இலங்கைக்கு மீண்டும் ஆபத்து ஏற்படலாம்

டெல்டா ஆரம்ப திரிபுகள், உப திரிபுகள் உருவாகி வருகின்றன

தடுப்பூசியால் கட்டுப்படுத்த முடியாத திரிபு நாட்டில் ஏற்படுவதற்கு வாய்ப்பு

வைரஸ் தொடர்பான வைத்திய ஆலோசனை நிபுணர் நதீக ஜானகே எச்சரிக்கை

கொரோனா வைரஸின் மரபணு மாற்றம் மற்றும் வீரியம் தொடர்பான எமது ஆராய்ச்சிகளில் டெல்டா ஆரம்ப திரிபுகள், மேலதிகமாக உப திரிபுகள் உருவாகி வருகின்ற முடிவுகளே கிடைத்துள்ளன. எனவே இந்த வைரஸ் பரவலை முடியுமானவரை கட்டுப்படுத்திக் கொள்ளா விட்டால் இந்த கொரோனா வைரஸின் மரபணு மாற்றங்கள் மூலம், தடுப்பூசியால் கட்டுப்படுத்த முடியாத திரிபு இலங்கையில் ஏற்படுவதற்கு வாய்ப்பிருக்கின்றது என வைரஸ் தொடர்பான வைத்திய ஆலாசேனை நிபுணர் நதீக ஜானகே எச்சரித்தார்.

சுகாதார அமைச்சில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இவ்வாறு எச்சரித்த அவர் மேலும் கூறுகையில்,

கொரோனா தொற்று இலங்கையில் தற்போது ஓரளவு பட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது.எனினும் இந்த கட்டுப்பாட்டு நிலையை தொடர்ந்தும் தக்க வைக்க முடியமா என்பது கேள்விக்குறியே. நான் சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளை கடைப்பிடிக்கும் விதத்திலேயேயே அதனை தீர்மனிக்க முடியும். இலங்கையில் கொரோனா தடுப்பூசி ஏற்றும்நடவடிக்கைகள் வெற்றிகரமாக முன்னெடுக்கப்படுவதாலேயே கொரோனாவை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடிந்துள்ளது .

இதேவேளை கொழும்பு பல்கலைக்கழகம் மற்றும் கொழும்பு வைத்திய ஆராய்ச்சி நிறுவனம் என்பன இணைந்து இந்த கொரோனா வைரஸின் மரபணு மாற்றம் மற்றும் வீரியம் தொடர்பான ஆராய்ச்சிகளை மேற்கொண்டுவருகின்றன . அதில் டெல்டா ஆரம்ப திரிபுகள், மேலதிகமாக உப திரிபுகள் உருவாகி வருவதான முடிவுகளே எமக்கு கிடைத்துள்ளன. என்றாலும் இந்த டெல்டா உப திரிபுகள் பிரதான டெல்டா வைரஸ் போன்றே செயற்படுகின்றன. அதில் மாற்றங்களை காணவில்லை. அதனால் பாரிய பாதிப்புகள் ஏற்படாது. எனவே இந்த வைரஸுடன் எங்களுக்கு வாழ்வதில் பெரிதாக பிரச்சினைகள் இருக்காது.

எனினும் இந்த வைரஸ் பரவலை முடியுமானவரை கட்டுப்படுத்திக்கொள்ள நாங்கள் முயற்சிக்கவேண்டும். இல்லாவிட்டால் எப்போதாவது ஒருநாள் இந்த கொரோனா வைரஸின் மரபணு மாற்றங்கள் மூலம் தடுப்பூசியால் கட்டுப்படுத்த முடியாத திரிபு ஏற்படுவதற்கு வாய்ப்பிருக்கின்றது. அதனால் நாங்கள் தொடர்ந்தும் சுகாதார விதிமுறைகளின் பாதுகாப்புடனேயே அன்றாட எமது நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்.

இதேவேளை கொரோனா தொற்று உறுப்படுத்தப்பட்ட ஒருவர் தனிமைப்படுத்தல் நடவடிக்கையை முடித்து மூன்று மாதங்களுக்குள் அவரிடம் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டிய அவசியமில்லை. அவரிடம் நோய் அறிகுறி இல்லாவிட்டால் அவரிடமருந்து தொற்று பரவாது. தொற்று உறுதிப்பட்டு, உரிய வைத்திய பரிசோதனைகளின் பின்னர் விடுவிக்கப்பட்ட வரை மீண்டும் கொரோனா பரிசோதனை செய்யும் போது அவருக்கு தொற்று உறுதி என்ற முடிவு வந்தாலும் அதனால் எவருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படாது என்றார்.

தினக்குரல் 27-10-21

Check Also

ஹங்வெல்லை துப்பாக்கிச் சூடு நடந்தது என்ன?

வாஹித் லெப்பை மொஹம்மது பர்சான் 46 வயதான மூன்று பிள்ளைகளின் தந்தை. ஹங்வெல்லை நகரின் ஹோட்டல் ஒன்றினை நடாத்திச் செல்பவர். …

Free Visitor Counters Flag Counter