அகில இலங்கை ஜம் இய்யத்துல் உலமா சபை வஹாபிஸத்தை ஏற்றுக் கொள்கிறதா? அல்லது நிராகரிக்கிறதா? என்று பகிரங்கமாக அறிவிக்க வேண்டும். ஐ.எஸ். அமைப்பின் தீவிரவாத கொள்கையான வஹாபிஸத்தை நிராகரிப்பதற்கு உலமா சபையினால் இயலாவிட்டால் அவர்களும் இக்கொள்கையைப் பின்பற்றுபவர்கள் என்றே கருத வேண்டியுள்ளது என பொது பல சேனா அமைப்பு அகில இலங்கை ஐம் இய்யத்துல் உலமா சபைக்கு வெளியிட்டுள்ள பகிரங்க கடிதத்தில் தெரிவித்துள்ளது.
பொதுபல சேனா அமைப்பின் ஊடகப் பிரிவு உலமாசபைக்கு அனுப்பியுள்ள பகிரங்க கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
பொதுபலசேனா அமைப்பின் செயலாளர் ஞானசாரதேரர் கடந்த மாதம் 24 ஆம் இகதியும் உலமா சபையின் செயலாளருக்கு கடிதமொன்றினை எழுதி உலமா சபை வஹாபிஸத்தை ஏற்றுக்கொள்கிறதா? அல்லது நிராகரிக்கிறதா? என்று கேட்டிருந்தார்.
இது பற்றி முன்னைய காலங்களிலும் ஊடக மாநாடுகளை நடாத்தி கேள்வி எழுப்பியிருந்தார். ஆனால் உலமா சபை இதற்கான பதிலை இது வரை வழங்கவில்லை.
கடந்த 9 ஆம் திகதி உலமா சபை இணையதளம் ஊடாக மாநாடொன்றினை நடத்தியது. அம்மாநாட்டிலும் இஸ்லாமிய அடிப்படைவாதத்தின் முக்கிய கொள்கையான வஹாப்வாதம் தொடர்பாக உலமாசபை தனது நிலைப்பாட்டினை வெளிப்படுத்தவில்லை. வஹாபிஸத்தை உலமா சபை நிராகரிக்காவிட்டால் அக் கொள்கையை அது பின்பற்றுகிறது என்றே கருதவேண்யுள்ளது.
2019 ஆம் ஆண்டின் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ஆராய நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையை அரசாங்கம் அமுல்படுத்தவேண்டும் என உலமாசபையின் செயலாளர் ஊடக மாதாடொன்றில் தெரிவித்தார்.
எனவே அரசு உடனடியாக அவர்களது கோரிக்கையை செவிமடுத்து ஆணைக்குழுவின் அறிக்கையை செயற்படுத்தவேண்டும். இலங்கையில் வஹாபிஸம் தடை செய்யப்பட வேண்டும் என ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. தெளஹீத் ஜமா அத்தின் வஹாபிஸக் கொள்கைகளே இஸ்லாமிய அடிப்படைவாதம் எனவும் குறிப்பிட்டுள்ளது.
இந்நிலையில் வஹாப்வாதம் பற்றிய தனது நிலைப்பாடு தொடர்பில் உலமாசபை ஒரு வார்த்தையேனும் இதுவரை தெரிவிக்காமை அச்சபை வஹாபிஸத்தை ஏற்றுக் கொள்வதாகவே கருத முடிகிறது.
ஐ.எஸ். அமைப்பு இஸ்லாத்துக்கு முரணான அமைப்பு என உலமா சபையின் சார்பில் கருத்து வெளியிட்ட உலமாக்கள் தெரிவித்துருக்கிறார்கள். அப்படியென்றால் தாம் வஹாபிஸத்தை நிராகரிப்பதாக உலமாசபையினால் ஏன் கூறமுடியாது. அவர்கள் வஹாப்வாதிகள் என்றல்லவா கருத வேண்டியுள்ளது எனத் தெரிவித்தார்.
(ஏ.ஆர்.ஏ. பரீல்) – விடிவெள்ளி 16/10/21