நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்எளானோர் எண்ணிக்கை 4 இலட்சத்தைக் கடந்துள்ளது. கடந்த மூன்று நாட்களாக நாளொன்றில் 4000 இற்கும் அதிக தொற்றாளர்கள் பதிவாகி வருகின்ற நிலையில் தற்போது மொத்த தொற்றாளர் எண்ணிக்கையும் இவ்வாறு 4 இலட்சத்தைக் கடந்துள்ளது. மூன்று இனங்களில் மாத்திரம் சுமார் 12000 இற்கும் அதிக தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதோடு, 400 இற்கும் அதிக மரணங்களும் பதிவாகியுள்ளன.
அந்தவகையில் நாளுக்கு நாள் தொற்றாளர்களின் எண்ணிக்கை மற்றும் மரணங்களின் எண்ணிக்கை அதிகரித்து செல்கின்றன. இந்த விடயத்தில் மக்கள் சகலரும் தமது பொறுப்பை உணர்ந்து செயற்பட வேண்டும். எவ்வாறு இதனை தடுக்க முடியும் என்பது குறித்து சிந்தித்து அதற்கேற்ற நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். முக்கியமாக இந்த வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள், ஏற்பாடுகள் , நடைமுறைகள் சுகாதார தரப்.பினரால் அறிவுறுத்தப்பட்டிருக்கின்றன. அவற்றை சரியான முறையில் சகலரும் பின்பற்ற வேண்டும். யாரும் இவற்றை அலட்சியப்படுத்தி செயற்படக்கூடாது.
இந்த விடயத்தில் சகல தரப்பினருக்கும் பாரியதொரு பொறுப்பு காணப்படுகின்றது என்பதை மறந்துவிடக்கூடாது. பொறுப்பை உணர்ந்து செயற்படும் பட்சத்திலேயே இதிலிருந்து மீண்டு வர முடியும். அரசாங்கம் சுகாதார தரப்பினருக்கு எந்தளவு தூரம் பாரிய பொறுப்பு இருக்கின்றதோ அதேபோன்று பொதுமக்களுக்கும் இந்த விடயத்தில் பொறுப்பு இருக்கின்றது. வைத்தியர்கள், சுகாதார தரப்புகள் கூறுகின்ற விடயங்களை பின்பற்றி மக்கள் நடந்து கொள்ள வேண்டியது அவசியமாகும்.
மக்களைப் பொறுத்தவரையில் தமது பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு எப்போதும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும். அவ்வாறு செயற்படும் பட்சத்திலேயே நிச்சயமாக இதனை முறியடித்து மீண்டும் பழைய நிலைக்கு வர மூடியும் என்பதே யதார்த்தமாக உள்ளது. இதேவேளை சுகாதார தரப்பினர் தொடர்ச்சியாக தற்போது காணப்படுகின்ற இந்த நடவடிக்கைகள் மேலும் பலப்படுத்தப்பட வேண்டும் என்ற விடயத்தையும் தெரிவித்து வருகின்றனர். ஆனால் அரசாங்கம் என்று வரும் போது நிச்சயமாக அவர்கள் பாதிக்கப்படுகின்ற மக்களின் நிலைமையை கருத்தில் கொண்டும் தீர்மானம் எடுக்க வேண்டிய தேவை காணப்படுகின்றது
என்ன செய்ப வேண்டும்?
இதேவேளை கொவிட்டை கட்டுப்படுத்த நாட்டை முடக்குவதற்கு எடுதீ இருக்கும் தீர்மானத்தை வெற்றிகரமானதாக மாற்றிக்கொள்வதாக இருந்தால் பயணக்கட்டுப்பாடுகளை கடுமையாக்க வேண்டும். இந்த காலப்பகுதியில் கொவிட் நோய் பரவலை கட்டுப்படுத்துவதற்கு தேவையான கட்டமைப்புகளை மேலும் வலுப்படுத்திக்கொள்ள வேண்டும். சரியான நேரத்துக்கு முறையான தீர்மானம் எடுக்காவிட்டால் எடுக்கப்படும் தீர்மானங்கள் பயனற்றுப்போகும் என கொழும்பு பல்கலைக்கழக வைத்திய பீட பேராசிரியர் மனூஜ் வீர சிங்க தெரிவித்துள்ளார்.
நாட்டில் பயணக்கட்டுப்பாடு அல்லது தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டால், அந்த காலப்பகுதியில் நாங்கள் எவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மீண்டும் முடக்க நிலைமையிலிருந்து நாட்டை விடுவிக்கும்போது எந்த வழிமுறையின் அடிப்படையில் விடுவிப்பது என்பது தொடர்பில் முறையான வேலைத்திட்டம் எமக்கு இருக்க வேண்டும். அதேபோன்று இரண்டு வாரங்களுக்கு பயணக்கட்டுப்பாடு விதிப்பதென தீர்மானித்தால், அது கடுமையான பயணக்கட்டுப்பாடாக இருக்க வேண்டும். அவ்வாறு இல்லாமல் பயணக்கட்டுப்பாடு என தெரிவித்து, வழமைபோன்று வீதிகளில் மக்களின் நடமாட்டங்கள் இருந்தால், அது பயணக்கட்டுப்பாடாகாது. எனெனில் பயணக்கட்டுப்பாடு விதிப்பது, ஒருவரிடமிருந்து இன்னுமொருவருக்கு தோய் பரவாமல் தடுப்பதற்காகும். அந்த நோக்கத்தை நிறைவேற்றிக்கொள்ள முடியாத பயணக்கட்டுப்பாட்டினால் எந்த பெறுபேற்றையும் அடைந்துகொள்ள முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அல்லது பயணக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருக்கும் காலப்பகுதியில் கொரோனா கட்டுப்படுத்தும் சுகாதார கட்டமைப்புகளை உறுதிப்படுத்துக் கொள்ளவேண்டும். விசேடமாக தொற்றாளர் ஒருவர் இனம் காணப்பட்டால் அவருடன் நெருக்கமாக இருந்தவர்களை கண்டுபிடித்துக்கொள்வதற்காக முறையான கட்டமைப்பொன்று அவசியமாகும் என்றும் அவர் கூறியிருக்கிறார்.
அந்தவகையில் வைத்தியர்கள், சுகாதார தரப்பினர் தொடர்ச்சியாக இது தொடர்பான விடயங்களை தெரிவித்து வருகின்றனர். தொடர்ச்சியாக என்ன செய்ய வேண்டும் என்ற விடயங்களை அவர்கள் வெளிப்படுத்தி வருகின்றனர். எனவே அவற்றை பின்பற்றி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். குறிப்பாக தீர்மானம் எடுக்க வேண்டிய சந்தர்ப்பத்தில் அதிகாரத்திலிருக்கும் தரப்பினரும் தீர்மானங்கள் எடுக்க வேண்டும். சுகாதார தரப்பினர் கூறுகின்ற பரிந்துரைகளை விடயங்களைக் கவனத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்கப்படவேண்டிய அவசியம் காணப்படுகின்றது. இது ஒரு மிகப்பெரிய உயிர்க்கொல்லி நோயாக காணப்படுகின்றது. இந்த நிலைமை தொடர்வதற்கு இடமளிக்கக்கூடாது. தொற்றாளர்கள் எண்ணிக்கையை முற்றாக குறைக்க வேண்டும். மரணங்களை முற்றாகத் தடுக்க வேண்டும். அதற்கு சகலரும் பொறுப்புடன் செயற்பட வேண்டும். அரசாங்கம், பாதுகாப்பு தரப்பு, சுகாதார தரப்பினர், பொதுமக்கள் என சகல தரப்பினரும் இந்த விடயத்தில் பாரிய பொறுப்பை கொண்டுள்ளனர். அதே போன்று சிவில் அமைப்புகள், சர்வ மதத் தலைவர்களும் மக்களை இந்த சுகாதார வழிமுறைகளை பின்பற்றி நடந்து கொள்வதற்கான வழிகாட்டல்களை வழங்குவது அவசியமாக காணப்படுகின்றது
இராணுவ தளபதி என்ன கூறுகிறார்?
இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள கொவிட் கட்டுப்பாட்டு செயலணியின் பிரதானியும் இராணுவத்தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா, வைரஸ் தொற்று பரவுகின்ற ஒவ்வொரு காலகட்டத்திலும் நாட்டை முடக்கி இந்த பிரச்சினைக்கு தீர்வு காண முடியாது. நாட்டை முடக்குவது கொவிட் வைரஸ் பரவலை கட்டுப்படுத்த இருக்கும் ஒரே தீர்வு அல்ல. தடுப்பூசியை ஏற்றிக்கொண்டு சுகாதார வழிமுறைகளுடன் நாட்டை துறக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
மேலும் மேலும், கொவிட் வைரஸ் பரவல் கூடுகின்றது என்பதற்கு எமது பலவீனமான தீர்மானங்கள் காரணம் என கூற முடியாது. உலகில் பல்வேறு நாடுகளில் இவ்வாறே வைரஸ் பரவல் அதிகரிப்பு, அதேபோல் கட்டுப்படுத்தும் நிலைமையே காணப்படுகின்றது. இதில் மக்களை நாம் குறை கூறவில்லை, எனினும் நாடு முடக்கத்தில் இருந்து விடுபட்டவுடன் மக்களின் அநாவசிய ஓன்று கூடல், அநாவசிய செயற்பாடுகள் காரணமாக மீண்டும் வைரஸ் பரவல் அதிகரித்தது.
அதேபோன்று ஒவ்வொரு கால கட்டத்திலும் நாட்டை முடக்கி இந்த பிரச்சினைக்கு தீர்வு காண முடியாது. ஏற்கனவே நாட்டில் கொவிட் அலையொன்று உருவாகிய வேளையில் நாடு ஒரு மாத காலத்திற்கும் அதிக காலம் முடக்கப்பட்டது. வைத்திய சுகாதார தரப்பின் ஆலோசனைக்கு அமையவே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டது. ஆனால் அதன் பின்னர் என்னவானது? மீண்டும் அதேபோன்றதொரு நிலைமை உருவாகியுள்ளது. ஆகவே நாட்டை முடக்குவது கொவிட் வைரஸ் பரவலை கட்டுப்படுத்த இருக்கும் ஒரே தீர்வு அல்ல. எத்தனை காலத்திற்கு நாட்டை முடக்கத்தில் வைத்திருக்க முடியும். தடுப்பூசி ஏற்றிக்கொண்டு சுகாதார வழிமுறைகளை பின்பற்றி செயற்பட வேண்டும்.
அதேபோல் மக்கள் நிலைமைகளை உணர்ந்து பொறுப்புடன் செயற்பட வேண்டும். இதுவே நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல இருக்கும் ஒரே தீர்வாகும் என்றும் இராணுவ தளபதி கூறுகிறார்.
இராணுவத்தளபதி கூறுவதைப் போன்று தொடர்ச்சியாக நாட்டை முடக்கி வைத்துக்கொண்டிருப்பதன் மூலம் நாட்டின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்படும். அன்றாடம் தொழில் செய்து தமது வாழ்க்கையை நடத்தும் இலட்சக்கணக்கான மக்கள் கடுமையான பொருளாதார நெருக்கடியை சந்திப்பார்கள். தமது வீடுகளில் உணவு தேவையை நிறைவேற்றுவதே பாரிய சவாலாக மாறிவிடும். ஆனால் இந்த விடயத்தில் தொற்று பரவுவதைத் தடுப்பதற்கு ஏற்றுக்கொள்ளப்பட்ட விடயமாக நாட்டை மூடக்குதல் காணப்படுகின்றது. அதுமட்டுமன்றி தடுப்பூசியை பெற்றுக்கொண்ட மக்கள் சுகாதார வழிமுறைகளை பின்பற்றி நடப்பதன் மூலம் தொற்று பரவுவதை கட்டுப்படுத்தலாம். ஆனால் தொற்று பரவல் எல்லை மீறி செல்லும் பட்சத்தில் அல்லது மிக வேகமாக அதிகளவில் பரவும்போது நாட்டை முடக்க வேண்டிய தேவை காணப்படுகின்றது. இதனையே சுகாதார தரப்பினர் சுட்டிக் காட்டுகின்றனர்.
சகலரதும் பொறுப்பு
இந்த விடயத்தில் சகல மக்களும் தமது பொறுப்பை உணர்ந்து செயற்படுவதுடன் சுகாதார விதிமுறைகளை ,சுகாதார ஆலோசனைகளை, அறிவுறுத்தல்களை, கட்டுப்பாடுகளை, வழிகாட்டிகளை பின்பற்ற வேண்டும். அவற்றைப் புறக் கணிக்கக்கூடாது. சுகாதார தரப்பினரும் பாதுகாப்பு தரப்பினரும் அரசாங்கமும் மக்களுக்கு அறிவுறுத்தல்களை வழங்க முடியும், தீர்மானங்களை எடுக்க முடியும், தடுப்பூசி பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்க முடியும். ஆனால் இறுதி ஆயுதம் மக்களின் கைகளிலேயே இருக்கிறது. அதாவது இந்த தொற்று பரவாமல் பாதுகாப்பதற்கு மக்களின் பக்கமும் பொறுப்பு காணப்படுகின்றது. அதனை மக்கள் சரியான முறையில் பின்பற்றும் பட்சத்தில் இதனை ஒழித்து விட முடியும். தடுப்பூசி வழங்கும் பணியும் தற்போது வேகமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. அதனூடாக மக்கள் நோய் எதிர்ப்பு சக்தியை பெற்றுக்கொள்ள முடியும் என்பதுடன் இந்த தொற்று பரவாமல் தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்க முடியும்.
அதனால் சகலரும் இந்த விடயத்தில் ஒத்துழைப்புடன் செயற்பட வேண்டும். மிக முக்கியமாக சுகாதார விதிமுறைகளை பின்பற்றி செயற்படுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்கள் முக கவசம் அணிவதில்கூட பல தவறுகள் விடுவதைக் காண முடிகின்றது. அடிக்கடி மக்கள் முகக் கவசங்களை தொடுகின்றனர். முகக் கவசங்களை கைகளினால் தொடக்கூடாது. தொட்டால் கைகளை சவர்க்காரமிட்டு கழுவி விடவேண்டும். உலக சுகாதார ஸ்தாபனம் மற்றும் எமது சுகாதார தரப்புக்கள் எவ்வாறு இந்த நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும் ? சுகாதார வழிகாட்டிகளை எவ்வாறு பின்பற்றுவது? என்பது தொடர்பாக விளக்கமாக மக்களுக்கு அறிவுறுத்தி வருகின்றன. எனவே அந்த அறிவுரைகளை பின்பற்றி சகலரும் பொறுப்புடன் செயற்பட வேண்டிய அவசியம் காணப்படுகின்றது. அவ்வாறு பொறுப்புடன் சகலரும் சுகாதார விதிமுறைகளை பின்பற்றி செயற்படும் பட்சத்திலேயே விரைவாக மீண்டும் நாம் பழைய நிலைமைக்கு செல்ல முடியும். எனவே அதனை உணர்ந்து சகலரும் செயற்பட வேண்டிய ஒரு தேவை காணப்படுகின்றது. (வீரகேசரி – 27-8-21)