கொரோனா வைரஸ் குடும்பத்தின் கொவிட் 19 வைரஸ் தொற்றால் உயிரிழக்கும் அனைவரையும் அங்கீகரிக்கப்பட்ட சுடலை அல்லது இடத்தில் தகனம் செய்ய வேண்டும் எனவும் தகனம் செய்யப்பட்ட பின்னர் பிரேதங்களின் சாம்பலை உறவினர்கள் கோரினால் அதனை அவர்களிடம் கையளிக்க முடியும் எனவும் விஷேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
கடந்த 4 ஆம் திகதி சனிக்கிழமை திகதியிடப்பட்டு சுகாதார மற்றும் சுதேச வைத்திய சேவைகள் அமைச்சர் பவித்ரா வன்னி ஆரச்சியினால் இந்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
2170/8 எனும் இலக்கத்தைக் கொண்ட இந்த வர்த்தமானியில், பொது அரசாங்க அறிவித்தல்களின் கீழ், தனிமைப்படுத்தல் மற்றும் தொற்று நோய் தடுப்பு கட்டளை சட்டம் எனும் தலைப்பிட்டு 4 விடயங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
காலத்துக்கு காலம் திருத்தப்பட்டமைக்கு அமைவாக 1925 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 28 ஆம் திகதி வெளியிடப்பட்ட 7481 ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ள தானங்களை களஞ்சியம் செய்தல் மற்றும் அங்கிலொஸ்டோமியாசிஸ் ஒழுங்கு விதிகளை மேலும் திருத்துவதாக சுட்டிக்காட்டியே மேற்படி 2170/8 வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
அதில் முதல் மூன்று திருத்தங்களாக 46,47 மற்றும் 48 ஆம் ஒழுங்கு விதிகளில் உள்ள சில சொற்பதங்கள் திருத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில் பிரதான நான்காவது அம்சமாக 61 ஆவது ஒழுங்கு விதியுடன் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் புதிய விதிகள் சேர்க்கப்பட்டுள்ளன. 61. அ எனும் புதிய பிரிவூடாக கொரோனா எனும் கொவிட் 19 வைரஸ் தொற்றினால் இறக்கும் ஒருவரின் சடலத்தை தகனம் செய்தல் எனும் விடயம் பேசப்பட்டுள்ளது.
அதன்படி 61 ,62 ஆம் ஒழுங்கு விதிகளில் எது எவ்வாறு கூறப்பட்டிருப்பினும், கொரோனா வைரஸ் எனும் கொவிட் 19 தொற்றினால் இறந்துள்ள அல்லது இறந்துள்ளதாக சந்தேகிக்கப்படும் ஒருவரின் சடலம் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் வெளியிடப்படும் உத்தரவுகளுக்கு அமைய,
உயிரியல் அச்சுறுத்தல்களை தவிர்க்கும் நோக்கில் 800 முதல் 1200 பாகை செல்சியஸ் வரையிலான வெப்பத்தில் குறைந்தது 45 நிமிடங்கள் முதல் ஒரு மணி நேரம் வரையில் எரித்தல் வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன் அவ்வாறு எரித்தல் அல்லது தகனம் செய்யும் செயற்பாடானது, உரிய அதிகாரியினால் தெரிந்தெடுக்கப்பட்ட சுடலை அல்லது இடத்திலேயே இடம்பெற வேண்டும் என அந்த வர்த்தமனியின் 4 ஆவது பிரிவின் 1. அ, ஆ பகுதிகளில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
2170/8 ஆம் இலக்க வர்த்தமானியின் 4 (2) ஆம் பிரிவின் பிரகாரம், கொரோனா வைரஸ் தொற்றால் இறந்த அல்லது அந்த தொற்று காரணமாக இறந்துள்ளதாக சந்தேகிக்கப்படும் ஒருவரின் பிரேதத்தை, தகனம் செய்தல் தொடர்பில் உரிய அதிகாரியினால் நியமிக்கப்படும் அதிகாரி தவிர்ந்த வேறு எவரிடமும் கையளிக்கல் ஆகாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
4 (3) ஆம் பிரிவின் பிரகாரம், பிரேதத்தை தகனம் செய்யும் நடவடிக்கையில் ஈடுபடும் நபர்கள் பயன்படுத்தும் உடை, மீள பயன்படுத்த முடியாத தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்களை சவப் பெட்டியுடன் சேர்த்து எரித்தல் வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
2170/8 ஆம் இலக்க வர்த்தமானியின் 4 (4) ஆம் பிரிவில், மீள பயன்படுத்த முடியுமான பாதுகாப்பு உபகரணங்கள் இருப்பின் அவற்றை சுகாதார சேவைகள் பனிப்பாளரினால் வழங்க்கப்பட்டுள்ள உரிய உத்தரவுகளுக்கு அமைய தொற்று நீக்கல் மற்றும் தூய்மையாக்கல் நடவடிக்கைகளுக்கு உட்படுத்த வேண்டும் எனவும் 4 (5) ஆம் பிரிவில் பிரேதத்தின் சாம்பலை, உறவினர்கள் கோருவார்களாயின், அவர்களுக்கு கையளிக்க முடியும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
(எம்.எப்.எம்.பஸீர்)