மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தின் மீது தற்கொலை தாக்குதல் மேற்கொண்ட முகமது ஆசாத்தின் தயார் மற்றும் பஸ்வண்டிக்கான பயணச் சீட்டு வழங்கிய இருவர் உட்பட கைது செய்யப்பட்டு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்த 3 பேருக்கும் எதிராக போதிய சாட்சி இல்லாத காரணத்தால் வழக்கு தொடரமுடியாது என சட்டமா அதிபர் திணைக்களத்தில் இருந்து அறிவிக்கப்பட்டதையடுத்து 3 பேரையும் குறித்த வழக்கில் இருந்து புதன்கிழமை (11) திகதி மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.சி.எம். றிஸ்வான் முற்றாக விடுவித்து விடுதலை செய்து தீர்ப்பளித்தார்.
குறித்த தேவாலயத்தின் மீது தற்கொலை குண்டுத்தாக்குதல் மேற்கொண்ட முகமது சாசார் முகமது ஆசாத் என்பவரின் தாயாரான லிதீபா பீபி கடந்த 2019-4-23 ஆம் திகதி காத்தான்குடியில் உள்ள அவரது வீட்டில் வைத்து கைது செய்து பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தொடர்ந்து தடுத்து வைத்திருந்ததுடன் இவருக்கு எதிராக காத்தன்குடி மற்றும் மட்டக்களப்பு தலைமையக பொலிசாரால் வழக்கு தொடரப்பட்டு விசாரணைகள் இடம்பெற்று வந்தது.
அதேவேளை தற்கொலை குண்டுதாரியான ஆசாத்துக்கு பஸ் வண்டிக்கான பயணச்சீட்டு பதிவு செய்த காத்தான்குடியைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டு தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுருந்தவர்கள் உட்பட 3 பேருக்கும் எதிராக போதிய சாட்சி இல்லாத காரணத்தினால் வழக்கு தொடரமுடியாது என சட்டமா அதிபர் திணைக்களத்தினால் மட்டக்களப்பு நீதிமன்றம் மற்றம் பொலிசாருக்கு அறிவிக்கப்பட்டது.
இதனையடுத்து கடந்த புதன்கிழமை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் நகர்வு மனு தாக்குதல் செய்யப்பட்டு வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்டதையடுத்து மூவரையும் நீதவான் ஏ.சி.எம் றிஸ்வான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டபோது நீதவான் சட்டமா அதிபரின் ஆலோசனைக்கமைய மூவருக்கும் எதிரான வழக்கிற்கு போதுமான சாட்சியங்கள் இல்லாத காரணத்தினால் அவர்களை இந்த வழக்கில் இருந்து விடுவித்து விடுதலை செய்வதாக தீர்ப்பளித்தார்.
இதேவேளை குறித்த உயிர்த்த ஞாயிறு சம்பவம் தொடர்பாக சந்தேகத்தில் கை செய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டிருந்த தென்கிழக்கு பல்கலைகழக விரிவுரையார்; ஒருவர் உட்பட காத்தான்குடியைச் சேர்ந்த இருவரையும் கடந்த யூலை 14 ம் திகதி இவ்வாறு வழக்கில் இருந்து விடுவித்து விடுதலை செய்யட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. -வீரகேசரி-