கொரோனா தொற்றால் அமெரிக்காவில் 311, 544 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 8000க்கும் அதிகமானோர் பலியாகி உள்ளனர்.
நியூயார்க்கில் மட்டும் ஒரே நாளில் 630 பேர் பலியாகி உள்ளதை அடுத்து, அந்த மாகாணத்தில் மட்டும் இறந்தவர்களின் எண்ணிக்கை 3,565 ஆக உயர்ந்துள்ளது.
இரண்டு வாரங்களில் வைரஸ் தொற்று அதிகமாகப் பரவ வாய்ப்பு உள்ளது என நியூயார்க் ஆளுநர் ஆன்ட்ரு கோமோ தெரிவித்துள்ளார்.
கொரோனாவால் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது ஸ்பெயின் நாடு.
சர்வதேச அளவில் இத்தாலிக்கு அடுத்து ஸ்பெயினில்தான் அதிகளவிலான கொரோனா மரணங்கள் பதிவாகி உள்ளது.
இந்த சூழலில் தங்கள் நாட்டில் இரண்டாவது நாளாக கொரோனாவால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது என்கிறார் ஸ்பெயின் பிரதமர்.
அங்குமட்டும் 11,947 பேர் பலியாகி உள்ளனர்.
அமெரிக்காவுக்கு சீனா அனுப்பிய வெண்டிலேட்டர்கள்
நியூயார்க்கில் வெண்டிலேட்டருக்கு தட்டுப்பாடு நிலவுவதாக நியூயார்க் ஆளுநர் ஆன்ட்ரு கோமோ தெரிவித்துள்ளார்.
இப்படியான சூழலில் அமெரிக்காவுக்குச் சீனா 1000 வெண்டிலேட்டர்களை அனுப்பியதற்காக அவர் நன்றி தெரிவித்தார்.
லத்தின் அமெரிக்காவிற்கு முகக்கவச ஏற்றுமதி தடை
அமெரிக்காவின் 3எம் நிறுவனம் தயாரிக்கும் என்95 முக கவசங்களைக் கனடா மற்றும் லத்தின் அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்ய அதிபர் டிரம்ப் தடை விதிக்கும்படி கேட்டுக்கொண்டுள்ளார். இந்த செயலை அமெரிக்கா மேற்கொள்வது ” பெரும் தவறு ” என கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கூறியுள்ளார்.
அமெரிக்காவின் நியூ ஓர்லீன்ஸ் நகரில் அதிக எண்ணிக்கையில் கொரோனா பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
உடல் பருமன் தொடர்புடைய பிரச்சனை உடையவர்களை கொரோனா வைரஸ் பாதிப்புக்கு உள்ளாக அதிக வாய்ப்புள்ளதாக அமெரிக்க மருத்துவர்கள் மற்றும் பொது சுகாதார அதிகாரிகள் ராய்ட்டர்ஸ் செய்தி முகாமையிடம் கூறுகின்றனர்.