ஊரடங்கில் பறித்த வாகனங்களுக்கு நட்ட ஈடு- பொலீஸ் திணைக்களத்தை விற்க நேரிடலாம்

நுகேகொடை நீதிவான் நீதி மன்றத்தில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் சிங்கள நடிகருமான ரஞ்சன் ராமநாயக்கா நேற்று முன்னிலைப்படுத்தப் பட்டார்.

புதுவருடப் பிறப்பன்று ஊரடங்கு வேளையில் ரஞ்சன் ராமநாயக்காவை தேடி வந்த ஒருவரைப் பொலிஸார் மறித்தனர். அவரை ஏன் மறித்தீர்கள் என்று அந்தப் பொலிஸாரு டன் ரஞ்சன் ராமநாயக்கா வாதிட்டார். அவ்வளவுதான். ‘அரச ஊழியரைப் பணி செய்யவிடாமல் தடுத்தார்’ என்ற குற்றச்சாட் டில் ரஞ்சன் ராமநாயக்கா புதுவருடப் பிறப்பன்று கைது செய்யப்பட்டார்.

கடந்த தைப்பொங்கலன்றும் ரஞ்சன் ராமநாயக்கா, கைது செய்யப்பட்டிருந்தார். அப்போதும் அவரைப்பிணையில் மீட்டவர் அவரது நல்ல நண்பரும், அவரது சட்டத் தரணியுமான சுமந்திரன் தான்.

நேற்றும் நுகேகொடை நீதிமன்றத்திலும் ரஞ்சனை மீட்க அவரே தோன்றினார்.

‘தோன்றினார் என்று நான் கூறுவதற்குக் காரணம் உண்டு. பொதுவாக நீதி மன்றில் சட்டத்தரணி முன்னிலையாவதற்கு தோன்றுதல் (Apper) என்ற பதம் பாவிப்பதுண்டு . திடீரென ஓர் இடத்தில் வெளிப்படுவதையும் ‘தோன்றுதல்’ என்று கூறலாம். அப் படித்தான் நேற்று நீதிமன்றத்துக்கு அப்படித்தான் நேற்று நீதிமன்றுக்கு வரவேண்டியிருந்தார் சுமந்திரன்.

கடந்த ஒரு மாத காலத்துக்கு மேல் நடைமுறையில் இருக்கும் ஊரடங்கை ஒழுங்காகக் கடைப்பிடிப்பவர் அவர். பிரதமர் அலுவலகம் கூட்டிய கட்சித் தலைவர்கள் மாநாடு தவிர பிற எதற்காகவும் வீட்டை விட்டு வெளியே வராதவர். பொலிஸ் உத் தரவை ஒழுங்காக – சர்ச்சை பண்ணாமல் – கடைப்பிடிப்பவர்.

நேற்றுத் தமது நண்பர் ரஞ்சனுக்காக ஊரடங்கு பாஸ் இன்றி வெள்ளவத்தையில் இருந்து நுகேகொடைக்கு வரவேண்டியவரானார் அவர். ஊரடங்குத் தடைகளைத் தாண்டி வந்தவர் என்பதால் தோன்றினார் என்றேன்.

வழக்கு எடுக்கப்பட்டதும் ஜனாதிபதி சட் டத்தரணி சுமந்திரன் ஒரு விடயத்தை நீதிவானுக்கு எடுத்து விளக்கினார்.

நாட்டில் ஊரடங்கு உத்தரவை சட்டரீதியாகப் பிரகடனப்படுத்துவதற்கு உள்ள வழிவகைகளை அவர் விவரித்தார். இந்த வகை எதிலும் தற்போதைய ஊரடங்கு அடங்கவில்லை , அதனால் அதற்கு சட்ட ரீதியான வலு ஏதுமில்லை” என்றார் அவர்.

வெறுமனே ஊடக அறிவிப்பு மூலம் ஊரடங்கை நடைமுறைப்படுத்துகின்றார்கள். அவ்வளவுதான். இந்தப் பிரச்சினையின் தீவிரத்தைப் புரிந்து கொண்டு எல்லோரும் அதற்கு அடங்கி நடக்கின்றோம். ஆனால் இது சட்டரீதியான ஊரடங்கே அல்ல” என்று அவர் சுட்டிக்காட்டினார்.

சட்ட ரீதியான ஊரடங்கை பிறப்பிக்கப் போவதில்லை என்று அதிகாரவர்க்கம் அடம் பிடிக்கின்றது. பாவம் பொலிஸ். அதைச் சட்டரீதியானது அல்ல என்று தெரிந்து கொண்டும் நடைமுறைப்படுத் தும் கட்டாயத்தில் உள்ளது” என்று விவரித்தார்.

ஊரடங்கு சட்ட ரீதியானது, அதற்கான சட்ட வலு யாது? என்பதைக் காட்ட முடியாது திணறியது பொலிஸ்.

அதனால்தான் இந்த ஊரடங்கு உத்தரவை மீறியவர்கள் என்று கைது செய்யப்பட்ட யாவரும் நீதிமன்றத்தில் முன்னி லைப்படுத்தப்படவில்லை. பொலிஸ் நிலையத்தில் பொலிஸ் பிணையிலேயே விடுவிக்கப்படுகின்றனர். இவர் உயர்மட்ட நபர் என்பதால் உங்கள் முன்னால் கொண்டு வரவேண்டி ஏற்பட்டு விட்டது என்றும் சுமந்திரன் சுட்டிக்காட்டினார்.

இன்னொரு விடயத்தையும் அவர் சொன்றார்.

இதோ இப்போது நான் ஊரடங்கு பாஸ்’ இல்லாமல் தான் இந்த நீதிமன்றத் துக்கு வந்துள்ளேன். இங்கிருந்து நான் வெளியே போகும் போது இந்தப் பொலி ஸார் என்னை வழிமறித்து எங்கே ஊர பங்குபாஸ் என்று கேட்கலாம். கேட்பார்கள். அதற்கு நான் ஏன் பாஸ்? சட்டரீதியான ஊரடங்கு இருக்கின்றதா? இருந்தால் அது எந்தச் சட்டத்தின் கீழ்….?’ – என்று அந்தப் பொலிஸ் அதிகாரியுடன் விவாதிப்பேன்; மோதுவேன்.

அப்படி நான் கேட்டதற்காக – அல்லது விவாதித்ததற்காக அரச அதிகாரியைக் கடமையைக் செய்ய விடாமல் தடுத்தேன்.’ – என்று கைது செய்து வழக்குப் போடலாமா? அதுதான் ரஞ்சன் ராமநாயக்காவுக்கும் நடந்தது” – என்று சுமந்திரன் கூறியதும், ரஞ்சனுக்குப்பிணைவழங்கும் முடிவுக்கு வந்தார் நீதிவான்.

அதை ஆட்சேபித்த பொலிஸ் தரப்பு இன்னொரு தடவை சுமந்திரனிடம் வாங்கிக் கட்டியது.

ரஞ்சன் ராமநாயக்காபொலிஸாருடன் வாய்க்தர்க்கம் புரிந்த வீடியோ பதிவு உள்ளதாகவும் அது இன்னும் பொலிஸ் விசாரணையாளர்களுக்குக் கிடைக்கவில்லை எனவும், அது கிடைத்து, அதனைப் பரிசீலித்த பின்னர் பிணை விண்ணப்பத்தைப் பரீசிலிக்கலாம் என்று குறிப்பிட்டு காலத்தை இழுத்தடிக்க முயன்றது பொலிஸ்.

இடையில் குறுக்கிட்டார் சுமந்திரன். “இந்த வாய்த்தர்க்கம் அல்லது முரண்பாடு இடம் பெற்ற அச்சமயம் ஊரடங்கு. சீருடை தரித்த பொலிஸாரைத்தவிர வேறு யாரும் அங்கு இருக்கவில்லை . அப்படி சீருடை தரித்த பொலிஸார் ஒருவரே அந்த வீடியோப் படத்தைப் பிடித்தார். அப்படி சீருடை தரித்த பொலிஸால் பிடிக்கப்பட்ட அந்த வீடியோ அன்றுமாலையே தனியார் தொலைக்காட்சிச் சேவை ஒன்றில் ஒளிபரப் புச் செய்யப்பட்டது! ஆனால் பொலிஸ் துறைக்கு அந்த வீடியோ இன்னும் கிடைக்கவில்லையாம். சீருடை தரித்த பொலிஸாரின் விசுவாசம் எங்கு, எந்தப் பக்கம் உள்ளது என்பதற்கு இது நல்லதோர் உதாரணம்”- என்றார் சுமந்திரன்.

அதை செவிமடுத்த நீதிவான் ரஞ்சன் ராமநாயக்காவை உடனடியாகவே சொந்தப் பிணையில் வீடு திரும்ப அனுமதித்தார்.

அப்போது நீதிமன்றத்திடம் சுமந்திரன் இன்னொரு விடயத்தையும் சுட்டிக்காட்டி னார்.

”ஊரடங்கு உத்தரவே சட்ட ரீதியாக இல்லை. இந்த சீத்துவத்தில் அந்த ஊரடங்கு உத்தரவின் கீழ் அந்த உத்தரவை மீறிய நபர்களின் வாகனங்கள் என்ற பெயரில் நாடு முழுவதும் பல்லாயிரம் வாகனங்களைப் பொலிஸ் தரப்பு பறிமுதல் செய்து தடுத்து வைத்துள்ளது. அதற்கான, றிசிற்றுகள் கொடுக்கப்பட்டுள்ளன. ரஞ்சன் ராம நாயக்காவின் வாகனமும் தடுத்து வைக்கப்பட்டுள்ளது. எனது கட்சிக்காரர் அதை இப்போது கோரப்போபவரல்லர்.. ஆனால் சட்டம் இல்லாத ஒரு விவகாரத்தின் பெயரால் இப்படி வாகனங்களைப் பறிமுதல் செய்து தடுத்து வைக்கப் பொலிஸாருக்கு அதிகாரமில்லை.

இந்த சட்டமீறல் நடவடிக்கைக் காக பல்லாயிரம் பொதுமக்களும் சட்ட ரீதியான நஷ்ட ஈடு கோரி வழக்குத் தாக்கல் செய்தால் – அப்படிச் செய்வதற்கு நிறைய வாய்ப்புண்டு – பொலிஸ்திணைக்களத்தை விற்றுத்தான் நஷ்ட ஈடு கொடுக்க வேண்டி நேரும்” என்று சுமந்திரன் எச்சரித்தார். பாவம் பொலிஸ்! இவ்வளவும், சட்டத்தில் எழுதாத நாடகத்தில் எல்லோரும் நடிக்கின்றோம் என்ற பாணியில் காரியமாற்ற வேண்டிய கட்டாயம் பொலிஸாருக்கு… அவர்கள் என்னதான் செய்வார்கள்?

Check Also

ஹம்தியின் மரணம் குறித்து விரிவான விசாரணை நடத்துக

சிறுநீரக சத்திர சிகிச்சைகளை அடுத்து உயிரிழந்த கொழும்பு கொட்டாஞ்சேனையைச் சேர்ந்த 3 வயதான ஹம்தி பஸ்லிமின் மரணம் தொடர்பில் விரிவான …

Free Visitor Counters Flag Counter