ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு ஒற்றுமை நீங்கிடேல் அனைவருக்கும் தாழ்வு இவ்வாறு பலரும் கூறுவதை நாம் கேட்டிருக்கின்றோம்.
எனினும் அதனை எவரும் கவனத்தில் கொள்வதாகத் தெரியவில்லை. சமூகமாக இருந்தால் என்ன ? குடும்பமாக இருந்தால் என்னை? ஏன் அரசியலாக இருந்தால் என்ன ? நமக்குள் பிரிவினை ஏற்பட்டு விட்டால் அனைத்தும் சின்னாபின்னமாகி விடும் என்பதே யதார்த்தம்.
அந்த வகையில் ஐக்கிய தேசியக் கட்சி இதற்கு சிறந்த உதாரணமாகும். இலங்கை சுதந்திரம் பெற்றதைத் தொடர்ந்து உருவான முதல் தேசியக்கட்சிக் என்ற பெருமையைக் கொண்டதும் இந்த நாட்டைப் பல தடவைகள் ஆட்சி செய்ததும் பழம்பெரும் மூத்த தலைவர்களால் வழிநடத்தப்பட்டதுமான ஐக்கிய தேசியக் கட்சி இன்று கழுதை தேய்ந்து கட்டெறும்பான நிலைக்கு சென்றுள்ளது.
அனைத்துக்கும் மேலாக கடந்த தேர்தலில் ஒரு ஆசனத்தைக் கூட கைப்பற்ற முடியாத நிலையில் தேசியப்பட்டியல் ஆசனத்துக்காக கையேந்தி நிற்கிறது.
இதற்கு காரணமென்ன? தலைமைத்துவமா? இல்லை விசுவாசமற்ற உறுப்பினர்களா? அல்லது உட் கட்சி பிளவுகளா? என்று ஆராய்ந்தால் அனைத்துமே இதற்கு காரணம் என்று கூற வேண்டி உள்ளதைத் தவிர வேறு எதையும் கூற முடியாது என்பதே பொதுவான கருத்தாகும்.
கட்சிக்குள் ஏற்பட்ட பிளவுகள் காரணமாக பரம்பரை பரம்பரையாக ஐக்கிய தேசியக் கட்சிக்கு வாக்களித்து வந்த வாக்காளர்கள் இந்தத் தடவை என்ன செய்வது என்று தெரியாது திரிசங்கு நிலைக்கு ஆளானார்கள்.
அதுமாத்திரமன்றி பழம்பெரும் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் படுதோல்வி கட்சியின் எதிர்காலத்தையே குழிதோண்டிப் புதைத்து விட்டது என்று கூறினால் அது தவறாக இருக்க மாட்டாது.
டி. எஸ். சேனநாயக்கா, டட்லி சேனநாயக்கா, சேர் ஜோன் கொத்தலாவல, ஜே.ஆர் . ஜெயவர்த்தனா, ஆர்.பிரேமதாசா என புகழ் பூத்த தலைவர்களால் வழிநடத்தப்பட்ட ஐக்கிய தேசியக்கட்சியின் தலைமைத்துவம் இன்று தடுமாறிக் கொண்டிருப்பதையும் காண முடிகின்றது.
மறுபுறம் ஐக்கிய தேசியக்கட்சியும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியும் உருமாறி உருக்குலைந்துள்ள நிலையில், புதிய கட்சிகள் அந்த இடத்தைப்பிடித்துள்ளமை பலரது புருவத்தையும் உயர்த்தச் செய்துள்ளது.
இவற்றுக்கு மத்தியில் ஐக்கியக் தேசியக் கட்சியின் தலைமைத்துவ பொறுப்பு முன்னாள் சபாநாயகர்
கரு ஜெயசூரியாவுக்கு வழங்கப்பட்டால் ஒன்றிணைந்து செயற்படுவது குறித்து சிந்திக்கலாம் என ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு தலைமைத்துவம் வழங்கும் சவாலை ஏற்றுக்கொள்வதற்கு தான் தயாராக இருப்பதாக முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரியா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில்: தமது நாட்டுக்கு சுதந்திரத்தைப்பெற்றுக் கொடுப்பதற்கான தலைமைத்துவத்தை வழங்கிய தேசிய கட்சியாக டி.எஸ் சேனநாயக்காவினால் ஸ்தாபிக்கப்பட்ட ஐக்கிய தேசிய கட்சி, இன்று கட்சி ஆதரவாளர்கள் மற்றும் ஜனநாயகத்தை நேசிப்பவர்களைப் பெரும் கவலைக்கு இட்டுச் சென்றுள்ளது.
எனவே பலரது கோரிக்கைகளின் பெயரில் அதற்கான தலைமைத்துவத்தை வழங்க நான் தயாராக இருக்கிறேன் என்று கூறியுள்ளார்.
சறுக்கிவிழுந்துள்ள யானையை தூக்கி நிறுத்துவது என்பது அவ்வளவு சுலபமான காரியம் அல்ல என்பதையும் இந்தத் தருணத்தில் மறந்து போகக்கூடாது.