நாட்டின் வேலையற்ற பட்டதாரிகளின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணவும் மேலதிகமாக பத்தாயிரம் வேலைவாய்ப்புக்களை பட்டதாரிகளுக்கு வழங்கவும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
வேலையற்ற பட்டதாரிகளின் பிரச்சினைகள் தொடர்ந்து வருகின்ற நிலையில் இதற்கு தீர்வு காணும் முகமாக அமைச்சரவை இந்த முடிவை எடுத்துள்ளது.
ஒரு இலட்சத்திற்கும் அதிகமான பட்டதாரிகளுக்கு விண்ணப்பபடிவங்கள் வழங்கப்பட்ட நிலையில், 48 ஆயிரத்துக்கும் அதிகமான பட்டதாரிகள் நிராகரிக்கப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து நிராகரிக்கப்பட்ட பட்டதாரிகள் குறித்தும் மேலும் பத்தாயிரம் வேலைவாய்ப்புக்களை வழங்குவது தொடர்பிலும் கவனம் செலுத்த வேண்டுமென ஜனாதிபதி அமைச்சரவையில் பிரஸ்தாபித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, ஒன்றிணைந்த வேலையற்ற பட்டதாரிகள் சங்கம் கடந்த செவ்வாய்க்கிழமை கொழும்பில் மாபெரும் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தது.
தொழிலற்ற பட்டதாரிகளுக்கு வழங்கப்பட்ட 50 ஆயிரம் வேலைவாய்ப்புக்களில் தாம் உள்வாங்கப்படாமைக்கு எதிர்ப்பு தெரிவித்தே, இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. பட்டதாரிகள் தொடர்ந்தும் இழுத்தடிக்கப்பட்டும், புறக்கணிக்கப்பட்டுமே வருகின்றனர்.
இதேவேளை ஜனாதிபதியின் சுபிட்சத்தின் நோக்கு என்ற வேலைத்திட்டத்தின் கீழ், தொழில் பெறும் பட்டதாரிகளின் பெயர் பட்டியல் அரச சேவைகள், மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் இணையத்தில் வெளியிடப்பட்டிருந்தது.
இதில் 51 ஆயிரத்து 135 பேர் நியமனங்களுக்கான தகைமைகளைப் பெற்றுக்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதனடிப்படையில் நிராகரிக்கப்பட்ட சுமார் அரைப்பங்கினரே தமக்கு நியாயம் கோரி கொழும்பு கோட்டை ரயில் நிலையம் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
எவ்வாறெனினும் பட்டதாரிகளின் வேலையல்லாப் பிரச்சினை தொடர்ந்து கொண்டே உள்ளது. ஒருவர் பல்கலைக்கழகம் சென்று பட்டம் பெற்றும் சுமார் 5 தொடக்கம் 6 வருடங்கள் வேலைதேடி அலையவேண்டியுள்ளது. வேலை தேடுவதிலேயே அவர் பாதி வயதைக் கடந்து விடுகிறார்.
இதனால் இலங்கையின் கல்வி முறையிலும் பெரும் அதிருப்தி நிலவுகிறது. பல்வேறு சந்தர்ப்பங்களில் 3 வருடத்தில் நிறைவு செய்ய வேண்டிய கல்வியை ஒருவர் 6 வருடங்கள் கடந்தும் நிறைவு செய்ய முடியாத நிலை காணப்படுகிறது.
மேலும் தற்போதைய கொரோனா பிரச்சினையும் பலரது உயர் கல்வியை தாமதப் படுத்தியும் நீடித்தும் உள்ளத்துடன், பலர் வேலை இழக்கவும் காரணமாகியுள்ளது.
எனவே எதிர்வரும் காலங்களில் நாட்டில் வேலையில்லாப் பிரச்சினை மேலும் பன்மடங்கு விஸ்வரூபம் எடுக்கும் அறிகுறிகளே காணப்படுகின்றன. எனவே அரசு இது தொடர்பில் காத்திரமான நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும்.
தவறாமல் தினமும் காலையில் தங்க விலைகளை உங்கள் போனுக்கு SMS ஆக பெற்றுக்கொள்ள வேண்டுமா? கீழே பட்டனை கிளிக் செய்து SMS செய்யவும்.
Click above link & send the SMS- 2.5+tx/msg-Mobitel-2/day