15 நாடுகளுக்குச் செல்ல எந்த தடுப்பூசி வேண்டும்?

இலங்கையில் ஏற்றப்படும் சில கொரோனா தடுப்பூசிகளை 15 க்கும் மேற்பட்ட வெளிநாடுகள் ஏற்றுக்கொள்ளாத நிலையில் இலங்கையிலிருந்து அவ்வாறான நாடுகளுக்கு பயணம் செய்யவிருப்பவர்கள் தமது வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்ள முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்த தமிழ் தேசியக்கூட்டமைப்பின் யாழ் மாவட்ட எம்.பி. எஸ். ஸ்ரீதரன், இதற்கு அரசு மாற்று வழியை அறிவிக்க வேண்டுமெனவும் வலியுறுத்தினார்.

பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற கொரோனா வைரஸ் தொற்று தற்காலிக ஏற்பாடுகள் சட்ட மூல இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதத்தில் உரையாற்றுகை யிலேயே இவ்வாறு வலியுறுத்திய அவர் மேலும் தெரிவிக்கையில், மக்கள் துன்பத்தின் பிடியில் வாழ்கின்றனர். தெருக்களில் விழுந்து சாகும் மக்களை இந்த நாடு சந்திக்கின்றது. இவ்வாறு ஒரு கொடிய நோயில் மக்கள் தெருக்களில் விழுந்து சாவார்களா ? குடும்பம் குடும்பமாக கொரோனா தாக்கத்துக்குள்ளாகி அவர்கள் தனிமைப்படுத்தப்படுவார்களா என்று எதிர் பார்க்காதளவுக்கு இன்று இந்த நாட்டிலே மிகக்கூடியளவுக்கு கொரோனா தாக்கிக் கொண்டிருக்கின்றது.

நான் வாழ்கின்ற கிளிநொச்சி மாவட்டத்திலே இருக்கின்ற வைத்தியசாலைகள் , கொரோனா தனிமைப்படுத்தல் நிலையங்கள்,உருவாக்கப்பட்ட வைத்தியசாலைகள் எங்கேயும் தொற்றாளர்களை பராமரிக்க இடமில்லை .எல்லா வைத்தியசாலைகளும் கொரோனா தொற்றாளர்களினால் நிரம்பி வழிகின்றன. வைத்தியசாலைகளில் உள்ள நோயாளர்களை பார்ர்க்கக் கூடியளவுக்கு தாதியர்களுக்கு, வைத்தியர்களுக்கு நேரமில்லை. ஏனைய நோயாளிகளை பார்வையிட முடியாதுள்ளது.

அருகிலே முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள அனைத்து கொரோனா தனிமைப்படுத்தல் நிலையங்களும் நிரம்பி வழிகின்றன.இவ்வாறு வடக்கு,கிழக்கு மாகாணங்களில் உள்ள மாவட்டங்கள் தோறும் மக்கள் பெரும் அசௌகரியங்களை சந்திக்கின்றனர். இவ்வாறானதொரு சூழ்நிலை வருமென்று ஏற்கனவே எல்லோரும் எச்சரித்திருந்தனர். சுகாதாரத்துறையை சார்ந்தவர்கள் எச்சரித்திருந்தனர். பல வைத்தியர்கள் அழுதழுது சென்னார்கள். பல தாதியர்கள் கண்ணீரோடு சொன்னார்கள். அனால் இந்த அரசு இதுவரை அதனை செவி சாய்க்கவில்லை. இரண்டு வருடங்களை கொரோனா நெருங்கப்போகின்றது. இன்றுதான் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால எல்லாக்கட்சிகளையும் அழைத்து பேசுங்கள் என்று ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த நாட்டில் சரியான சட்டம் இல்லை. ஒரு நியாயமான சட்டத்தின்படி இது கையாளப்படுவதில்லை. இராணுவம் அறிவிப்பதுதான் கொரோனா சட்டம் என்று இந்த நாட்டிலே நிலைமையுள்ளது. இங்கு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க பேசும்போது .இந்த நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ள சகல குடும்பங்களுக்கும் தங்கள் 10000 ரூபா உணவுப்பொதிகளை வழங்குவதாக கூறினார். இது எத்தனை குடும்பங்களுக்கு செல்கின்றது என்பது அமைச்சருக்கு தெரியுமா?

வடக்கில் உள்ள மாவட்டங்களுக்கு இந்த 10000 ரூபாவுக்கான நிவாரணப்பொதி சென்றடைவதில்லை. பாதிக்கப்பட்டவர்களின் பெயர்விபரங்கள், தொலைபேசி இலக்கங்களை தருகின்றேன். தேவையானால் தொடர்பு கொண்டு கேளுங்கள். ஏனெனில் இதனை வழங்க அரசிடம் நிதி இல்லை. இதுதான் நாட்டின் இன்றைய நிலை. கொரோனா தாக்கமுள்ள சிறைக்கைதிகளை விடுதலை செய்யுங்கள் என்று அரசு கூறுகின்றது. அப்படியானால் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் எத்தனை காலமாக இருக்கின்றார்கள்.அவர்களில் எத்தனைபேருக்கு எத்தனை தடவை கொரோனா வந்து மாறியிருக்கின்றது. அவர்களை பிணையில் விடுவியுங்கள் என்று எத்தனை தடவை இந்த சபையில் கேட்டிருப்போம். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. கொரோனா காலத்தை கருத்தில் கொண்டு அவர்களை பிணையிலாவது விடுவியுங்கள்.

இலங்கையில் கொரோனாவுக்கு பல தடுப்பூசிகள் ஏற்றப்படுகின்றன ,இவற்றில் சிலதை பல நாடுகள் ஏற்றுக்கொள்ளாமல் உள்ளன. குறிப்பாக சைனோபார்ம் என்ற தடுப்பூசியை 15 க்கும் மேற்பட்ட நாடுகள் இன்னும் ஏற்றுக்கொள்ளவில்லை. இதனால் இந்த நாட்டிலிருந்து திருமணம் மற்றும் வேறு தேவைகளுக்கு வெளிநாடுகளுக்கு செல்லவேண்டிய பலர் அந்த தடுப்பூசிகளை ஏற்றிய நிலையில் அவர்களுக்கு வெளிநாடுகளுக்கு போக முடியாத நிலை காணப்படுகின்றது. அல்லது ஏறினால் அந்த நாடுகளுக்கு போக முடியாத நிலைமை ஏற்படுகின்றது. எனவே இந்தவிடயத்தில் அரசு மாற்று வழி ஒன்றை ஏற்படுத்த வேண்டும். ஏனெனில் இது முக்கியமான் பிரச்சினை .பலரின் வெளிநாட்டு பயணங்கள் தடைப்பட்டுள்ளன. கல்விக்காகசெல்பவர்கள் திருமணத்துக்காக செல்பவர்கள் ,அத்தியாவசிய தேவைகளுக்காக செல்பவர்கள் தமது பயணங்களை செய்யமுடியாதுள்ளது என்றார்

பா.கிருபாகμன், ந.ஜெயகாந்தன் – தினக்குரல் 18-8-21

Check Also

ஹங்வெல்லை துப்பாக்கிச் சூடு நடந்தது என்ன?

வாஹித் லெப்பை மொஹம்மது பர்சான் 46 வயதான மூன்று பிள்ளைகளின் தந்தை. ஹங்வெல்லை நகரின் ஹோட்டல் ஒன்றினை நடாத்திச் செல்பவர். …

Free Visitor Counters Flag Counter