பாப்பரசரையும் ஏமாற்ற முயற்சி – கர்தினால் எச்சரிக்கை

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் சர்வதேசத்தையும் அரசாங்கம் சர்வதேசத்திற்கு செல்லுமாக இருந்தால் நாங்களும் சர்வதேசத்திற்கு செல்வோம்; கர்தினால் எச்சரிக்கை

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் உண்மைகளை மூடி மறைத்து சர்வதேசத்தையும், பாப்பரசரையும் ஏமாற்றுவதற்கு அரசாங்கம் முயற்சிப்பதாக கொழும்புப் பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார். இதேவேளை ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பாக அரசாங்கம் சர்வதேசத்திற்கு செல்லும் முயற்சிகளை தாம் கண்டிப்பதாகவும், அவ்வாறு அரசாங்கம் சர்வதேசத்திற்கு செல்லுமாக இருந்தால் தாங்களும் சர்வதேசத்திற்கு சென்று தமது நிலைப்பாட்டை அறிவிக்க வேண்டி வரும் என்றும் பேராயர் மெல்கம் ரஞ்சித் குறிப்பிட்டுள்ளார்.

பிரதமர் மகிந்த ராஜபக்ஷ மற்றும் வெளி விவகார அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் ஆகியோர் வத்திக்கானில் பாப்பரசரை சந்திக்கவுள்ளதாக வெளியாகியுள்ள செய்திகள் குறித்து, கொழும்பில் நேற்று நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பேராயர் மெல்கம் ரஞ்சித் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன் போது அவர் மேலும் தெரிவிக்கையில், சர்வதேசத்தையும், பாப்பரசரையும் திசை திருப்பும் வகையில் பொய்களை கூறி, நாங்கள் எதிர்பார்த்த நீதியை வழங்காது அரசாங்கத்திற்கு சார்பான வகையில், எல்லாவற்றையும் செய்து உண்மைகளை மூடி மறைப்பதற்கான முயற்சிகளே இப்போது இடம்பெறுகின்றது.

பிரதமரும், வெளிவிவகார அமைச்சரும் இதில் கலந்துகொள்ளவுள்ளதாக கூறப்படுகின்றது. நாங்கள் மக்களுக்காக முன்னின்று மிகவும் சாதாரணமான கோரிக்கைகளையே அரசாங்கத்திற்கு முன்வைத்தோம். இந்த தாக்குதல் தொடர்பான உண்மைகள் வெளிவரும் என்று இரண்டரை வருடங்களாக அப்பாவி மக்கள் மிகவும் பொறுமையாக பார்த்துக்கொண்டிருந்தனர். சர்வ தேசத்திற்கு நாங்கள் தள்ளப்படுகின்றோம். இவர்கள் சர்வதேசத்திற்கு செல்வதால் எங்களின் நிலைமை தொடர்பில் சர்வதேசத்திற்கு அறிவிக்க வேண்டியுள்ளது. ஏற்கனவே நாங்கள் சர்வதேசத்திற்கு எமது நிலைப்பாட்டை கூறியுள்ளோம்.

இந்த அரசாங்கம் விசாரணைகளை மூடி மறைப்பதற்கு முன்னெடுக்கும் முயற்சிகள், பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை நிலை நாட்ட நடவடிக்கை எடுக்கவில்லை என்று சர்வதேசத்திற்கு கூறியுள்ளோம்.

இவ்வேளையில் தரமில்லாத முயற்சிகளை கண்டிக்கின்றோம். நாட்டில் கொவிட் வைரஸ் தொற்று அதிகரித்து வருகிறது. நாளாந்தம் பெரும் எண்ணிக்கையிலானோர் மரணிக்கின்றனர். கொரோனா தொற்று முழுமையாக இல்லா தொழிக்க வேண்டி நாம் இன்றைய தினம் 24 மணி விசேட செப வழிபாடொன்றை நடத்தி வருகிறோம். இது போன்ற கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் நிலவிவரும் இந்த காலத்திலும்கூட, உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் தொடர்பான உண்மையை மூடிமறைப்பதற்கான சூழ்ச்சியானது மிகவும் நுட்பமான முறையில் முன்னோக்கி கொண்டு செல்லப்படுதை அவதானிக்க முடிகிறது. இதனை செயற்படுத்துவது தற்போதுள்ள அரசாங்கமாகும்.

நாங்கள் ஜனாதிபதிக்கு ஜுலை 12 ஆம் திகதி கடிதம் அனுப்பியுள்ளோம். பக்கச்சõர்பில்லாத விசாரணைகளை நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தோம். ஆனால் பிரச்சனையை கண்டுகொள்ளாது போகும் பதிலே வழங்கப்பட்டிருந்தது. இந்த பிரச்சனையில் இருந்து விலகிச் சென்று சர்வதேசத்தை ஏமாற்றுவதற்கு எங்களால் இடமளிக்க முடியாது. இதனால், அரசாங்கம் சர்வதேசத்திற்கு சென்றால் நாங்களும் சர்வதேசத்திற்கு செல்ல வேண்டி வரும். இதனால் வெளிநாட்டு அமைச்சரும் அந்த குழுவினரும் எடுத்த தீர்மானத்தை நாங்கள் கண்டிக்கின்றோம்.

சர்வதேசத்திற்கு செல்வது தொடர்பில் ஊடகங்களில் வெளியான செய்திகளை பார்த்த பின்னர் மக்கள் எங்களை தொடர்பு கொண்டு நீங்கள் இதற்கு ஒத்துழைப்பு வழங்குகின்றீர்களா? நீங்களும் இணைந்தா? வத்திக்கானுக்கு செல்லும் வேலைத் திட்டத்தை செய்கின்றீர்கள் என்று கேட்கின்றனர். அவ்வாறான பிரச்சனைகளின் காரணத்தினாலேயே நாங்கள் இந்த ஊடகச் சந்திப்பை நடத்துகின்றோம்.

நாடு சுதந்திரமடைந்த பின்னர் படிப்படியாக வந்த ஊழல் அரசியல் முறைமை இப்போது தனி நபர் ஒருவரின் கைகளில் சகல அதிகாரங்களையும் வழங்குவதன் மூலம் அந்த ஊழல் முறை பலமடைந்துள்ளது. அந்த ஊழல் முறை பலமடைவதன் ஊடாக இந்தப் பிரச்சனைக்கு எமக்கு நியாயமான தீர்வு கிடைக்குமா? என்ற சந்தேகங்கள் ஏற்படுகின்றன.

நாட்டின் சட்டவாக்கம் நடக்கின்றதா என்று பரிசோதிப்பதற்கு ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான விசாரணைகளின் மூலம் அறிந்துகொள்ள முடியலாம். தங்களை பாதுகாப்பதற்காக சர்வதேசத்திற்கு சென்று அதன் பின்னால் ஒழிந்து கொண்டு செல்வதை முதுகெலும்பு உள்ளவர்கள் செய்யமாட்டார்கள். இதனால் இந்த இடத்தில் சர்வதேசத்திற்கு செல்வது குறைந்த மதிப்புள்ள வேலையே ஆகும். இங்குள்ள மக்களுக்கு இங்குள்ள சட்டத்தின் மூலம் மக்களுக்கு தீர்வை வழங்க முடியும். ஏன் இதில் சர்வதேசத்தின் உதவி தேவை என்று கேட்கின்றோம். இதனால் ஜெனிவாவில் உள்ள மனித உரிமை ஆணைக்குழுவிடம் முறைப்பாடு செய்ய தீர்மானித்துள்ளோம்.

இந்த குண்டுத் தாக்குதல்களில் 14 நாடுகளின் 4% வெளி நாட்டு பிரஜைகள் கொல்லப்பட்டனர். இவர்களில் அமெரிக்கா, பிரித்தானியா, சீனா, அவுஸ்திரேலிய நாட்டு பிரஜைகளும் அடங்குகின்றனர். ஆகவே, வெளிநாடுகளும் இது தொடர்பில் அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்.

தாக்குதல் சம்பவத்தின் பின்னால் சூழ்ச்சிகள் உள்ளதாக கூறப்படுகின்றது. அது என்ன என்பதனை ஆராய வேண்டும் என்றார்.

ந.ஜெயகாந்தன் – தினக்குரல் பத்திரிகை 9-9-21

Check Also

ஹங்வெல்லை துப்பாக்கிச் சூடு நடந்தது என்ன?

வாஹித் லெப்பை மொஹம்மது பர்சான் 46 வயதான மூன்று பிள்ளைகளின் தந்தை. ஹங்வெல்லை நகரின் ஹோட்டல் ஒன்றினை நடாத்திச் செல்பவர். …

Free Visitor Counters Flag Counter