2020 ஆம் ஆண்டு ஆரம்பம் முதல் இன்றுவரை இலங்கையில் ஆட்டம் காட்டும் கொரோனாவினால் இலங்கையின் பொருளாதாரம் மட்டுமன்றி ஒவ்வொரு இலங்கையர்களின் வாழ்வாதாரமும் அடியோடு ஆடிப் போயுள்ளது. கொரோனாவின் விளைவால் நாட்டில் அமுல்படுத்தப்படும் முடக்கங்களினால் பொருளாதாரம் முடங்கிப்போனதால் அத்தியாவசியப் பொருட்களுக்கு பெரும் தட்டுப்பாடுகள் ஏற்பட்டு அவற்றுக்கான கொள்வனவு வரிசைகளும் மக்கள் அத்தியாவசிய பொருட்களைத் தேடி அலையும் நிலையும் அதிகரித்து வருகின்றன. அரசிடமும் பணம் இல்லை, மக்களிடமும் பணம் இல்லை. நாட்டில் அத்தியாவசியப் பொருட்களும் இல்லையென்ற நிலையில் நாடு வெறுமையாகி வருகின்றது. இதனால் நாட்டில் விரைவில் பட்டினி நிலைமை ஏற்படுமென்ற எச்சரிக்கைகளும் விடப்பட்டுள்ளன.
இவ்வாறான நிலையில் அண்மையில் அத்தியாவசியமற்ற, அவசரமற்ற பொருட்களென 623 பொருட்களை பட்டியலிட்டு அவற்றுக்கான இறக்குமதிக்கு 100 வீத வைப்புத்தொகை அவசியம் என மத்தியவங்கி வெளியிட்ட அறிவிப்பினால் மக்கள் மேலும் குழப்ப நிலை அடைந்துள்ளனர். 623 பொருட்களின் இறக்குமதிக்கு அரசு தடை விதித்துவிட்டதாகவே மத்திய வங்கியின் அறிவிப்பை பலரும் பார்க்கின்றனர்.அத்துடன் இந்த பொருட்களின் விலைகளும் 15000 ரூபா முதல் ஒரு இலட்சம் ரூபா வரை அதிகரிக்குமென வெளிவரும் தகவல்களினால் நாட்டில் பெரும் அதிர்வலைகள் ஏற்பட்டுள்ளதுடன் 100 வீத வைப்புத் தொகை அறிவிப்பினால் இறக்குமதியாளர்கள் பலரும் கதிகலங்கிப் போயுள்ளனர்.
எனவே அத்தியாவசியமற்ற,அவசரமற்ற பொருட்களென 623 பொருட்களை பட்டியலிட்டு அவற்றுக்கான இறக்குமதிக்கு 100 வீத வைப்புத்தொகை அவசியம் என மத்தியவங்கி வெளியிட்ட அறிவிப்பு இந்த பொருட்களின் இறக்குமதி மீதான தடையா அல்லது இவற்றை இறக்குமதி செய்வதை தவிர்க்க வைக்கும் நடவடிக்கையா அல்லது அந்நிய செலாவணியை பாதுகாக்கும் திட்டமா என்பது தொடர்பில் பார்ப்போம்.
இலங்கை மத்திய வங்கி கடந்த 9 ஆம் திகதி அறிவிப்பொன்றை வெளியிட்டது. அதில், உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகளுடனான மற்றும் தேசிய சேமிப்பு வங்கியுடனான நாணயக்கடிதங்களின் அத்துடன் ஏற்றுக்கொள்ளல் நியதிகளுக்கெதிரான ஆவணங்களின் கீழ் மேற்கொள்ளப்படுகின்ற தெரிவு செய்யப்பட்ட அத்தியாவசியமற்ற,அவசரமற்ற பொருட்களின் இறக்குமதிக்கெதிரான வைப்பு எல்லை தேவைப்பாடு இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபை 2021 செப்டெம்பர் 8 அன்று இடம் பெற்ற அதன் கூட்டத்தில் உடனடியாகச் செயற்படும் வகையில் உரிமம் பெற்ற வர்த்தக வங்கிகளுடனான மற்றும் தேசிய சேமிப்பு வங்கியுடனான நாணயக் கடிதங்களின் அத்துடன் ஏற்றுக்கொள்ளல் நியதிகளுக்கெதிரான ஆவணங்களின் கீழ் மேற்கொள்ளப்படுகின்ற தெரிவுசெய்யப்பட்ட அத்தியாவசியமற்ற, அவசரமற்ற பொருட்களின் இறக்குமதிக்கெதிராக 100 சத வீத காசு எல்லை வைப்புத் தேவைப் பாட்டினை விதிப்பதற்கு மத்திய வங்கி தீர்மானித்துள்ளது.
காசு எல்லை வைப்புத் தேவைப்பாட்டினை விதிப்பதற்கான தீர்மானம் குறிப்பாக ஊக வியாபாரத் தன்மையிலான மிதமிஞ்சிய இறக்குமதிகளை ஊக்கமிழக்கச்செய்வதன் வாயிலாக செலாவணி வீத உறுதிப்பாட்டினையும்; வெளிநாட்டு நாணயச் சந்தை திரவத் தன்மையினையும் பாதுகாப்பதற்காக முன்னெடுக்கப்படும் முயற்சிகளுக்குத் துணையளிக்குமென எதிர்பார்க்கப்படுகின்றது. காசு எல்லை வைப்புத் தேவைப்பாடுகளுக்கு உட்படுத் தப்பட்டுள்ள உற்பத்தி வகைகளின் தொகுப்பு2019,2020 மற்றும் 2021 இன் இது வரையிலும் (தற் காலிகமானவை) ஒவ்வொரு வகையின் கீழுமான இறக்குமதிச் செலவினம் பற்றிய தகவல்களுடன் சேர்த்து கீழேயுள்ள அட்டவணையில் தரப்பட்டுள்ளது.
1 தொலைத்தொடர்புச் சாதனங்கள் (செல்லிடத் தொலைபேசிகள் மற்றும் நிலையான தொலைபேசிகள் போன்றவை)
2 வீட்டுச் சõதனங்கள் (மின் விசிறிகள்,தொலைக்காட்சிப் பெட்டிகள், குளிர்சாதனப்பெட்டிகள், சலவை இயந்திரங்கள், டிஜிட்டல் புகைப்படக் கருவிகள், தலைமுடிக் கௌவிகள், சூடாக்கிகள், விளக்குகள், அனல் அடுப்பு போன்றவை)
3 அணியும் ஆடை மற்றும் துணைப் பொருட்கள்(குழந்தைகளுக்கான ஆடைகள், உள்ளாடை, விளையாட்டு உடைகள், இரவு ஆடைகள் மற்றும் பிஜாமாக்கள், மேலங்கிகள், சேட் மற்றும் பிளவுஸ்,முழு உடை,விளையாட்டுக்கு அணியும் உடை மற்றும் நீச்சலுடை, ரிசேர்ட், பாதணி, மணிக்கூடுகள், வெயிலுக்கு அணியும் கண்ணாடி மற்றும் ஏனைய துணைப் பொருட்கள் போன்றவை)
4 வீட்டு மற்றும் தளபாடப் பொருட்கள் (தளபாடம் ,விளக்குகள் மற்றும் விளக்குப் பொருத்துகள்,அலங்காரப் பொருட்கள்,மேசைப்பொருட்கள் மற்றும சமையலறைப் பொருட்கள் கட்டில் விரிப்புகள் போன்றவை)
5 இறப்பர் ரயர்கள்
6 வாயுச் சீராக்கிகள்
7 பழவர்க்கங்கள் (உடன் அப்பிள், திராட்சை, தோடம் பழம் மற்றும் உலர்த்திய பழங்கள், பழரசங்கள் போன்றவை)
8 ஒப்பனைப் பொருட்கள் மற்றும் மலசலகூடப்பொருட்கள் (வாசனைப் பொருட்கள், ஒப்பனைத் தயார்படுத்தல்கள் போன்றவை)
9 குடிவகைகள் (பியர், வையின், கனிமக் குடிநீர்மற்றும் ஏனைய குடிவகைள் போன்றவை)
10 ஏனைய உணவு மற்றும் குடிவகைகள் (தானியத் தயார்படுத்தல்கள், மாவுச் சேர்க்கை, சொக்லேட், முளைத் தானியம் ,மீன் துண்டங்கள், பாலாடைக்கட்டி, வெண்ணெய் போன்றவை)
11 ஏனைய உணவல்லா நுகர்வுப் பொருட்கள் (இசைச்சாதனங்கள், புகையிலைப் பொருட்கள், விளையாட்டுப் பொருட்கள், காகிதாதிகள்போன்றவை)
என 11 பிரிவுகளுக்குள் 623 வகையான பொருட்களை உள்ளடக்கி 100 வீத வைப்புத் தொகை அறிவிப்பை மத்திய வங்கி வெளியிட்டது.
அத்துடன் இதில் 1 ஆம் பிரிவுக்குள் அடங்கும் பொருட்களுக்கு 2021 ஆம் வருடம் ஜூலை மாதம் வரை 250.3 மில்லியன் டொலர்களும் அதேபோன்று 2 ஆம் பிரிவுக்கு 160.6 மில்லியன் டொலர்களும் 3 ஆம் பிரிவுக்கு 102.3 மில்லியன் டொலர்களும் 4 ஆம் பிரிவுக்கு 63.8 மில்லியன் டொலர்களும்5 ஆம் பிரிவுக்கு 40.1மில்லியன் டொலர்களும் 6 ஆம் பிரிவுக்கு 34.4 மில்லியன் டொலர்களும் 7 ஆம் பிரிவுக்கு 33.6 மில்லியன் டொலர்களும் 8 ஆம் பிரிவுக்கு 19.9 மில்லியன் டொலர்களும் 9 ஆம் பிரிவுக்கு11.8 மில்லியன் டொலர்களும் 10 ஆம் பிரிவுக்கு 26.5 மில்லியன் டொலர்களும் 11 ஆம் பிரிவுக்கு 10.1மில்லியன் டொலர்களுமாக மொத்தம் 753.4 மில்லியன் டொலர்கள் இறக்குமதி பெறுமதிகளாக உள்ளதாகவும் மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.
இது 2019 ஆம் ஆண்டு 1057.9 மில்லியன் டொலர்களாகவும் 2020 ஆம் ஆண்டு 871.2மில்லியன் டொலர்களாகவும் இறக்குமதி பெறுமதியாக இருந்த நிலையில் 2021 ஆம் ஆண்டின் முதல் 7 மாதங்களில் மட்டும் 753.4 மில்லியன் டொலர்கள் இறக்குமதி பெறுமதியை எட்டிய நிலையிலேயே மத்திய வங்கி 100 வீத வைப்புத்தொகை அறிவிப்பை வெளியிட்டது. இந்த 100 வீத வைப்புத்தொகை தொடர்பில் இறக்குமதியாளர்களுக்கு பூரண தெளிவு இருந்த போதும் மக்களே இதனால் பெரும் குழப்பமடைந்தனர். எனவே இந்த 100 வீத இறக்குமதி வைப்புத் தொகை என்றால் என்னவெனப் பார்ப்போம்.
வெளிநாடுகளிலிருந்து பொருட்களை இறக்குமதி செய்வதற்கு இரண்டு வகையான வழிமுறைகள் உள்ளன. ஒன்று தவணைக்கால நாணயக்கடிதம் எல்.சி அடுத்தது சைற் எல். சி இதில் சைற் எல்.சி என்பது தான் இப்போது அரசாங்கம் நூறு வீத பண வைப்புக்கு எதிராக திறக்குமாறு கூறும் எல்.சி இம்முறை தான் அநேகமாக நமது மக்கள் கார் பேமிட்டுக்கு கார் இறக்குமதி செய்யும் போது திறக்கின்ற எல்.சி இது 100 வீத பண வைப்புக்கு எதிராக வழங்கப்படுவதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. அதில் பிரதானமானவையாக இரண்டு விடயங்களை கூறலாம்
இது ஒரு முறை கொடுக்கல் வாங்கல் என்பதாலும், ஏற்றுமதியாளனும் இறக்குமதியாளனும் அறிமுகமற்றவர்கள் என்பதனால் கொடுப்பனவிற்கான பாதுகாப்பு அல்லது உத்தரவாதம் என்பதனை மையப்படுத்தியே இம் முறையிலான எல்.சி வழங்கப்படுவது வழக்கம்.
இம் முறையிலான நூறு வீத பணத்தினை வைப்பிலிட்டு எல்.சி ஒன்றினை அடிக்கடி திறப்பதென்பது ஒரு ஏற்றுமதி இறக்குமதி வியாபாரத்தில் ஈடுபடும் ஒரு வியாபாரிக்கு ச õத்தியமற்ற விடயம். ஏனெனில், கையிலுள்ள பணம் முழுவதனையும் வைப்பிலிட்டு எல்.சி திறந்தால், பொருட்கள் கப்பலில் ஏற்றப்பட்டு அது நாட்டுக்கு வந்து சுங்கத் திணைக்களத்திலிருந்து விடுவித்து வெளியில் எடுத்து அப் பொருட்களை விற்று பணமாக்கும் வரைக்கும் அவர் காசைக் காண முடியாது. இந்த பொறி முறைக்கு சுமார் ஆறு மாதங்களாவது செல்லும். அப்படியானால், வருடத்திற்கு இரண்டு முறை மட்டுமே அவர் இறக்குமதி நடவடிக்கையில் ஈடுபடலாம்.
ஆனால் இரண்டாவது முறையான உபயோக எல்.சி என்பது, பணத்தினை நூறு வீதம் வைப்பிலிடாது வங்கியினால் ஏற்றுக் கொள்ளக்கூடிய ஏதாவது ஒரு பிணையினை சமர்ப்பிப்பதன் மூலம் பெற்றுக் கொள்ளப்படும் எல்.சி யாகும். இங்கு உபயோக எல்.சி க்கான கொடுப்பனவானது பொருட்களை விற்றுத்தீர்த்த பின் காலக்கிரமத்தில் செலுத்தப்படும் என வங்கியும் இறக்குமதியாளரும் செய்து கொள்ளும் உடன் படிக்கையின் பின்னர் ஆவணங்கள் விடுவிக்கப்பட்டு பொருள் நாட்டுக்குள் கொண்டு வரப்படும்.
இதுவே இறக்குமதியாளர்களுக்கு சாதகமான முறையாகும். ஏனெனில், தொடர்ச்சியாக இறக்குமதி செய்யும் நபர் ஒருவர் ஏதாவதொரு பிணையினை நிரந்தரமாக வங்கிக்கு வழங்குவதன் மூலமாகமீண்டும் மீண்டும் தொடர்ந்தும் உபயோக எல்.சி யினை பெற்றுக் கொள்ள முடியும். இங்கு வங்கிகள் தரகுக் கட்டணங்களை மட்டுமே இவ்வசதிக்கு பெற்றுக் கொள்வதனால், நிதிச் செலவு என்பது மிகவும் குறைவு. ஆனால் சை ற் எல். சி யி ல் நூறு வீத பணவைப்பு தேவை யென்பதனால் இறக்குமதியாளர் நிதி வசதிகளை நாட வேண்டி இருப்பதனால், இங்கு நிதிச் செலவு என்பது அதிகமாகவும் எல்லோருக்கும் சாத்தியமற்றதாகவும் உள்ளது.
இதுவரை காலமும் தமது வங்கியுடன் நல்லுறவைக் கட்டியெழுப்பியுள்ள இறக்குமதியாளர்கள் தாம் இறக்குமதி செய்ய எதிர்பார்க்கும் பொருட்களின் மொத்தப் பெறுமதியில் 50 சதவீதத்தை, 30 சதவீதத்தை போன்ற பகுதியளவு தொகையை வைப்புச் செய்தே ஆறு மாத காலப்பகுதிக்கு (180 நாட்களுக்கு) நாணயக் கடிதத்தை எல். சி வழங்கி இறக்குமதியில் ஈடுபட்டனர். ஆனால் தற்போது வெளியாகியிருந்த மத்திய வங்கியின் அறிவிபின் பிரகாரம் தற்போது இந்த முறைமை இல்லாமல் செய்யப்பட்டுள்ளதால், இறக்குமதியாளர்கள் மொத்தத் தொகையையும் வேறொரு வழியில் திரட்ட வேண்டியிருக்கும். இதனால் இறக்குமதியாளருக்கு தாம் வெளியே கடனாக பெறும் தொகைக்கு வட்டி செலுத்த வேண்டி ஏற்படும்.
சாதாரணமாக விளங்கக்கூடியவாறு கூறுவதானால். ஒரு இறக்குமதியாளர் வெளிநாடொன்றிலிருந்து 100 கோடி ரூபாவுக்கு பொருட்களை இறக்குமதி செய்ய விரும்பினால் குறிப்பிட்டதொரு வங்கியினூடாக நாணயக்கடிதத்தை வழங்கி தனது சொந்தப்பணத்தை செலுத்தாது வங்கி மூலம் அந்த 100 கோடி ரூபா பணத்தைதான் இற க்குமதி செய்யும் வெளிநாட்டில் உள்ள நிறுவனத்துக்கு செலுத்தி தான் விரும்பும் பொருளை இறக்குமதி செய்து அதனை இலங்கையில் விற்பனை செய்த பின்னர் அந்த பணத்தை எடுத்து தான் நாணயக்கடிதம் கொடுத்த வங்கிக்கு செலுத்தி தனது கடனை அடைப் பார். இதன்போது வங்கிக்கு இறக்குமதியாளர் ஒரு குறிப்பிட்ட சிறு தொகை தரகுப்பணத்தை செலுத்த வேண்டியேற்படும். பெரும் செல்வாக்கு மிக்க இற க்குமதியாளர்கள் என்றால் அவர்கள் இவ்வாறு வங்கியை நாடாது தமது சொந்தப்பணத்தின் மூலம் வெளிநாடுகளிலிருந்து தேவையான பொருட்களை நேரடியாக இறக்குமதி செய்ய முடியும்.
ஆனால் இப்போது மத்திய வங்கி விடுத்துள்ள அறிவிப்பின்படி, அந்த இறக்குமதியாளர் 100 கோடி ரூபாவுக்கு பொருளை இறக்குமதி செய்ய விரும்பினால் நாணயக்கடிதத்துக்கு பதிலாக அந்த 100 கோடி ரூபாவையும் வங்கியில் வைப்பிலிட வேண்டும். வங்கி இவர் இறக்குமதி செய்யும் வெளிநாட்டிலுள்ள நிறுவனத்துக்கு உத்தரவாதத்தை வழங்கும். ஆனால் சாதாரண இறக்குமதியாளர்களினால் இவ்வாறு 100 வீத வைப்பை செய்ய முடியாது. அவ்வாறு அவர் வெளியில் யாரிடமாவது கடன்பட்டு வைப்பை செய்வதானால் அவர் வெளி நபருக்கு பெரும் வட்டி தொகையை செலுத்த வேண்டி ஏற்படும். அத்துடன் இந்த அறிவிப்பின் மூலம் ஒரு இறக்குமதியாளர் ஒரு வருடத்தில் 12 தட வைகள் முன்னர் இறக்குமதி செய்திருந்தால் இனிமேல் 100 வீத வைப்பை செலுத்தி ஒரு வருடத்தில் அவரால் 1 அல்லது 2 தடவை மட்டுமே இறக்குமதி செய்ய முடியும். இதனால், இறக்குமதி செய்யும் பொருட்களின் அளவு தானாக குறைவ டையும். அரசும் இதனை எதிர்பார்த்தே 100 வீத வைப்புத் தொகை அறிவிப்பை வெளியிட்டுள்ளது .இந்த அறிவிப்பு 623 இறக்குமதிப் பொருட்களுக்கான தடை அல்ல. இறக்குமதி குறைப்பு மட்டுமே. ஆனால் இந்த இறக்குமதிக் குறைப்பால் குறிப்பிட்ட பொருட்களுக்கான தட்டுப்பாடும், விலை அதிகரிப்பும் தவிர்க்க முடியாததாகவே இருக்கும்.
நாட்டுக்கு தற்போதைய அத்தியாவசிய மருந்துப் பொருட்கள், எரிபொருள், உணவுப் பொருட்கள் இறக்குமதிக்குக்கூட செலுத்துவதற்கு போதியளவு அந்நியச் செலாவணி இருப்பில் இல்லை. இவ்வாறான நிலையில் ஆடம்பரப்பொருட்களுக்கென பெருமளவு அந்நியச் செலாவணி. வெளிச் செல்கின்றது. அதனாலேயே இவ்வாறான அத்தியாவசியமற்ற, அவசரமற்ற 623 பொருட்களுக்கான இறக்குமதிக்கு 100 வீத வைப்பு என்ற அறிவிப்பு மூலம் அரசு அந்நிய செலாவணி வெளிச் செல்வதனை தடுக்க ராசு முனைகின்றதே தவிர இறக்குமதிக்குத் தடை விதிப்பது அரசின் நோக்கமல்ல.
இது தொடர்பில் இலத்திரனியல் பொருட்கள் இறக்குமதி செய்யும் நிறுவனங்களின் உறுப்பினரும் இறக்குமதியாளருமான ஒருவர் விளக்கமளிக்கையில், இறக்குமதிக்கான உத்தரவாத தொகை அதிகரிக்கப்பட்டுள்ளதால் சாதாரண இறக்குமதியாளர்களே அதிகம் பாதிக்கப்படப்போகின்றனர். உத்தரவாத தொகையை முழுமையாக செலுத்த முடியாத நிலை ஏற்படும்போது அவர்கள் இறக்குமதி செய்வதை நிறுத்திக்கொள்வார்கள். அதனால் அவர்களின் தொழிலுக்கு பாதிப்பு ஏற்படும் . அதே போன்று அவர்கள் உத்தரவாத தொகையை முழுமையாக செலுத்தி, நம்பிக்கையுடன் பொருட்களை இறக்குமதி செய்யவும் முடியாத நிலையே இருக்கின்றது.
ஏனெனில் புதிதாக இறக்குமதி செய்யப்படும் அனைத்து பொருட்களின் விலையும் பாரியளவில் அதிகரிக்கப்படும். அவ்வாறான நிலையில் சாதாரண மக்கள் தங்களின் தேவைக்காக சாதாரணமாக கொள்வனவு செய்துவரும் பொருட்களை விலை அதிகரிப்பு காரணமாக அவர்கள் கொள்வனவு செய்வதற்கு பின்வாங்குவார்கள். அதனால் இறக்குமதியை குறைக்கவேண்டிய நிலை ஏற்படுகின்றது.
எம்மை பொறுத்தவரை நாங்கள் இலத்திரனியல் பொருட்களை இறக்குமதி செய்பவர்கள். குறிப்பாக கையடக்க தொலைபேசி, குளிர்சாதன பெட்டி, புடவை சலவை இயந்திரம் (வொஷிங் மெஷின்) மின் விசிறி போன்ற மின் உபகரணங்களை இறக்குமதி செய்துவருகின்றோம். அரசாங்கம் உத்தரவாத தொகையை அதிகரிப்பு செய்து மறுதினமே இந்த பொருட்களுக்கான விலையை அதிகமான நிறுவனங்கள் அதிகரித்திருக்கின்றன. என்றாலும் எமது நிறுவனங்கள் இதுவரை விலை அதிகரிப்பை மேற்கொள்ளவில்லை. கையிருப்பில் இருக்கும் பொருட்களை எமது நுகர்வோருக்கு தற்போது இருக்கும் விலைக்கே விநியோகித்து வருகின்றோம். என்றாலும் டொலரின் விலை அதிகரித்திருப்பதால் தொடர்ந்து அதனை செய்ய முடியாது. குறிப்பாக சாதாரண வொஷிங் மெஷினை 25ஆயிரம் தொடக்கம் 30ஆயிரம் வரையே விற்பனை செய்து வருகின்றோம். ஆனால் டொலரின் விலை அதிகரிப்பால் தற்போது 35ஆயிரத்துக்கு குறைவாக விற்பனை செய்ய முடியாத நிலை ஏற்பட்டிருக்கின்றது. இவ்வாறான நிலையில் அரசாங்கத்தின் உத்தரவாத தொகை அதிகரிப்பு காரணமாக புதிதாக இறக்குமதி செய்யப்படும் சாதாரண வொஷிங் மெஷின் 45ஆயிரம் ரூபாவரை அதிகரிக்கும் சாத்தியம் இருக்கின்றது. அத்துடன் புதிதாக இறக்குமதி செய்யப்படும் அனைத்து வகையான இலத்திரனியல் பொருட்களின் விலைகளும் அதிகரிக்கப்படுவதற்கான வாய்ப்பு இருக்கின்றது. ஆகக்குறைந்தது 15ஆயிரம் ரூபாவரை அதிகரிக்கும்
மேலும் கையடக்க தொலைபேசிகளின் விலையும் பாரியளவில் அதிகரிக்கும் சாத்தியம் இருக்கின்றது. அதிகமான தொலை பேசி விற்பனை நிலையங்களில் தற்போது கையடக்க தொலைபேசிகளின் விலை அதிகரிக்கப்பட்டிருக்கின்றது. விசேடமாக பெறுமதி வாய்ந்த ஐபோன் வகை கையடக்க தொலைபேசி தற்போது 2இலட்சம் ரூபாவரையே விற்பனையாகி வருகின்றது. ஆனால் புதிதாக இறக்குமதி செய்யப்படும் அந்தவகையான ஐபோன்கள் மேலும் 2இலட்சம் முதல் இரண்டரை இலட்சம் வரை விலை அதிகரிக்கப்படும் சாத்தியம் இருக்கின்றது.
அதேபானே“று எதிர்வரும் 19ஆம் திகதிக்கு பிறகு ஏனைய கையடக்க தொலைபேசிகள் அதன் பெறுமதிக்கேற்ப தற்போது இருக்கும் விலையில் இருந்து 5வீதம் வரை அதிகரிப்பதற்கு எமது சங்கம் நடவடிக்கை எடுத்து வருகின்றது என்றார்.
இதேவேளை இந்த 623 பொருட்களில் கையடக்க தொலைபேசிகள், தொலைக்காட்சிப்பெட்டிகள் மாறும் சிலைளைத்திறனால் பொருட்களில் வெளிநாடுகளிலிருந்து வருவோர் கொண்டுவரமுடியாது எனவும் அவ்வாறு கொண்டு வரப்படும் பொருட்களுக்கு அதிக வரி அறவிடப்படுமெனவும் மக்கள் மத்தியில் கருத்துக்கள் பரிமாறப்படுகின்றன. இது தொடர்பில் நிதி அமைச்சின் செயலாளர் எஸ்.ஆர்.ஆட்டிகல கூறுகையில்,
இலங்கை மத்திய வங்கியினால் 623 பொருட்கள் இறக்குமதி செய்வதற்கு நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன . இதனை சில நபர்கள் தவறாக புரிந்து கொண்டுள்ளதாக சிலர் வெளியிடும் கருத்துக்களின் மூலம் தெரியவருகின்றது. வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் தாங்கள் மீண்டும் நாட்டிற்கு வரும் போது முன்பு போன்று டொபி, சொக்லேட் ,கையடக்க தொலைபேசிகள், தொலைக்காட்சி போன்ற இயந்திரங்களும் கொண்டுவர முடியாதா எனக் கேட்கின்றனர். இது போன்ற பல்வேறு கேள்விகளை சமூக வலைத்தளங்களில் காண முடிகின்றது. வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு கொண்டு வரப்படும் இவ்வாறான பொருட்களுக்காக முன்னர் காணப்பட்ட நடைமுறைகளை தவிர்த்து வேறு எவ்வித தடைகளும் வரிகளும் விதிக்கப்பட வில்லை என்றார்