கொரோனா தொற்றின் அதிகரிப்பால் மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன. தொற்றாளர்களை வீட்டிலேயே தங்க வைக்கும் நிலைக்கு நிலைமைகள் எல்லை மீறிய நிலையில் காணப்படுகின்றது. கொரோனா தொற்றால் மரணம் அடைபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போவதால் அடக்கம் செய்வதிலும் சிக்கல்கள் தோன்றியுள்ளன. மரண விகிதம் 30 விகிதத்தில் இருந்து 48.8 விகிதம் ஆக உயர்ந்துள்ளதாக ராஜாங்க அமைச்சர் சுதர்சனி பெர்னாண்டோபுள்ளே அறிவித்துள்ளார்.
கொரோனா தொற்றிற்கு காரணமான திரிபடைந்த புதிய டெல்ரா வைரஸின் தாக்கத்தை கட்டுப்படுத்த முடக்க நிலைக்கு நாட்டைக் கொண்டு செல்லுமாறு மருத்துவ நிபுணர்களின் தொடர்ச்சியான வேண்டுகோள்கள் தொடர்ந்தும் புறக்கணிக்கப்பட்டே வரப்படுகிறது. நாட்டை முடக்கும் விலகிச் சென்றல் சுற்றுலா பயணிகளின் வருகை மற்றும் அதன் மூலம் கிடைக்கவிருக்கும் அந்நிய செலாவணி வருமானம் இல்லாமல் போய்விடும் என்ற ஆதங்கம் அரச தரப்பினரிடம் காணப்படுகிறது.
எரிவாய்வுக்கு தட்டுப்பாடு, பால்மா இல்லாமலே போய் உள்ளது , அரிசி, சீனி, பருப்பு போன்ற அத்தியாவசிய பொருட்க ளின் விலைகள் ஏறிக்கொண்டே போகின்றது. சர்வதேச நிலைமைகளை நீங்கள் ஏன் பார்க்கவில்லை என ஊடக அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல ஊடகவியலாளர் மீது பாய்ந்து விழுகின்றார்.கடவுளிடம் தான் முறையிட வேண்டுமென அமைச்சர் கையை விரித்துள்ள நிலை காணப்படுகிறது. தற்போது இலங்கையில் தாக்கத்தைச் செலுத்தும் டெல்ரா திரிபின் வைரஸின் தாக்கத்தை நாலாவது அலையாகவே மருத்துவ நிபுணர்கள் பார்க்கின்றனர். ஆனால் அரசாங்கமோ 3வது அலையின் நீட்சியாக இதைப் பார்ப்பதுடன் மேற்படி தொற்று அதிகரிப்புக்கு ஆசிரியரின் போராட்டமும் காரணம் என ஒரு நொண்டி சாட்டை முன்வைக்க முயல்கின்றது.
அண்மைய நாட்களில் கொரோனா தொற்றாளர்களின் நாளாந்த தொகை 3000 எட்டும் நிலைக்குச் செல்ல மரணம் அடைபவர்களின் எண்ணிக்கை 200 எட்டும் நிலைக்கு சென்றுள்ளது. செப்டம்பர் மாதத்தை அண்மிக்கும் போது மரணம் அடைபவர்களின் எண்ணிக்கை மாதாந்தம் 5000 தாண்டும் என மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். எனவே உடனடியாக நாட்டை முடக்கும் நிலைக்கு கொண்டு செல்லுமாறு தொடர்ந்து மருத்துவ நிபுணர்கள் வலியுறுத்தி வருகின்றனர். அரசாங்கமோ தடுப்பூசி போடும் விவகாரத்தை பிரமாண்ட படுத்தி வருகின்றதே தவிர புதிய வைரஸின் தாக்கத்தை கட்டுப்படுத்த நாட்டை முடக்க நிலைக்குக் கொண்டுபோக துளியளவும் விருப்பமில்லா நிலையிலேயே உள்ளது.
இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தலைமையிலான கொரோனா தடுப்பு செயலணி தோல்வி கண்டுள்ளதாகவே பல தரப்பிலிருந்தும் விமர்சனங்கள் வெளிவந்து கொண்டு இருக்கின்றன. மக்கள் விடுதலை முன்னணி முன்னைநாள் பாராளுமன்ற உறுப்பினர் நலிந்த ஜெயதிஸ்ச இது தொடர்பாக கருத்து தெரிவிக்கையில்;ஜனாதிபதியின் வழிகாட்டலின் கீழ் செயல்படுத்தப்படும் கொரனா தடுப்பு செயலணி என்பது இன்று ஜனாதிபதி மற்றும் இராணுவத் தளபதி சவேந் திர சில்வா மற்றும் புலனாய்வுப் பிரிவினர் உள்ளடக்கத்துடன் சுருங்கி உள்ளதாக விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.
ஏற்கனவே ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க கொரனா தொற்றை தடுக்கும் செயலணியால் பலன் ஏதும் கிட்டாது என்பதுடன் மேற்படி செயலணிக்கு அரசியலமைப் ரீதியான அங்கீகாரம் இல்லை என்றும் மாற்றீடாக அமைச்சரவையின் மேற்பார்வையின் கீழ் கொரனோ தொற்றை தடுக்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படவேண்டும் என தொடர்ந்தும் வலியுறுத்தி வருகின்றார்.
உண்மையில் நாட்டில் யுத்தம் ஒன்று இடம்பெற்றால் பாதுகாப்பு தரப்பினரின் நெறிப்படுத்தலில் கீழ் விடயங்கள் அணுகப்படலாம் . ஆனால் இன்று இந்த நாடு எதிர்நோக்கும் பிரச்சினை நோய்த்தொற்று பிரச்சினையாகும். இதனை சுகாதாரத் துறைசார்ந்த மருத்துவ நிபுணர்களின் நெறிப்படுத்தலின் கீழ் விடயங்கள் அணுகப்படவேண்டும். ஆனால் அரசாங்கமோ பேருக்கு ஒரு சில மருத்துவத்துறை சார்ந்தவர்களை வைத்துக் கொண்டு தாம் நினைத்தபடி செயற்பாடுகளை முன்னெடுக்க முயன்று வருகின்றனர்.
ஏற்கனவே திறமையாக செயல்பட்ட அணில் ஜயசிங்க, ஜெயறுவான் பண்டார வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். இன்று டெல்டா பிறழ்வு புதிய வைரஸ் திரிபின் தாக்கம் மிகத் துரித கெதியில் வியாபித்துக் கொண்டே போகின்றது. கொரனா தொற்றின் முதலாவது அலையின் போது 13 பேர் மரணத்தை தழுவி இருந்தனர். இது 0.38 விகிதமாக கணிப்பிடப்பட்டது. இரண்டாவது அலையின் போது 591 பேர் மரணத்தை தழுவ இதன் விகிதாச்சாரம் 0.64 விகிதமாக கணிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் மூன்றாவது அலையின் போது 3837 பேர் மரணத்தை தழுவி இருப்பதுடன் அதன் விகிதாசாரம் 1.80 விகிதமாக காணப்படுகின்றது. இது அச்சம் தரும் நிலையாகும்.
கடந்த ஏப்ரல் மாதத்தில் கொரனா தொற்றின் வேகம் அதிகரிக்கவே மருத்துவத் துறை சார்ந்தவர்கள் மக்கள் ஒன்றுகூடும் நிலைமைகளை தவிர்க்க வேண்டும் என வலியுறுத்தி வந்தனர். அரசாங்கம் இத்தகைய கருத்துக்களை கவனத்தில் கொள்ளாது மக்கள் ஒன்று கூடுவதை ஊக்குவித்து கொண்டே போனது. இதன் காரணமாக நோய்த்தொற்று நாடு முழுவதும் பரவத் தொடங்கியது. கொரனா தொற்று தடுப்பூசியை ஆரம்ப காலத்தில் மக்களுக்கு போட்டிருந்தால் இத்தகையதொரு பெரிய அபாயத்தை இலங்கை மக்கள் எதிர்கொள்ள வேண்டிய நிலை ஒருபோதும் ஏற்பட்டிருக்காது. ஆனால் அரசாங்கமோ தடுப்பூசியை பெறுவதில் காட்டிய அசமந்தப் போக்கினால் இன்று மக்களே அவதிப்படும் நிலை உருவாகியுள்ளது.
உலக நாடுகள் பல கொரோனா தொற்றை தவிர்க்க தத்தமது நாட்டைத் முடக்க நிலையில் வைத்திருக்கும் முடிவையே பின்பற்றி வருகின்றன. இன்றும் கூட கொரனா தொற்றின் முதலாவது இரண்டாவது அலைகள் உருவான போது வெற்றிகரமாக அதனை எதிர்கொண்ட நாடுகளான நியூஸிலாந்து, ஆஸ்திரேலியா, வியட்நாம் ஆகிய நாடுகள் பொறுமையுடன் தற்போது ஏற்பட்டிருக்கும் அபாய நிலையை கருத்தில் கொண்டு தத்தமது நாடுகளை முடக்க நிலையில் வைத்திருக்கும் முடிவை எடுத்துள்ளன. ஆனால் இலங்கை அரசாங்கம் நாட்டை முடக்க நிலைக்கு கொண்டுபோக விருப்பமில்லாதிருப்பதுடன். அந்நிய நாடுகளிலிருந்து சுற்றுலா பயணிகளின் வருகையை ஊக்குவிப்பதில் அதிக கவனத்தைக் குவித்து வருகின்றது.
நாட்டில் அன்னிய செலாவணி கையிருப்பு குறைந்து வருவதால் சுற்றுலாப் பயணிகளின் வருகையை ஊக்குவிப்பதன் மூலம் இந்த பிரச்சினையிலிருந்து தப்பிக்க முயல்கின்றது. ஆனால் அரசாங்கம் ஒன்றை உணரவில்லை. சுற்றுலா பயணிகளின் வருகையுடன் கொரனா தொற்றும் அவர்களுடன் பின்னிப் பிணைந்து இங்கே தாக்கத்தைச் செலுத்தும் என்பதை இவர்கள் உணராதவர்களாக உள்ளனர்.
நாட்டின் பொருளாதாரம் மிக மோசமான கட்டத்தில் உள்ளது. எரிவாயு தட்டுப்பாடு நகர மக்களின் வாழ்வியலை மிக மோசமாக நிலைக்கு கொண்டு சென்றுள்ளது. சீனி விலை அதிகரிப்பு, அரிசி விலை அதிகரிப்பு, பால் மக்களின் தட்டுப்பாடு என மக்களின் நாளாந்த வாழ்வில் மிகப் பெரிய பாரத்தை மக்களை சுமக்க வைத்துள்ளது. தனிச் சிங்கள பௌத்த பெரும்பான்மை மூலம் என்னை தெரிவு செய்யுங்கள் உங்களை சுபிட்சத்திற்கு கொண்டு செல்வேன் என்றே தேர்தல் பரப்புரை செய்யப்பட்டது. தென்னிலங்கை மக்கள் இதனை ஏற்று பல மாவட்டங்களில் 70 விகிதத்தை எட்டும் அளவிற்கு வாக்குகளை வழங்கி புதிய ஆட்சியாளர்களை தெரிவு செய்திருந்தனர்.
ஆனால் என்ன நடைபெறுகின்றது. தமிழ் முஸ்லிம் மக்களை புறக்கணித்து புதிய பாணியில் ஆட்சியை தொடர்ங்கினர். ஆனால் இன்று தமிழ்,முஸ்லிம் மக்களை விட தென்னிலங்கை மக்களே அதிக கோப ஆவேசத்துடன் அரசுக்கு எதிரான போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். கடந்த ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத் தேர்தல்களில் தொழிலாளர்கள் புதிய ஆட்சியாளரை பெரிய அளவில் வாரி வழங்கி தெரிவு செய்திருந்தனர். குறிப்பாக கொழும்பு கம்பஹா போன்ற மாவட்டங்களில் தபால் மூல வாக்களிப்பில் புதிய ஆட்சியாளரே அதிக வாக்குகளைப் பெற்றிருந்தனர். இன்று உழைக்கும் மக்கள் தமது கோரிக்கைகளை வலியுறுத்தி தினமும் ஜனாதிபதி செயலகம் முன்பாக அணிவகுத்துச் செல்லும் நிலை காணப்படுகிறது.
பிரித்தானியர் இந்த நாட்டை விட்டு அகன்ற பின்னர் ஆட்சிக்கு வந்தவர்கள் அடக்குமுறைச் செயற்பாடுகளை தமிழ் மக்கள் மீதே முதலில் காட்டுவார்கள். காலம் செல்லச் செல்ல தென்னிலங்கை மக்கள் மீதும் தமது கைவரிசையைக் காட்டத் தொடங்குவார்கள். 1979ஆம் ஆண்டு ஜெ.ஆர். ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட பயங்கரவாத தடைச்சட்டம் இதற்கு சிறந்த உதாரணமாகும். தமிழர் தரப்பு பயங்கரவாதத்த செயற்பாட்டை அடக்கவே மேற்படி சட்டம் கொண்டுவரப்பட்டதாக விளக்கம் கொடுக்கப்பட்டது. அதனால் பிந்திய காலப்பகுதியில் தொழிலாளரின் வேலை நிறுத்தங்களை தடுக்க கூட இந்த சட்டத்தை ஆட்சியாளர் பாவிக்கத் தொடங்கினர்.
கொரனா தொற்று என்பது சுகாதாரத் துறையுடன் சம்பந்தப்பட்ட விடயமாகும். இதற்க்கு மருத்துவ நிபுணர்களின் வழிகாட்டல்கள். பாராளுமன்றத்தில் அனைத்து பிரிவினரும் ஆதரவு இவற்றுடன் சமூக மட்டத்திலான ஆதரவு இவற்றின் ஒன்றுபட்ட ஒத்துழைப்புடன் சர்வதேச ஒத்துழைப்பு அவசியமாகும். ஆனால் இன்றைய ஆட்சியாளர் மேற்கூறப்பட்ட எந்த தரப்பினரதும் ஆதரவு இல்லாது சில தனிநபர்களின் நெறிப்படுத்தலில் கீழ் உலகமே கண்டு அச்சப்படும் கொடிய தொற்றை கையாள முயல்கின்றனர். இதன் காரணமாகவே கொரனா தொற்றின் 4வது அலை இலங்கையை முற்றுகை இட்டுள்ளது.
நாட்டின் பொருளாதாரத்தை பசில் ராஜபக்சவின் வருகையை மூலம் சீர் செய்ய செய்யப்படும் என காட்டப்பட்ட படம் சில வேளைகளில் இன்றைய கொரோனா தொற்றின் வேகத்தை சில அமைச்சரவை மாற்றத்தின் மூலம் சாதிக்க முடியும் என வேறொரு படத்தை மக்களுக்கு திரையிடுவதற்கு இவர்கள் தயாராகலாம். ஆனால் கொரனோ தொற்றோ முழு நாட்டையும் பதம் பார்த்து விட்டு செல்லும் நிலை இதன் மூலம் ஏற்படலாம். (தினக்குரல் 15/8/21)