போதைப்பொருள் கடத்தல்காரர்களின் வங்கி கணக்குகளில் பரிமாற்றப்பட்டுள்ள 220 கோடி ரூபா பணம் தொடர்பில் தீவிர விசாரணைகள் இடம்பெற்று வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்தார்.
பொலிஸ் தலைமையகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,
கடந்த சில தினங்களாக திட்டமிட்ட குற்றச் செயற்பாடுகள் மற்றும் போதைப்பொருள் கடத்தல்கள் தொடர்பில் பொலிஸார் விசேட சோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
அதற்கமைய சட்டவிரோத மதுபான உற்பத்தி நிலையங்களிலிருந்து பெருந்தொகையான மதுபானங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
கடந்த ஒருமாத காலத்திற்குள் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரும் , பொலிஸாரும் இணைந்து எட்டு சட்டவிரோத மதுபான உற்பத்தி நிலையங்களை சோதனைக்குட்படுத்தியுள்ளனர்.
இதன்போது கொழும்பு குற்றப்பிரிவு, கொழும்பு வடக்கு குற்றப்பிரிவு மற்றும் தெற்கு குற்றப்பிரிவும் சுற்றிவளைப்புகளில் ஈடுபட்டிருந்தது.
இதேவேளை வலான ஊழல் தடுப்பு பிரிவும் இந்த சோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தது. அதற்கமைய இது போன்ற 12 சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் இதன்போது 10 ஆயிரம் லீட்டருக்கும் அதிகமான சட்டவிரோத மதுபானம் மற்றும் மதுபான வடித்தலுக்காக பயன்படுத்தப்படும் 75 ஆயிரம் லீட்டருக்கும் அதிகமான கோடாக்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
தொடர்ந்தும் இந்த சுற்றிவளைப்புகளை முன்னெடுத்துச் செல்வதற்காக பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கும் , மத்திய ஊழல் தடுப்பு பிரிவினருக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளதுடன், இவ்வாறான சட்டவிரோத செயற்பாடுகளின் மூலம் பெற்றுக் கொள்ளப்படும் பணம் , மற்றும் இந்த பணத்தினால் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ள சொத்துகளும் கறுப்பு பணசுத்திகரிப்பு சட்டத்தின் பிரகாரம் அரசுடமையாக்கப்படும்.
இந்த விடயம் தொடர்பில் பொலிஸ் மா அதிபர், மேல்மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ்மா அதிபருக்கும் , மத்திய ஊழல் தடுப்பு பிரிவின் பணிப்பாளருக்கும் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையின் கட்டளை தளபதிக்கும் ஆலோசனை வழங்கியுள்ளதுடன் , இது தொடர்பான நடவடிக்கைகளை எடுப்பதற்கும் உத்தரவிட்டுள்ளார்.
இதேவேளை கடந்த இருவாரங்களாக போதைப்பொருள் கடத்தல்கார்களால் பயன்படுத்தப்பட்ட வங்கி கணக்குகள் தொடர்பில் சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டது. இதன்போது 220 கோடி ரூபா தொகை பணம் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
இந்த பணம் எதற்காக பயன்படுத்தப்பட்டுள்ளது , எதற்காவது முதலீடு செய்யப்பட்டுள்ளதா? போதைப் பொருள் கொள்வனவுக்காக வெளிநாடுக்கு அனுப்பப்பட்டுள்ளதா? அல்லது இந்த பணத்தின் மூலம் வேறுவகையான சொத்துக்கள் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளதா? என்பது தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன என்றார்.
தவறாமல் தினமும் காலையில் தங்க விலைகளை உங்கள் போனுக்கு SMS ஆக பெற்றுக்கொள்ள வேண்டுமா? கீழே பட்டனை கிளிக் செய்து SMS செய்யவும்.
Click above link & send the SMS- 2.5+tx/msg-Mobitel-2/day