ஒரே நாடு ஒரே சட்டம்Õ ஜனாதிபதி செயலணியில் தமிழருக்கு இடம் அவசியம் இல்லை முஸ்லிம்களை சேர்த்ததற்கு காரணம் உண்டு என்கிறார் அதன் தலைவர் ஞானசார தேரர
ஒரே நாடு ஒரே சட்டம்’ என்ற ஜனாதிபதி செயலணியில் தமிழ் பிரதிநிதிகள் இருக்க வேண்டுமென்ற அவசியம் இல்லை என்று அந்த செய லணியின் தலைவர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். இதேவேளை இந்த விடயங்களில் சிறுபான்மை, பெரும்பான்மை என்ற விடயங்களை மறந்து இலங்கையர் என்ற ரீதியில் செயற்படுவோம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி ஊடக மையத்தினால் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே ஞானசார தேரர் இதனை தெரிவித்துள்ளார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஒரே நாடு ஒரே சட்டம் என்ற செயலணியின் தலைவரான நியமிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் முன்வைக்கப்படும் கருத்துக்களை பார்க்கும் போது, இந்த செயலணி அமைக்கப்பட்டமை எந்தளவு காலப் பிரயோசனமானது என்றும், அதன் தலைமைத்துவம் எந்தளவுக்கு சவாலானது என்பதனை புரிந்து கொள்ளக் கூடியதாகவுள்ளது.
இந்த நாட்டில் பல்வேறு குழுக்களின் சட்டதிட்டங்கள் செயற்படுத்தப்படும் நேரத்தில், அது தொடர்பில் முழுநாடும் அவதானம் செலுத்தியுள்ள நேரத்தில் ஒரே சட்டம் என்பதனை கொண்டு வருவது எந்தளவுக்கு சவாலானது என்பதனை புரிந்துகொண்டுள்ளேன். இனம், மதம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு பல்வேறு சட்டங்கள் உள்ளன. அவற்றில் மாற்றங்களை செய்ய வேண்டும் என்று மக்கள் விரும்புகின்றனர்.
இதன்படி ஒரே நாடு ஒரே சட்டம் என்ற நோக்கத்தை அதன் உறுப்பினர்களுடன் இணைந்து ஏற்படுத்த தேவையான நடவடிக்கை எடுப்பேன். எதிர்காலத்திற்காக பிரிவினைகளில் இருந்து விலகி ஒரே இனமாக செயற்பட வேண்டும் எமது பொறுப்பானது சிங்கள, தமிழ், முஸ்லிம் என்று பிரிந்திருக்காது ஒரே இனமாக செயற்பட வேண்டும். இதற்கு அனைவரின் ஒத்துழைப்பும் எமக்கு அவசியமானது.
இன்று வெளிநாடுகளில் எவ்வளவோ இலங்கையர்கள் இருக்கின்றனர். அவர்கள் தமிழ், சிங்களம் மற்றும் முஸ்லிம் என்றும் மற்றும் அரசியல் கட்சிகள் ரீதியிலும் பிரிந்து இருக்கின்றனர். புலம்பெயர் சிங்களவர்கள், தமிழர்கள் என்று பிரிந்து நிற்கின்றனர். இவர்கள் அனைவரையும் இணைத்துக்கொண்டு ஒரே இலங்கையர் என்ற புலம்பெயர்தோரை அமைக்க முடியுமென்றால், அவர்கள் அனைவரையும் ஒரே இனமாக பலமான சூழலை அமைக்க முடியுமாக இருந்தால் அது எந்தளவு அழகிய நாளாக இருக்கும். இதன்படி இதற்கான சூழலை அமைப்பதனையே நாங்கள் செய்ய வேண்டும்.
இவ்வாறாக ஒரே சட்டத்தில் ஒரே நாட்டவர்களாக வாழும் சூழலை அமைப்பதற்கான சட்டங்களை தயாரிப்பதற்கான பணியையே நாங்கள் செய்வோம். நீங்கள் எந்த இன, மத, அரசியல் கட்சியை சேர்வராக இருந்தாலும் நீங்கள் இந்த விடயத்தில் ஒற்றுமையுடன் செயற்பட வேண்டும். அத்துடன் இளைஞர்கள், பல்கலைக்கழக மாணவர்களும் இதற்கான யோசனைகளை வழங்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
சிறுபான்மை என்ற வசனத்தை நாங்கள் மறந்துவிட வேண்டும். சிறுபான்மை, பெறும்பான்மை என்று மொழி, இனம், பிரதேசங்களை அடிப்படையாகக் கொண்டு இவ்வாறாக கொண்டுவரப்பட்ட குப்பைகளினாலேயே பிரச்சனைகள் ஏற்பட்டன.
இதனாலேயே ஜனாதிபதியினால் இவ்வாறாக செயலணியை அமைக்க வேண்டி வந்துள்ளது. ஒரே நாடு, ஒரே சட்டம் ஒரே கொடியின் கீழான வேலைத்திட்டமே எமக்கு அவசியமாக உள்ளது.
இதேவேளை இதுபோன்ற செயலணிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் அரசியல் கட்சிகளினால், கடந்த காலங்களில் ஒரே கல்வியின் பிரிவில் பிள்ளைகளை பாடசாலைகளுக்கு அனுப்ப முடியாது போயுள்ளது. இதனால் பிரச்சனைகள் தொடர்பில் எங்களிடம் புரிந்துணர்வு இருக்கின்றது. இதனால் சிறுபான்மை என்பதனை மறந்து ஒரே இனமாக செயற்படுவோம் என்றார்.
இதேவேளை அந்த செயலணியின் உறுப்பினர்கள் தொடர்பிலும் அதில் தமிழ் பிரதிநிதிகள் நியமிக்கப்படாமை தொடர்பிலும் ஊடகவியலாளர்கள் கேள்விகளை எழுப்பினர். இதன்போது பதிலளித்த ஞானசார தேரர் கூறுகையில்,
உண்மையிலேயே இதில் முஸ்லிம்களையும் சேர்த்திருக்க வேண்டிய அவசியமில்லை. தமிழர்களும் அவசியமில்லை. ஆனால் அதில் முஸ்லிம்களை சேர்த்ததற்கு காரணம், உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் மதரசா, காதி நீதிமன்றம், புர்கா, சரியா வங்கி ஆகியன தொடர்பில் கதைத்தனர். இதன்படி அது தொடர்பான சட்டதிட்டங்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இன்னும் அது தொடர்பான சட்டமூலங்கள் தயாரிக்கப்படவில்லை. காலத்தை இழுத்தடிக்கும் செயற்பாடுகளே இருக்கின்றன. இறுதியில் அனைத்தையும் ஜனாதிபதியின் தலையில் போடுவதற்கு முயற்சிக்கின்றனர்.
எவ்வாறாயினும் இதற்கென பொறுப்பளிக்கப்பட்டுள்ளவர்கள் அதனை செய்ய வேண்டும். இலங்கை கிரிக்கெட் அணியாக இருந்தாலும் சரி, எதுவாக இருந்தாலும் சரி, அதில் தமிழ், சிங்களம், தமிழ் என்று பார்க்காது திறமையை பார்க்க வேண்டும். இதனால் எந்த விடயத்திலும் வரலாற்று இனமாக நாங்கள் செயற்பட வேண்டும். இதனால் ஆரம்பத்தில் தமிழ் பிரதிநித்துவம் அவசமாக இருக்கவில்லை.
இதேவேளை தமிழ் பிரதிநிதிகளை நியமிப்பதற்காக சிலரின் பெயர்கள் எடுக்கப்பட்டுள்ளன. இதில் யாழ்ப்பாண தமிழர்கள் வேறு பிரதேசத்தை சேர்ந்த தமிழர்கள் இருப்பதை விரும்புவதில்லை. அதேபோன்று இவர் ஒவ்வொரு அமைப்புகளை சேர்ந்தவர் என்றும் கூறுவர். இதனால் இதில்அவர்களை இணைக்கும் போது பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என்றார்.
ந.ஜெயகாந்தன் – தினக்குரல் 02-11-21