத்து மக்களுக்கும் சமமான ஆட்சியை, சமமான நீதியை உருவாக்கிக் கொடுப்பதே இந்த அரசாங்கத்தின் முக்கிய நோக்கமாகும்.

நாங்கள் முஸ்லிம்கள் என்ற வகையில் பள்ளிவாசல்களுக்குச் சென்றால் அங்கு அரசனாக இருந்தாலும் ஆண்டியாக இருந்தாலும் எங்கள் அனைவருக்கும் ஒரு சமமான இடமிருக்கிறது. ஆகவே இந்த நாட்டிலும் சிங்கள, தமிழ், முஸ்லிம் ஆகிய அனைவருக்கும் ஒரே நீதி, ஒரே சட்டம் இருந்தால்தான் நாங்கள் அனைவரும் சந்தோசமாக வாழ முடியும். நீதி அமைச்சர் அலி சப்ரி அடிக்கடி கூறும் விடயம், நாட்டில் நீதி சட்டம் ஒரே நிலையில் சரியாக இருக்குமாயின் அனைத்து மக்களும் நிம்மதியாக வாழக் கூடிய சூழ்நிலை ஏற்படும் என்பதாகும். ஒரே நாடு ஒரே நீதி என்கின்ற ஜனாதிபதியின் உரை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முஸ்லிம் சம்மேளன பொதுச் செயலாளர் அப்துல் சத்தார்

Check Also

ஹங்வெல்லை துப்பாக்கிச் சூடு நடந்தது என்ன?

வாஹித் லெப்பை மொஹம்மது பர்சான் 46 வயதான மூன்று பிள்ளைகளின் தந்தை. ஹங்வெல்லை நகரின் ஹோட்டல் ஒன்றினை நடாத்திச் செல்பவர். …

Free Visitor Counters Flag Counter