இந்நாட்டில் சிறுபான்மையினராக வாழும் முஸ்லிம் சமூகம் அறிவுபூர்வமான அரசியல் சித்தாந்தத்திற்குள் நுழைந்து செயல்படுவதன் ஊடாக சிறந்ததோர் எதிர்காலம் உதயமாகும் என நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார்.
பேருவளை கெச்சிமலை தர்ஹாவில் நேற்று முன்தினம் இடம்பெற்ற கௌரவிப்பு நிகழ்வில் பேசும் போது அவர் இவ்வாறு கூறினார்.
மேலும் கூறியதாவது-, நாட்டில் இன்னும் 20 அல்லது 30 வருடங்களுக்கு ராஜபக்ஷ ஆட்சி தொடரும். சென்ற ஜனாதிபதித் தேர்தலில் முஸ்லிம்கள் ஐந்து சதவீதமளவே பொதுஜன பெரமுனவுக்கு வாக்களித்தனர். எனினும் பொதுத் தேர்தலில் அதை விட சிறந்த முறையில் வாக்களித்துள்ளனர்.
ஜனாதிபதி தேர்தலில் கோட்டாபய ராஜபக்ஷ 68 இலட்சம் வாக்குகளைப் பெறுவார் என்றும் பொதுத் தேர்தலில் 137 ஆசனங்களை பொதுஜன பெரமுன கைப்பற்றும் என்று நான் கூறிய போது சிலர் சிரித்தார்கள்.
தேசிய பட்டியல் மூலம் எம். பி. பதவியையோ அமைச்சர் பதவியையோ நான் கேட்கவில்லை. ஜனாதிபதியே இப்பதவியைத் தந்தார்.
தேசிய ரீதியாக நாட்டு மக்களுககு சேவை செய்யவே எனக்கு இப்பதவி வழங்கப்பட்டுள்ளது.
சமூகத்தை காட்டிக்கொடுக்க வரவில்லை. வழி நடத்தவே வந்துள்ளேன். சில விடயத்தில் விட்டுக்கொடுப்பு அவசியம். இனவாதம் பேசுவதில் பயனில்லை.
களவு செய்து பணம் சம்பாதிக்கவோ, கட்சி மாறி பணம் சம்பாதிக்கவோ நான் வரவில்லை. பொறுப்பை சரிவர நிறைவேற்ற வேண்டும். பதவிகள் அல்லாஹ் தந்த அமானிதமே.
நாம் ஒவ்வொரு நாட்டினதும் வரலாற்றினைப் புரட்டிப்பார்க்கின்ற பொழுது அந்த நாட்டில் வாழும் பெரும்பான்மை சமூகத்தினை எதிர்த்து முட்டி மோதி வெற்றிபெற்ற வரலாறு கிடையாது.