சிறைச்சாலைகள் முகாமைத்இரத்தினக்கல் தொழிற்துறை இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தை அவரது சிறைச்சாலைகள் முகாமைத்துவம் புனர்வாழ்வு இராஜாங்க அமைச்சுப் பொறுப்புகளிலிருந்து விலகி கொண்டுள்ளார். கடந்த வாரம் இரவு வேளையில் கொழும்பு, வெலிக்கடை சிறைக்குள் ஒரு குழுவினருடன் மதுபோதையில் சென்று தகாத முறையில் நடந்து கொண்டதாகவும் அதேபோன்று ஹெலிகொப்டரில் அநுராதபுரம் சிறைச்சாலைக்கு சென்று தகாத முறையில் நடந்து கொண்டதாகவும் அங்கிருந்த சில தமிழ் அரசியல் கைதிகளை துன்புறுத்தியதுடன் கைத்துப்பாக்கியைக் கொண்டு அவர்களை குறி வைத்து கொலை மிரட்டல் செய்ததாகவும் முன்வைக்கப்பட்ட சõட்டுதல்கள், அழுத்தங்களை அடுத்து அவரது சிறைச்சாலைகள் தொடர்புடைய அமைச்சுப் பொறுப்பை இராஜினாமா செய்துள்ளார்.
ஆனால் அவர் இரத்தினக்கல் தொழில்துறையுடன் தொடர்புடைய அவரது இராஜாங்க அமைச்சுப் பதவியை துறக்கவில்லை. அவர் அந்த இராஜாங்க அமைச்சுப் பதவியையும் துறக்க வேண்டுமென்பதுடன், அவர் சிறைச்சாலைகள் கட்டளைகள் சட்டத்திற்கு முரணான வகையில் அச்சட்டத்தில் அனுமதிக்கப்பட்டிருக்காத இரவு நேரத்தில் அனுமதிக்கப்படாதவர்களுடன் மதுபோதையில் வெலிக்கடை அநுராதபுரம் சிறைகளுக்குள் சென்றதுடன், அங்கு தகாத முறையில் நடந்து கொண்டதுடன், தமிழ் அரசியல் கைதிகளை அச்சுறுத்தியதால் அவரை கைது செய்து அவருக்கு எதிராக சட்ட, நீதிமன்ற நடவடிக்கைகளை எடுக்க வேண்டு மென்று அரசியல் கட்சிகளும், சிவில் அமைப்புகளும் கோரிக்கை விடுத்துள்ளன. அவர் அமைச்சுப் பதவியில் இருக்கக் கூடாது என்று கூறியுள்ள இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் அவர் மீது சட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளது.
அவர் மீது சாட்டப்பட்டுள்ள நடவடிக்கைகள் சட்டவாட்சிக்கு சவாலானது மட்டுமன்றி நீதிமன்றத்தின் கட்டுக்காவலில் சிறைகளில் இருக்கும் கைதிகளின் பாதுகாப்பிற்கும் உரிமை களுக்கும் பங்கம் விளைவிக்கக் கூடியதென சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இச்சாட்டுதல்களை லொஹான் ரத்வத்தை மறுத்துரைத்துள்ளார். அவர் அமைச்சு பதவியேற்ற பிறகு சிறைச்சாலைகளில் போதைவஸ்து வியாபாரம், கையடக்க தொலைபேசி பாவிப்பு. திட்டமிட்ட குற்றச் செயல்கள் போன்றவற்றை கட்டுப்படுத்தியுள்ளதாகவும் தான் சிறைச்சாலைகளில் தகாத முறையில் நடந்து கொள்ளவில்லை என்றும் குறிப்பாக தமிழ் அரசியல் கைதிகளை அச்சுறுத்தவோ துன்புறுத்தவோ இல்லையென்றும் கூறியுள்ளார். தான் பெண்களுடனோ வேறு ஆட்களுடனோ சிறைகளுக்குள் செல்லவில்லையெனறும் தனது வழமையான கண்காணிப்பின் நிமித்தமே வெலிக்கடை அநுராதபுரம் சிறைகளுக்குகுறிப்பிட்ட நாட்களில் சென்றிருந்ததாகவும் கூறியுள்ளதுடன், தான் சிறைச்சாலைகளுக்கு பொறுப்பான அமைச்சர் என்ற வகையில் சிறைகளுக்குள் எந்த நேரத்திலும் செல்ல முடியும் என்றும் அதற்காக எவருடைய அனுமதியும் தனக்கு தேவை இல்லையென்றும் கூறியுள்ளார்.
லொஹான் ரத்வத்தைக்கு எதிரான சõட்டுதல்கள் குறித்து முறைப்பாடுகள் செய்யப்படாததால் எவ்வித நடவடிக்கையை எடுக்க முடியாது என சட்டம் ஒழுங்குகள் அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். ஆனால் கைதிகளின் உரிமைகளை பாதுகாப்பதற்கான குழு குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் பொதுமக்கள் நலன்சார்ந்த முறைப்பாடொன்றை செய்திருப்பதாக அறிய முடிகிறது. சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துசார உப்புல் தெனியவும் சிறைச்சாலை ஆணையாளரும் பேச்சாளருமான சந்திரா ஏக்கநாயக்கவும் லொஹான் ரத்வத்தை மீதுள்ள சாட்டுதல்கள் குறித்து எவ்வித பதிவுகளும் இடம்பெறவில்லை என்று கூறியிருப்பதாக அறிய முடிகிறது.
லொஹான் ரத்வத்தை குறிப்பிட்ட தினங்களில் இரவு வேளைகளில் வெலிக்கடை, அநுராதபுரம் சிறைகளுக்கு சென்றிருந்தாரா வேறு ஆட்களுடன் சென்றிருந்தாரா அங்கு என்ன நிலைமையில் சென்றிருந்தார் என்பதை அறிய சிறைச்சாலைகளில் சி.சி.ரி.வி. பதிவுகள் இருக்குமாயின் அறிந்து கொள்ள முடியும். அத்துடன் அவ்வேளையில் கடமையில் இருந்த சிறைச்சாலை அலுவலர்கள், அதிகாரிகளிடமிருந்தும் மற்றும் அவ் விஜயம் பற்றி அறிந்திருந்த கைதிகளிடமிருந்தும் அவர்கள் உண்மை சொல்வார்களாயின் நடந்தவற்றை அறிந்து கொள்ள முடியும். அதற்கு அப்பால் புலனாய்வு நடவடிக்கைகள் சரியாக நடக்குமாயின் உண்மைநடப்புகளை அறிந்துகொள்ள முடியும். அதே லொஹான் ரத்வத்தைக்கு எதிராக முறைப்பாடுகள் செய்யப்படுமாயின் புலனாய்வு நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியுமென பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி நிஹால் தல்துவ குறிப்பிட்டுள்ளார்.
தற்போது சிறைக்கைதிகளின் உரிமைகளை பாதுகாப்பதற்கான குழுவின் பொதுநலன் முறைப்பாடு கிடைக்கப்பெற்றிருக்க வேண்டும். அத்துடன் குறிப்பிட்ட தினத்திலும், நேரத்திலும் கடமையில் இருந்த சிறைச்சாலை அலுவலர்கள், அதிகாரிகளின் வாக்குமூலங்களை பெற்றால் அவற்றை முறைப்பாடுகளாகக் கொள்ளலாம். துன்புறுத்தல்களுக்கும் அச்சுறுத்தல்களுக்கும் உட்பட்டதாக கூறப்படும் கைதிகளின் வாக்குமூலத்தை பெற்றும் அவற்றை முறைப்பாடுகளாகக் கொள்ளலாம்.
லொஹான் குறிப்பிடுவதுபோன்று சிறைச்சாலைகள் அமைச்சர் என்ற வகையில் அவர் மட்டுமல்ல, பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் உயர் நீதிமன்ற மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்கள் மேல், மாவட்ட நீதிபதிகள், நீதிவான்கள், நீதிமன்றங்களால் அனுமதியளிக்கப்பட்டவர்கள், இலங்கையின் மனித உரிமைகள் ஆணைக்குழு உறுப்பினர்கள் அதனால் அதிகாரமளிக்கப்பட்டவர்கள் மேற்பார்வை செய்யவும், விசாரணைகளை மேற்கொள்ளவும் சிறைச்சாலைகளுக்கு செல்ல முடியும். அதைவிட சட்டத்தரணிகள் கைதிகளை சந்தித்து அறிவுறுத்தல்களை பெற்றுக்கொள்ளவும், அவர்களுக்கு சட்ட ஆலோசனை வழங்கவும் சிறைச்சாலைகள் குறிப்பிட்ட இடத்தில் குறிப்பிட்ட நேரத்தில் கைதிகளை சந்திக்க முடியும். அதேபோன்று குறிப்பிட்ட நேரத்தில் சிறைக்கூடக் கம்பி மறிப்புகளுக்கு வெளியிலிருந்து கைதிகளை குறுகிய காலத்திற்குள் கைதிகளின் குடும்பத்தினர், உறவினர்கள் பார்வையிடலாம். சட்டத்தரணிகள் விஜயம் உறவினர்கள் குடும்பத்தினர் கைதிகளை பார்வையிடுதல் என்பன சிறைச்சாலையிலுள்ள விஜயம் பற்றிய புத்தகங்களில் பதியப்படும்.
பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள், நீதித்துறையினர் இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவினர் நீதிமன்றத்தால் அதிகாரம் அளிக்கப்பட்டவர்கள் மேற்பார்வை செய்யவும் விசாரணைகளை மேற்கொள்ளவும் காலை 5.30 மணிக்கும் மாலை 5.30 மணிக்கும் இடைப்பட்ட நேரத்திலேயே சிறைச்சாலைகளுக்கு விஜயம் செய்ய முடியும் என சிறைச்சாலைகள் கட்டளைச்சட்டம் ஏற்பாடு செய்துள்ளது. எனவே அனர்த்த ஆபத்து நிறைந்த அத்தியாவசிய தேவைகள் நிமித்தமாகவன்றி அமைச்சர் மட்டுமல்ல நீதித்துறையினர் கூட வேறு நேரங்களில் சிறைச்சாலைகளுக்கு செல்ல முடியாது. அத்துடன் மேற்படி எல்லா விஜயங்கள் பற்றியும் அவ்விஜயங்களின் போது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் பற்றியும் உள்ளே சென்ற வெளியே வந்த நேரம் பற்றியும் சிறைச்சாலை பதிவு புத்தகங்களில் பதியப்பட வேண்டும்.
லொஹான் ரத்வத்தை மேற்படி நேரத்திலன்றி இரவு நேரத்தில் குடிபோதையில் வேறு ஆட்களுடன் குறிப்பாக பெண்களுடனும் சிறைகளுக்கு சென்றதாகவே கூறப்படுகிறது. சிறைச்சõலை அலுவலர்கள், அதிகாரிகள் கூட அவர்களது கடமை நேரம் தவிர்ந்த ஏனைய நேரங்களில் சிறைச்சாலைக்குள்ளோ அதன் விளவிற்குள்ளோ இருக்க முடியாது என்பதும் கவனிக்க வேண்டியதாகும். சிறை அலுவலர்கள், அதிகாரிகள் சிறைக்கைதிகளின் உடலுக்கு உபாதை ஏற்படுத்தும் வகையில் நடந்து கொள்ள முடியாது. கைதிகளை தண்டிக்கும் வகையிலும் அவர்களுக்கு உபாதைகளை விளைவிக்க முடியாது.
சிறை அலுவலர்கள் சிறையடைப்பு, கைதிகளிடையே கலவரமான சூழல் கைதிகள் தப்பித்தல் போன்ற சந்தர்ப்பங்களில் கூட உயர் அதிகாரிகளின் கட்டளைக்கு இணங்கவே துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொள்ள முடியும். துப்பாக்கி வேறு ஆயுதங்கள், போதைவஸ்துகள் உட்பட தடை செய்யப்பட்ட பொருட்களை எவரும் சிறைகளுக்குள் கொண்டு செல்ல முடியாது. சிறைகளுக்குள் சிறைச்சõலை திணைக்களமே பாதுகாப்பு வழங்கும் கடப்பாட்டை கொண்டுள்ளது. சாதாரணமாக விஜயம் செய்வோருக்கு மட்டுமன்றி கண்காணிப்பு, விசாரணைகளுக்காக விஜயம் செய்வோருக்கும் சிறைச்சாலை திணைக்களமே பாதுகாப்பை வழங்கவேண்டும். எனவே சிறைக்கு விஜயம் செய்பவர் எவராக இருப்பினும் அவரின் தனிப்பட்ட பாதுகாப்பிற்கென ஆயுதங்களை கொண்டு செல்ல முடியாது. லொஹான் ரத்வத்தை அவரது கைத்துப்பாக்கியை கொண்டே சிறைகளுக்குள் சென்றுள்ளதாக கூறப் படுகிறது.
அவர் அநுராதபுர சிறையில் சில தமிழ் அரசியல் கைதிகளை மண்டியிட செய்துள்ளதாகவும் அவர்களை திட்டியதாகவும் அவரது கைத்துப்பாக்கியை கொண்டு குறிவைத்து சில கைதிகளுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது. இது குறிப்பாக சிறைச்சாலை கட்டளைச் சட்ட ஏற்பாடுகளுக்கு முரணாவதுடன் பொதுவாக கைதிகளின் பாதுகாப்பையும் உரிமைகளையும் மீறுவதுமாகும். அவர் அநுராதபுர சிறைச்சாலைக்கு இரவு வேளையில் குடிபோதையில் ஹெலிகொப்டரில் சென்றிருந்ததாகக் கூறப்படுகிறது. இரவுவேளையில் உள்ளக ஆகாய போக்குவரத்திற்கு அனுமதி இல்லாதபோது அவர் அவ்வாறு சென்றமை ஆகாய போக்குவரத்து சட்டத்தை மீறுவதாகும். அவரை கொண்டு சென்ற ஹெலிக்கொப்டர் நிறுவனமும் சட்டத்தை மீறி செயற்பட்டுள்ளது.
எனவே லொஹான் ரத்வத்தைக்கு எதிராக முன்வைக்கப்படும் சாட்டுதல்கள் சிறைச்சாலைகள் கட்டளைச் சட்டம், தண்டனைச் சேவைச்சட்டம் ஆகிய போக்குவரத்துச்சட்ட ஏற்பாடுகளுக்கு முரணான குற்றச் செயல்களாகும். அத்துடன் சிறைச்சாலை கைதிகளின் உரிமைகள் பாதுகாப்பை மீறிய மனித உரிமைகள், அடிப்படை உரிமைகள் குற்றங்களாகும். இதற்கு சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் உட்பட உயரதிகாரிகளும் அவ்வேளை கடமையில் இருந்த அதிகாரிகளும் அலுவலர்களும் தனித்தனியாகவும் கூட்டாகவும் பொறுப்புக் கூற வேண்டும். இச்செயல்கள் தனியொரு நபரின் அல்லது அரசியல் அதிகாரம் கொண்ட அமைசசரின் குணநலன் சார்ந்த, அறம் சார்ந்த விடயங்களோ குற்றச் செயல்களோ, அத்துமீறல்களோ மட்டுமல்ல. அதற்கும் அப்பால் இலங்கையின் அரச கட்டமைப்பின், நிர்வாக நிறைவேற்றத்துறையின் ஜனநாயக விரோத மனித உரிமைகள் மறுப்பு பொறிமுறையின் செயல்திட்டத்தின் விரிவாக்கமாகும்.
லொஹானுடன் சம்பந்தப்பட்ட மேற்கூறப்பட்ட விடயங்கள் இலங்கை அரசின் மனித உரிமை மீறல்கள் பற்றி உள்நாட்டில் மட்டுமன்றி சர்வ தேச ரீதியாக ஐ.நா.மனித உரிமைகள் பேரவையினாலும் சாட்டப்பட்டிருக்கும் இலங்கையர் சமூகம் தலை குணிந்திருக்கும் இவ்வேளையில் மேலும் பாரதூரமான எதிரிடை விளைவுகளை ஏற்படுத்தக் கூடியனவே பொதுவான ஆளும்வர்க்க அரசின் அடக்குமுறை, நிறுவனங்கள் ஒன்றாக கொள்ளப்படும் சிறைச்சாலைகளில் நடைபெறும் அட்டூழியங்களை தடுத்து நலிவடைந்த நிலையில் இருக்கும் கைதிகளின் இருப்பை உறுதி செய்யும் பல உள்நாட்டு சர்வதேச சட்ட ஏற்பாடுகள் இருக்கின்ற போதும் இலங்கையில் 1983 யூலை மாத வெலிக்கடை சிறை கொலைகள், முதல் இன்றுவரை சிறைகளில் பல அத்துமீறல்கள் நடை பெற்றுள்ளன. அவற்றில் குறிப்பாக இன ஒடுக்கல் இருந்து வருவதையும் 1983 யூலை மாத கொலைகள் முதல் லொஹான் செய்ததாக சொல்லப்படும் தமிழ் அரசியல் கைதிகள் மீதான மிரட்டல் வரை இடம்பெற்ற சம்பவங்கள் உணர்த்துகின்றன. இவற்றை தவிர்க்க அரசியல் நிறுவனங்களும் ஆட்சியாளர்களும் மேலும் மேலும் ஜனநாயக மயப்படுத்தலுக்குட்படுத்தப்பட வேண்டும். (தினக்குரல் 19-9-21)