மன்னார் உப்பளம் பகுதியில் கடந்த 13 ஆம் திகதி பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்ட நிலையில் மன்னார் பொலிஸாரின் புலன் விசாரணைக்கு அமைவாக கைது செய்யப்பட்ட இரண்டு பெண்கள் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை மன்னார் நீதவான் முன்னிலையில் ஆஜர் படுத்தப்பட்ட போது, குறித்த இரு பெண்களையும் எதிர் வரும் 4 ஆம் திகதி வரை (04-09-2020) விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.
மன்னார் உப்பளம் பகுதியில் கடந்த 13 ஆம் திகதி (13.08.2020) மதியம் சடலமாக மீட்கப்பட்ட யுவதியின் கொலை தொடர்பாக பல்வேறு தகவல்கள் வெளி வந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் குறித்த யுவதியுடன் மன்னார் பகுதிக்கு விஜயம் மேற்கொண்ட கொலை செய்யப்பட்ட பெண்ணின் சகோதரி உற்பட இரண்டு பெண்கள் அடையாளம் காணப்பட்டு குறித்த சந்தேக நபர்கள் மன்னார் பொலிஸாரின் விசாரனைகளுக்கு அமைவாக கைது செய்யப்பட்டனர்.
குறித்த இரண்டு சந்தேக நபர்களும் விசாரணைகளின் பின்னார் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை 7 மணியளவில் மன்னார் பொலிஸாரினால் மன்னார் நீதவான் மாணிக்கவாசகர் கணேசராஜா முன்னிலையில் ஆஜர்படுத்தினர்.
இதன் போது கைது செய்யப்பட்ட இரு பெண்கள் சார்பாக முன்னிலையான சட்டத்தரணி குறித்த கொலைக்கும், குறித்த இரு பெண்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை எனவும், வெளி நாட்டுக்கு அனுப்பிவதற்கு என குறித்த பெண்ணின் தாய் மாமனிடம் பெண்ணை ஒப்படைத்து விட்டு குறித்த இரு பெண்களும் சென்றதாகவும் குறித்த கொலைக்கும் கைது செய்யப்பட்டுள்ள இரு பெண்களுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என தெரிவித்திருந்தார் .
எனினும் பாதிக்கப்பட்ட யுவதி சர்பாக மன்றில் முன்னிலையான சட்டத்தரணி சர்மிலன் டயஸ் குறித்த யுவதி திட்டமிடப்பட்டு மேற்கொள்ளப்பட்ட கொலை எனவும், இறந்த பெண்ணின் குடும்ப உறவினர்கள் மத்தியில் காணப்பட்ட முரண்பாடுகள் காரணமாகவே இக் கொலை இடம் பெற்றதாகவும் அவ் இரு பெண்களும் பொலிஸாரால் மேற்கொண்ட விசாரணையின் போது தாங்கள் கொலை செய்ததை ஒப்புக் கொண்டுள்ளதாகவும் எனவே இக் கொலையின் பிரதான சந்தேக நபரான அப்பெண்ணின் தாய் மாமனை கைது செய்வதற்கான அறிவுறுத்தலை பொலிஸாருக்கு வழங்குவதுடன் குறித்த இரு பெண்களையும் விளக்கமறியலில் வைத்து விசாரிக்க வேண்டும் எனவும் மன்றில் தெரிவித்தார்.
இரு தரப்பு வாத பிரதி வாதங்களின் பின்னர் குறித்த பிரதான சந்தேக நபரான செட்டிகுளத்தை சேர்ந்த குறித்த பெண்ணின் தாய் மாமன் இதுவரை கைது செய்யப்படாத நிலையில் கைது செய்யப்பட்டு மன்னார் நீதி மன்றத்தில் ஆஜர் படுத்துமாறும், குறித்த இரு பெண்களையும் எதிர் வரும் 4 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மன்னார் நீதவான் மாணிக்கவாசகர் கணேசராஜா உத்தரவிட்டார்.