தங்கம் எனும் ஓர் அற்புத உலோகம்

ஆம். இக்கட்டுரையை நான் எழுதிக் கொண்டிருக்கும் இன்றைய தினத்தில் 8 கிராம் (24krt) தங்கத்தின் விலை ரூபா 119,000/= (இலங்கை விலை) ! மண்ணாசை, பெண்ணாசை , பொன்னாசை மூன்றும்தான் பெரும்பாலான போர்களுக்குக் காரணமாக இருந்திருக்கின்றன வரலாற்றில்!

அலாவுதீன் கில்ஜியிலிருந்து, அண்மையில் அக்கரைப்பற்றில் பிடிபட்ட “அட்டியல்” திருடன்வரை அனைவருக்கும் ஒரே நோக்கம்தான் கொள்ளை..! அதிலும் தங்கத்தை..! தற்போது உலகெங்கிலும் அன்றாடம் நடைபெறும் பெரும்பாலான திருட்டு, கொள்ளை, கொலை, கடத்தல் சம்பவங்களின் பின்னணியில் இருப்பது “தங்கம்” தான். வருடாவருடம் மக்கள் தொகையைப் போலவே தங்கத்தின் தேவையும், அதன் மீதான மோகமும், அதன் விலையும் அதிகரித்துக் கொண்டேதான் செல்கிறது.

அப்படி என்னதான் இருக்கிறது இந்த மஞ்சள் நிற உலோகத்தில்?

இந்த பூமியில் உள்ள எத்தனையோ கனிமங்களுள் தங்கமும் ஓன்று. ஆனால், மற்ற எந்தவொன்றுக்கும் இல்லாத மதிப்பும், பெறுமதியும் அரிதாகக் கிடைக்கக்கூடிய துருப்பிடிக்காத தங்கத்துக்கு மட்டும் உண்டு. தங்கம் ஓர் சர்வதேசப் பொருள். அது செல்லுபடியாகாத தேசமே இல்லை. எல்லா நாடுகளிலும் வாங்குவார்கள் – விற்பார்கள். மக்கள் மட்டுமல்ல, அனைத்து அரசாங்கங்களுமே “தொன்” கணக்கில் டிரில்லியன் பெறுமதியான தங்கத்தை வாங்கி ஆண்டுக்கணக்கில் கஜானாவில் பூட்டிவைத்திருப்பார்கள்.

மக்கள் தங்கம் வாங்குவது சரி. அரசாங்கங்கள் ஏன் வாங்குகின்றன? தங்கத்தில் முதலீடு என்பது அதன் விலையேற்றத்திற்காக செய்யப்படுவதைவிட, அதன் பாதுகாப்புத் தன்மைக்காகவே செய்யப்படுகிறது. எப்போதெல்லாம் யுத்தங்கள் நிகழ்கின்றனவோ, அப்போதெல்லாம் தங்கத்தினுள் நுழையும் பணம் அதிகரிக்குமாம். அதனால், அதன் விலையும் அதிகரிக்கும். ஏனெனில், எல்லாக் காலங்களிலும், எல்லாப் பிரச்சினைகளின் போதும் எல்லா தேசங்களிலும் தங்கம்தான் பாதுகாப்பு!

யுத்தத்துடன் மட்டுமல்லாது, எல்லா நிச்சயமற்ற தன்மைகளுடனும் தங்கத்துக்குத் தொடர்புண்டு . உலகில் அசாதாரணமான குழப்ப சூழ்நிலைகள் நிலவும்போதெல்லாம் (உதாரணத்திற்கு இயற்கை பேரழிவுகள், தீவிரவாத அச்சுறுத்தல்கள் மற்றும் தாக்குதல்கள், தற்போதைய கொரோனா தொற்றுக் காலத்தில்கூட வீட்டுப்பெண்களின் நகைகளே பல குடும்பங்களின் அவசரத் தேவைகளையும் அத்தியாவசியத் தேவைகளையும் தீர்த்துக்கொண்டிருக்கின்றது )

தங்கத்தின் தேவை அதிகரிக்கும். ஏனெனில், பாதுகாப்புத் தேடி ஓடும் பணம், தங்கத்தில்தான் சரணடையும். அதுமட்டுமன்றி, தங்கம் மட்டுமே பணவடிவில் எல்லா சரக்குகளின் மீதும் ஆதிக்கம் செலுத்த இயலும் என்பதால், அதன் பின்னால் உலகமே ஓடும் நிலையைத் தவிர்க்க இயலாது.

“எத்தனை பவுன் நகை போடுவாங்க?” என்ற கேள்வியில்தான் தற்போது வரையில் அநேகமான திருமணப் பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கின்றன. தங்கள் மகளுக்கு “இத்தனை பவுன் நகை போட்டு திருமணம் செய்துவைத்தோம்” என்பதில்தான் பல பெற்றோர்களுக்கு கௌரவமே.

ஒரு குடும்பத்தின் மதிப்பு, அக்குடும்பத் தலைவி அணிந்திருக்கும் நகைகளைப் பொறுத்துதான் அமையும் என்கிற மனோபாவம் நம் தமிழர் கலாசார பார்வையில் தற்போதுவரையில் நீடிக்கிறது என்றால் மறுப்பதற்கில்லை. இதனடிப்படையில் , தங்கம் என்றவுடனேயே நம்மவர் மனக்கண்ணில் ஓடுவது ஆபரணங்கள்தான்.

கீழைத்தேய தேசங்களை சார்ந்த நமக்கு தங்கம் என்றாலே அதனை ஆபரணங்களாகவும், ஆடம்பரத்துக்கும், அந்தஸ்துக்கும் உரியவொன்றாகவும் பார்த்துப் பழகிப்போனோம். அந்தவகையில், ஏன் நாம் தங்கத்தை முதலீட்டுப் பொருளாக பார்ப்பதில்லை? “தரம்’ இதுதான் தங்கத்தின் குணமா? எப்போதும் தங்கம் இப்படித்தான் விலையேறுமா? இதே விலையேற்றம் இனியும் சாத்தியமா? தங்கத்தில் முதலீடு செய்யலாமா? தங்கம் வாங்குவது முதலீடு என்றாகுமா? அப்படியே வாங்கிவைத்தாலும் அதன் சாதக பாத விளைவுகள் என்னென்ன? இவை பற்றி சற்றுப் பார்த்துவிடலாம் ,

“இன்றைய சேமிப்பு நாளைய பாதுகாப்பு, சிறு துளி பெரு வெள்ளம்’ போன்ற சிறு சிறு சேமிப்பு பற்றிய சிந்தனைகளெல்லாம் பொருளாதார சீர்திருத்தங்களினாலும், பண வீக்கத்தினாலும், தற்போது பெரிதாகி, நேற்றைய சேமிப்பு இன்றைய முதலீடு – நாளைய வருமானம் என உருமாறிவிட்டது எனலாம்.

முதலீடுகளுக்கு ஆதாரமே சேமிப்புத்தான். அந்த அடிப்படையில் தற்போது ஏராளமான முதலீட்டுக்கான வாய்ப்புக்கள் நம்மிடையே பெருகிவிட்டன. இதில் இலாபகரமான முதலீட்டைக் காட்டிலும், பாதுகாப்புடன்கூடிய அதேசமயம் இலாபமும் தரக்கூடிய முதலீடு அவசியம்.

பாடுபட்டு சேர்த்த பணத்தை அதிக வருமானத்திற்கு ஆசைப்பட்டு, பாதுகாப்பற்ற இடத்தில் முதலீடு செய்துவிட்டு, பின்னர் முதலுக்கே மோசம் எனப் புலம்புவதில் பிரயோசனமில்லை அல்லவா? தங்கத்தின் இருப்பு என்பது வரம்புக்கு உட்பட்டது. ஆனால், அதன் தேவை ஆபரணங்கள் செய்ய, கைபேசி போன்ற இலத்திரனியல் உபகரணங்கள், தங்கபஸ்பம் போன்ற லேகியம் தயாரிக்க, மருந்துப் பொருட்கள் தயாரிக்க எனப் பயன்படுவதுடன், இந்தியக் கோவில் கலசங்கள் முதல் சேலை ஜரிகை வரை தங்கம் பளிச்சிடுகிறது.

ஆக, தங்கத்தின் தேவை அதிகரித்துக் கொண்டேதான் செல்கிறது. இணையத்தில் கண்ட புள்ளிவிபரத்தின்படி உலகளவில் தங்க உற்பத்தி ஆண்டொன்றுக்கு 2,450 தொன் ஆகும். ஆனால், அதன் தேவை 3,550 தொன் . பற்றாக்குறை 1100 தொன். இந்தப் பற்றாக்குறை இனிவரும் ஆண்டுகளில் அதிகரித்தபடியேதான் இருக்கும். அதுமட்டுமன்றி, தங்கத்தைத் தேடி பூமியின் அடியாழத்துக்கு செல்லச் செல்ல அதற்கான செலவுகளும் அதிகரிக்கும். எனவே, தங்கத்தின் விலை அவ்வப்போது ஏறி இறங்கினாலும் நீண்டகால அடிப்படையில் ஏறுமுகமாகவே இருக்கும் என்பது துறைசார் நிபுணர்களின் கருத்து.

கடந்த 50 வருடங்களுக்கும் மேலாக ஏறுமுகத்திலேயே இருக்கும் விலைதான், தங்கத்தை உலக மக்களின் நம்பிக்கைக்குரிய முதலீட்டுத் தேர்வாக வைத்திருக்கின்றதெனலாம். பாதுகாப்பு, உத்தரவாதம், நம்பகத்தன்மை போன்ற அம்சங்களால் மக்கள் இதைத் தேர்வு செய்கின்றனர் என்றால் மிகையில்லை. எனவே, ஒரு முதலீடு என்ற கோணத்தில் தங்கத்தை வாங்குவது இலாபகரமானது எனலாம்.

உடனடியாக பணமாக மாறக்கூடிய அதன் தன்மையினால் தங்கத்தை “liquid assets” என்கின்றோம். தங்கத்தில் முதலீடு செய்வதென்பது பாரம்பரியமிக்க, என்றுமே வற்றாத, அள்ள அள்ளக் குறையாத அமுத சுரபி போன்றதெனில் மிகையில்லை.

முதலீடு செய்த மாதிரியும் ஆயிற்று, அலங்காரமாக அணிந்துகொண்ட மாதிரியும் ஆயிற்று என்ற அடிப்படையிலேயே காலங்காலமாக மக்கள் தங்க நகைகளை வாங்கிக் குவித்துவந்தார்கள். நமது அன்றாட வாழ்க்கையில் தங்க ஆபரணங்களுக்கென்றே ஓர் தனியிடமுண்டு.

திருமணம் என்றால் சொல்லவே வேண்டாம். தாலி முதல் வரதட்சணை நகைகள், பரிசாகக் கிடைக்கும் நகைகள் என ஒரு களைகட்டும். சிலருக்கு இதுதான் வியாபாரமே.

சிலர் முதலீடு செய்வர். பலர் ஆடம்பரத்திற்காக புதுப்புது டிசைன்களில் விதம்விதமான நகை செய்து போட்டு அழகு பார்ப்பர். நடுத்தர வர்க்கத்தினர் தம்முடைய அவசர தேவைகளுக்காக இவற்றை அடகுவைத்து தம் தேவைகளை நிவர்த்திசெய்வர் . உண்மையில் அவசரத்துக்கு யாரிடமாவது பணம் கேட்டால் அவ்வளவு எளிதில் கிடைக்காது. அப்படிப்பட்ட நேரங்களில் தங்க நகைகள்தான் மிகப்பெரிய உதவியாக இருக்கும் என்பது உண்மை.

மேலும், யாரிடமாவது பணம் கேட்டு கூனிக்குறுகி நிற்பதைக் காட்டிலும், நம்முடைய தேவைக்காக நம் நகைகளை விற்ப்தோ அடகுவைப்பதோ மேலல்லவா? ஆனால், முதலீடு பற்றிய விழிப்புணர்வு அதிகரித்தபின், தங்கத்தினை நாணயமாகவோ, பிஸ்கட்டாகவோ வாங்கிக்கொள்ளும் மாற்றம் தற்போது ஏற்பட்டுள்ளது. இதன்போது நகைகளை விற்கையில் செய்கூலி, சேதாரம் என எந்தவித இழப்புமிருக்காது .

தங்கத்துக்கு எந்தவகையில் போட்டி என்று பார்த்தல், அமெரிக்காவின் டொலர்தான். எல்லா அரசாங்கங்களினாலும் அமெரிக்க டொலர்கள் களஞ்சியப்படுத்தப்படுகின்றன. டொலருக்கு அடுத்தபடியாக தங்கத்தையே அரசாங்கங்கள் அதிகளவில் களஞ்சியப்படுத்துகின்றன. இவ்விரண்டுக்குமிடையே தனியுறவே உண்டெனலாம்.

டொலர் விலை இறங்கினால் தங்கம் விலை உயரும். டொலர் விலை உயர்ந்தால் தங்கத்தின் விலை இறங்கும். டொலர் தவிர மற்றுமொரு சர்வதேசப் பயன்பாட்டுப் பொருளுடன் தங்கத்திற்கு உறவுண்டு . அதுதான் கச்சா எண்ணெய், ஆனால், கச்சா எண்ணெய்க்கும் தங்கத்துக்குமான உறவு நேர்கோடிலானது. அதாவது இரண்டுமே விலையேறினால் ஒன்றாக விலையேறும். வீழ்ச்சியடைந்தால் ஒன்றாகவே வீழ்ச்சியடையும்.

சரி… தங்கத்தில் முதலீடு செய்யும்போது நாம் கவனத்தில் கொள்ளவேண்டிய விடயங்கள் என்னென்ன? தங்க நகை, தங்க பிஸ்கட் அல்லது தங்க நாணயங்கள் வாங்கும்போது அவை “hallmark” முத்திரை தரச்ச்சான்றிதழ் கொண்டவையா என்பதை கவனிக்க வேண்டும். தங்கம் வாங்கும்போது தரத்தினை உறுதி படுத்திக்கொள்வது முக்கியம். அது 18 கரட்டாகக் கூட இருக்கலாம். திரும்ப விற்கும்போதோ அல்லது அடகு வைக்கும்போதோ தான் வில்லங்கம் தெரியவரும்.

ஆபரணத் தங்கம் எனப்படுவது 22 கரட் என்றால்தான் தரமானது. எனவே, நம்பிக்கையான நகைக்கடைகளில் வாங்குவதே நல்லது. நகையாக வாங்கும்போது சேதாரம் எவ்வளவு என்பதைக் கவனத்தில் கொள்வது நல்லது. ஏனெனில், நாம் வாங்கும் நகையில் அதிகப்படியான நுண்ணிய வேலைப்பாடுகள் இருந்தால் மட்டுமே அதிக சேதாரம் இருக்கும். எனவே, சாதாரண நகைகளுக்கு அதிக சேதாரம் இருந்தால் அவதானம் தேவை.

மேலும், நகைகள் வாங்கும் போது கற்கள், முத்துக்கள் பதிந்த நகைகள் வாங்குவதை தவிர்த்துக்கொள்ளுங்கள். ஏனெனில் , அவற்றை மீண்டும் விற்கும்போது, நகையில் பதிக்கும் கற்களுக்கு மதிப்புக் கிடைக்காதது மட்டுமன்றி, அவற்றை தங்கத்தோடு இணைக்க பயன்படுத்தும் அரக்கு போன்றவற்றுக்கும் சேர்த்து குறைந்த மதிப்பில்தான் பணம் கிடைக்க நேரிடும் தங்கம் வாங்கும்போது கிடைத்த பற்றுச்சீட்டையும், விற்கும்போது கிடைக்கும் பற்றுச்சீட்டையும் பத்திரமாக வைத்துக்கொள்வது நல்லது.

இலட்சங்களைக் கொட்டி வாங்கும் தங்க ஆபரணங்களையோ, நாணயங்களையோ பாதுகாக்க சில ஆயிரங்களை செலவு செய்ய தயங்காதீர்கள். நம்பகமான வங்கிகளில் பாதுகாப்புப்பெட்டக வசதிகள் உள்ளன. வங்கிக்குத் தகுந்தவாறு அவற்றின் கட்டணங்கள் மற்றும் வைப்புத் தொகை மாறுபடும். நமக்குத் தேவையானபோது எடுக்கவும், வைக்கவும் வாய்ப்பிருக்கும் . ஆகவே, கொள்ளையர்களை நினைத்து, உறக்கம் தொலைத்து, மடியில் நெருப்பைக் கட்டிக்கொண்டிராமல், அவற்றை பாதுகாப்புப்பெட்டகத்தில் வைத்துவிடுவது பாதுகாப்பாகும்.

முதலீடு அடிப்படையில் தங்கத்தை வாங்குபவர்கள் 24 கரட் சுத்தமான தங்கத்தை பிஸ்கட்டாகவே வாங்குவர். இந்த சுத்தமான தங்கத்தில் நகைகளை செய்ய முடியாது என்பதால், அதில் செம்பு மற்றும் வெள்ளி கலந்து 22 கரட், 18, 10, 09, 08 கரட் என தங்கத்தின் தரம் பிரிக்கப்படுகிறது. இதில் தரமான நகைகளை செய்வதற்கு பயன்படுவது 22 கரட் தங்கமே. தங்க உற்பத்தியில் முன்னணியில் இருப்பது தென்னாபிரிக்கா, கனடா போன்ற நாடுகள் தானாம்.

உலகில் தென்னாபிரிக்காவில்தான் 50 சதவீதத்துக்கும் அதிகமான தங்கச் சுரங்கங்கள் உள்ளனவாம். உலகளவில் தங்கத்தை வெட்டியெடுக்கும் பணி 60 சதவீதத்துக்கும் மேலாக தனியார் நிறுவனங்களின் கைவசம் உள்ளதாம். World Gold Council என்கிற உலகளாவிய அமைப்பே தங்கத்திற்கான அன்றாட விலையை நிர்ணயம் செய்கின்றது. 1987 இல் தொடங்கப்பட்ட இவ்வமைப்பில் மொத்தமாக 23 நாடுகளின் நிறுவனங்கள் உறுப்பினர்களாக உள்ளன.

இங்கே நாம் மற்றுமொரு விடயத்தை அவதானிக்கத் தவறிவிடுகின்றோம். நம் மத்தியில் நகைக் கடைகள் மட்டும் அதிகரிக்கவில்லை. மாறாக, அடகுக்கடைகளும், தெருவுக்கு நான்காக முளைத்துள்ளன என்பதுடன், அவை மிகப்பெரிய கோர்ப்பரேட் நிறுவனங்களாகவும் வளர்ச்சியடைந்துள்ளன. (LB finance மிகச் சிறந்த உதாரணம்) அந்தப்பக்கம் சினிமா நட்சத்திரங்களைக் கொண்டு தங்கம் வாங்கச் சொல்லி அழைப்பு விடுப்பவர்கள், இந்தப்பக்கம் அவர்களைக் கொண்டே அடகு வைக்கச் சொல்லி அழைக்கிறார்கள் எனலாமா?

தெருவுக்கு நான்கு நகைக்கடைகள் முளைக்க, மக்களின் வாங்கும் சக்தி அதிகரித்துள்ளமைதான் காரணம் என்றால், தெருவுக்கு எட்டு அடகுக கடைகள் முளைக்க என்ன காரணம்? ஏனெனில், புதிய தாராளமயக் கொள்கை ஒரு பகுதி நடுத்தர வர்க்க மக்களை செழுமைப்படுத்தியிருக்கும் அதேவேளை பெரும்பான்மை மக்களை இறுக்கிப் பிடிக்கிறது என்பது கண்கூடல்லவா?

கல்வி, மருத்துவம் உட்பட அன்றாடச்செலவுகள் அதிகரித்துவிட, மக்கள் வாங்கிய நகைகளை அடகு கடைகளை நோக்கிக் கொண்டு செல்கின்றனர். பொருளாதார நெருக்கடி அதிகரிக்க அடகுக்கடைகளும் அதிகரிக்கின்றன. நம்மைப் பொறுத்தவரை ஆத்திர அவசரத்துக்கு பயன்படுமே என்ற எண்ணத்துடன்தான் தங்கம் வாங்குகிறோம் அநேகமாக அந்த “ஆத்திர அவசரம்” எவ்வளவு அதிகரித்துள்ளது என்பதற்கு அதிகரித்துவரும் அடகுகடைகளே சாட்சி.

மேலும், தங்கம் வாங்குவதை முதலீடாக நியாயப்படுத்தும் அதேவேளை, இன்னுமொன்றையும் ஏற்றுக்கொண்டேயாக வேண்டும். அதாவது இலங்கை, இந்தியா போன்ற கீழைத்தேய நாடுகளில் ஆபரணங்கள் வாங்கும்போது, பெண்களுக்கு அதில் ஓர் உணர்வுசார்ந்த இணைப்பிருக்கும், அவசியத்திற்காக அதை விற்க நேர்ந்தால் கண்கள் கலங்கும். மனதே வராது கொடுப்பதற்கு. பின் சரி, அதை விற்கவேண்டாம் எப்படியாவது சமாளித்துக்கொள்ளலாம் என முடிவெடுக்கப்படும்.

ஆக, இங்கே கவனிக்க வேண்டியது இதைத்தான். வங்கியின் பாதுகாப்புப் பெட்டகத்திலும், அலுமாரியிலும் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருக்கும் நகைகளில் இருந்து ஏதேனும் வருமானம் வருகின்றதா? வருடக்கணக்கில் அதில் முடக்கப்படும் பணத்திலிருந்து எந்த வருமானமும் வருவதில்லை. அதை விற்றால்தான் வீட்டு பணம். ஆனால், விற்கத்தான் மனதில்லையே? அப்படியாயின் இந்த சந்தர்ப்பத்தில் இதை நாமொரு முதலீடாகக் கருத இயலுமா? அப்படியே விற்றாலும் வாங்கும்போது செய்கூலி, சேதாரம், வரி, என கண்ணுக்குத் தெரியாமல் கைமாறிய பணம் அவற்றை விற்கும்போது நமக்கு நஷ்டக் கணக்காகிவிடும்.

முதலீடு நோக்கத்திற்காக வாங்குவோரைக் காட்டிலும் பதுக்கல்காரர்களும், கறுப்புப்பண முதலைகளும் தங்கள் கையிருப்பை தங்கமாக மாற்றி, பதுக்கிவைப்பதும் அதிகமாக நடந்தேறுகிறது

இன்று. இக்கட்டுரையின் மூலம் மற்றுமொரு துயரத்தை யும் இங்கே குறிப்பிட்டேயாகவேண்டும். இதனை வாசித்துக்கொண்டிருக்கும் நீங்கள் சுமார் ஐம்பது வயதுக்குரிய நபர் என வைத்துக்கொள்வோம். அப்படியாயின் சுமார் இருபது – இருபத்தைந்து வருடங்களுக்கு முன் ஒரு நகைக்கடையென்றால் எப்படியிருக்கும் என்பதை மனக்கண்ணில் கொண்டுவாருங்கள். ஒரு சிறிய அறை, அதில் கண்ணாடித் தடுப்புக்களின்கீழ் வரிசை வரிசையாக அடுக்கிவைக்கப்பட்ட நகைகள். வேஷ்டி சட்டையுடன் சந்தனப் பொட்டிட்டுக்கொண்டு தெய்வீகமாக உட்கார்ந்திருப்பார் கடை உரிமையாளர். ரோஜா நிற காகிதத்தில் மடித்து தரப்படும் நகைகள். கடையின் பெயர் அச்சிடப்பட்ட சிறிய மணிபர்ஸ், அல்லது ஆடம்பரமற்ற கருநீல / கருஞ்சிவப்புப் பெட்டி.

இக்காட்சிகள் கிட்டத்தட்ட இப்போது வழக்கொழிந்து விட்டன எனலாம். இப்போதெல்லாம் நகைக்கடைகள் பிரம்மாண்டமான காட்சியறைகளாக மாறிவிட்டன. மூன்று – நான்கு தளங்களில் ஆயிரக்கணக்கான டிசைன்களில் விதம்விதமான நகைகள்! எதற்கு இத்தனை பெரிய ஆடம்பரமான கடைகள் என நினைக்கிறீர்களா? ஆனாலும், அந்த கடை வாசலில் காலை 10 மணிக்கே கூட்டம் கூடத் தொடங்கியிருக்கும்.

முன்பெல்லாம் நகைப் பட்டறைகளுக்கென்றே பெயர்பெற்ற தெருக்களெல்லாம் இன்று வழக்கொழிந்துவிட்டன. அவற்றில்வேலை செய்த 90% தொழிலாளர்கள் வேறு வேலை களுக்கு மாறிவிட்டார்கள். பிரம்மாண்ட நிறுவனங்களின் விஸ்வரூபத்துக்கு முன்னால் சிறு வியாபாரிகளால் தாக்குப் பிடிக்க முடியவில்லை. அப்படியாயின், தற்போதைய நகைக்கடைகளில் அடுக்கிவைக்கப்பட்டுள்ள விதவிதமான நகைகளை செய்வது யார்? இது துயரமான ஓர் பதிலுக்காக கேள்வி. முன்பு சொந்தமாக நகைப் பட்டறைகளை வைத்திருந்தவர்கள்தான் இப்போதைய பிரம்மாண்டமான நகைக் கடைகளின் பட்டறைகளில் கூலிக்கு வேலை பார்ப்பவர்கள் என்றால் நம்பமுடிகிறதா?

1995 களுக்கு பின்னர் படையெடுத்த “தங்க மாளிகைகளை” எதிர்கொண்டு இவர்களால் தொழில் நடத்த முடியவில்லை. பட்டறைகளை மூடிவிட்டு கொஞ்சம் கொஞ்சமாக வேறு தொழில்களுக்கு மாற்றிக்கொண்டனர். அதிலும் தாக்குப்பிடித்து நின்றவர்களை, 2000ஆம் ஆண்டுக்குப்பின் படையெடுக்கத்தொடங்கிய பிரம்மாண்ட சங்கிலித்தொடர் நகை நிறுவனங்கள் அடியோடு துடைத்து வீசிவிட்டன. எஞ்சியவர்களுக்கு வேறு வழி தெரியவில்லை. அவர்களுக்கு தெரிந்ததெல்லாம் நகை வேலை மட்டுமே. அவர்கள் அத்தனைபேரும் பெரும் நிறுவனங்களின் தொழிற்க்கூடங்களில் சரணடைந்தனர் .

இப்போதைய பிரம்மாண்ட நிறுவனங்களின் உற்பத்திப் பிரிவில் பணிபுரிவதில் முக்கால்வாசி பேர் இவர்கள்தான்! இவர்களுக்கு குறைந்தபட்ச சம்பளம்போக “இவ்வளவு நகை செய்தால் இவ்வளவு ரூபா ஊக்கத்தொகை” நிர்ணயிக்கப்படுகிறது. அந்த ஊக்கத்தொகையைப் கூடுதலாகப் பெற அல்லும் பகலும் பணிபுரிகின்றனர். தங்கத் துகள்களை கவர்ந்து சென்றுவிடக்கூடாது என்பதற்காக கடும் கண்காணிப்பு எப்போதுமிருக்கும். வேலை செய்யுமிடம் காற்றுப்போக வழியில்லாத நான்குபுறமும் அடைக்கப்பட்ட அறையாகவே இருக்கும். வேதிப்பொருட்களை நாள் முழுக்க சுவாசிக்கவேண்டியிருப்பதனால், இத் தொழிலாளர்களை ஆஸ்துமா , மூலவியாதி, தோல் நோய்கள் போன்றவை எளிதாக தாக்கக்கூடியதாக உள்ளனவாம்.

நாம் வாங்கும் தங்கம் ஜொலிக்கலாம். ஆனால், அதனை உருவாக்கும் தொழிலாளர்களின் வாழ்க்கையோ மங்கிக் கிடக்கிறது இல்லையா? ஆனாலும் , அன்மைக்காலங்களில் புதிது புதிதான இயந்திரங்களின் கண்டுபிடிப்பால் இந்த பக்கவிளைவுகள் இனிவரும் காலங்களில் குறையலாம் என நம்பப்படுகிறது. அப்போதும்கூட இயந்திரங்களின் வருகையால் இவர்களுக்கான வேலைவாய்ப்பின்மை அதிகரிக்கவும் நேரலாம். (இப்பெரு நிறுவனங்களால் வியாபார யுக்தியுடன் விளம்பரப்படுத்தப்பட்ட நாட்களுள் ஒன்றுதான் “அட்சய திருதியை” என்பதும் குறிப்பிடத்தக்கது. அன்றைய தினத்தில் தங்கம் வாங்கினால் செல்வம் பெருகும் என்பதெல்லாம் ஏமாற்றுவேலை என்பது யாவரும் அறிந்த உண்மை)

எப்படியாயினும், தங்க முதலீடு என்பது சமூக நலன் நோக்கில் சரியானதுதானா? தங்கம் என்பது ஒரு பெறுமதியான கனிமம். வெறுமனே இலாபத்தை மட்டும் நோக்கமாகக் கொண்டு இதில் கொட்டப்படும் கோடி ரூபாவை ஆக்கபூர்வமான மின்சாரம், விவசாயம், கட்டுமானம், தொழில்துறை போன்ற வேறு துறைகளில் பயன்படுத்தும்போது அதில் ஏராளமான நன்மைகள் உண்டென்றும், வெறுமனே தங்கத்தை வாங்கி குவிப்பதென்பது, மூலதனத்தினை முடக்கும் செயல், இதில் கிடைக்கும் இலாபம் என்பது செயற்கையான “யூக லாபமே”, சேமிப்பு என்ற ரீதியில் ஒழிய முதலீடு என்ற அளவில் தங்கம் வாங்குவது சமூக நலன் நோக்கில் சரியானதல்ல என பல பொருளாதார நிபுணர்கள் என்னதான் கூறினாலும், தங்கத்தின் மவுசு குறையப்போவதில்லை. தங்கத்தின் முன்னும் பின்னுமாக கண்டுபிடிக்கப்பட்ட எத்தனையோ பொருட்கள் மதிப்பிழந்துவிட்டன. ஆனால், நகை என்று தங்கம் மட்டும் ஆயிரம், ஆயிரம் ஆண்டுகளாக மனிதனை ஆண்டுவருகிறது. இது காலத்தின் தேவையும்கூட! தவிர்க்க இயலாது. -ப்ரியா ராமநாதன்-

Check Also

ஹம்தியின் மரணம் குறித்து விரிவான விசாரணை நடத்துக

சிறுநீரக சத்திர சிகிச்சைகளை அடுத்து உயிரிழந்த கொழும்பு கொட்டாஞ்சேனையைச் சேர்ந்த 3 வயதான ஹம்தி பஸ்லிமின் மரணம் தொடர்பில் விரிவான …

Free Visitor Counters Flag Counter