வியாபார தந்திரங்கள் – மக்களை பாடாய்ப் படுத்தும் வர்த்தகர்கள்!

தற்போது நாடளாவிய ரீதியில் பால்மா தட்டுப்பாடு நிலவி வருகின்றது. நாட்டின் சனத்தொகைக்கு ஏற்ப உள்நாட்டு பால்மா உற்பத்தி 40 சதவீதம் மாத்திரமே முன்னெடுக்கப்படுவதாக அண்மையில் அமைச்சர் ஒருவர் ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. எனவே எஞ்சிய 60 சதவீத மக்களின் தேவையை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பால்மா மூலமாகவே இதுவரை காலமும் நிறைவு செய்து வந்தனர்.

தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார சிக்கல் காரணமாகவும் பால்மா இறக்குமதி செய்வதில் ஏற்பட்டுள்ள பல்வேறு சிக்கல்கள் காரணமாகவும் ஒட்டுமொத்த நாட்டு மக்கள் தமக்கு தேவையான பால்மா இல்லாத நிலையில் பல்வேறு சிரமங்களுக்கு முகம் கொடுத்து வருவதாக தெரிவிக்கின்றனர். தற்போது ஏற்பட்டுள்ள இக்கட்டான சூழ்நிலையால் சிறுவர்கள் உட்பட பலரும் தடுமாறி வருவதை அவதானிக்கக் கூடியதாக உள்ளது.

உள்நாட்டு உற்பத்திகளை அதிகரிக்காது வெளிநாட்டு இறக்குமதிகளை குறைத்தல் மற்றும் நிறுத்துதல் காரணமாக பாதிக்கப்படுவது ஒட்டுமொத்த நாட்டு மக்கள் என்பது அரசாங்கத்திற்கு தெரியாதா என பலரும் கேள்விக்கணை தொடுக்கின்றனர்.

இவ்வாறான சூழ்நிலையில் பால்மா இறக்குமதியாளர்களின் விநியோகஸ்தர்கள் நாடளாவிய ரீதியில் வரையறுக்கப்பட்ட வகையில் பால் பக்கற்- றுகளை வர்த்தகர்களுக்கு விநியோகம் செய்து வருகின்றனர். இதனால் நுகர்வோரின் தேவை முழுமையாக நிறைவேற்ற முடியாத நிலைக்கு வர்த்தகர்கள் தள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர். இந்நிலையில் பால்மா இறக்குமதி செய்து வர்த்தகர்களுக்கு விற்பனை செய்யும் விநியோகஸ்தர்கள் வித்தியாசமான சில சூழ்ச்சிகளை செய்து நுகர்வோருக்கு கொண்டு செல்கின்றனர். குறிப்பாக பால்மா பக்கற்றுகளை கொள்வனவு செய்ய வரும் நுகர்வோர் குறித்த பால்மாவுடன் இணைக்கப்பட்டுள்ள சில பொருட்களை, அதாவது பெரிதும் விற்பனையாகாத மற்றும் விலை கூடிய பொருட்களை செர்த்து கொள்வனவு செய்ய வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்.

இதனால் 400 கிராம் பால்மா பக்கற்றின் விலையிலும் பார்க்க இரு மடங்கு விலையை சேலுத்தியே தமக்கு தேவையான பால்மா பக்கற்றை கொள்வனவு செய்ய வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்கு நுகர்வோர் தள்ளப்பட்டுள்ளனர். சந்தையில் அதிகம் விற்பனை செய்யப்படாத பொருட்களை இவ்வாறு இணைத்து விற்பனை செய்ய முயல்வது என்ன நியாயம் என வர்த்தகர்கள் விநியோகஸ்தர்களை நுகர்வோர் கேள்வி கேட்கின்றனர். இவ்வாறான செய்யற்பாடுகள் குறிப்பாக நுவரெலியா மாவட்டத்தில் பெரிதும் இடம் பெறுவதாக பொதுமக்கள் ஆதங்கப்படுகின்றனர். அதேபோல் நுவரெலியா மாவட்டத்தில் உள்ள பிரதான நகரங்களில் சீனி ,பால்மா, சமையல் எரிவாயு போன்ற பல்வேறு அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு தொடர்ச்சியாக நிலவிவரும் நிலையில் பல பொருட்களின் விலைகளும் சடுதியாக உயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

எனவே குறித்த மாவட்டத்தில் இடம்பெறும் பொருள் தட்டுப்பாடு, அதிக விலைக்கு விற்பனை செய்தல் , ஒரு பொருளைக் கொள்வனவு செய்யும் போது இன்னொரு பொருளை இணைத்து விற்பனை செய்தல் போன்ற பல்வேறு விடயங்கள் தொடர்பில் சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள் உரிய விசாரணைகளை முன்னெடுத்து துரித நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் பகிரங்க வேண்டுகோள் விடுக்கின்றனர். (சுதா -உதய சூரியன் 2-9-21)

Check Also

ஹம்தியின் மரணம் குறித்து விரிவான விசாரணை நடத்துக

சிறுநீரக சத்திர சிகிச்சைகளை அடுத்து உயிரிழந்த கொழும்பு கொட்டாஞ்சேனையைச் சேர்ந்த 3 வயதான ஹம்தி பஸ்லிமின் மரணம் தொடர்பில் விரிவான …

Free Visitor Counters Flag Counter