நேற்றைய தினம் கொரோனா தொற்றின் காரணமாக மரணித்த ஒரு ஜனாஸா அடக்கம் செய்ய
அனுமதிக்கப்படாமல் எரிக்கப்பட்டதை இட்டு மிகுந்த மனவேதனையும் ஆழ்ந்த துயரும் கொள்கிறேன்.
ஒரு ஜனாஸாவுக்குரிய உரிமைகளை கூட செய்ய விடாமல் தடுக்கும் இந்த அரசாங்கத்தின் இனவாத கண்கொண்ட சமிஞ்சை எதிர்காலத்தில் எவ்வாறு சிறுபான்மையினரின் இருப்பை உறுதிசெய்யும் என்கின்ற மிகப்பெரும் கேள்வியிருக்கிறது.
உலகத்தில் 188 நாடுகள் கொரோனாவினால் உயிரிழந்த உடலங்களை புதைப்பதற்கு அனுமதித்திருக்கிற சூழலில், உலக சுகாதார ஸ்தாபனம் கூட புதைப்பதற்கு அனுமதித்திருக்கிற சூழலில் எமது தேசத்தில் மட்டும் புதைப்பதற்கு அனுமதி மறுக்கப்படுகிறது என்பது பெரும் ஜனநாயக மீறலும் மனிதாபிமானமற்ற செயற்பாடும் ஆகும் என்பதை வலிமையாக பதிவு செய்கிறேன்.
சுகாதார அதிகாரிகள் புதைப்பதற்கு அனுமதி தருகிறார்கள் இல்லை என்று அரசாங்கம் சுகாதாரத்துறை மீது பலியை போட்டு வசதியாக தப்பித்துக்கொள்ள முயல்வது ஒரு பெரும் அரசியல் கபடநாடகமேயன்றி வேறில்லை.
அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அமைச்சர்கள் உற்பட்ட அரசியல்வாதிகள் தமக்கு ஒரு சிறிய நோயொன்று வந்தால் கூட இந்நாட்டு சுகாதார அதிகாரிகளின் அறிக்கைகளை நம்ப முடியாமல் சிங்கப்பூர் போன்ற நாடுகளுக்கு பெரிய செலவில் நோய்க்கு நிவாரணம் தேடும் அவர்கள் இன்று ஜனாஸா எரிக்கப்படுவதற்கு சுகாதார துறை அதிகாரிகளின் கருத்துக்களை தூக்கிப்பிடித்து ஜனாஸாக்களை புதைக்க முடியாது என்று திட்டமிட்டு கட்டவிழ்த்து விடும் இனவாத கபடநாடகத்தை அரசாங்கம் உடன் நிறுத்த வேண்டும்.
சிறுபான்மை மக்களின் அடையாளம், சுயம், கலாசாரம் உள்ளிட்ட விவகாரங்களில் சமதர்மத்தோடு கருமமாற்ற இந்த அரசாங்கம் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அம்பாறை மாவட்ட பாரளுமன்ற உறுப்பினர் S.M.M முஷாரப் பத்திரிகையாளர்களுக்கு தெரிவித்தார்.