சீன வெறுப்பு என்பது நீண்ட வரலாற்றை உலகெங்கும் கொண்டிருக்கின்றது. அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் இரண்டாவது உலகப் போருக்கு முன்பிருந்தே இவ்வெறுப்பின் அடையாளங்களைக் காண முடிந்திருந்தது.
சீனாவுக்கு அண்மித்த நாடுகளிலும் இதைக் காண முடியும். தென்கிழக்கு ஆசிய பிராந்தியத்தில் பல நூற்றாண்டுகளாகவே சீனர்கள் பரவி வாழ்ந்துள்ளனர், வியாபாரத்தில் ஈடுபட்டு வந்துள்ளனர். சீனா சக்கரவர்த்திகளினால் ஆளப்பட்டு வந்த போது சீனப் பெருநிலத்துக்கு வெளியிலும் அவர்களது செல்வாக்கு பரவிக் கிடந்ததால், அக்காலத்தில் இருந்தே சிங்கப்பூர் மற்றும் மலேசியா மண்ணில் சீனர்கள் பெருமளவில் வாழ்ந்து வந்தனர்.
சீனர்கள் இப்பெரிய பிராந்தியத்தில் பரவி நிரம்பியது எல்லாம் இரண்டாம் உலகப் போருக்கு முன்னரேயே நிகழ்ந்து முடிந்து விட்டது. மக்களோடு மக்களாகவும், அந்தந்த நாடுகளின் வளரும் பொருளாதார கட்டமைப்புகளில் ஒன்றிணைந்தவர்களாகவும் மாறி விட்டனர். எனினும் உலகப் பொருளாதார கட்டமைப்புகளில் ஒன்றிணைந்தவர்களாகவும் மாறி விட்டனர்.
ஆனாலும் உலகப் போரின் பின்னர் தத்தமது நாடுகளின் பொருளாதாரத்தில் சீனர்களின் பங்களிப்பை மட்டுப்படுத்த வேண்டும் என்ற கொள்கைகள் நிலைபெற ஆரம்பித்தன. சீனச் சிறுவர்களுக்கு கல்வி வாய்ப்பு கிட்டுவதை கட்டுப்படுத்தல், வர்த்தக வாய்ப்புகளை கிடைக்க விடாமல் செய்தல், அவர்களை பலாத்காரமாக வெளியேற்றல் போன்ற தந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன.
1959-65 காலப் பகுதியில் இந்தோனேசியாவிலும், 1976-79 காலப் பகுதியில் வியட்நாமிலும் சீன குடிமக்கள் பெருமளவில் வெளியேற்றப்பட்டனர். 1979 காலப் பகுதியிலும் சீன நாடுகளில் இருந்து வரும் அகதிகளை ஏற்க மலேசியாவும் சிங்கப்பூரும் தொடர்ச்சியாக மறுத்து வந்தன. கம்போடியாவில் கேமர்ரூஜ் காலப் பகுதியில் அந்நாட்டின் அரைவாசி சீனக் குடிமக்கள அதாவது இரண்டு இலட்சம் சீன கம்போடியர்கள் ஒன்றில் கொலை செய்யப்பட்டனர் அல்லது பசிபட்டினியாலும் மோசமாகப் நடத்தப்பட்டதாலும் மரணித்தனர்.
கிழக்கு திமோரில் 1975 ஆம் ஆண்டில் இந்தோனேசியா ஆக்கிரமிப்பை மேற்கொண்ட போது முதல் வாரத்திலேயே அங்கு வாழ்ந்த சீனர்கள் சுற்றிவளைக்கப்பட்டு கொலை செய்யப்பட்டனர்.
மியன்மாரில் 1962 காலப் பகுதியில் இருந்தே அதன் இராணுவ ஆட்சியின் குறியாக சீன சமூகம் இருந்து வந்திருக்கிறது. எனினும் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் அவர்கள் மிக மோசமாக பாதிக்கப்பட்டனர் என்றும் சொல்வதற்கில்லை. ஏனெனில் அமெரிக்க-ரஷ்ய பனிப்போரின் முடிவில் சீனாவுக்கும் பிராந்திய நாடுகளுக்கும் இடையே சுமுகமான உறவுகள் தழைக்கத் தொடங்கியதோடு, சீன-அமெரிக்க மற்றும் ரஷ்ய உறவுகளிலும் நெருக்கம் ஏற்படத் தொடங்கியது. இப்பிராந்திய நாடுகளில் வாழும் சீனர்களுக்கு தமது தாய்நாட்டோடு உணர்வுபூர்வமான நெருக்கம் இருந்ததால், தாம் வசிக்கும் நாடுகளோடு சீனாவின் உறவுகள் நெருக்கமடையும் போது தமக்கு நல்ல எதிர்காலம் ஏற்படும் என அவர்கள் நம்பினர்.
அவர்கள் எதிர்பார்த்தது போலவே அனைத்தும் நல்லபடியாகவே போய்க் கொண்டிருந்த போதுதான் 2019 டிசம்பரில் கண்டறியப்பட்ட கொவிட்-19 வைரஸ் தொற்று காரணமாக உலகளவில் சீனர்கள் பேரில் கட்டப்பட்டிருந்த நல்லபிப்பிராயம் மீளவும் சிதைவுற ஆரம்பித்தது.
சீனர்கள் என்றால் நடமாடும் வைரசுகள் என்றதொரு வெறுப்புத் தோற்றம் சீனா மீது கட்டியெழுப்பப்பட்டுக் கொண்டிருக்கிறது. அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் அவுஸ்திரேலிய நாடுகளில் மீண்டும் சீன வெறுப்பை- வைரசை பரப்பியவர்கள் என்ற கோணத்தில் காண முடிகிறது. பிரெஞ்ச் மற்றும் அவுஸ்திரேலிய பத்திரிகைகளில் இவ்வெறுப்பை வெளிப்படையாகவே பார்க்க முடிகிறது. சீனர்கள் எதை வேண்டுமானாலும் சாப்பிடக் கூடியவர்கள், அதனால்தான் நோய்கள் பரவுகின்றன, அவர்கள் அசுத்தமானவர்கள் என்றெல்லாம் இந்த சீன வெறுப்பு அரசியலை மேலைநாடுகளில் பார்க்க முடிகிறது.
சிங்கப்பூர் மற்றும் மலேசியாவில் ஒரு ஒன்லைன் பெட்டிஷனில் கையெழுத்திடும் இயக்கம் ஆரம்பிக்கப்பட்ட போது இலட்சக்கணக்கானோர் சீனர்களை உள்ளே விடக் கூடாது என்பதற்காகக் கையெழுத்திட்டிருந்தனர். இவ்விரு நாடுகளும் சீனர்கள் உள்ளே வருவதைத் தடுக்கக் கூடிய தடைகளை விதித்துள்ளன. ஐப்பானில் சீனர்களை ‘உயிரியல் பயங்கரவாதிகள்’ எனச் சிலர் அழைக்கின்றனராம்.
இந்தோனேசியாவிலோ, சீனர்கள் வைரசுகளை முஸ்லிம்களிடம் புகுத்தி விடுவார்கள் என்று கருதும் மனப்பான்மை நிலவுகிறதாம். ஹொங்கொங் மற்றும் சிங்கப்பூரில் பெருமளவு சீனர்கள் சமூகத்தில் கலந்து வாழ்ந்தாலும் அக்குடிமக்களுக்கு சீனப் பெருநிலத்தின் மீதான ஒரு வெறுப்பு இருக்கவே செய்கிறது. சீனா தன் செல்வாக்கை தமது நாடுகளில் அதிகரிக்குமோ என்ற பயம் இயல்பாகவே அவர்களிடம் உள்ளது.
இந்தோனேஷியாவில் 30 இலட்சம் சீன இந்தோனேசியர்கள் வசிக்கின்றனர். பெரும்பாலானோர் சிறு வர்த்தகர்கள், அதே சமயம் அந்நாட்டின் மிகப் பெரிய வர்த்தகர்களில் பெரும்பாலானோர் அந்நாட்டு சீனர்களே. 1998ம் ஆண்டு வேலையில்லாத் திண்டாட்டமும் உணவுப் பற்றாக்குறையுமாக சேர்ந்து கொண்டு கலகமாக உருவாகி அந்நாட்டு சீனர்களுக்கு எதிராகத் திரும்பியது. இதைத் தூண்டி விட்டவர் முன்னாள் அந்நாட்டு ஜனாதிதியான சுஹார்டோ. அவரது அரசியல் எதிரியான விடோடு (இவரது பாட்டனார் ஒரு சீனராம்) மற்றும் முன்னாள் ஜகர்த்தா கவர்னர் பஸீகி புர்ணாமா ஆகியோருக்கு எதிராக கிளப்பி விடப்பட்டதே இந்த இனக்கலவரம்.
இத்தகைய சீன எதிர்ப்பு மனப்பான்மை, இந்தோனேசியாவில் சீனாவினால் மேற்கொள்ளப்படும் கடல் பட்டுப்பாதை திட்டங்களை பாதிக்கும் என நம்பப்படுகிறது. இத்திட்டங்களில் பணியாற்ற பெருமளவில் சீனத் தொழிலாளர்கள ஈடுபடுத்தப்படுவதையும் சீன முதலீடுகள் உண்மையில் நாட்டைக் கடன் பொறியில் சிக்க வைப்பதற்கான முயற்சி என்றும் பெரும்பாலான இந்தோனேசியர்கள் சுட்டிக் காட்டி எதிர்ப்பை வெளிப்படுத்துகிறார்கள்.
2015ம் ஆண்டு 17,515 ஆகவிருந்த சீனத் தொழிலாளர்கள் தொகை 2018 இல் முப்பதாயிரத்தையும் தாண்டியுள்ளதை அவர்கள் சுட்டிக் காட்டுகின்றனர். இந்நாட்டில் வேலைவாய்ப்பின்மை ஐந்து சதவீதமாக உள்ளது.
சீனக் கடல் பட்டுப்பாதைத் திட்டத்தின் முக்கிய பகுதியாக தென்கிழக்கு ஆசியா விளங்குகிறது. அப்பிராந்தியத்தில் 166 பில்லியன் டொலர்களை சீனா முதலீடு செய்துள்ளது. எனினும் சீன பட்டுப்பாதைத் திட்டத்தின் மீது ஆசியான் நாடுகள் மத்தியில் குறிப்பாக, இந்தோனேசியா, மலேசியா மற்றும் தாய்லாந்து என்பவற்றுக்கு திருப்தி கிடையாது. சீனா கடன் பொறி இராஜதந்திரத்தை பின்பற்றுவதாக அந்நாடுகள் கருதுகின்றன.
மலேசியாவுக்கு வருவோமானால், 2009-2018 காலப் பகுதியில் அந்நாட்டு ஜனாதிபதியாக விளங்கிய நஜிப் ரஸாக் சீன பட்டுப்பாதைக்கு ஆதரவாகச் செயற்பட்டவர். 2018 இல் மஹதிர் மொஹம்மட் ஜனாதிபதியானதும் மூன்று பட்டுப்பாதைத் திட்டங்களுக்கு சிவப்புக்கொடி காட்டினார். மேலும் பாராளுமன்றத் தேர்தலின் போது மலேசியாவின் இறைமையை சீனாவுக்கு நஜிப் விற்கிறார் என மஹதிர் பிரசாரம் செயதார் என்பது குறிப்பிடத்தக்கது.
தென்கிழக்கு ஆசியப் பிராந்தியத்தில் சீனக் கடல்பட்டுப்பாதைத் திட்டத்தின் வெற்றியும் தோல்வியும் அப்பிராந்திய அரசியல் பிரச்சினைகள் மற்றும் மக்கள் கருத்துகளுடன் தொடர்புபட்டவை. சீன-ஆசியான் உறவுகளுக்கு முக்கியமானவை. மலேசியா, இந்தோனேசியா மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளில் அடைந்த அனுபவங்களை சீனா கவனத்தில் கொண்டிருப்பதாகவே கருத வேண்டியிருக்கிறது. அதை அவதானிக்கவும் முடிகிறது.
2019 ஏப்ரலில் நடைபெற்ற இரண்டாவது கடல் பட்டுப்பாதை மாநாட்டில் இத்திட்டம் தொடர்பான சந்தேகங்களைக் களைவதில் சீன அதிகாரிகள் ஈடுபட்டிருந்தனர். இத்திட்டம் குறித்து முன்னர் சீனத் தலைவர்களின் பேச்சுகளுக்கும் தற்போதைய உரைகளுக்கும் இடையே பெரிய வேறுபாடு காணப்படுகிறது. வெளிப்படைத்தன்மை, நிதி, சுற்றுச்சூழல் பாதிப்பு மற்றும் உள்ளடங்கல் பற்றி இப்போது சீனத் தலைவர்களால் பேசப்படுவது, அவர்களின் மனமாற்றத்தை மட்டும் பிரதிபலிக்கவில்லை; கடல் பட்டுப்பாதைத் திட்டம் நீடிக்க வேண்டும் என்ற தீர்மானத்தையும் அது வெளிப்படுத்துகிறது.
– தினகரன் –