இப்படியே இந்த ஆட்சி தொடருமாக இருந்தால் ஆப்கானிஸ்தான் காபூல் நகரில் மக்கள் விமானத்தில் ஏறி வெளி நாடுகளுக்கு தப்பியோடுவதனைப் போன்ற நிலைமை இலங்கையிலும் ஏற்படும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட எம்.பி. இரா.சாணக்கியன் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம் பெற்ற கொரோனா வைரஸ் தொற்று
தற்காலிக ஏற்பாடுகள் சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,
தற்போது அமைச்சரவை மாற்றமொன்று செய்யப்பட்டுள்ளது, இதனை பார்க்கும் போது சீட்டுக் கட்டு விளையாட்டு நினைவுக்கு வருகின்றது. இதில் கோமாளிகள் இரண்டும் இருக்கும். அந்த இரண்டு கோமாளிகளையும் ஒதுக்கிவிட்டே சீட்டுக்கட்டு பிரிக்கப்படும். அதேபோன்று தான் தற்போது அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தனது அமைச்சு மாற்றப்பட்டதற்காக ஒப்பாரிவைக்கின்றார். அவருக்கே தெரியாது அவரது அமைச்சுப்பதவி பறிபோனதாக தெரிவிக்கின்றார்.
கோமாளிகளே இவ்வாறான தீர்மானம் எடுத்துள்ளனர். இந்த நாட்டை ஆட்சி செய்வதும், தீர்மானங்கள் எடுப்பதும் கோமாளிகள் என்றே கூற வேண்டும். அதேபோல் பலி கொடுப்பது குறித்தும் அவர் கதையொன்றை கூறியுள்ளார். ஆனால் உண்மையில் இவர்கள் அனைவரும் சேர்ந்து நாட்டு மக்களையே பலிகொடுத்து வருகின்றனர்.
அண்மையில் காபூலில் இருந்து விமானம் ஒன்றில் தப்பி செல்லும் பொதுமக்களில் ஒருவர் கீழே விழுந்து இறப்பதை பார்த்தேன். இலங்கையிலும் ஆட்சி செய்யும் முறைமையை பார்த்தல் காபூலில் மக்கள் விமானங்களில் தப்பி செல்வதை போன்று நிச்சயமாக இங்கேயும் ஒரு நிலைமை உருவாகும்.,
ஒரு காலத்தில் தமிழர்கள் மட்டுமே தஞ்சம் கோரி இலங்கையில் இருந்து வெளிநாடுகளுக்கு சென்றனர். ஆனால் இந்த அரசாங்கம் இப்படி போகுமாக இருந்தால் எதிர்காலத்தில் விமானம் வந்தால் சிங்களம், தமிழ், முஸ்லிம் என சகலரும் தஞ்சம் கோரி வெளி நாடுகளுக்கு தப்பிச் செல்லும் நிலைமை ஏற்படும். அந்தளவுக்கு நாட்டின் நிலைமை உள்ளது என்றார்.
பா.கிருபாகμன், ந.ஜெயகாந்தன் – தினக்குரல் 18-8-21