அரசுக்குள் குழப்பங்கள் இருப்பது உண்மையாகும், ஆனாலும் யாரையும் காட்டிக்கொடுக்க மாட்டோம் என்கிறார் நீதி அமைச்சர் அலி சப்ரி
நாட்டின் பொருளாதாரத்தை விரை வாக கட்டியெழுப்பும் நோக்கத்திலேயே தற்போது அரசாங்கம் சில இறுக்கமான தீர்மானங்களை மேற்கொண்டு வருவதாகவும் எரிபொருள் விலை அதிகரிப்பும் அவற்றில் ஒன்றெனவும் நீதி அமைச்சர் அலி சப்ரி சபையில் தெரிவித்தார்.
அரசாங்கத்திற்குள் குழப்பங்கள் உள்ளன என்பதற்காக எவரையும் காட்டிக்கொடுக்க நாம் தயாரில்லை எனவும் அவர் கூறினார்.
பாராளுமன்றத்தில் நேற்று திங்கட்கிழமை, அமைச்சர் உதய கம்மன்பிலவிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான முதல் நாள் விவாதத்தில் உரை யாற்றும் போதே அவர் இதனை கூறினார். அவர் மேலும் உரையாற்றுகையில்,
எமது ஆட்சியில் மக்களுக்கு சலுகைகளை கொடுத்து வருகின்றோம். எனினும் அத்தியாவசிய தேவைகளுக்காக சலுகைகளை வழங்கியாக வேண்டும். அவ்வாறான நிலைகளில் சில இறுக்கமான தீர்மானங்களை எடுக்க வேண்டிவரும். எரிபொருள் விலை அதிகரிப்பினால் கிடைக்கும் பணத்தை நிதி அமைச்சர் வீட்டுக்கு எடுத்துக்கொண்டு போகப் போவதில்லை. எல்லா அரசாங்கங்களிலும் உள்ளக குழப்பங்கள், முரண்பாடுகள் இருக்கும். அதனை காரணமாக வைத்துக் கொண்டு எந்தவொரு அமைச்சரையும் காட்டிக்கொடுக்கமாட்டோம்.
இன்று நாடு முடக்கப்பட்டுள்ள நிலையில் நாட்டின் பொருளாதாரம் பாரிய அளவில் வீழ்ச்சி கண்டுள்ளது. வருமானம் கிடைக்கும் சகல துறைகளும் வீழ்ச்சி கண்டுள்ளன. அவ்வாறான நிலையிலும் மக்களுக்கு நிவாரணப் பணம் வழங் கியுள்ளோம். நாம் ஒதுக்கியுள்ள சகல பணமும் மக்களுக்கே வழங்கப்படுகின்றன.
இதனை விளங்கிக்கொள்ள வேண்டும். இந்த நெருக்கடி நிலைமை எமக்கு மட்டும் ஏற்பட்ட ஒன்றல்ல, எனினும் ஏனைய நாடுகளை விடவும் வேகமாக தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டத்தை நாம் முன் னெடுத்து வருகின்றோம்.
இந்த ஆண்டு இறுதிக்குள் பெரும்பாலான மக்களுக்கு தடுப்பூசி ஏற்றப்பட்டு பொருளாதாரத்தை விரைவாக கட்டியெழுப்பும் நடவடிக்கை எடுக்கப்படும். அதற்காகவே இப்போது சில இறுக்கமான தீர்மானங்களை எடுக்கின்றோம். இப்போதும் நாட்டின் நலனுக்காகவும், வெளிநாட்டு கையிருப்பை தக்கவைக்க வேண்டிய நோக்கத்திலும் எரிபொருள் விலை அதிகரிப்பை முன்னெடுத்துள்ளோம்.
இலங்கையின் அபிவிருத்தி வேலைத்திட்டங்களில் தற்போது மாற்று வேலைத்திட்டங்களை முன்னெடுக்க வேண்டும். எரிபொருள் இறக்குமதியில் தங்கியிருக்காது புதுப்பிக்கத்தக்க வளங்களை பயன்படுத்த நாம் முன்வர வேண்டும்.
எரிபொருள் உற்பத்திக்கான வாய்ப்புகள் எம்மிடம் உள்ளது. அதனை சரியாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும். அதனையே நாம் முன்னெடுக்க நினைக்கின்றோம். இதில் சர்வதேச முதலீட்டாளர்களுக்கு இடமளித்து அவர்களின் ஒத்துழைப்புடன் நீண்டகால பயணங்களை நாம் முன்னெடுக்க வேண்டும். அதனை குழப்பியடிக்க நடவடிக்கை எடுக்கக்கூடாது என்றார். (ஆர்.யசி,எம்.ஆர்.எம்.வசீம்)