அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குப் போதுமான வாகனங்கள் இலங்கை தற்போது கையிருப்பில் உள்ளதாக ஜனாதிபதியின் செயலாளர் டாக்டர் பி.பி. ஜெயசுந்தரா தெரிவித்துள்ளார்.
அத்தியாவசியமற்ற பொருட்களின் இறக்குமதியை மட்டுமே அரசு தற்போது நிறுத்தி வைத்துள்ளது எனவும் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் அவர் கூறினார்.
2019 வரை ஆண்டுக்கு 1000 முதல் 1200 மில்லியன் அமெரிக்க டொலர் செலவீட்டில் வாகனங்கள் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டன. இந்த வாகனங்கள் கப்பல்கள் வழியாக இலங்கைக்குக் கொண்டு வரப்படுகின்றன. 2015 முதல் 2019 வரை இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்கள் அடுத்த 2 ட ஆண்டுகளுக்கு போதுமானவை. எந்தவொரு நபரும் தற்போது இலங்கையில் ஒரு புதிய வாகனத்தை வாங்கலாம். வாகனவிலை அதிகரிப்பு முற்றிலும் மாறுபட்ட பிரச்சினை எனவும் அவர் குறிப்பிட்டார்.
மத்திய வங்கி அறிக்கையின்படி, 2020 ஜூன் மாதத்தில் தனியார் வாகனங்களின் இறக்குமதிக்கு 9.2 மில்லியன் அமெரிக்க டொலர் செலவிடப்பட்டது. இது 2019 ஜூன் மாதத்தில் செய்யப்பட்ட செலவினங்களுடன் (48.1 மில்லியன் அமெரிக்க டொலர்கள்) ஒப்பிடும் போது 80.9 வீதம் வீழ்ச்சியாகும்.
2020 முதல் 6 மாதங்களில் தனியார் வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான செலவீனம் 15.7 வீதம் குறைந்துள்ளது எனவும் ஜனாதிபதியின் செயலாளர் தெரிவித்தார்.