மூன்றிலிரண்டு பெரும்பான்மையும் முஸ்லிம் பிரதிநிதித்துவமும்.

ஆகஸ்ட் மாதம் 5ஆம் திகதி பாராளுமன்றப் பொதுத் தேர்தல் வாக்கெடுப்பின் ஊடாக, இலங்கை மக்கள் எழுதிய
தீர்ப்பின் முடிவுகள் வெளியாகியுள்ளன. இதன்படி பொதுஜனப் பெரமுண கட்சி மூன்றிலிரண்டுக்கு சமமான ஆசனங்களுடன் வெற்றி பெற்றுள்ளது. வெற்றி இலக்கை எட்டாத சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய  மக்கள் சக்தி கட்சியானது பிரதான எதிர்க்கட்சியாக செயற்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

வேறுபல வினோதங்களும் நிகழ்ந்துள்ளன. இந்த நாட்டை பல தசாப்தங்களாக ஆண்ட ஐக்கிய தேசியக் கட்சியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் இருந்த இடம் தெரியாமல் போயிருக்கின்றன. முன்னாள் ஜனாதிபதிகள் இருவர் பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர். முன்னாள் பிரதமர் ஒருவர் உள்ளடங்கலாக 20 இற்கு மேற்பட்ட முன்னாள் எம்.பி.க்கள் இத் தேர்தலில் தோல்வியைத் தழுவியுள்ளனர். அதற்குப் பதிலாக பல புதிய முகங்கள் வெற்றியடைந்துள்ளனர்.

வெளியாகியுள்ள பொதுத் தேர்தல் முடிவுகளின் பிரகாரம் ஆசனங்கள் குறைவடைந்தாலும் கூட மீண்டும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மூன்றாவது நிலைக்கு முன்னேறியிருக்கின்றது. மூன்று முஸ்லிம் கட்சிகளின் தலைவர்களும் வெற்றி பெற்றுள்ளனர். இந்தப் பின்னணியில் தெரிவு செய்யப்பட்ட 16 முஸ்லிம் உறுப்பினர்களுடன் மேலும் ஒரு சிலருக்கு தேசியப் பட்டியல் கிடைக்கும் வாய்ப்பும் காணப்படுகின்றது.

(கட்டுரை வெளியான பின்னர் இருவருக்கு வழங்கப்பட்டுள்ளது)

இதனால் நாம் விரும்பியிருந்தபடி இப் பாராளுமன்றத்திலும் முஸ்லிம் எம்.பி.க்களின் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்துவதற்கான வாய்ப்பு கிடைத்திருக்கின்றது எனலாம். ஆயினும், மூன்றிலிரண்டு பெரும்பான்மைப் பலத்துடனான வெற்றி நிகழ்ந்திருப்பதுடன் ஞானசார தேரர் போன்றோரும் உள்ளே வரக் கூடிய சாத்தியமிருக்கின்ற சூழ்நிலை காணப்படுகின்றனமையால், குறிப்பாக முஸ்லிம் சமூகம் இந்தத் தருணத்தில் மிகவும் பக்குவமாக நடந்து கொள்ள வேண்டியுள்ளது.

ஒரு அரசனின் வெற்றி தோல்வியை மையமாகக் கொண்ட பிரபலமான சூபிக் கதை ஒன்றில் வருகின்ற இதுவும் கடந்து போகும் என்ற தத்துவ வார்த்தை குறிப்பிடுவதைப் போல  வாழ்க்கையில் எந்த வெற்றியும் தோல்வியும் கடந்து போகும் என்பதையும் இந்த வெற்றிக் களிப்பும் தோல்வியில் துவள்தலும் நிரந்தரமானதில்லை என்பதையும் விளங்கிக் கொள்ள வேண்டும்.

சிறந்த வாக்களிப்பு

உலகில் கொவிட் 19 வைரஸ் பரவத் தொடங்கிய பிறகே இலங்கைப் பாராளுமன்றம் மார்ச் 2ஆம் திகதி நள்ளிரவுடன் கலைக்கப்பட்டு பாராளுமன்றப் பொதுத் தேர்தலை ஏப்ரல் 25 இல் தேர்தலை நடாத்த தீர்மானிக்கப்பட்டது. இருப்பினும், கொவிட் வைரஸ் தீவிரமாகப் பரவியதன் காரணமாக வாக்கெடுப்பை நடாத்த முடியாத நிலை ஏற்பட்டது. கடைசியாக, கிட்டத்தட்ட வலிந்து மக்களிடையே இயல்பு வாழ்க்கையை ஏற்படுத்தி, தேர்தலை நடாத்துவதற்கு அரசாங்கமும் தேர்தல்கள் ஆணைக்குழுவும் நடவடிக்கை எடுத்தன.

இதன்படி, இம்முறை 1 கோடி 62 இலட்சத்து 63 ஆயிரத்து 885 வாக்காளர்கள் வாக்களிக்கத்  தகுதி பெற்றிருந்தனர். இவர்களுள் தனிமைப்படுத்தலில் இருப்பவர்கள் தவிர ஏனைய வாக்காளர்கள் வாக்களிப்பதற்காக நாடெங்கும் 12985 வாக்கெடுப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. ஆகஸ்ட் 5ஆம் திகதி காலை 7 மணி தொடக்கம் மாலை 5 மணி வரை இடம்பெற்ற வாக்கெடுப்பில் 71 சதவீதமான வாக்காளர்கள் தங்களது வாக்குகளை அளித்திருந்தனர்.
நாட்டிலுள்ள 22 தேர்தல் மாவட்டங்களுள் 18 மாவட்டங்களில் 70 சதவீதம் அல்லது அதற்கு அதிகமாக வாக்குப்பதிவு இடம்பெற்றுள்ளது.

4 மாவட்டங்களிலேயே 70 சதவீதத்தை விட குறைவான வாக்களிப்பு பதிவு

செய்யப்பட்டிருக்கின்றது. இத்தேர்தலில், கொரோனா அச்சம் மற்றும் மக்களின் ஆர்வமின்மை போன்ற காரணங்களால் வாக்களிப்பு குறைவடையலாம் என்ற அச்சம் நிலவிய சூழலில், தென்னாசியாவிலேயே கொரோனாவுக்குப் பிறகு தேர்தலொன்றை நடாத்திய முதல்நாடான இலங்கையில் இந்தளவுக்கு வாக்களிப்பு பதிவாகியிருக்கின்றமை சிறப்பானதொரு விடயமாகும்.

இத்தேர்தலில் 1 கோடி 23 இலட்சத்து 43 ஆயிரத்து 389 பேர் வாக்களித்திருந்தாலும் கூட சுமார் 39 இலட்சம் வாக்குகள் அளிக்கப்படவில்லை என்பதும், தபால் மூல வாக்குகள் உள்ளடங்கலாக மொத்தமாக 744,373 ஆயிரம் வாக்குகள் நிராகரிக்கப்பட்டுள்ளன என்பதும் கவனிப்பிற்குரியது. 29 சதவீதமான வாக்குகள் அளிக்கப்படாமைக்கு பல காரணங்களைக் கூறலாம். தமது மாவட்டத்தில் போட்டியிடும் எந்தக் கட்சியின் அரசியலிலும் ஆர்வமின்மை மற்றும் வெளிநாட்டில் வாழ்கின்றமை, நோய், இயலாமையும் முதுமையும் ஆகியவை இவற்றுள் முக்கியமானவை எனக் குறிப்பிடலாம்.

எதிர்பார்க்கப்பட்ட முடிவு

இம்முறை தேர்தல் வாக்களிப்பு சிறுசிறு அசம்பாவிதங்களுடன் சுமுகமான முறையில் இடம்பெற்றது. வாக்கெண்ணும் பணிகள் இடம்பெற்ற மறுநாள் காலையிலேயே ஆரம்பமாகின. இந்நிலையில், பொதுஜனப் பெரமுண வெற்றி பெற்று ஆட்சியமைக்கும் என்பதும் சிலவேளை மூன்றிலிரண்டு பெரும்பான்மை பெறலாம் என்பதும் முன்னமே ஊகிக்கப்பட்டதே. ஆக் கட்சியைச் சேர்ந்த கோட்டாயபய ராஜபக்ச ஜனாதிபதியாக வெற்றிபெற்ற சூடு ஆறுவதற்கிடையில் நடக்கின்ற தேர்தலில் மொட்டு தோற்கும் என்று யாராவது எதிர்பார்த்திருந்தால் அது அவர்களின் அரசியல் அறிவின்மை என்றே சொல்ல வேண்டும்.

ஆயினும், தேசிய மட்டத்தில் வெளியாகியுள்ள சில பெறுபேறுகள், சிலரது வெற்றி, பலரது தோல்வி ஆகியவை சாதாரண பொதுமக்கள் ஆச்சரியத்துடன் நம்பத் தொடங்கியுள்ளனர்.  குறிப்பாக, அம்பாறை மாவட்டத்தின் வாக்கெண்ணும் நிலையத்தில் சில முன்னெடுப்புக்கள் மேற்கொள்ளப்பட்டதாகவும் முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லாவின் தோல்வி தொடர்பாகவும் சில தகவல்கள் மக்களிடையே உலாவருகின்றன. இதன் உண்மைத்தன்மை பற்றித் தெரியாது என்பதுடன், தேர்தல் முடிவுகள் வெளியாகும் நேரத்தில் இவ்வாறான ஊர்ஜிதமற்ற தகவல்கள் வெளியாவது வழக்கமானதே என்பதையும் மறந்து விடக் கூடாது.

அந்த வகையில், எல்லாம் சரியாக நடந்திருக்கின்றது என்ற எடுகோளின் அடிப்படையிலேயே இதைக் கடந்து செல்ல வேண்டும். சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்டுள்ள உத்தியோகபூர்வ தேர்தல் பெறுபேறுகளே சட்டவலுவுடையவை என்ற அடிப்படையில், அதற்கமைய வெற்றிபெற்ற கட்சிகள் மற்றும் வேட்பாளர்கள் தொடர்பான விவகாரங்களை கையாள வேண்டும் என்பதை அழுத்தமாக குறிப்பிட விரும்புகின்றோம்.
2015ஆம் இடம்பெற்ற பாராளுமன்றப் பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி 106 ஆசனங்களையும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 95 ஆசனங்களையும், தமிழரசுக் கட்சி 16 ஆசனங்களையும் மக்கள் விடுதலை முன்னணி 6 ஆசனங்களையும் முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் ஈ.பி.டி.பி.ஆகிய கட்சிகள் தலா ஒவ்வொரு ஆசனத்தையும் பெற்றிருந்தன. இதன்படி சிறுபான்மைக் கட்சிகளை இணைத்துக் கொண்டு ரணில் விக்கிரமசிங்க ஒரு கூட்டாட்சியை நிறுவினார் என்பதை நாமறிவோம்.

மூன்றிலிரண்டு பலம்

2020 பொதுத் தேர்தலில் கட்டமைப்பு ரீதியான பாரிய மாற்றங்கள் நடந்தேறியுள்ளன. குறிப்பாக, 2015இல் ஆட்சியமைத்த கட்சியும் எதிர்க்கட்சியும் இந்த முறை சீனிலேயே இல்லாமல் ஆக்கப்பட்டுள்ளன. நல்லாட்சியின் தோல்வியும் ரணில், மைத்திரி போன்றோரின் வினைத்திறன் இன்மையும் மட்டுமன்றி, ராஜபக்ச குடும்பத்தின் ஆய்வு அடிப்படையிலான காத்திரமான முன்னகர்வுகள் போன்ற வேறுபல விடயங்களும் இதற்கு காரணம் எனலாம்.

இதன்படி வெளியாகியுள்ள இறுதி முடிவுகளின் பிரகாரம், கடந்;த ஐந்து வருடங்களுக்குள் உருவாகி பெருவளர்ச்சியடைந்த ஸ்ரீலங்கா பொதுஜனப் பெரமுண கட்சி தேசியப் பட்டியல் உள்ளடங்கலாக 145 ஆசனங்களைப் பெற்றுள்ளது. கடந்த ஓரிரு வருடங்களுக்குள் கட்டமைக்கப்பட்ட ஐக்கிய மக்கள் சக்தி கட்சியானது தே.ப.உள்ளடங்கலாக 54 ஆசனங்களை பெற்றுள்ளது. இலங்கை தமிழரசுக் கட்சிக்கு 10 ஆசனங்களும் தேசிய மக்கள் சக்திக்கு 3 ஆசனங்களும் கிடைத்துள்ள. அ.இ.த.காங்கிரஸ் மற்றும் ஈ.பி.டி.பி.க்கு தலா 2 ஆசனங்கள் கிடைத்துள்ளன.

இதேவேளை, அகில இலங்கை மக்கள், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், தேசிய காங்கிரஸ், முஸ்லிம் தேசிய கூட்டணி மற்றும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி, சுதந்திரக் கட்சி, ஐக்கிய தேசியக் கட்சி, எங்கள் மக்கள் சக்தி, தமிழ் மக்கள் தேசிய கூட்டணி, ஆகிய கட்சிகள் தலா ஒவ்வொரு ஆசனத்தை (வென்று அல்லது தேசியப்பட்டியல் ஊடாக) இத்தேர்தலில் பெற்றுக் கொண்டுள்ளன.

இத்தேர்தல் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்களின் ஊடாக போட்டியிட்ட 7452 வேட்பாளர்களில் 196 பேர் நேரடியாக மக்கள் வாக்குகள் தெரிவு செய்யப்பட்டுள்ளiமையால், 7256 பேர் தோல்வியைத் தழுவியுள்ளனர். தோல்வியடைந்தவர்களுக்கு தேசியப்பட்டியல் உறுப்புரிமை வழங்குவதில் சிக்கல்கள் இருப்பினும், அவர்களுள் ஒரு சிலருக்கு இப்பாராளுமன்றத்தில் சுழற்சி முறையிலேனும் தேசியப்பட்டியல் ஆசனம் கிட்டலாம்.

வெற்றியும் தோல்வியும்

முஸ்லிம் பிரதேசங்களில் வாழும் மக்களால் வெற்றிபெறுவார்கள் என கருதப்பட்ட பல வேட்பாளர்கள் வெற்றிபெறாமல் போயுள்ளனர். இவர் இம்முறை தோல்வியை தழுவுவார் எனக் கருதப்பட்ட முஸ்லிம் வேட்பாளர்களுள் சிலருக்கு வெற்றி கிடைத்துள்ளது. விகிதாசாரத் தேர்தல் முறைமையின் சூத்திரத்தின் காரணமாக எதிர்பாராத விதமாக சிலர் எம்.பி.யாகி இருக்கின்றனர். இன்னும் சில முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு சமூகம் பாடம் படிப்பித்துள்ளதாகவே தெரிகின்றது. ‘நிபந்தனையுடன் வகுப்பேற்றப்படும்’ மாணவனைப் போல கணிசமான சில முஸ்லிம் அரசியல்வாதிகளை இந்தமுறையும் மக்கள் வெற்றியடையச் செய்துள்ளனர்.

இத்தேர்தலில் மூன்று பிரதான முஸ்லிம் கட்சிகளின் தலைவர்களும் பாராளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. இது அவசியமானதும் கூட. கண்டியில்; தொலைபேசிச் சின்னத்தில் போட்டியிட்ட றவூப் ஹக்கீமும், வன்னியில் தொலைபேசியில் போட்டியிட்ட றிசாட் பதியுதீனும் அதிக விருப்பு வாக்குகளுடன் வெற்றி பெற்றுள்ளனர்.
இதேவேளை, நீண்டகாலமாக அமைச்சராக இருந்து பல்வேறு அபிவிருத்திகளைச் செய்த போதும் 2015 தேர்தலில் எடுத்த நிலைப்பாட்டின் காரணமாக தோல்வியைத் தழுவிய தேசிய காங்கிரஸ் தலைவர் ஏ.எல்.எம்.அதாவுல்லா இம்முறை தனது சொந்தக் கட்சியில் போட்டியிட்டு மீண்டும் பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார். எவ்வாறிருப்பினும், அபிவிருத்திசார் அரசியல் முக்கியமானவரான முன்னாள் ஆளுநர் எம்.எல்.ஏம்.எம்.ஹிஸ்புல்லா சில நூறு வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டமை ‘அவர் இந்தப் பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்க வேண்டும்’ எனக் கருதிய கணிசமான மக்களுக்கு சஞ்சலத்தை ஏற்படுத்தியிருக்கின்றது எனலாம்.

இவ்வரிசையில் மூன்று முஸ்லிம் கட்சித் தலைவர்களையும் தவிர, ஐக்கிய மக்கள் சக்தியில் போட்டியிட்ட எச்.எம்.எம்.ஹரீஸ், பைசால் காசிம், எம்.எஸ்.தௌபீக், ஆகிய மு.கா. சார்பு வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். தனித்து முகாவில் போட்டியிட்ட நஸீர் அகமட்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

அதே கட்சியில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக களமிறங்கிய இஷாக் ரஹ்மான் மற்றும் தனித்து மயில் சின்னத்தில் போட்டியிட்ட எம்.முஷாரப், புத்தளத்தில் மு.கா. – ம.கா. இணைந்த மு.தே.கூட்டமைப்பில் போட்டியிட்ட ம.கா. சார்பு வேட்பாளரான ஏ.எஸ்.றஹீம் ஆகியோர் எம்.பி.க்களாக தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

ஐ.ம.சக்தியில் கண்டியில் போட்டியிட்ட எம்.எச்.ஏ.ஹலீம், பொதுஜனப் பெரமுணவில் போட்டியிட்ட காதர் மஸ்தான், ஐ.ம.சக்தியில் களமிறங்கிய முஜிபுர் ரஹ்மான், மரிக்கார், இம்ரான் மஹ்றூப் மற்றும் கபீர் ஹாசீம் ஆகியோர் வெற்றிபெற்றுள்ளனர். இது தவிர பொதுஜனப் பெரமுணவின் தேசியப்பட்டியலில் 3 முஸ்லிம்களின் பெயரும், ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப்பட்டியலில் 6 முஸ்லிம்களின் பெயரும் ஏற்கனவே முன்மொழியப்பட்டிருந்தன.

16 முஸ்லிம் அரசியல்வாதிகள் இத் தேர்தலில் மக்களின் வாக்குகளால் வெற்றி பெற்றுள்ளார்கள். அத்துடன், இரு பிரதான கட்சிகளின் தேசியப் பட்டியல் ஊடாக உயர்ந்தபட்சம் 3 முஸ்லிம்களுக்கு நியமன எம்.பி.பதவி கிடைப்பதற்கு வாய்ப்புக்கள் உள்ளன. இந்த அடிப்படையில் நோக்கினால், முஸ்லிம்களின் விகிதாசாரத்திற்கு ஏற்றாற்போல் பாராளுமன்றப் பிரதிநிதித்துவம் நினைத்ததைவிட ஓரளவுக்கேனும் சிறப்பாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளமை ஆறுதலளிப்பதாக இருக்கின்றது. இதற்காக பாடுபட்டவர்கள் அனைவரும் நன்றிக்குரியவர்கள்.

இதேவேளை, நடைபெற்று முடிந்த தேர்தலில் சில அறிமுக முஸ்லிம் வேட்பாளர்கள் வெற்றிபெற்றிருக்கின்ற சமகாலத்தில் பல முன்னாள் எம்.பி.க்கள் தோல்வியைத் தழுவியிருப்பதையும் காணக் கூடியதாகவுள்ளது. அந்தவகையில், ஹிஸ்புல்லாவுக்கு மேலதிகமாக, எம்.ஐ.எம்.மன்சூர், ஏ.எல்.எம்.நஸீர், அப்துல்லா மஹ்றூப், எம்.எஸ்.அமீரலி, ஏ.எச்.எம்.பௌசி, பசீர் சேகுதாவூத், எஸ்.எம்.இஸ்மாயில், அலிசாஹிர் மௌலானா போன்றோர் மக்களால் தெரிவு செய்யப்படாமல் கைவிடப்பட்டுள்ளமை கவனிக்கத்தக்கது.
பொறுப்புடனான அரசியல்

எது எவ்வாறாயினும், திட்டமிட்டபடி 145 ஆசனங்களைப் பெற்றுள்ள பொதுஜனப் பெரமுண கட்சி தனக்கு ஆதரவளிக்க தயாராக உள்ள 4 எம்.பி.க்களை இணைத்துக் கொண்டு 150 ஆசனங்கள் என்ற மூன்றில் இரண்டு பெரும்பான்மைப்பலத்துடன் ஆட்சியமைக்கப் போகின்றது. ஜனாதிபதிக் கனவும், பிரதமர் கனவும் கைகூடாத சஜித் பிரேமதாச எதிர்க்கட்சி தலைவராக பதவி வகிப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மூன்றிலிரண்டு பெரும்பான்மையுடன் பெருந்தேசியக் கட்சியொன்று ஆட்சிபீடம் ஏறுவது தொடர்பில் சிறுபான்மைச் சமூகங்களுக்கு வழக்கமாகவே ஒரு அச்சமிருக்கின்றது. நாட்டில் எதையும் தமக்கு நினைத்தது போல ஆட்சியாளர்கள் மாற்றியமைக்கும் வல்லமையை அது வழங்கும் என்பதே இதற்குப் பின்னாலுள்ள காரணமாகும். அதுமட்டுமன்றி, அமைக்கப்படவுள்ள அரசாங்கம் அரசியலமைப்பு, தேர்தல் முறைமை உள்ளடங்கலாக பல முக்கியமான விடயங்களில் திருத்தத்தை கொண்டு வரும் என்ற பரவலாக எதிர்வு கூறப்பட்டே வருகின்றது என்பதையும் நினைவிற் கொள்ள வேண்டியுள்ளது.

கடந்த ஜனாதிபதித் தேர்தலைப் போலவே பெரும்பான்மை மக்களின் பெரும்பான்மையான வாக்குகளுடன் இந்த பொதுத் தேர்தலிலும் பொதுஜனப் பெரமுண வெற்றியடைந்துள்ளது. இதற்கு மேலதிகமாக இலங்கையில் நீண்டகாலத்திற்குப் பிறகு மூன்றிலிரண்டு பெரும்பான்மைப் பலமும் இக் கட்சிக்கு கிடைத்திருக்கின்றது. இந்தப் பின்னணியில், வெற்று வீராப்புடனான எதிர்ப்பு அரசியலை தவிர்த்து. மிகவும் அறிவுடமையான இணக்க அரசியலை மேற்கொள்வது குறித்து முஸ்லிம் அரசியல்வாதிகள் சிந்திக்க வேண்டிய தருணமிது.

இம்முறை தெரிவு செய்யப்பட்டுள்ள முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இதுவிடயத்தில் பாரிய பொறுப்பிருக்கி;ன்றது. காலகாலமாக பதவியில் இருந்த பலரை தோற்கடித்த மக்களே தங்களை இத்தேர்தலின் மூலம் பாரளுமன்றத்திற்கு செல்லும் ஒரு வாய்ப்பை வழங்கியிருக்கின்றார்கள் என்பதை இன்னும் ஐந்து வருடங்களுக்கு கனவிலும் மறந்து விடக் கூடாது.

முஸ்லிம் பிரதிநிதித்துவம் உறுதிப்படுத்தால் மட்டும் போதாது. ஆந்தப் பிரதிநிதித்துவங்களின் ஊடாக உருப்படியான, பக்குவமான அரசியல் நகர்வுகள் நிகழ்த்தப்படவும் வேண்டியுள்ளது. உரிமை அரசியலும் அபிவிருத்தி அரசியலும் சமாந்தரமாக முன்கொண்டு செல்லப்படுவது சாலச் சிறந்த அணுகுமுறையுமாகும் என்பதை ஆளும் மற்றும் எதிர்தரப்பிலுள்ள எந்த முஸ்லிம் மக்கள் பிரதிநிதிகள் உணர்ந்து செயலாற்ற வேண்டும்.
அதைவிடுத்து…. வழக்கம்போல, தம் முன்னோர்களைப் போல மக்களை ஏமாற்றும், சோரம்போகும், சமூக சிந்தனையற்ற அரசியலையே இம்முறையும் செய்து காலத்தைக் கடத்த நினைக்க வேண்டாம்.

Check Also

ஹம்தியின் மரணம் குறித்து விரிவான விசாரணை நடத்துக

சிறுநீரக சத்திர சிகிச்சைகளை அடுத்து உயிரிழந்த கொழும்பு கொட்டாஞ்சேனையைச் சேர்ந்த 3 வயதான ஹம்தி பஸ்லிமின் மரணம் தொடர்பில் விரிவான …

Free Visitor Counters Flag Counter