சொத்துக்களை அபகரிக்க, தந்தையை கொன்ற மகன்.

இந்நாட்டில்‌ இடம்‌ பெறும்‌ இரகசிய குற்றச்‌ செயல்களை மிகவும்‌ சூட்சுமமாக விசாரணை செய்து குற்றச்‌ செயல்களுடன்‌ தொடர்புபட்டவர்களை கைது செய்வதற்கு இரகசிய பொலிஸ்‌ அதிகாரிகள்‌ மிகவும்‌ அர்ப்பணிப்புடன்‌ செயற்பட்டுவருகின்றனர்‌.

நாட்டின்‌ சாதாரண பொலிஸ்‌ நிலையங்‌களில்‌ அகப்பட்டுக்‌ கொள்ளாத மிகவும்‌ ஆபத்தான குற்றவாளிகள்‌ மற்றும்‌ நாட்டில்‌ பெரும்‌ சர்ச்சைகளை ஏற்படுத்திய சம்‌பவங்களுடன்‌ தொடர்புடையவர்களை கைது செய்வதற்கு இரகசிய பொலிஸ்‌ அதிகாரிகள்‌ மேற்கொள்ளும்‌ நடவடிக்‌கைகள்‌ சாதாரணமானதல்ல.

இரகசிய பொலிஸார்‌ இவ்வாறான மறைமுகமான குற்றச்‌ செயல்களின்‌ பங்காளர்களைக்‌ கைது செய்வதற்கு பல்வேறு முறைகளைக்‌ கையாளுகின்றனர்‌. நவீன தொழிநுட்பங்களையும்‌ பயன்படுத்திக்‌ கொள்கின்றனர்‌. நீண்ட விசாரணைகளும்‌ முன்னெடுக்கப்படுகின்றன. இதனால்‌ குற்‌றவாளிகளுக்கு இரகசிய பொலிஸாரின்‌ விசாரணைகளிலிருந்தும்‌ தப்பிச்‌ செல்வதற்கு சந்தர்ப்பம்‌ கிடைப்பதில்லை.

இந்தவகையில்‌ பல வருடங்களுக்கு முன்பு இடம்பெற்ற மனிதப்‌ படுகொலையின்‌ முழு விபரங்களையும்‌ அதனுடன்‌ தொடர்புபட்ட குற்றவாளியையும்‌ அண்மையில்‌ இரகசிய பொலிஸ்‌ அதிகாரிகள்‌ பெற்றுக்கொண்டதுடன்‌ கைதும்‌ செய்தனர்‌.

சபீர்‌ அப்பாஸ்‌ குலாம்‌ ஹுசைன்‌ கோடீஸ்வர வர்த்தவர்களுள்‌ ஒருவராவார்‌. இவர்‌ பிறப்பினால்‌ போரா சமூகத்தைச்‌ சேரந்தவராவார்‌. இவரிடம்‌ உள்ள சொத்‌துக்கள்‌ மற்றும்‌ உடமைகள்‌ அளப்பரியனவாகும்‌. அடம்ஸ்‌ எக்ஸ்போ (Adams Expo) நிறுவனத்துக்கும்‌ மேலதிகமாக பல்வேறு நிறுவனங்களுக்கும்‌ உரிமையாளர்‌ குலாம்‌ ஹுசைன்‌ ஆவார்‌. அத்தோடு பல ஏக்‌கர்களைக்‌ கொண்ட தேயிலைத்‌ தோட்‌டங்கள்‌ சிலவற்றுக்கும்‌ உரிமையாளர்‌. இந்நாட்டின்‌ சொத்துக்கள்‌ மற்றும்‌ உடமைகளுக்கும்‌ மேலதிகமாக சிங்கப்பூர்‌, டுபாய்‌, இந்தியா போன்ற நாடுகளிலுள்ள நிறுவனங்கள்‌ சிலவற்றினதும்‌ பங்குதாரர்‌ இவர்‌.

இலங்கையில்‌ 9 நிறுவனங்களுக்குச்‌ சொந்தக்காரரான குலாம்‌ ஹுசைனுக்கு கொழும்பு கிரேண்ட்பாஸ்‌ பகுதியில்‌ பல ஏக்கர்களைக்‌ கொண்ட காணியும்‌ உள்ளது. இவற்றில்‌ ஒரு காணியிலேயே இவரது நிறுவனம்‌ அமைந்துள்ளது.

பாத்திமா சபீர்‌ அவரது மனைவியாவார்‌. அவருக்கு நான்கு பிள்ளைகள்‌. மூத்த மகன்‌ இத்ரீஸ்‌ – ‌.பரீதா மற்றும்‌ சைனப்‌ அவரது இரு மகள்களாவர்‌. இளைய மகன்‌ அலி அஸ்கர்‌ என்பவராவார்‌. குலாம்‌ ஹுசைனின்‌ இரு மகள்‌களும்‌ வெளிநாட்டிலே வசிக்கிறார்கள்‌. இதனால்‌ அவரது வர்த்தக நடவடிக்‌கைகளுக்கு அண்ணனும்‌, தம்பியுமான அவரின்‌ இரு புதல்வர்கள்‌ ஒத்துழைப்பு வழங்கி வந்தார்கள்‌.

குலாம்‌ ஹுசைனின்‌ வர்த்தக நடவடிக்‌கைகள்‌ முன்னெடுக்கப்படும்‌ பிரதான அலுவலகம்‌ கிராண்ட்பாஸ்‌ பிரதேசத்‌திலே அமைந்துள்ளது. இப்பிரதேசம்‌ 3 ஏக்கர்‌ காணிகளைக்‌ கொண்டதாகும்‌. இரண்டுமாடிகளைக்‌ கொண்ட பிரதான காரியாலயத்தின்‌ மேல்‌ மாடியில்‌ தெற்குபக்க மூலையில்‌ குலாம்‌ ஹுசைனின்‌ அலுவலகம்‌ அமைந்திருந்தது. மூத்தமகன்‌ இத்ரீஸ்‌ மற்றும்‌ இளைய மகன்‌ அலி என்‌போரும்‌ இந்த நிறுவனத்தில்‌ வெவ்வேறு அலுவலகங்களை நடாத்தி வந்தார்கள்‌.

போரா சமூகத்தைச்‌ சேர்ந்த முஸ்லிம்கள்‌ இந்நாட்டில்‌ 3000க்கும்‌ குறைந்த தொகையினரே வாழ்கின்றனர்‌. இவர்கள்‌ தமது சமய கடமைகளை நிறைவேற்றுவதற்காக அச்சமூகத்துக்கென்று இந்நாட்டில்‌ மூன்று பள்ளிவாசல்களே இருக்கின்றன.இவர்கள்‌ நாட்டில்‌ ஏனைய முஸ்லிம்களை விட அமைதியான சுதந்திரமான வாழ்க்கையை முன்னெடுப்பதற்கே விரும்புகின்றனர்‌. போரா சமூகத்தைச்‌ சேர்ந்தவர்களில்‌ பெரும்பான்மையினர்‌ பல வெளிநாடுகளில்‌ செல்வந்த வர்த்தக நடவடிக்கைகளில்‌ ஈடுபட்டு வருகிறார்கள்‌.

குலாம்‌ ஹுசைனும்‌ அவரது பிள்ளைகள்‌ நால்வரும்‌ அமைதியான சுதந்திரமான வாழ்க்கையையே மேற்கொண்டனர்‌. இவரது இளைய மகனின்‌ வாழ்க்கை இதற்கு ஓர்‌ உதாரணமாகும்‌. அலி, போரா சமூகத்தைச்‌ சேர்ந்தவரென்றாலும்‌ அவர்‌ பெரும்பான்மை இனத்தைச்‌ சேர்ந்த சிங்கள பெண்‌ ஒருவரையே திருமணம்‌ செய்துள்ளார்‌. அந்தப்பெண்‌ இலங்‌கையில்‌ பிரபல வர்த்தகரொருவரின்‌ மகளாவார்‌. அந்தப்பெண்‌ ஏற்கனவே திருமணம்‌ செய்தவர்‌. இந்த விபரங்களை அறிந்து கொண்டே அலி அப்பெண்ணை திருமணம்‌ செய்து கொண்டதோடு அப்‌ பெண்ணின்‌ முன்னைய கணவரின்‌ குழந்‌தையுடனே அவளை ஏற்றுக்கொண்டார்‌.

அலியும்‌ அவரது மனைவியும்‌ எதுல்‌ கோட்டையிலுள்ள மனைவிக்குச்‌ சொந்தமான வீட்டிலே வாழ்கிறார்கள்‌. அலியின்‌ தந்‌ைத குலாம்‌ ஹுசைனும்‌, தாயாரும்‌ பம்‌பலப்பிட்டிய ஹவ்லொக்‌ பகுதியிலுள்ள சொகுசு வீட்டிலே வாழ்ந்தார்கள்‌.

இவ்வாறு தனது மனைவி மற்றும்‌ இரு ஆண்‌ மகன்களுடன்‌ வாத்தக நடவடிக்கைகளில்‌ ஈடுபட்டு வந்த குலாம்‌ ஹுசைன்‌ அண்மையில்‌ ஒரு நாள்‌ தனது காரியாலயத்தினுள்‌ மூச்சின்றி வீழ்ந்து கிடந்தார்‌. அவர்‌ தனது காரியாலயத்தில்‌ தனது கதிரையில்‌ பேச்சு மூச்சின்றி கிடந்தார்‌. தந்‌ைத இவ்வாறு இருப்பதைக்‌ கண்ட இளைய மகன்‌ அலி உரத்த குரலில்‌ சப்தமிட்டு கதறியதையடுத்து அவ்விடத்திற்கு வருகை தந்த மூத்த மகன்‌, தந்தை ஏதோ நோய்க்குள்ளாகியிருக்கிறார்‌ என்று சந்தேகப்பட்டு உடனடியாக தந்தையை காரில்‌ வைத்தியசாலைக்கு எடுத்துச்‌ சென்றார்‌. அவர்கள்‌ தமது தந்தையை நாராஹேன்‌பிட்டியிலுள்ள தனியார்‌ வைத்தியசாலையொன்றுக்கே எடுத்துச்‌ சென்றார்கள்‌. டாக்டர்‌ அவரைப்‌ பரிசோதித்துவிட்டு அவர்‌ இறந்துவிட்டதாகத்‌ தெரிவித்தார்‌. 2017 ஜூன்‌ மாதம்‌ 7 ஆம்‌ திகதியே இச்சம்‌பவம்‌ நடைபெற்றது. பின்பு அவரது மரண விசாரணை நடை பெற்றது போரா சமூகத்தை சேர்ந்த பெண்‌ டாக்டர்‌ ஒருவரே மரண விசாரணை நடத்தினார்‌.

குலாம்‌ ஹுசைனின்‌ உடலை பரிசோதித்த டாக்டர்‌ அவர்‌ இயற்கை மரணம்‌ எய்தியுள்ளதாகவே அறிக்கை சமர்ப்பித்தார்‌. இதனையடுத்து அவரது ஜனாஸா மனைவி மற்றும்‌ பிள்ளைகளிடம்‌ ஒப்படைக்கப்பட்‌டது. அவரது ஐனாஸா குப்பியாவத்தை மையவாடியில்‌ அன்றைய தினமே நல்லடக்கம்‌ செய்யப்பட்டது.

தந்தையின்‌ மரணச்‌ செய்தியறிந்த வெளிநாட்டிலிருக்கும்‌ அவரது இரு பெண்‌ பிள்ளைகளும்‌ இலங்கைக்கு வந்திருந்தனர்‌. தந்தையின்‌ மரணம்‌ அவர்களுக்கு மிகவும்‌ கவலையளித்தது. மனைவியும்‌ நான்குபிள்ளைகளும்‌ அவரது மரணத்தையடுத்து அதிர்ச்சிக்குள்ளாகியிருந்தானர்‌. என்றாலும்‌ சில தினங்களின்‌ பின்பு தந்தையின்‌ சொத்துக்களை பங்‌கிட்டுகொள்வதற்கான முயற்சிகளில்‌ அவர்கள்‌ ஈடுபட்டார்கள்‌.

‘தந்‌ைதை அவரது சொத்துக்களை எங்களுக்கு எழுதி வைத்திருப்பார்‌’. ்‌’ஆம்‌, சில வேளை இறுதி விருப்ப ஆவணம்‌ ஒன்றினை எழுதி வைத்திருக்‌கலாம்‌. அந்த ஆவணம்‌ தந்தையின்‌ அலுவல கத்தில்‌ இருக்கலாம்‌ இவ்வாறு அவரின்‌ பிள்ளைகள்‌ பேசிக்‌ கொண்டார்கள்‌. இறுதியில்‌ அவர்கள்‌ அனைவரும்‌ ஒரு தீர்மானத்துக்கு வந்‌தார்கள்‌. தந்தையின்‌ அலுவலகத்தினுள்‌ சோதனை நடாத்தி அவ்வாறு இறுதி விருப்ப ஆவணம்‌ ஒன்றினை அவர்‌ எழுதி வைத்திருக்கிறாரா என்று தேடிப்பார்ப்பதே அந்தத்தீர்மானமாகும்‌.

ஒரு நாள்‌ குலாம்‌ ஹுசைனின்‌ மகள்‌களும்‌ மகன்களும்‌ அவரது காரியாலயத்‌துக்குள்‌ சென்று தேடுதல்‌ நடத்தினார்கள்‌. அவ்வாறு இறுதி விருப்ப ஆவணம்‌ இருந்தால்‌ அதன்படி தந்தையின்‌ சொத்‌துக்களை பகிர்ந்து கொள்வதே அவர்களது இலக்காக இருந்தது. அலுவலகத்தினுள்‌ அவரது மேசைலாச்சு, அலுமாரி என்பனவற்றுக்குள்‌ எல்லாம்‌ தேடுதல்‌ நடத்‌தினார்கள்‌. இறுதி விருப்ப ஆவணத்தை தேடிக்கண்டு பிடிப்பதில்‌ முழு மூச்சாக ஈடுபட்டாலும்‌ அது பயனற்றதாகப்போனது. அலுவலகத்திலிருந்த அவரது இரும்பு பெட்டகத்தை மாத்திரமே அவர்‌களால்‌ சோதனைக்குட்படுத்த முடியாமற்‌ போனது.

நிச்சயம்‌ இறுதி விருப்ப ஆவணம்‌ இந்த இரும்பு பெட்டகத்தினுள்ளே பத்திரமாக இருக்கவேண்டும்‌ எனஅவர்கள்‌ தீர்மானத்துக்கு வந்தார்கள்‌. இதனையடுத்து இரும்பு பெட்டகத்தை திறப்பதற்கான முயற்சிகள்‌ மேற்கொண்டாலும்‌ அது பலனளிக்கவில்லை அப்பெட்டகத்தின்‌ திறப்பு (8) இருக்காமையே அதற்கு காரணமாகும்‌. கோடிக்கணக்கான தந்தையின்‌ சொத்துக்கள்‌ எவ்வாறு எங்களுக்கு பகிர்ந்‌தளிக்கப்பட்டிருக்கும்‌ என்பதை அறிந்து கொள்வதே அவர்களது முயற்சியாக இருந்‌தது. என்றாலும்‌ இரும்பு பெட்டகத்தின்‌ திறப்பினை அவர்களால்‌ தேடிக்கொள்ள முடியாமலிருந்தது.

நாட்கள்‌ நகர்ந்து சொன்றன. என்‌றாலும்‌ அவரது பிள்ளைகள்‌ இரும்புப்‌ பெட்டகத்தைத்‌ திறக்கும்‌ முயற்சியினை கைவிடவில்லை. இரும்பு பெட்டகத்தின்‌ திறப்பினை தேடிக்கண்டுபிடிக்கும்‌ முயற்‌சியில்‌ ஈடுபட்டிருந்த நிலையில்‌ ஒருநாள்‌ அந்த திறப்பு நான்கு பிள்ளைகளில்‌ ஒருவரின்‌ கைக்கு கிட்டியது. அத்திறப்‌பினை குலாம்‌ ஹுசைனின்‌ காரியாலய மேசைக்கு மேலிருந்து இளைய மகன்‌ அலியினால்‌ கண்டெடுக்க முடிந்தது. இந்தச்‌ சம்பவம்‌ ஏனைய பிள்ளைகளுக்கு ஆச்சரியமாக இருந்தது. என்றாலும்‌ அவர்கள்‌ அந்த திறப்பின்‌ மூலம்‌ இரும்‌புப்பெட்டகத்தைத்‌ திறந்தார்கள்‌. பெட்‌டகத்தினுள்‌ ஒருகோவை (1-॥6) இருந்தது அந்தக்‌ கோவையை எடுத்து பார்வையிட்‌டார்கள்‌. சிறிது நேரத்தில்‌ பிள்ளைகள்‌ அனைவரும்‌ ஒவ்வொருவரின்‌ முகத்‌தினை நோக்கிக்‌ கொண்டார்கள்‌.

“தந்தை எல்லா சொத்துக்களையும்‌ அலியின்‌ பெயருக்கல்லவா எழுதியிருக்‌கிறார்‌?

குலாம்‌ ஹுசைன்‌ தனது விருப்ப ஆவணத்தில்‌ தனது சொத்துக்களை இளைய மகனின்‌ பெயருக்கே எழுதியிருந்தார்‌. இதனால்‌ இளைய மகன்‌ அலியைத்‌ தவிர ஏனைய மூன்றுபிள்ளைகளும்‌ மிகவும்‌ கவலைக்குள்ளானார்கள்‌. அத்தோடு இது அவர்களுக்கு ஏமாற்றமாக இருந்ததுடன்‌ ஆச்சரியமாகவும்‌ இருந்தது. குலாம்‌ ஹுசைனின்‌ மனைவிக்கு சந்தேகம்‌ ஏற்‌பட்டது.

‘தந்‌ைத ஒரு போதும்‌ இவ்வாறு வேலை செய்ய மாட்டார்‌’.

தந்‌ைத தனது சொத்துக்களை பிள்‌ளைகள்‌ எல்லோருக்குமே பகிர்ந்தளிப்பார்‌ அன்றி அலிக்கு மாத்திரம்‌ வழங்கமாட்டார்‌ என்று அவர்கள்‌ பேசிக்கொண்டார்கள்‌.

அலி தவிர ஏனைய பிள்ளைகள்‌ மூவருக்கும்‌ இதில்‌ சந்தேகம்‌ ஏற்பட்டது. “ஆம்‌” இது இப்படி இடம்பெற்றிருக்க முடியாது. தந்‌ைத இவ்வாறு ஒருபோதும்‌ செய்யமாட்டார்‌. பிள்ளைகள்‌ மூவரும்‌ ஒரே நிலைப்பாட்டுக்கு வந்தார்கள்‌. அவர்கள்‌ தந்தையின்‌ இறுதி விருப்ப ஆவணம்‌ உண்மையான ஆவணமா என பரிசீலனையின்‌ பின்பு அந்த ஆவணம்‌ போலியானது என நிரூபணமானது.

குறிப்பிட்ட இறுதி விருப்ப ஆவணத்தில்‌ சாட்சியாளர்களாக அலியின்‌ கீழ்‌ பணிபுரியும்‌ அலுவலக உதவியாளர்‌ ஒருவரும்‌, துப்புரவு பணியில்‌ ஈடுபட்டிருக்கும்‌ பெண்மணி ஒருவருமே கையொப்பமிட்டுள்ளார்கள்‌. இதனால்‌ இறுதிவிருப்ப ஆவணம்‌ தொடர்பாக அவரது மூன்று பிள்ளைகளும்‌ சந்தேகம்‌ கொண்டார்கள்‌. சாட்சியாளர்களாக கையொப்பமிட்டுள்ள பணியாளர்களை பிள்ளைகள்‌ விசாரணை செய்தார்கள்‌. குறிப்பிட்ட இறுதி விருப்ப ஆவணம்‌ அலியினால்‌ தயாரிக்கப்பட்டதென நிரூபணமானது. இதனையடுத்து தந்தையின்‌ மரணம்‌ தொடர்பிலும்‌ அவர்களுக்கு சந்தேகம்‌ ஏற்பட்டது.

அலியின்‌ செயற்பாடுகள்‌ நடவடிக்‌கைகள்‌ தொடர்பில்‌ குலாம்‌ ஹுசைன்‌ முன்பு அவருக்கு பல தடவைகள்‌ ஏசியிருக்கிறார்‌ என்பதை அறிந்து வைத்திருந்த மூன்று பிள்ளைகளும்‌ தந்தையின்‌ மரணம்‌ கொலையாக இருக்கலாம்‌ என சந்தேகம்‌ கொண்டனர்‌. இதனையடுத்து குலாம்‌ ஹுசைனின்‌ மூத்த மகன்‌ இத்ரீஸ்‌ சி.ஐ.டிக்குச்‌ சென்று அதன்‌ பணிப்பாளரைச்‌ சந்தித்தார்‌. தனது தந்தையின்‌ மரணம்‌ தொடர்பில்‌ தனக்கு பலத்த சந்‌தேகம்‌ நிலவுவதாகவும்‌ இது தொடர்பில்‌ விசாரணை நடத்தி தந்தையின்‌ மரணத்துடன்‌ தொடர்புடையவர்களை கைது செய்யும்படியும்‌ அவர்‌ சி.ஐ.டி.யின்‌ பணிப்‌பாளர்களிடம்‌ முறைப்பாடொன்றினைக்‌ கையளித்தார்‌. இந்த முறைப்பாடு 2018 ஆம்‌ ஆண்டு ஆகஸ்ட்‌ மாதம்‌ 16 ஆம்‌ திகதி கையளிக்கப்பட்டது. இப்போது சி.ஐ.டியின்‌ பணிப்பாளராக சிரேஷ்ட பொலிஸ்‌ அத்தியட்சர்‌ சானி அபேசேகரவே கடமையாற்றினார்‌.

அவர்‌ குலாம்‌ ஹுசைனின்‌ சந்தேகத்‌துக்கிடமான மரணம்‌ தொடர்பில்‌ விசாரணைகளை நடத்துவதற்கு சி.ஐ..டியின்‌ பொதுமக்கள்‌ முறைப்பாட்டுப்பிரிவின்‌ பொறுப்பாளரை நியமித்தார்‌. அதற்கமைவாக அவரால்‌ பொலிஸ்‌ பரிசோதகர்‌ துசித உட்பட குழுவொன்று நியமிக்கப்பட்டது.

விசாரணையினை ஆரம்பித்த சி.ஐ.டி. அதிகாரிகள்‌ குலாம்‌ ஹுசைனின்‌ பிள்‌ளைகள்‌ அனைவரதும்‌ வாக்கு மூலங்களைப்பெற்றுக்‌ கொண்டனர்‌. அவரது மரணத்தை முதலில்‌ கண்ட இளைய மகன்‌ அலி மற்றும்‌ அப்போது அவருடனிருந்த நண்பர்‌. மரணம்‌ நிகழ்ந்த அன்று குலாம்‌ ஹுசைன்‌ அலுவலகத்துக்கு வருகை தந்த நேரம்‌, அப்போது அவர்‌ சந்தித்த நபர்கள்‌, நிறுவனத்தின்‌ ஊழியர்கள்‌ வரவேற்பு அதிகாரியான பெண்‌ என்போரிடம்‌ நீண்ட விசாரணைகளை நடாத்தி சாட்சியங்களைப்‌ பதிவு செய்து கொண்டனர்‌.

அவரது பிள்ளைகளின்‌ சந்தேகம்‌ வெளிப்படுத்தப்பட்ட காரணிகள்‌ என்பவற்றை சி.ஐ.டி.யினர்‌ நீதிமன்றில்‌ தெளிவுபடுத்தி குலாம்‌ ஹுசைனின்‌ சடலம்‌ பிரேதப்‌ பரிசோதனை செய்யப்படவேண்டுமெனத்‌ தெரிவித்ததுடன்‌ அவரது சடலத்தை தோண்டியெடுப்பதற்கான அனுமதியைக்‌ கோரினர்‌. இதற்கு நீதிமன்றம்‌ அனுமதியினை வழங்கியுள்ளது.

அவர்‌ அடக்கம்‌ செய்யப்பட்டு நான்கு மாதங்களின்‌ பின்பு அவரது ஜனாஸா தோண்டியெடுக்கப்பட்டது. இது 2019.01.10 ஆம்‌ திகதியாகும்‌. அவரது ஜனாஸா பிரேத பரிசோதனைக்காக கொழும்பு நீதிமன்ற வைத்திய அதிகாரி காரியாலயத்துக்கு எடுத்துச்‌ செல்லப்‌பட்டது. விசேட வைத்தியர்கள்‌ அவரது மரணத்துக்கான காரணத்தை கண்டு பிடிப்பதில்‌ முழுமூச்சாக ஈடுபட்டனர்‌.

இவரது பிரேத பரிசோதனை அறிக்கை மாதக்கணக்கில்‌ தாமதமானது என்றாலும்‌ சி.ஐ.டி. தொடர்ந்தும்‌ விசாரணைகளை முன்னெடுத்து வந்தது. விசாரணைகளில்‌ இவரது மரணத்தில்‌ அவரது இளைய மகனின்‌ தொடர்பு இருப்பதாக அறியப்பட்‌டது. அதற்கு அலியின்‌ நண்பர்‌ ஒருவரின்‌ ஒத்துழைப்பு இரகசிய பொலிஸாருக்கு கிடைத்தது.

அவர்‌ சம்பவம்‌ நடந்ததினம்‌ அலியின்‌ நடவடிக்கைகள்‌ தொடர்பாக இரகசியப்‌ பொலிஸாரிடம்‌ தெளிவுபடுத்தினார்‌.

“அன்று பொஸ்‌ காலையிலே ஆபிஸூக்கு வந்தார்‌. குலாம்‌ சேர்‌ கீழ்மாடியில்‌ உள்ள வரவேற்பு பெண்‌ அதிகாரிக்கு காலை வந்தனம்‌ செலுத்திவிட்டே மேல்‌ மாடிக்கு வந்தார்‌. சிறிது நேரத்தில்‌ நானும்‌ அலியும்‌ பொஸ்ஸின்‌ காரியாலயத்துக்குச்‌ சென்றோம்‌.

அலி என்னை குலாம்‌ சேரின்‌ அலுவலக வாசலின்‌ கதவினருகே இருக்கும்படி கூறினார்‌. எவரையும்‌ உள்ளே அனுமதிக்க வேண்டாம்‌ எனவும்‌ தெரிவித்தார்‌. சிறிது நேரத்தில்‌ சப்தம்‌ ஒன்று கேட்டது. சப்தத்‌தைத்‌ தொடர்ந்து அலி சப்தமிட ஆரம்‌ பித்தார்‌. நான்‌ உள்ளே ஓடிச்சென்றேன்‌. அவர்‌ என்னிடம்‌ கழுத்துப்பட்டி (116) ஒன்றினைத்‌ தந்து அதனை எடுத்துச்‌ செல்‌ லும்படி கூறினார்‌. அதைத்தொடர்ந்து அங்‌ கிருந்த அனைவரும்‌ பொஸ்ஸின்‌ அலுவலகத்துக்குள்‌ வந்தார்கள்‌. பொஸ்ஸின்‌ மூத்த மகனும்‌ வந்தார்‌. குலாம்‌ சேரை அலியின்‌ வாகனத்தில்‌ வைத்தியசாலைக்கு கொண்டு சென்றார்கள்‌’ என்று சாட்சியமளித்தார்‌.

இந்த நீண்ட சாட்சியத்தின்‌ பின்பு சி.ஐ.டியினர்‌ குலாம்‌ ஹுசைனின்‌ கொலை தொடர்பில்‌ அவரது மகன்‌ அலியையோ அவரது நண்பரையோ கைது செய்யவில்லை. குலாம்‌ ஹுசைனின்‌ பிரேத பரிசோதனை அறிக்கை கிடைக்கும்வரை சி.ஐ.டி.யினர்‌ காத்திருந்தனர்‌.

இரகசிய பொலிஸ்‌ பிரிவின்‌ பொறுப்‌பதிகாரி பொலிஸ்‌ இன்ஸ்பெக்டர்‌ துசித கஹகல்ல உட்பட்ட குழுவினர்‌ குலாம்‌ ஹுசைனின்‌ மரணம்‌ தொடர்பில்‌ முக்கியமான தகவல்கள்‌ சிலவற்றைத்‌ திரட்டியிருந்தனர்‌. அவரது மரணம்‌ யாரினால்‌ நிகழ்ந்தது என்பதை இனங்கண்டிருந்தனர்‌.

குலாம்‌ ஹுசைன்‌ கழுத்துப்பட்டியினால்‌ கழுத்து இறுக்கப்பட்டு கொலை செய்‌யப்பட்டுள்ளதாக விசாரணை அதிகாரிகள்‌ உறுதி செய்திருந்தனர்‌. என்‌றாலும்‌ குறிப்பிட்ட கழுத்துப்பட்டியை கண்டெடுப்பதற்கு அதிகாரிகளினால்‌ முடியாமற்போனது. சாட்சியாளரினால்‌ குறிப்பிட்ட கழுத்துப்பட்டி வாய்க்காலுக்குள்‌ வீசப்பட்டமையே இதற்குக்‌ காரணமாகும்‌. கொலை செய்வதற்குப்‌ பயன்படுத்தப்பட்ட கழுத்துப்பட்டி குலாம்‌ ஹுசைனின்‌ இளைய மகனுக்குச்‌ சொந்‌தமானது என்பதும்‌ விசாரணையாளர்‌களால்‌ உறுதிப்படுத்தப்பட்டது. கழுத்தை இறுக்குவதற்காக கழுத்துப்பட்டி முடிச்சு அலியின்‌ நண்பரினாலேயே போடப்‌பட்டுள்ளது என்பதும்‌ விசாரணைகளில்‌ தெரிய வந்தது

என்றாலும்‌ குலாம்‌ ஹுசைனின்‌ கொலையாளியை சி.ஐ.டியினரால்‌ கைது செய்வதற்கு முடியாமலிருந்தது. அவரது மரணம்‌ எவ்வாறு நிகழ்ந்தது என்பதை உறுதிசெய்வதற்கான நீதிமன்ற வைத்திய அறிக்கை கிடைக்காமையே இதற்குக்‌ காரணமாகும்‌. என்றாலும்‌ அண்மையில்‌ குலாம்‌ ஹுசைனின்‌ பிரேதபரிசோதனை, நீதிமன்ற வைத்தியசாலை அதிகாரியின்‌ அறிக்கை வெளிவந்தது.வைத்திய அறிக்கையில்‌ அவரது சில எலும்புகள்‌ வெடிப்புக்குள்ளாகியுள்ளமை உறுதியாகியிருந்தது.இது தாக்குதலினால்‌ ஏற்பட்டிருக்கலாம்‌ என விசாரணைகளில்‌ வெளியிடப்பட்டுள்ளது.

குலாம்‌ ஹுசைனின்‌ மரணம்‌ படுகொலை என நீதிமன்ற வைத்தியஅறிக்கையில்‌ தெரிவிக்கப்பட்டிருந்ததையடுத்து மற்றும்‌ சம்பவம்‌ தொடர்பில்‌ விசாரணைகளின்போது சேகரிக்கப்பட்ட சாட்சிகளின்‌ வாக்கு மூலங்களின்‌ அடிப்‌படையில்‌ குலாம்‌ ஹுசைனின்‌ இளைய மகன்‌ அலி எதுல்கோட்டேயிலுள்ள அவரது இல்லத்தில்‌ வைத்து இரகசிய பொலிஸாரால்‌ கைது செய்யப்பட்டார்‌.

இரகசிய பொலிஸார்‌ அவரை விசாரணைக்குட்படுத்தினார்கள்‌. விசாரணையின்பின்‌ தந்தையின்‌ சொத்துக்களுக்காக போலி உறுதிப்பத்திரம்‌ தயாரித்து வங்கியொன்றில்‌ அடகு வைத்து அலியினால்‌ கடன்‌ பெறப்பட்டிருந்தது. இது தந்தைக்கு தெரியாமல்‌ இரகசியமாகவே மேற்கொள்ளப்பட்டிருந்தது. சில காலம்‌ கடனுக்கான மாதாந்தக்‌ கட்டணம்‌ வங்கிக்கு செலுத்தப்பட்டபோதும்‌ பின்பு அலி அதிகமாக கடன்‌ பெற்றுக்கொண்டதால்‌ அவரால்‌ வங்கிக்கு செலுத்த வேண்டிய மாதாந்த கடன்‌ தொகையை செலுத்த முடியாமற்போனது. குறிப்பிட்ட வங்கி கடன்தொகை கிரமமாக செலுத்தப்படாமை தொடர்பில்‌ வினவியபோதும்‌ அலி அதற்கு உரிய பதிலை வழங்கவில்லை. இதனையடுத்து வங்கி அலியினால்‌ வங்கிக்கு சமர்ப்பிக்கப்பட்டிருந்த காணி உறுதியை பரிசீலனைக்கு உட்படுத்தியது. பரிசீலனையின்போது குறிப்பிட்ட காணி உறுதி போலியானது என நிரூபணமானது.

துரிதமாக செயற்பட்ட வங்கி அதிகாரிகள்‌ இவ்விவகாரம்‌ தொடர்பில்‌ குலாம்‌ ஹுசைனுக்கு அறிவித்தனர்‌. இது தொடர்பில்‌ கலந்துரையாடுவதற்கு மறுதினம்‌ குலாம்‌ ஹுசைனைச்‌ சந்திப்பதற்கு அவரது காரியாலயத்துக்கு வருகை தரவுள்ளதாகவும்‌ அறிவித்தனர்‌.

இந்த விவகாரம்‌ அலிக்கு தெரியவந்துள்ளது. இதனால்‌ பீதிக்குள்ளான அலி தந்தைக்கு தான்‌ செய்த குற்றம்‌ தெரியவந்துவிடும்‌ எனக்கருதி இதிலிருந்தும்‌ தப்பித்துக்கொள்வதற்கு தனது நண்பரொருவரின்‌ உதவியுடன்‌ தந்தையின்‌ கழுத்தை கழுத்துப்பட்டியினால்‌ இறுக்கி கொலைசெய்துள்ளதாக இரகசியப் பொலிஸார்‌ உறுதி செய்து கொண்டனர்‌.

‘நாங்கள்‌ இந்த நபரின்‌ கொலை தொடர்பில்‌ மேலும்‌ பல விடயங்களை தேடிக்‌ கண்டுபிடித்துக்கொள்ள முடிந்தது. இந்த சந்தேக நபர்‌ தந்தையை கொலை செய்துவிட்டு அவரை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றபோது தந்தையின்‌ உடலில்‌ இரத்தக்கறை இருந்தது. மேலும்‌ இவர்கள்‌ பிரதான இரு வைத்தியசாலைகள்‌ மற்றும்‌ தேசிய வைத்தியசாலையொன்றினையும்‌ கடந்தே தந்தையை நாரஹேன்பிட்டி தனியார்‌ வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளார்கள்‌ அத்தோடு இவரது மரணம்‌ தொடர்பில்‌ நடாத்தப்பட்ட மரண விசாரணையிலும்‌ எமக்கு பலத்த சந்தேகம்‌ இருந்தது.

இரகசியமான முறையில்‌ புதைந்து போவதற்கிருந்த கோடீஸ்வரரின்‌ கொலையை நான்கு வருடங்களாக விசாரணை நடாத்தி அதனுடன்‌ தொடர்புடைய நபரையும்‌ எம்மால்‌ கைது செய்ய முடிந்துள்ளது என சம்பவம்‌ தொடர்பில்‌ வினவியபோது இரகசிய பொலிஸ்‌ சிரேஷ்ட அதிகாரியொருவர்‌ தெரிவித்தார்‌.

கொழும்பு பிரதான நீதிவான்‌ நீதிமன்றில்‌ ஆஜர்‌ செய்யப்பட்ட சந்தேக நபரை விளக்கமறியலில்‌ வைக்க உத்தரவிட்டார்‌.

நன்றி : மெளபிம – சிங்களத்தில்‌: கீர்த்தி மெண்டிஸ்‌ – தமிழில்‌: ஏ.ஆர்‌.ஏ.பரீல்‌ (விடிவெள்ளி 23/9/21)

Check Also

ஹம்தியின் மரணம் குறித்து விரிவான விசாரணை நடத்துக

சிறுநீரக சத்திர சிகிச்சைகளை அடுத்து உயிரிழந்த கொழும்பு கொட்டாஞ்சேனையைச் சேர்ந்த 3 வயதான ஹம்தி பஸ்லிமின் மரணம் தொடர்பில் விரிவான …

Free Visitor Counters Flag Counter