நாட்டில் நடைபெறும் பல்வேறு ஆர்ப்பாட்டங்களைப் பார்க்கும் போது, நாட்டை ஆள்வது ராஜபக்ஷர்களா என்ற சந்தேகம் ஏற்படுகிறது. ஏனெனில், முன்னைய ராஜபக்ஷ ஆட்சிக் காலத்தில், ஆர்ப்பாட்டங்கள் மிகக் கொடூரமாக அடக்கப்பட்ட போதிலும், இப்போது அந்தளவு கடுமையாக அடக்கப்படுவதில்லை.
தெற்கே அதிபர்களும் ஆசிரியர்களும் ஆரம்பித்த போராட்டம், தற்போது வடபகுதிக்கும் பரவியுள்ளது. தற்போதைய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாகவும் தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பாதுகாப்புச் செயலாளராகவும் இருந்த 2005 முதல் 2014 வரையிலான கால கட்டத்தில், பல ஆர்ப்பாட்டங்களின் போது, ஆர்ப்பாட்டக்காரர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். 2011, 2012, 2013 ஆம் ஆண்டுகளில் இவ்வாறான கொலைகள் இடம்பெற்றுள்ளன.
2011ஆம் ஆண்டு, ஊழியர் சேமலாப நிதியத்துக்குப் பதிலாக, தனியார் துறை ஊழியர்களுக்கு ஓய்வூதியம் வழங்குவதற்காகவென, மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம் தனியார் ஓய்வூதியச் சட்ட மூலத்தை முன்வைத்த போது, தனியார் துறை ஊழியர்கள் அதனை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தின் ஊழியர்கள், 2011ஆம் ஆண்டு மே மாதம் 30ஆம் திகதி கட்டுநாயக்காவில் நடத்திய ஆர்ப்பாட்டத்தின் போது பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம் செய்ததில், ரொஷேன் சானக்க என்ற இளம் ஊழியர் கொல்லப்பட்டார்.
அதேபோல், 2012ஆம் ஆண்டு அரசாங்கம் எரிபொருள் விலையை உயர்த்திய போது, அதன் காரணமாகத் தமக்கு கடற்றொழிலைச் செய்வது கஷ்டமாக இருப்பதாகக் கூறி, சிலாபத்தில் மீனவர்கள் ஆரப்பாட்டம் செய்தனர். அப்போதும் பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம் செய்ததில், அன்ரன் பெர்ணான்டோ வர்ணகுலசூரிய என்ற இளம் மீனவர் உயிரிழந்தார்.
கம்பஹா மாவட்டத்தில் வெலிவேரிய பகுதியில், ‘டிப்ட் புரொடக்ட்ஸ்’ என்ற கையுறை உற்பத்தி செய்யும் தொழிற்சாலையிலிருந்து வெளியேற்றப்படும் கழிவு நீரால், பிரதேசத்தில் நிலத்தடி நீர் மாசுபடுவதாககக் கூறி, அப்பகுதி மக்கள், 2013ஆம் ஆண்டு ஓகஸ்ட் முதலாம் திகதி ஆர்ப்பாட்டம் செய்யும் போது, இராணுவத்தினர் மூன்று பேரைச் சுட்டுக் கொன்றனர்.
அதே ஆட்சியாளர்களே, இன்றும் ஆட்சியில் இருந்த போதிலும், நாட்டில் ஆசிரியர்கள், விவசாயிகள், மாணவர்கள் எனப் பலர் நாளாந்தம் ஆர்ப்பாட்டம் செய்தும், இதுவரை பாதுகாப்புத் தரப்பினருக்கு துப்பாக்கிப் பிரயோகம் செய்யும் கட்டளை வழங்கப்படவில்லை.
தற்போதைய ஆட்சிக்கு எதிராக நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டங்களில், மிகப் பிரதானமானவை ஆசிரியர்களினதும் விவசாயிகளினதும் போராட்டமாகும். இதந்தப் போராட்டங்கள், நியாயமானவை என்பதே நாட்டில் பொதுவாக நிலவும் அபிப்பிராயமாகும்.
இறக்குமதிக்கான வெளிநாட்டு செலாவணி கையிருப்பில் இல்லாததன் காரணமாக, அரசாங்கம் முன்னறிவித்தல் இன்றி, இரசாயனப் பசளை இறக்குமதியைத் தடை செய்யததன் விளைவாக, நாட்டில் விவசாயிகள் வெகுவாகப் பாதிக்கப்பட்டார்கள். இந்தத் தடையை நியாயப்படுத்த, அரசாங்கம் எவ்வளவு முயன்றாலும் பசளையின்றிப் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களை, தொலைக்காட்சி மூலம் கண்ட நகர்ப்புற மக்களும் விவசாயிகளின் போராட்டத்தின் நியாயத்தை ஏற்றுக் கொண்டனர்.
ஆசிரியர்களின் போராட்டத்தின் நியாயத்தன்மையை அரசாங்கத்தின் தலைவர்களும் பகிரங்கமாக ஏற்றுக் கொள்கிறார்கள். பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அதைப் பகிரங்கமாகவே அண்மையில் கூறினார். ஆயினும், இப்போதைக்கு அவர்களது கோரிக்கைளை நிறைவேற்றப் பணமில்லை என்றே அரசாங்கம் கூறுகிறது.
ஆசிரியர்களின் போராட்டம், சுமார் 24 வருடங்கள் பழைமையானதாகும். அரச சேவை ஊழியர்களது சம்பளம் தொடர்பாக முன்வைக்கப்பட்ட பல்வேறு கோரிக்கைகளை அடுத்து, ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவின் அரசாங்கம் அந்தப் பிரச்சினையை ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்க, 1995ஆம் ஆண்டு சிரேஷ்ட நிர்வாகத்துறை அதிகாரியான பி.சி. பெரேராவின் தலைமையில் ஆணைக்குழுவொன்றை நியமித்தது. அந்த அறிக்கை, 1997ஆம் ஆண்டு அமலுக்கு வந்ததோடு, அதன் பிரகாரம் அதிபர்கள், ஆசிரியர்கள் தவிர்ந்த அரச சேவையில் ஏனைய சகல தொழிற்றுறையினருக்கும் 60 சதவீத சம்பள உயர்வு வழங்கப்பட்டது.
அதிபர், ஆசிரியர்களின் சம்பளத்தை அதிகரிப்பது தொடர்பாக, பின்னர் ஆராயப்பட்டு முடிவு எடுக்கப்படும் என அப்போது கூறப்பட்டது. ஆனால், 2005ஆம் ஆண்டு சந்திரிகாவின் ஆட்சி முடிவடையும் வரையிலும் அதிபர்கள், ஆசிரியர்களின் சம்பளப் பிரச்சினை ஆராயப்படவோ அரச துறையில் ஏனையர்களுக்கு வழங்கப்பட்ட சம்பள அதிகரிப்பு அவர்களுக்கு வழங்கபப்டவோ இல்லை.
2005ஆண்டு டிசெம்பர் மாதம் அதிகாரத்தைக் கையேற்ற மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கமும் அந்தப் பிரச்சினையை அதிபர், ஆசிரியர்களின் தொழிற்சங்கங்களோ ஊடகங்களோ எழுப்பும் போதெல்லாம், “அது நியாயமான கோரிக்கை; அதை நாம் தீர்ப்போம்” என்றும் கூறி வந்தனர். ஆனால், அவர்கள் பதவியில் இருந்த ஒன்பது ஆண்டுகளிலும் அது தீரவில்லை.
இதை அப்போதைய எதிர்க்கட்சியான ஐக்கிய தேசிய கட்சியும் விமர்சித்தது. ஆயினும், 2015ஆம் ஆண்டு முதல், அக்கட்சி பதவியில் இருந்த ஐந்து ஆண்டுகளிலும் அப்பிரச்சினை தீர்க்கப்படவில்லை. எனவே, மாறி மாறிப் பதவிக்கு வரும் அரசாங்கங்கள், தம்மை ஏமாற்றுகின்றன என்ற முடிவுக்கு அதிபர், ஆசிரியர் சங்கங்கள் வந்தமை, ஆச்சரியத்துக்குரிய விடயம் அல்ல!
2020ஆம் ஆண்டு, நாட்டில் கொவிட்-19 பெருந்தொற்று நோய் பரவியதை அடுத்து, ஆசிரியர்கள் இணையவழிக் கல்வியை ஆரம்பித்தனர். உண்மையிலேயே, இது கல்வி அமைச்சால் ஆரம்பிக்கப்பட்ட திட்டமொன்றல்ல; கல்வி அமைச்சு அதற்கு இணக்கம் தெரிவித்தது. ஆனால், பல பகுதிகளில் அதற்காக இணைய வழித் தொடர்பு இருக்கவில்லை. சில பகுதிகளில், மாணவர்கள் மரங்களிலும் மலைகளிலும் ஏறியே இணையவழிக் கல்வியைத் தொடர்ந்தனர். சில வறிய பிரதேசங்களில், இணையவழித் தொடர்பைப் பெற்றுக் கொள்வதற்காகப் பண வசதி பலருக்கு இருக்கவில்லை.
இந்த நிலையில், நாட்டில் சுமார் 40 சதவீத மாணவர்களின் கல்வி வெகுவாகப் பாதிக்கப்பட்டது. ஆசிரியர்கள் இந்த விடயங்களின் போது, தம்மால் இயன்ற உதவிகளை மாணவர்களுக்கு வழங்கிக் கொண்டே இந்தக் கல்வியைத் தொடர்ந்தனர். இந்தப் பின்னணியில் தான், ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல தேசிய பாதுகாப்புப் பல்கலைகழக சட்ட மூலத்தை அரசாங்கம் முன்வைத்தது. அதன் மூலம், இராணுவப் பின்னணியைக் கொண்ட பல்கலைகழகங்கள் தொகுதியொன்றை ஆரம்பிப்பதே அரசாங்கத்தின் நோக்கமாகியது.
கல்வியைத் தனியார் மயப்படுத்துவதை விரும்புவோரும் இராணுவப் பின்னணியைக் கொண்ட பல்கலைகழகங்கள் உருவாவதை விரும்பவில்லை. எனவே, பல்கலைகழக மாணவர்கள், கல்வித் துறையின் தொழிற்சங்கங்கள், சில அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து, ஜூலை எட்டாம் திகதி பாராளுமன்றச் சந்தியில் ஆர்ப்பாட்டமொன்றை நடத்தினர். இவ்வாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர் தொழிற்சங்கங்களின் தலைவர்களையும் சில சிறிய அரசியல் கட்சிகளின் தலைவர்களையும் பொலிஸார் கைது செய்து, நீதிமன்றத்தின் முன் ஆஜர்படுத்தினர். நீதிமன்றம் அவர்களுக்கு பிணை வழங்கிய போதிலும், பொலிஸார் மீண்டும் அவர்களைப் பிடித்து, பலாத்காரமாக கொவிட்-19 நோய் காரணமாகத் தனிமைப்படுத்தும் நிலையங்களுக்கு அனுப்பினர்.
இந்த அடாவடித்தனத்துக்கு எதிராக, ஆசிரியர்கள் தொழிற்சங்கங்கள் வேறுபாடுகளை மறந்து கிளர்ந்தெழுந்தனர். நாடு முழுவதிலும் ஆர்ப்பாட்டங்கள் பரவின. அத்தோடு போராட்டத்தின் பிரதான சுலோகம் கொத்தலாவல பல்கலைகழக பிரச்சினையிலிருந்து ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டைத் தீர்ப்பதற்கான கோரிக்கைக்கு மாறியது.
அத்தோடு, அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல போன்றவர்கள், ஆசிரியர்களைப் பற்றிக் குறிப்பிடும் போது, இழிவானவர்கள் போன்ற வார்த்தைகளைப் பாவித்தமையால், நிலைமை மேலும் மோசமாகியது. ஆர்ப்பாட்டங்கள் நாளாந்தம் நடைபெற்றன. ஆசிரியர்களின கோரிக்கைகளை நியாயமானவை என ஏற்றுக் கொண்ட அரசாங்கம், கொவிட்-19 நோய் பரவியிருக்கும் இந்தக் காலத்தில், ஆர்ப்பாட்டங்கள் கொரோனா வைரஸை மேலும் பரப்பும் என்றும் நாடு பெரும் பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கி இருக்கும் நிலையில், அந்தக் கோரிக்கைகளை நிறைவேற்றப் பணம் இல்லை என்றும் வாதாடினர்.
பணம் இல்லை என்று கூறும் அரசாங்கம், சில வாரங்களுக்கு முன்னர் நாடாளுமன்றத்தில் 225 உறுப்பினர்களுக்கும் புதிதாக வாகனங்களை இறக்குமதி செய்ய முயன்றமை நாடே அறிந்த விடயமாகும்.
கடந்த வாரம், கொரோனா வைரஸ் மிக வேகமாகப் பரவிக் கொண்டு இருந்தமை உண்மைத் தான். எனினும், அரசாங்கத்தின் செயற்பாடுகளே அந்த வாதங்களுக்கு முரணாக இருந்தன. அரசாங்கம், கடந்த ஜூலை நான்காம் திகதி பெருமளவில் பயணக் கட்டுப்பாடுகளைத் தளர்த்தியது. மீண்டும் ஓகஸ்ட் இரண்டாம் திகதி முதல், சகல அரச ஊழியர்களும் தத்தமது அலுவலகங்களிலேயே கடமையாற்ற வேண்டும் எனக் கட்டளையிட்டது. எனவே, அரசாங்கம் கொரோனாவைக் காட்டி, ஆர்ப்பாட்டங்களை நிறுத்த முயல்வது தெளிவாக இருந்தது. .
இறுதியில் நாட்டில் கொவிட்-19 நோய் பரவும் வேகத்தைக் கருத்தில் கொண்டு, ஆசிரியர்களே சனிக்கிழமை (07) தமது ஆர்ப்பாட்டங்களை இடைநிறுத்தினர். போர் நடைபெற்ற காலத்திலும், அப்போதைய அரசாங்கங்கள் போரையும் நிதி நிலைமையையும் காரணம் காட்டி, இந்தக் காலத்தில் போராடுவதா என்று கேட்டன. பிரச்சினைகளுக்கான காரணங்களைத் தீர்ப்பதே, பிரச்சினைகளைத் தீர்க்கும் வழியாகும். அதனை விடுத்து, குறுக்கு வழியில் பிரச்சினைகளை தீர்க்க முடியாது.
-எம்.எஸ்.எம். ஐயூப் –