நியூஸிலாந்து பொலிஸாரினால் விடுதலைச் செய்யப்பட்ட ஒருவரே, மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ளார். அவரிடம் ஐ.எஸ். சிந்தனை இருந்திருக்கிறது. ஒவ்வொரு முஸ்லிம்களிடத்திலும் ஐ.எஸ் சிந்தனை இருக்கும். யாரிடம் இருக்கிறது, யாரிடம் இல்லையென கண்டறிய முடியாது எனத் தெரிவித்த பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் அட்மிரர் சரத் வீரசேகர, ஐ.எஸ். சிந்தனை எப்போது வேண்டுமானாலும் வெடிக்கலாம்” என்றார்.
மீண்டுமொரு பயங்கரவாதத் தாக்குதல் நாட்டில் இடம்பெறுமென ஞானசார தேரர் கூறியிருக்கும் கருத்துத் தொடர்பில் அவரிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.
பாராளுமன்றத்தின் நேற்றைய அமர்வின் சபை ஒத்திவைப்பு வேளையில், ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபூர் ரஹ்மானின் கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
ஞானசார தேரரினால் கூறப்பட்ட குழுவைச் சேர்ந்த எவரும் இதுவரையில் கைது செய்யப்படவில்லை. இதனை நாம் ஆழமாக பார்க்க வேண்டும். அல்குரானில் குறிப்பிடப்பட்டுள்ள வசனங்களை மேற்கோள்காட்டியே அவர் தாக்குதல் தொடர்பில் ஊடகம் ஒன்றுக் கருத்துத் தெரிவித்துள்ளார் என்றார்.
தௌஹீத் ஜமாத் அமைப்பால் கடந்த 2015ஆம் ஆண்டு சிங்கள மொழியில் மொழிப்பெயர்ப்பு செய்யப்பட்ட அல்குரானில் கொலை, சூழ்ச்சி, திட்டமிடல் தொடர்பில் கூறப்பட்டுள்ள விடயங்கள் தவறென எந்தவொரு முஸ்லிம் தலைவர்களும் இதுவரையில் கூறவில்லை எனவும் அமைச்சர் தெரிவித்தார்.
வஹாப் வாதம், இஸ்லாமிய இராஜ்ஜியம் ஆகியனவே இறுதியில் பயங்கரவாதமாக மாறுகிறது. இஸ்லாமிய இராஜ்ஜியம் என்பது ஒரு கொள்கையாக இருக்கிறது. இது நபர்களின் மூளையிலேயே உள்ளது. இந்த கொள்கைளை கொண்டவர்கள் யார் என்பது இனங்காண முடியாது. இதனால் இவர்களை கைது செய்வதில் சிரமம்.
இந்த கொள்கையை கொண்ட பலர் நாட்டில் இருக்கலாம். இதுபோன்ற கொள்கைகளை போசிக்கும் விடயங்கள் மத புத்தகங்களில் இருந்தால் அவற்றை நீக்க வேண்டும் எனவும் அவர்
தெரிவித்தார்.
ஒரேநாடு ஒரே சட்டம் என்றால் ஒவ்வொரு மதத்துக்கும் ஒவ்வொரு சட்டம் நாட்டில் இருக்க முடியாது. உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலுக்குப் பின்னர் வஹாப், ஐ.எஸ் போன்ற கொள்கைகளை பின்பற்றுபவர்களே தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் எனவும் அவர் தெரிவித்தார்.
ஷங்கிரில்லா ஹோட்டலில் தாக்குதலை நடத்தியவர்கள் இருவரும் வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்பை முடித்தவர்கள். இவர்கள் போன்றவர்களே 72 கண்ணிகள் போன்ற கதைகளை நம்பி ஐ.எஸ் கொள்கைகளில் ஈர்க்கப்பட்டார்கள் என்றால், சாதாரண முஸ்லிம் இளைஞர்கள் இந்த கொள்கைகளுக்கு ஈர்ப்பது அவ்வளவு சிரமமானதல்ல எனவும் அமைச்சர் கூறினார்.
அடிப்படை வாதிகள் தொடர்பில் முதலில் மக்களை தெளிவுப்படுத்தியது ஞானசார தேரரே. எனினும் அவரை இனவாதி என குற்றம் சுமத்துகிறார்கள். பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பில் நாட்டு மக்களுக்கு அறிவித்த ஞானசார தேரருக்கு தான் நன்றிகளை சொல்வதாகவும் அவர் இதன்போது தெரிவித்தார். -தமிழ் மிற்றோர்– பா.நிரோஸ்